கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-1

aas2022-writer

Well-known member
AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-1

தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புன்னைவனத்திலிருந்து ராமேஸ்வரத்திற்குள் ஆம்னிபஸ் சென்றுகொண்டிருந்தது.

பஸ்சின் நடுப்பகுதியில் இருந்த இருக்கையில் ஜன்னலோரம் மாலினியும், அவளுக்கடுத்து செல்லராஜும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு முன் இருக்கையில் செல்வராஜின் அம்மா, முத்துராக்கும் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தனர்.

மாலினியின் கழுத்தில் மஞ்சமஞ்சேளென்று புதிதாய் மின்னும் மஞ்சள்கயிறே, மாலினியும், செல்வராஜும் புதுமணத்தம்பதிகள் என்று பறைசாற்றியது.

"சுத்தி கடலால் சூழப்பட்ட தீவா இராமேஸ்வரம்?" என்று கேட்ட மாலினியிடம்,

இராமேஸ்வரம் தீவுன்னு தெரியாதா?" என்று ஆச்சரியமாகக் கேட்ட செல்வராஜிற்கு, 'தெரியாது!' என்பதைப் போல இடவலமாகத் தலையசைத்த மாலினியைக் காதலுடன் பார்த்த செல்வராஜ்,

"ரத்னாகரம், மகோததி ன்ற கடல்களால சூழ்ந்து சங்குவடிவத்துல இருக்குது இந்தத் தீவு." என்று புன்னகை ததும்பக் கூறினான்.

பஸ்சின் வேகத்தினால் வீசிய காற்றில், அடிக்கடி கலைந்த தன் சுருள் முடியை அடக்கியவாறு, நெற்றியில் மங்கலகரமாக நெற்றி நிறைந்தபொட்டும், கூந்தலில் விரலளவு பூவும், கைகளில் தங்ககாப்பும், கழுத்தில் மஞ்கள்கயிறும், இரட்டை வட செயினும், கழுத்தை ஒட்டி அட்டிகையுமாக இருந்த முத்துராக்கு, 'ஜன்னலோர இருக்கையிலிருந்து அடுத்த இருக்கைக்கு மாறலாமா?' என்ற யோசனையுடன் பக்கத்து இருக்கையில், அவருக்கு அருகி்ல் அமர்ந்திருந்த பெண்மணியைப் பார்க்கவும்,

"பின்னாடி உட்கார்திருப்பது உங்க பிள்ளையும் மருமகளுமா? புதுசா கல்யாணம் பண்ணியவங்களா?" என்று அந்தப் பெண்மணி கேட்டார்.

முகம் முழுவதும் சந்தோசம்வழிய, "ஆமாம்!" என்றார் முத்துராக்கு.

"உங்கள் வீட்டுக்காரர் வரலையா?" என்று அடுத்த இருக்கை பெண்மணி கேட்க,

"அவருக்குக் கடவுள் மேலேயெல்லாம் அவ்வளவு நம்பிக்கை கிடையாது." என்று சிரித்தார்.

"புதுசா கல்யாணமானவங்க ராமேஸ்வரத்திலிருக்கும் தீரத்தங்கள்ல நீராடினா, காலம்பூரா ஒத்துமையா இருப்பாங்க…" என்று அடுத்த இருக்கை பெண்மணி சிரித்தபடி கூற,

"ஆமா! அதனால்தான் கூட்டிட்டு வந்தேன். என்ன கிரகமோ தெரியல, எனக்கும் ரெண்டு ஆம்பளைப் பிள்ளைகள்..‌. என் மூத்தாருக்கும் (கணவனின் அண்ணன்) மூன்று ஆம்பளைப்பிள்ளைகள்தான் பிறந்தாங்க… எனக்கு ஒரு பொண்ணு பிறந்து இறந்து போச்சு… என் மூத்தார் பொஞ்சாதிக்கும் அப்படித்தான். பொண்ணு பிறந்து இறந்து போச்சு… அது மட்டுமில்லாம… என் மூத்தாருடைய ரெண்டு பையன்களுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு… அந்தப் பையன்கள்ல இரெண்டாவது பையனுக்குத்தான் அஞ்சாறு வருசங்கழிச்சு பிள்ளை பிறந்திருக்கு… மூத்தவன் பொண்டாட்டிக்கு இன்னும் பிள்ளை வயித்தில் தங்கல… அதான் என் மகனையும், மருமகளையும் ராமேஸ்வரத்துக்குக் கூட்டிட்டு வந்தேன்... இராமேஸ்வரத்தில தீர்த்தமாடினா கெட்டது விலகி, அடுத்தடுத்து புள்ள பிறக்கட்டும்னு கூட்டியாந்தேன்." என்று, முன்பின் தெரியாத பெண்ணிடம் தன் குடும்ப விஷயத்தைக்கூறும் அளவிற்கு வெள்ளந்தியான மனுஷி முத்துராக்கு.

