Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 9
சூரஜ் யூஎஸ் கிளம்பிவிட்டான். செல்வி தன் திருமணச் சீர் வரிசைகளுடன் தன் ஸ்கூட்டி, தன் கணவனின் பைக் சகிதம் மும்பை வந்திறங்கினாள். வாழ்க்கையை மும்பையில் தன் புகுந்த வீட்டில் ஆரம்பித்தாள்.
கௌரிக்கும் தீன்தயாளுக்கும் மிகுந்த சந்தோஷம். பூங்குழலி, கீர்த்திவாசன், ஆனந்தி, ஆனந்தன் என அனைவரும் செல்விக்கு ஆல் த பெஸ்ட் கூறினார்கள். தீபிகா சந்தோஷமாக போன் செய்தாள். இருவரும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசிக்கொண்டார்கள். "பாபி! ரொம்ப சந்தோஷமா இருக்கு பாபி! நெக்ஸ்ட் மன்த் செமஸ்டர் ஹாலிடேஸ் வரும். நான் எப்பவும் செமஸ்டர் ஹாலிடேஸ்க்கு மும்பை வரமாட்டேன். ஆனா இந்த வாட்டி கண்டிப்பா மும்பைதான்!"
"ரொம்ப சந்தோஷம் தீபிகா!"
"ம்ஹூம்! தீபிகா இல்ல! ரெண்டு அண்ணன்களும் என்ன சுட்கின்னு தான் கூப்டுவாங்க! இனிமே உங்களுக்கும் நான் சுட்கிதான்!"
"சுட்கின்னா?"
"நீங்க தமிழ்ல அம்மு, புஜ்ஜின்னு கூப்டுவீங்கல்ல! செல்லமா! அது மாதிரி!"
"ஓ! அப்ப நீ எனக்கும் சுட்கிதான்! சீக்ரம் வா! உனக்காக ஆவலா காத்துகிட்டு இருப்பேன்!"
"தேங்க்யூ பாபி! பை பாபி!"
விராட்டுக்கு ஒருபுறம் ஆச்சரியம் என்றால் மறுபுறம் சிறிய சந்தேகம்! இவங்க ஏன் இங்க வந்திருக்காங்க? நல்லவங்கன்னு காட்டிக்கவா இல்ல நிஜமாவே நல்லவங்கதானா? அவனுக்கு ஒரே குழப்பம். சரி இங்கதானே இருக்கப் போறாங்க! கண்டுபிடிக்கறேன்! என்று நினைத்துக் கொண்டான்.
யமுனா கூட ஆச்சர்யப்பட்டாள். பிங்கி பாபி பாபி என்று செல்வியை சுற்றிச் சுற்றி வந்தாள்.
இப்படி அனைவருடைய ஏகோபித்த ஆதரவுடன் செல்வியின் மும்பை வாழ்க்கை ஆரம்பித்தது.
சூரஜ் செல்விக்காக சில வசதிகளை செய்து கொடுக்க விராட்டிடம் சொல்லிச் சென்றிருந்தான். வங்கிக் கணக்கு ஒன்று தொடங்க உதவச் சொன்னான். வீட்டில் எல்லாருக்கும் கைப்பேசிதான். தரை வழித் தொலைபேசி (Landline) இணைப்பு கிடையாது. இணைய இணைப்புக்கு (Internet) தரவு இணைப்புதான் (Data Connection). இப்போது செல்விக்காக தரை வழித் தொலைபேசி இணைப்பும் அருகலை இணைப்பு (Wi-Fi Broadband Connection) வர ஏற்பாடு செய்தான். அவளுக்கு நிகழ் நிலையில் (Online) நிறைய வேலைகள் செய்வதற்கு கிடைத்தது. அதன்மூலம் அவளுக்கு ஓரளவு வருமானம் வந்தது. அதனால் அவள் வெளிவேலைக்கு பெரிதாக முயற்சி செய்யவில்லை. செய்யாமலும் இல்லை.
