கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

8. விடாது கருப்பு

Appusiva

Moderator
Staff member
சுரேஷ் சாருக்கு ஒரே ஆயாசமாக இருந்தது. ஆச்சு வயது அறுபதை தாண்டியாச்சு. சிறுவயதில் வீட்டில், விஷேசம் என்றால் அம்மா செய்து கொடுத்த ஒரே இனிப்பு ரவாகேசரி. தீபாவளிக்கு ரவாகேசரி, பொங்கலுக்கும் ரவாகேசரி.... எந்த விஷேசம் என்றாலும் இந்த ரவை அவர்முன் வந்து “ வந்துட்டேன் பாத்தியா...” என்று கிண்டலாக டான்ஸ் ஆடும். ஒரே தடவை அம்மா புது இனிப்பு செய்வதாக சொல்ல பள்ளியில் இருந்து ஆவலாய் ஓடிவந்து பார்த்தபோது கண்ணில் பட்டது, முந்திரி, திராட்சை எல்லாம் போட்ட ரவாலட்டு.

அதன் பின் திருமணத்தின் போது விருந்தில், அவர் போட்ட ஒரே கண்டிஷன் ரவாஉப்புமா செய்யக்கூடாதென்பதுதான். புது ஜோடியாய் சாப்பிட உட்கார இலையில் வந்து விழுந்தது பச்சை கலர் கேசரி. மாறுதலாம். இந்த ரவையைக்கண்டுபிடித்தது யார்... அதன் வேறு பயன்பாடு இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய கூகிளில் தேட முனையும்போதெல்லாம் பிஸியாகவே இருக்கும். நம்மை போல நாலாயிரம் பேர் என்று மனதை தேற்றிக்கொள்வார்.

மனைவி வந்ததும் பரவாயில்லை. வாரத்திற்கு ஐந்து நாள் மட்டும்தான் ரவா உப்புமா செய்வார்கள். மீதம் இரண்டு நாள் விரதத்தில் போய்விடும்.

இன்று முப்பத்தைந்தாவது கல்யாண நாள். காலையிலேயே மேடம், மளிகை லிஸ்ட் கொடுத்திருந்தார். அதில் தேடித்தேடி பார்த்தபோதும் ரவை இல்லை. அவரால் நம்பவே முடியவில்லை. தன் பக்கத்திலிருந்தவரிடம் கொடுத்து படிக்கச்சொன்னார். அவரும் ரவையை படிக்கவேயில்லை. இன்றயய தினம் போல் வாழ்வில் மகிழ்ச்சியான தினம் உண்டா வென பாடிக்கொண்டே வீட்டில் நுழைந்தார்.

“ டியர்... மளிகை சாமானெல்லாம் எடுத்துவை... ஸ்ட்ராங்கா... ஒரு காஃபி கொடு... “

என்றுவிட்டு ஒரு இந்திரஜால் புத்தகத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார். சிறிது நேரம் கழித்து ,

” டியர் ...நைட்டு என்ன டிஃபன் ? “ என்றார்.

உள்ளிருந்து அவரது மனைவி, “ ஒரே அலுப்பா இருக்குங்க.... அதான் சிம்பிளா....”

என்று ஆரம்பிக்க தலையில் இடிவிழுந்தார்போல் ஆயிற்று.. இந்த சிம்பிள் என்ற வார்த்தையின் உண்மையான கொடூர பதத்தை முழுதாக அனுபவித்தவர் ஆதலால்... சட்டென்று..

“ பூரி செய்யலாம்பா.... “ என்றார்.

“ அட நீங்க வேற... அது இன்னும் மாவு பிசைஞ்சு... உருட்டி... வேணாங்க .. மேல.... இந்த ரவையை எடுத்து....”

சுரேஷ் சார் கையில் இருந்த புத்தகம் அவரை மீறி கீழே விழுந்தது.

அடகொடுமையே ... ரவையே ....நீ வீட்டுக்குள்ளேயே ஒளிஞ்சிருக்கியா... அதான் லிஸ்ட்ல வர்லயா... அதான் உள்ளிருந்து சிரிக்கறயா... என்று அவர் மனதில் எதிரொலி போல் கேட்டுக்கொண்டே இருந்தது.

வெகு வேகமாக சமையலறையை நோக்கி ஓடினார். புயல்வேகம்.

“ செல்லம்... நூடுல்ஸ்... இல்ல... சப்பாத்தி...வந்து... பானிபூரிமசாலா...”

என்றெல்லாம் உளற ஆரம்பித்தார். மூச்சு செமயாக வாங்கியது.