"கவலையேபடாதிங்க… ராவணனைக் கொன்ன பாவம் போறதுக்காக, மண்ணால லிங்கத்தைப் பிரதிஸ்ட்டை செஞ்சு அந்த ஸ்ரீ ராமனே கும்பிட்ட கோயில் இது. இல்லையா? அந்த ராமேசுவரனும், பர்வத வர்த்தினி தாயும் உங்க வம்சத்தையும் விளங்க வைப்பாங்க!"
"இந்தாங்க இனிப்பு, நல்ல வார்த்தை சொன்ன உங்க வாயில போட்டுக்குங்க… உங்க வாக்கு பலிக்கட்டும்!" என்று தன் மடியிலிருந்த கூடையிலிருந்து இனிப்புப் பண்டத்தை எடுத்துக் கொடுத்தார் முத்துராக்கு.

"இராமநாதசுவாமி கோயிலுக்குப் போறவங்கல்லாம் எந்திரிங்க!" என்ற கண்டக்டரின் குரல் கேட்டு,

"ராசா! கொண்டு வந்த பைகளை எடுத்துக்க… ஆளுக்கு ரெண்டு பையா எடுத்துக்கங்க… பை எல்லாம் சரியாயிருக்கான்னு எண்ணிப்பார்த்திடு!" என்று தன் மகனிடம் சடசடவென்று கூறிவிட்டு தானும் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு, பக்கத்து இருக்கை பெண்மணியிடம் விடைபெற்று, பஸ்சிலிருந்து இறங்கினார் முத்துராக்கு.

கோயிலுக்குச் சொந்தமான தேவஸ்தான தங்கும் விடுதியில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து, அறையில், கொண்டு வந்த பொருட்களை வைத்துவிட்டு, ஒரு தூக்குச்சட்டியை எடுத்துக்கொண்டு, அறையைப் பூட்டிவிட்டு, ராமேஸ்வர கடலை நோக்கி நடந்தனர்.

"முதல்ல கடல்ல நல்லா முங்கிடுவோம்… கடல்தான் அக்னி தீர்த்தம். அப்புறம் மத்த தீர்த்தமாடிட்டு அறைக்கு வந்து துணி மாத்திட்டு சாமி கும்பிட போவோம்!" என்று முத்துராக்கு கூற செல்வராஜும், மாலினியும், "சரி!" என்பதைப் போல் தலையாட்டினர்.
'இந்தக் கடலே தீர்த்தமா?" என்று ஆச்சரியமாகக் கேட்ட மாலினியிடம்,

"ஆமா! ராமர், சீதையை அக்னிபிரவேசம் செய்யச் சொன்னார்ல. அப்போ சீதையோட கற்பு , அக்னியையே சுட்டதாவும், அதைத் தாங்க முடியாத அக்னி பகவான், கடலில் மூழ்கி, தன் வெப்பத்தைத் தணிச்சுக்கிட்டதாவும் பெரியவங்க சொல்றாங்க. அதனால தான் இந்தக் கடலை அக்னி தீர்த்தம் னு சொல்வாங்க." என்று செல்வராஜ் கூறவும்,