எப்போதும் போல் விடியலில் எழுந்து யோகா செய்வது குளித்து சுலோகங்கள் சொல்வது என பழைய வழக்கம் இங்கும் தொடர்ந்தது. வீட்டில் கௌரிக்கு சமையலில் உதவி செய்வாள். அவளுக்கு தென்னிந்திய உணவு வகைகளை நன்றாகச் சமைக்கத் தெரியும். ஆனால் வடஇந்திய உணவுவகைள் அவ்வளவாக செய்யத் தெரியாததால் வீட்டில் கௌரியின் சமையல்தான். மாவரைக்க, துணி துவைக்க என சில இயந்திரங்களை செல்வி தன் பிறந்த வீட்டு சீதனமாகக் கொண்டு வந்துள்ளதால் வீட்டு வேலைகள் கொஞ்சம் எளிதாகவே இருந்தன. அதனால் சமையல் தவிர மற்ற வேலைகளை செல்வி செய்துவிடுவாள். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சென்னையிலிருந்து எடுத்து வந்த தன் மடிக்கணிணியில் வேலையை செய்வாள். தினமும் சூரஜ் அவளிடம் பேசினான்.
விராட் வேலைக்குப் போகும் போது தன் பல்ஸரையும் தன் நண்பர்களைப் பார்க்க சூரஜின் ஹீரோ ஹோண்டாவையும் பயன்படுத்தினான்.
வந்த முதல் நாளில் இருந்தே விராட் செல்வியை அவளுக்குத் தெரியாமலேயே கண்காணிக்கத் தொடங்கினான். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி நிலையம் (Gym) கிளம்புவான். அவள் மாடிக்கு போவாள். என்ன செய்கிறாள் என்று பார்த்தால், யோகா செய்துகொண்டு இருப்பாள்.
அவள் ஹெட் போனில் பாட்டு கேட்டபடியே வேலை செய்வாள். ஏதேச்சையாக வந்து அவளிடம் பேசுவது போல என்ன பாட்டு என்று கேட்பான். அவள் ஹெட் போனை அவனிடம் கொடுப்பாள். சுதா ரகுநாதனோ உன்னி கிருஷ்ணனோ அருணா சாய்ராமோ ஆலாபனை செய்து கொண்டிருப்பார்கள்.
கைபேசியை நோண்டினால் ரகசியமாக என்னவென்று பார்ப்பான். ஏதாவது தமிழ் வார்த்தைக்கு ஹிந்தி அர்த்தம் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அநாவசியமாக அண்ணியை சந்தேகப் படுகிறோமோ என்று அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது. அண்ணியைப் பற்றிய தன் கருத்துக்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கினான்.
அநாவசியப் பேச்சுகள் இல்லை. அளவுக்கு மீறி ஒப்பனை இல்லை. அமைதியாக அதே நேரத்தில் ஆர்வமாக எல்லா வேலைகளையும் செய்தாலும் துளி கூட அகங்காரம் இல்லாமல் ஒரு தென்றல் போல வீட்டுக்குள் வளைய வரும் அண்ணி அவன் மதிப்பில் ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டிருந்தாள்.
மும்பை வந்த இரண்டு வாரம் கழித்து செல்வி வீட்டு விலக்கானாள். கௌரிக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. கௌரி கொஞ்சம் பழைய வழக்கங்களை பின்பற்றும் பெண் என்பதால், செல்வியை, மூன்று நாட்கள் வீட்டுக்குள் வராமல் தனியாக இருக்கப் பணித்தாள். இங்கே உள்ள பழக்கம் இப்படித்தான் என்று செல்வியிடம் விளக்கினாள். செல்விக்கு இதெல்லாம் ஒரு விஷயமாகவே தோன்ற இல்லை. மூன்று நாட்கள் ஓய்வு கிடைத்தது.. ஹப்பாடா என்று நினைத்துக் கொண்டாள்.