“ அட கொழந்த கூட சொன்னத கேட்கும்... இந்த வயசில அடத்தை பாரேன்... சும்மா இருங்க... இந்த ரவையை எடுத்து... சிம்பிளா உப்புமா செய்து... இன்னிக்கு ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணலாமில்ல...” என்றார் அம்மிணி.

கடவுளே... ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணுன்னு நான் சொல்லவேண்டியத இவங்க சொல்றாங்களே... என்னை காப்பாத்த மாட்டியா... ஒரு ஐடியா கொடு... இல்லாங்காட்டி... உனக்கு வர விஷேசத்துக்கு ரவா கேசரி கிண்ட சொல்லிடுவேன் என்று மனதில் வேண்ட... சட்டென்று கடவுள், ஒரு ஐடியாவை கொடுத்தார். அவரும் சாப்பிடணுமில்ல... அவருக்கும் பசிக்குமில்ல.


“ ஏன் செல்லம்... முடியலயா....? “ என்றார் சுரேஷ் சார்.

“ வழியாதீங்க... விஷயத்தை சொல்லுங்க..” என்றார் அவர் மனைவி.

“ நம்ம ஊர் கடைசில புதுசா ஒரு ஹோட்டல் திறந்திருக்காங்க... போவோமா... “ என்றார்.

“ அது ஏதோ ஸ்டார் ஹோட்டலாமில்ல... தவிர வாயில் நுழையாத பேர்ல ஏதேதோ குடுப்பானுங்க... வெட்டிச்செலவு... சிம்பிளா....”

சட்டென்று குனிந்து ஒரு கும்பிடு போட்டார் சுரேஷ்.

“ தாயே... தர்மதேவதையே... தயவுபண்ணு... இன்னிக்கு செலவு என்னுது...உங்கிட்ட காசு கேட்க மாட்டேன். ஒரு வாரம் எந்த புக்கும் வாங்காம மிச்சம் பண்ணி சாளிச்சுக்கறேன்... கல்யாண நாள்...வா.. நிம்மதியா போய் சாப்பிட்டு வர்லாம்.. “ என்றார்.

“ இது பேச்சு... “ என்று கிளம்பினார் சுரேஷ் சாரின் மனைவி.


அது சற்று பெரிய ஹோட்டல்தான். கார் பார்க்கிங் இடமென்ன, வாசலில் ராஜாபோல இருந்த செக்யூரிட்டியின் வணக்கமென்ன... கொஞ்சம் செலவுதான். ஆனால் இன்றொரு நாள் சந்தோஷமாக சாப்பிட செலவு ஒரு விஷயமாவென அவருக்கு தோன்றியது.
சர்வரிடம் ஸ்டைலாக

“ சர்வர்... மெனு கார்ட் ப்ளீஸ்... “ என்றார்.

“ துரை இங்லீஸ் எல்லாம் பேசுது... ஆனா ஏதோ ஒரு படத்தில கமல் கேட்கறமாதிரி காமெடியா இருக்கு... சூட்டாவுல...” என்றார் தர்மதேவதை.

மெனுகார்டில் இருந்து, ஒரு நான்கைந்து வெரைட்டிகளை தேர்வு செய்தார். பட்டர் நான், பனீர் பட்டர் மசாலா, கோபி சில்லி, இன்னும் கேள்விபடாத ஒருசில டிக் பண்ணி ஆர்டர் செய்தார். சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி, மனைவியை பார்த்து, ஸ்டைலாக தன் புருவத்தை உயர்த்தி கேள்விகேட்பதுபோல் பார்த்தார்.

அவரைப்பார்த்த அவரது மனைவி, கேலியாக உதட்டை பிதுக்கி, “ சூட்டாவுல.... “ என்பதுபோல் சொல்ல சட்டென்று பழையபடி தன் முகத்தை மாற்றிக்கொண்டார்.

ஆச்சு அரைமணி நேரம், எவ்வளவு நேரம்தான் பசிக்காதமாதிரியே நடிக்கிறது... இந்த ஸ்டார் ஹோட்டல்களில் ரெடி செய்து, எட்டிப்பார்த்துக்கொண்டே இருப்பார்கள் போல... பொறுமையிழந்து எழ போகும்போது வந்து இளிச்சபடி, வைப்பார்கள்..


“ சர்வர்...” என்றார்.

பவ்யமாய் வந்த யூனிஃபார்ம் சர்வர், “ இன்னும் கொஞ்ச நேரம் சார்.. அதுக்கு முன்ன நம்ம ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு தயாரிச்சிருக்கோம். எடுத்து வரவா.... “ என்றார்.

“ ஷ்யூர்... கொண்டுவாங்க... “ என்றார் சுரேஷ் சார்.

பிறகு……

" இது எங்கள் ஸ்பெஷல்... ரவா கிச்சடி "




இப்படியாக முடிஞ்சது.
 
Top