"இந்த ராமேஸ்வரத்துல இருபத்திமூணு தீர்த்தம் இருக்கு… அக்னி தீர்த்தம் இந்தக் கடல்தான். மற்ற இருபத்திரெண்டு தீர்த்தம் கோயிலுக்குள்ள இருக்கும்மா… ஒவ்வொரு தீர்த்தத்துக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும்… ஒவ்வொன்னா நான் சொல்றேன்… அந்த ஈஸ்வரனையும், ஈஸ்வரியையும் நல்லா கும்பிட்டுக்க மாலினி…" என்று தன் மருமகளிடம் கூறிய முத்துராக்கு,

தன் மகனைப் பார்த்து, "உனக்குத் தீர்த்தத்தைப் பத்தி தெரியும்ல ராசா, நீயும் நல்லா கும்பிட்டுக்க… கூட்டம் ஜாஸ்தியாயிருக்கு மாலினியை பத்திரமா பார்த்துக்க…" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கடலுக்கு அருகில் வந்துவிட்டனர்.

மதுரையில் பிறந்து வளர்ந்த மாலினி கடலைப் பார்த்து மிரள,

"இந்தக் கடல்ல அவ்வளவா ஆழமும் கிடையாது, அலையும் பெரிசா வராதுமா… பயமே இல்லாம முங்கலாம்." என்று கூறினார்

கடலில் இறங்க மாலினி தயங்கவே, மாலினியின் கையை இறுகப்பற்றிய செல்வராஜ் மற்றொரு கையைத் தன் தாயை நோக்கி நீட்டினான்.

"நீ மாலினிய நல்லா புடிச்சுக்க… எனக்கு இந்தக் கடல் ஒன்னும் புதுசில்ல… நானே முங்கிக்குவேன்." என்று கூறி, ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினியம்மனையும், மனமுருகி வேண்டியபடி, மூக்கை வலக்கரத்தால் பிடித்தபடி கடல்நீரில் முங்கி எழுந்தார்.

கடலிலிருந்து வெளியே வந்ததும், இனி வர்ற தீர்த்தமெல்லாம் கிணறாதான் மாலினி இருக்கும்… கவனமா எல்லாத் தீர்த்ததிலும் நீராடிடுங்க… ஆளுங்க நகரநகரத் தீர்த்தம் வாங்காம நகர்ந்துடாதீங்க… அடுத்து மகாலெட்சுமி தீர்த்ததுக்குப் போறோம்… இதுல நீராடுனா மகாலெட்சுமி கடாட்சம் கிடைக்கும்னு சொல்வாங்க… தலையில் தீர்த்தம் விழும்போது மனசார மகாலெட்சுமியை கும்பிட்டுக்குங்க... நடங்க…" கூறிவிட்டு முன்னால் வேகமாக நடந்தார்.

மகாலக்ஷ்மி தீர்த்தத்தில் நீராடியபிறகு,

அடுத்து நாம போறது சாவித்திரி தீர்த்தம். சரஸ்வதியை மனசுல நினைச்சுக்கிட்டு தீர்த்தமாடுங்க… சரஸ்வதி கடாட்சம் கிடைக்கும்…"

இவ்வாறாகக் காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம்,
சங்கு தீர்த்தம், சக்கரத் தீர்த்தம், சேதுமாதவத் தீர்த்தம்,
நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி தீர்த்தம், பாவங்கள் அகல கங்கா தீர்த்தம், பதவி கிடைக்க யமுனை தீர்த்தம், முன்னோர் ஆசி கிடைக்கக் கயா தீர்த்தம், முன்பிறவி பாவம் விலகச் சர்வ தீர்த்தம், சகல பிணிகளும் நீங்க சிவ தீர்த்தம், ஆயுள் விருத்தியாகச் சத்யாமிர்த தீர்த்தம், கலை ஆர்வம் பெருக சந்திர தீர்த்தம், முதன்மை ஸ்தானம் கிடைக்கச் சூரிய தீர்த்தம் என இருபத்திரெண்டு தீர்த்தங்களில் நீராடிவிட்டு,

"அடுத்து நாம கோடி தீர்த்தத்துல தீர்த்தமாடனும்… கோடி தீர்த்தத்தில் குளிச்சுட்டுதான் ஈசன் தரிசனத்திற்குப் போகனும்னு சொல்வாங்க… ஏன்னா அது முக்தி அடையுறதுக்கான தீர்த்தம். அது சிவன் கோயிலுக்குள்ள இருக்கிறதால ஐயர் தண்ணீர் எடுத்து ஊத்துவார். தீர்த்தவாய் வழியா விழுற தண்ணீல நாம தலையைக் காட்டணும்." என்று கூறிய முத்துராக்கு, தான் கொண்டுவந்திருந்த தூக்குச்சட்டியில் கோடி தீர்த்தத்தைப் பிடித்தார்.