அன்று மாலை செல்வி மொட்டைமாடியில் அமர்ந்து மாலைநேரக் காற்றை அனுபவித்தபடி தன் கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள். கௌரி கோவிலுக்குச் சென்றிருந்தாள். தீன்தயாள் கீழே ஹாலில் ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார்.
வேலை முடிந்து விராட் வீடு வந்தான். வீடு அமைதியாக இருந்தது. செல்வி மாலை வேளைகளில் ஏதாவது சுலோகங்களை முணுமுணுத்துக் கொண்டு சமையலறையில் தேய்த்த பாத்திரங்களை கவிழ்த்துக் கொண்டிருப்பாள். விராட் வரும்போது நட்பாய் புன்னகை செய்து தேநீர் போட்டுக் கொண்டு வந்து கொடுப்பாள். இந்த இரண்டு வாரங்களாக இந்த காட்சியைப் பார்த்தவனுக்கு இன்று வீடு அமைதியாக இருக்கவும் அண்ணி எங்கே என்று நினைத்தபடியே உள்ளே வந்தான். அப்பாவிடம் கேட்டான். அவள் மொட்டை மாடியில் இருப்பதாய் அவர் செய்கை செய்தார்.
இந்த நேரத்ல அவங்க அங்க என்ன பண்றாங்க என்று நினைத்தபடியே குளித்து உடைமாற்றிக் கொண்டு மாடிக்கு வந்தான்.
செல்வி தரையில் சம்மணமிட்டு அமர்ந்து குனிந்து கைபேசியில் மூழ்கியிருந்தாள். அவள் வழக்கமாக இருப்பது போல் சுடிதாரில் இல்லாமல் நைட்டியில் இருந்தாள். முகம் கழுவாமல் தலை வாராமல் அப்போதுதான் தூங்கி எழுந்தது போல இருப்பவளைப் பார்த்து எப்பவும் பளிச்சுன்னு இருப்பாங்க! நைட்ல கூட நைட்டி போட மாட்டாங்க! இன்னிக்கு ஏன் நைட்டி போட்ருக்காங்க? என்ன இவங்க இன்னிக்கு இப்டி இருக்காங்க? உடம்பு எதுவும் சரியில்லையா? என்று நினைத்தான்.
"பாபி!"
"ஆங்!" அவன் வருவதை கவனிக்காததால் அவன் கூப்பிட்டதும் கொஞ்சம் பதறிய மாதிரி நிமிர்ந்தாள்.
"பயப்படாதீங்க! நான்தான்!"
"ஸாரி! நீங்க வந்தத நான் கவனிக்கல!"
"பரவால்ல! ம். எனக்கு தலை வலிக்குது! டீ போட்டுத் தரீங்களா?"
"இல்ல விராட்ஜி! இன்னிக்கு நான் கிச்சனுக்குப் போகக்கூடாது. ஸாரி!"
"ஏன்!" யோசிக்காமல் கேட்டுவிட்டான்.
"அது...." என்று இழுத்தாள். எப்டி சொல்றது! இவனுக்கு வீட்ல ஒரு தங்கை இருக்கால்ல! அப்றம் ஏன் இவன் இப்டி கேக்கறான் என்று நினைத்தாள்.
பின்னரே யோசிக்காமல் கேட்டுவிட்டோமே என்று நாக்கை கடித்துக் கொண்டு, அவசரமாக,
"ஸாரி பாபி!" என்று சொல்லிவிட்டு, “மே அப்னே ஆப் பனாவூங்கா! என்று தனக்குள் சொல்லிக் கொண்டே நகர,
"அப்ப எனக்கும் ஒரு கப் ப்ளீஸ்!" என்றாள்.
"ஷ்யூர் பாபி!" கூறிவிட்டு நகர்ந்தான்.
கீழே இறங்கும் போது தன்னைத் தானே திட்டிக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டான். அண்ணி தன்னைப் பார்க்கிறாளா என்று திரும்பிப் பார்த்தான். அவளும் தன் தலையில் அடித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அவனைப் பார்க்கவில்லை. அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்த நினைவிலேயே தேநீர் தயாரித்து, அப்பாவுக்கு ஒரு கோப்பையை கொடுத்துவிட்டு தனக்கும் அண்ணிக்கும் எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தான். அண்ணியிடம் ஒன்றை தந்துவிட்டு தன்னுடையதை குடிக்க ஆரம்பித்தான். ஒரு மிடறு விழுங்கிய பின்பே, தேநீரில் சக்கரையே போடவில்லை என்று தெரிந்தது. ஆனால் அவள் எதுவும் சொல்லாமல் குடித்துவிட்டு கோப்பையை வைத்தாள்.
"பாபி!"
"ம்."
"டீ நல்லா இருந்துச்சா?"
"ம். நல்லாதானே இருந்தது! ஏன்?"
"நான் அதுல சக்கரையே போடல! உங்களுக்குத் தெரியலையா?"
"தெரிலயே? டீ நல்லா சூடா இருந்தது! எனக்காக டீ போட்டுக் குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்! ஸோ கைண்ட் ஆஃப் யூ விராட்ஜி!" என்றாள்.
அண்ணியை வியந்தபடி குடித்து முடித்து கோப்பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கும் போது, பக்கத்து வீட்டில் யமுனா பிங்கியை திட்டிக் கொண்டே அடிப்பதும், பிங்கி பதிலுக்கு அலறுவதும் கேட்டது.
பிங்கியின் அலறலில் பதறிப்போய் எழுந்தாள் செல்வி!
"யமுனாக்கா ஏன் பிங்கிய அடிக்கறாங்க?"
"ஸ்கூல் எக்ஸாம் முடிஞ்சு மார்க்ஸ் வந்திருக்கும்! பிங்கி கம்மியா மார்க் எடுத்திருப்பா! அதான் அடிக்கறாங்க! தீபிகா இங்க இருக்கறவரைக்கும் அவ சொல்லிக் குடுப்பா! நல்ல மார்க் எடுத்தா! அவ டெல்லிக்கு காலேஜ் போனதிலிருந்தே இதான் நடக்குது!"
"அடடா! பாவம் பிங்கி! நீங்க அவளுக்கு ஹெல்ப் பண்ணக் கூடாதா?"
"பண்ணாம இருப்பேனா? நானும் கொஞ்ச நாள் ஹெல்ப் பண்ணினேன். அப்றம் நான் ட்ரெய்னிங் போயிட்டேன்! அவளுக்கு ஹெல்ப் பண்ண முடில!"
பிங்கி அழுதபடி வீட்டுக்கு வெளியே வந்தாள். யாரும் தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். பக்கத்து வீட்டு மாடியில் செல்வியும் விராட்டும் நின்று தன்னைப் பார்ப்பதை கண்டதும் அவசரமாக கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
செல்வி அவளை மாடிக்கு வரச்சொல்லி கையசைத்தாள். பிங்கி மாடிக்கு வந்ததும் என்னவென்று விசாரிக்க விராட் சொன்னதையே சின்னவளும் சொன்னாள்.
"சரி! உனக்கு ஹிந்தி தவிர மீதி எல்லாத்தையும் நான் சொல்லித் தரேன். நீ எனக்கு ஹிந்தி சொல்லித் தரணும்! சரியா?"
"நெஜமாவா பாபி!"
"ம். நீ போய் உன் புக்ஸ் எடுத்துகிட்டு வா!"
சொன்னதுதான் தாமதம்! சிறியவள் ஓடிச் சென்று புத்தகங்களை எடுத்து வந்தாள்.
விராட் அண்ணியைப் பார்த்து புன்னகை செய்துவிட்டு கீழே இறங்கினான். அவன் மனதில் செல்வி அடுத்த படியில் ஏறியிருந்தாள்.