"நாம்தான் கோடி தீர்த்தத்தில் நீராடியாச்சே, அப்புறம் ஏன் அத்தை அந்தத் தீர்த்தத்தப் பிடிக்கிறாங்க?" என்று தனக்குப் பின்னால்
வந்துகொண்டிருந்த செல்வராஜிடம் மாலினி கேட்டாள்.

"கோடி தீர்த்தத்த வீடுகள்லயும், தொழில் செய்யும் இடங்கள்லயும் தெளிச்சோம்னா தரித்திரம், பீடைகள், பாவங்கள்லாமா அழிஞ்சு அபிவிருத்தி உண்டாகும்னு சொல்வாங்க அதான்." என்று சிரித்தான் செல்வராஜ்.

கோடி தீர்த்தத்திற்கு அருகில் அருள்பாலிக்கும் பாதாளபைரவரை வணங்கிவிட்டு,

"இவர்கிட்ட, "நான் என்ன தப்புப் பண்ணியிருந்தாலும் மன்னிச்சுடுங்கன்னு வேண்டுங்க, ராமர்கிட்டயிருந்து விலகின பிரம்மஹத்தி தோசத்தையே தன்னோட திருவடிகளால அழுத்திப் பாதாளத்திற்குத் தள்ளினாராம் இந்த பைரவர் … இவர் நாம செஞ்ச பாவங்களையும் பாதாளத்தில் தள்ளி நம்மைக் காப்பார்." என்று கூறிவிட்டு முத்துராக்கு நகர்ந்தார்.

பிறகு, தீர்த்தகரையில் இருக்கும் நாகநாதரை வணங்கி, "இவர்தான் பிள்ளைவரம் தர்றவர்." என்று கூறியதோடு, நாகநாதரையும் நன்கு வணங்கிவிட்டு, மூவரும் அறைக்கு வந்து தலைமுடியை உலர்த்தி, புத்தாடை உடுத்திக்கொண்டு கோயிலை நோக்கிச் சென்றனர்.

நுணுக்கமான கலையம்சத்துடன் விளங்கிய இராமநாதசுவாமி கோயில் கோபுரத்தை அன்னாந்து பார்த்து வணங்கிவிட்டு, கோயிலுக்குள் சென்று, மல்லாயிரக் கணக்கான ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தலில் நடராஜர் வீற்றிருந்தார். அவரை வணங்கிவிட்டு, சீதையால் உருவாக்கிய மணல் லிங்கமாகிய இராமநாதரையும், அவருக்கு அருகில் அனுமனால் காசியிலிருத்து கொண்டுவரப்பட்ட காசிவிஸ்வநாதரையும், கண்குளிர கண்டு, மனமுருகி வேண்டி நின்றனர்.

"அப்பனே ஈஸ்வரா! என் பையனையும், மருமகளையும் உன் காலடியில் சேர்த்துவிட்டேன். எங்கள் குலம் தலைக்கக் குழந்தைகள் பிறக்கட்டும்னு ஆசீர்வதியுங்கள்!" என்று கண்ணீர் மல்க வேண்டினார் முத்துராக்கு.

அடுத்து பர்வதவர்த்தினி அம்பாளிடமும் விண்ணப்பத்துவிட்டு, பிள்ளைவரம் அருளும் இரட்டை விநாயரிடமும் மனமுருகி பிரார்த்தனை செய்தவர்களைச் சேதுமாதவர் சன்னதி நோக்கி, முத்துராக்கு அழைத்துச் சென்றார்.