செல்வி அன்றிலிருந்து தினமும் பிங்கிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள். வெறும் பாடத்தை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதை எப்படிப் படிப்பது, படித்ததை எப்படி மனதில் பதிய வைத்துக் கொள்வது விடைகளை எப்படி எடுத்து எழுதுவது என்று ஒவ்வொன்றையும் நுணுக்கமாக சொல்லிக் கொடுத்தாள். பிங்கியும் கவனமாக படித்தாள். ஆனால் அவளுக்கு அடிக்கடி கவனச் சிதறல் ஏற்பட்டது.
அவளுக்கு இப்படி கவனச் சிதறல் ஏன் ஏற்படுகிறது என்று செல்வி கவனிக்க ஆரம்பித்தாள். பள்ளியில் பிங்கியின் பெயர் கண்மணி என்றுதான் தொடர்ந்தது. அதனால் அவளுடைய புத்தகங்களில் எல்லாம் கண்மணி என்று சிட்டை (Label) ஒட்டியிருந்தது. அதைப் பார்த்தாலே பிங்கிக்கு பதற்றம் வந்துவிடும் . தனக்குள் இறுகி விடுவாள். அதைத் தொடர்ந்து அவள் பாடத்தில் கவனம் சிதறுகிறது என்று கண்டுபிடித்தாள். அவள் தன்னுடைய பெயரைக் கண்டே ஏன் இந்தளவுக்கு பதற்றம் அடைகிறாள் என்று செல்விக்குப் புரியவில்லை. அதனால் பிங்கி அருகில் இல்லாத நேரமாய் பார்த்து யமுனாவிடம் விசாரித்தாள்.
"அது ஏன்னே தெர்ல செல்வி! திடீர்ன்னு ஒருநாள் வந்து என் பேர மாத்துங்கம்மான்னு சொன்னா! ஏண்டின்னு கேட்டா எனக்கு பிடிக்கலம்மான்னு சொன்னா! அதெல்லாம் மாத்த ரொம்ப செலவாகும்னு சொன்னேன். அன்னிலர்ந்து இதே அடம்தான். மார்க் கம்மியாக ஆரம்பிச்சுது. ஏண்டி இப்டி பண்றன்னு கேட்டா பேர மாத்து. நல்லா படிக்கறேன்னு சொல்றா! எங்க போய் முட்டிக்கறது?" என்று நொந்து கொண்டாள்.
செல்வி பிங்கியிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தாள். மெது மெதுவாக சின்னவள் மனதில் இருப்பது வெளியே வந்தது.
விஷயம் இதுதான். அவள் வகுப்பில் படிக்கும் தோழி தொலைக்காட்சி பார்க்கும்போது அலைவரிசைகளை (Channel) மாத்தியிருக்கிறாள். ஏதோ ஒரு தமிழ் அலைவரிசையில் தமிழ் படம் ஓடிக் கொண்டு இருந்தது. அதுவும் காதல் காட்சி! கதாநாயகன் கதாநாயகியை கண்மணி கண்மணி என்று கொஞ்சி காதல் வசனம் பேசியிருக்கிறான். தோழிக்கு தமிழ் தெரியாது. கண்மணி என்று காதில் விழுந்ததும் காட்சியைப் பார்த்திருக்கிறாள். காதல் காட்சி என்பதால், அந்த வார்த்தைக்கு தப்பான அர்த்தம் எடுத்துக்கொண்டாள். வகுப்பில் வந்து மற்ற தோழிகளிடமெல்லாம் கூறி இவளை வெறுப்பேற்றி இருக்கிறாள். இவளும் தன் பெயருக்கு அர்த்தம் தெரியாததால் அப்பா எதோ அசிங்கமான பெயரை வைத்துவிட்டார் என்று நினைத்து நொந்து போயிருக்கிறாள்.
செல்வி பிங்கியை பரிதாபமாகப் பார்த்தாள்.
"கண்மணி அப்டீன்னா இங்லிஷ்ல ஐ பால்ன்னு அர்த்தம். கண்ணுக்குள் இருக்கற முழி மாதிரி ரொம்ப ரொம்ப விலை மதிப்பில்லாத ஒண்ணுன்னு அர்த்தம்டா!" என்று ஆங்கிலத்தில் கூறினாள். சிறியவள் நம்ப மறுத்தாள்.
தன்னுடைய கைபேசியில் கண்மணி என்ற பெயருக்கு சரியான அர்த்தத்தை கூகுளில் தேடி சிறியவளிடம் காட்டினாள்.
"ப்ரஷியஸ் லைக் ஆன் ஐ!" (Precious like an Eye!) என்று அர்த்தத்தை கூகுள் காட்டியது. ஆச்சர்யமாய் செல்வியைப் பார்த்தாள் பிங்கி!
"ஹிந்தில நைனா அப்டீன்னு பேர் வெப்பாங்க தெரியுமா?" செல்வி கேட்டாள்.
"ஆமா!"
"அதுக்கு என்ன அர்த்தம்?"
"கண்!"
"அதேதான்! அதே மாதிரிதான் கண்மணின்னா கண்ணுக்குள்ள கறுப்பா இருக்குல்ல! இந்த ஐ பால்! இததான் கண்மணின்னு தமிழ்ல சொல்வாங்க!" என்று செல்வி தன் கண்ணின் மணியை சுட்டிக் காட்டி புரியவைத்தாள்.
"நெஜமாவே என் பேருக்கு அசிங்கமான அர்த்தம் இல்ல! ரொம்ப தேங்க்ஸ் பாபி! நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா? க்ளாஸ் பாய்ஸ் எல்லாம் கூட கிண்டல் பண்ணாங்க!"
"உன்னை உங்கப்பா தன்னோட கண்ணுக்குள்ள வெச்சி பாத்துக்கணும்னு இந்தப் பேர வெச்சிருக்கார்."
"ஆமா பாபி! அப்பா எப்பவும் இப்டிதான் சொல்வார்ன்னு அம்மா நெறைய முறை சொல்லிருக்காங்க!"
"உனக்கு உன்னோட பேரண்ட்ஸ் சூப்பர் பேர் வெச்சிருக்காங்க! அப்பா உன்ன எப்டி பாத்துக்கணும்னு நெனச்சாரோ அது மாதிரிதானே உன்ன உங்கம்மா பாத்துக்கறாங்க?"
"ஆமா பாபி!"
" இப்ப திருப்தியா! இனிமே பேர நெனச்சு கவலப்படவே கூடாது! சரியா? "
"சரி பாபி! நான் இனிமே எதுக்கும் கவலப்படவே மாட்டேன். நல்லா படிப்பேன்!"
"தட்ஸ் மை குட் கேர்ள்! இந்த முறை எக்ஸாம்ல நீதான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும்! ஓகே!"
"ஓகே! பாபி!" சொன்னதோடு நிற்காமல் நன்றாகப் படிக்கவும் தொடங்கினாள். யமுனா மனம் நிறைந்தவளாய் செல்விக்கு நன்றி சொன்னாள்.
விராட்டுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அண்ணி இந்தச் சிறுமியின் மனதில் இருக்கும் பிரச்சனையின் அடி ஆழம் வரை சென்று அதை அடியோடு களைந்து அவளை நிமிர வைத்து விட்டார்களே என்று நினைத்து நினைத்து வியந்து போனான். அவனுடைய மனதில் செல்வி பல படிகள் ஏறிவிட்டாள்.
ஆனாலும் அவனுடைய மனதின் ஓரத்தில் ஒரு சிறு துணுக்கு போல சந்தேகம் இன்னும் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.
பிங்கி பள்ளியில் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கத் தொடங்கினாள். அதைப் பார்த்து அந்தத் தெருவில் இருக்கும் பிள்ளைகளும் அவளிடம் பாடம் பயில வந்தனர். பிங்கியின் வகுப்புத் தோழிகள் சிலரும் வரத் தொடங்கினர்.
இப்போது செல்விக்கு காலையில் வீட்டு வேலை, மதியம் கணிணியில் நிகழ் நிலை வேலை, மாலை வேளைகளில் பயிற்சி வகுப்பு என பம்பரம் போல சுழல ஆரம்பித்தாள்.
மாலை நேர பயிற்சி வகுப்பிலும் கணிசமான தொகை சம்பளமாக வந்தது. தன்னுடைய இரு சக்கர வாகனம் இருப்பதால் அருகில் இருக்கும் கடைகளுக்கோ கோவிலுக்கோ இரு சக்கர வாகனத்தில் சென்று வேண்டியதை வாங்கி வரவும் செய்தாள்.
சூரஜ் செல்வியின் திறமைகளை விராட் சொல்லக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். செல்வியின் வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருக பெருக வீட்டில் வசதிகள் பெருக ஆரம்பித்தது.
முதலில் கௌரியின் அறைக்கு குளிர் சாதனம் பொருத்தப்பட்டது. அதன் பிறகு விராட்டின் அறைக்கு குளிர் சாதனம் பொருத்தப்பட்டது. விராட் வேண்டாம் என்று மறுத்தான். ஆனால் செல்விதான் வெளியில் வெயிலில் காய்ந்து சருகாகி வரும் கொழுந்தன் இரவில் நன்றாகத் தூங்கினால்தானே பகலில் நன்றாக வேலை செய்ய முடியும் என்று கூறி விராட்டின் அறையில் மாட்டச் செய்தாள்.
அதன் பின்னர் சூரஜின் அறைக்கும் குளிர் சாதனம் பொருத்தப்பட்டது. தன்னுடைய அறைக்கு இப்போது வேண்டாம். படிப்பு முடிந்து மும்பை வந்தபிறகு போட்டுக் கொள்ளலாம் என்று தீபிகாவே சொல்லிவிட்டாள்.
தீபிகா செமஸ்டர் லீவுக்கு வந்து பத்து நாட்கள் அண்ணியுடன் சீராடிவிட்டுச் சென்றாள். அண்ணியும் நாத்தனாரும் சேர்ந்து ஊரைச் சுற்றுவது, அரட்டை அடிப்பது, இருவரும் சேர்ந்து விராட்டை ஓட்டுவது, சூரஜுடன் ஸ்கைப்பில் பேசுவது என்று மிக மிக ஆனந்தமாய் இருந்தனர். ஆனால் செல்வியின் அன்றாட அலுவல்கள் எதுவும் இதனால் எல்லாம் பாதிக்கப்படவே இல்லை. பத்து நாட்களும் பத்து நிமிடமாய் கழிந்துவிட்டதே என்று இருவருக்குமே மிகவும் வருத்தம். ஆனாலும் மிகவும் மகிழ்ச்சியான பத்து நாட்கள் என்று இருவருமே உணர்ந்தார்கள். அடுத்த விடுமுறை எப்போது வரும் என்ற நினைவோடு தீபிகா டெல்லி சென்றாள்.
இன்னும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் செல்வியால் வரவிருக்கின்றன. அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.
மன்னவனில்லா இல்லத்தில்
மருமகளாய்க் கடமையாற்றித்
தனை மறந்தாள் நாயகியும்!
அன்றாட அலுவல்களை
அற்புதமாகக் கையாண்டு
பெரியோர் மனம் கவர்ந்தாள்!
ஒரு ஜோடிக் கண்கள் மட்டும்
தொடர்ந்தே அவளை நித்தமும்
கண்காணித்துக் குழம்பினவே!
எண்ணியது தவறோ என்று
காட்சிகள் சாட்சிகள் சொன்னாலும்
மனமென்னவோ ஏற்கவில்லை!
சிறுமிக்கு நட்புக்கரம் நீட்டிக்
குழப்பத்தைத் தீர்த்ததுடன்
அறிவுக்கண் திறந்து வைத்தாள்!
கலைமகளாய் மாறியவள்
கற்பிக்கும் தேவதையானாள்!
திருமகளும் அருள் புரிந்தாள்!
- C. புவனா
- காதலின் மொழி என்ன?