"சேதுமாதவர்ங்கிற பேர்ல பெருமாள் இருப்பார்… அவரும் கேட்டதைத் தருபவர், நல்லா வேண்டிக்கங்க." என்று கூறியபடி பெருமாள் சன்னதி முன் நின்று தீபாராதனை பார்த்துவிட்டு நகரும்பொழுது, செல்வராஜின் கையைப் பற்றிய மாலினி,

"பெருமாள் காலில் சங்கிலியால் கட்டியிருக்குங்க..." என்று காட்ட,

"அதுவா? இந்தப் பெருமாளிடம், குழந்தை வரம்வேண்டினானாம் சுந்தரபாண்டியன்ங்கிற மன்னன், அவருக்கு இந்தப் பெருமாளின் மனைவியான லெட்சுமியே மகளாகப் பிறந்தாராம்..‌. அந்தப்பெண்ணுக்கு கல்யாண வயது வந்ததும் பெருமாள் இளைஞன் வடிவில் சென்று, அந்தப்பெண்ணை வம்பிழுத்தாராம்… அதனால் கோபமடைந்த மன்னர், பெருமாளை சிறையில் தள்ளி, காலையும் சங்கிலியால் கட்டிவிட்டாராம். அடுத்த நாள் இந்தச் சன்னதியில் இருந்த பெருமாளின் காலில் சங்கிலி கட்டப்பட்டிருந்ததைக் கண்ட மன்னனுக்கு, 'இளைஞராக வந்தவர் பெருமாளே!' என்று புரிந்து, தன் மகளை இவருக்கு மணம் முடித்தாராம்… அதனாலதான் இவர் கால் சங்கிலியால் கட்டபட்டிருக்கிறது." என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது சிவனடியார் ஒருவர், செல்வராஜ் மாலினியின் அருகில் வந்து,

"குழத்தைகளே இந்தாருங்கள் சர்வேஸ்வரனின் பிரசாதம்! மூலஸ்தானத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கத்திற்கு அபிசேகம் செய்த பால் இது!' என்று கூறி அபிஷேகப் பாலைக் கொடுக்க, தம்பதிகள் வாங்கி அருந்தினர். மாலினியின் வயிற்றில் அந்தப் பால் இறங்க, இறங்க,

புல் பூண்டுகூட முளைக்காத வழுக்குப் பாறைகளால் ஆன ஒரு மலையடிவாரத்தில் அமைந்திருந்த குடைவரையில், தனியே அமர்ந்து யோகநிஷ்டையில் இருந்தவரின் உடல் சிலிர்க்க, சட்டென்று கண்களைத் திறந்து இராமேஸ்வரம் இருக்கும் திசையைப் பார்த்தார்.

சன்னதியில் அருள்பாலிக்கும் சேதுமாதவரோ, கண்களில் குறும்பு மின்னப் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1010

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 
Last edited by a moderator:

Chitra Balaji

Well-known member
Woooooow... Woooooow... Super Super maa.... Semma semma starting maa.... ராமேஸ்வரம் pathi neriya விஷயம் sonniga semma maa... அந்த திருத்தம் குடிச்ச ஒடனே அந்த மலை la யாரு இருக்கா avaruku ஏன் உடல் சிலிர்த்தது... Super Super maa
 

Shailaputri R

Well-known member
Wow ராமேஸ்வரம் எனக்கு எமோஷனலி அட்டாச் ஆனா ஊரு.. 2-3 தடவ போயிருக்கேன்.. நல்லா இருக்கும்.. முத்துராக்கு ரொம்ப அன்பான மனிதி.. ரொம்ப விளந்தியா இருக்காங்க.. இந்த சிவனடியார் ஏன் முழிச்சாரு.. இந்த பெருமாள் இருக்காரே குசும்பு புடிச்சவரு.. இங்கயும் தன் விளையாட்டை ஆரம்பிச்சிட்டாரு.. அடுத்த அப்டேட்ல் பார்ப்போம்
 
நான் ராமேஸ்வரம் போனதே இல்லை!!!.. ஆனால் நீங்க உங்க எழுத்துக்களால் போய்டு வந்த ஃபீல் கொடுத்துட்டீங்க எழுத்தாளரே!!!.. சூப்பர் எபி!!!.. பெருமாள் என்ன பிளான் பன்னிருக்காருன்னு தெரியலையே!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்💖
 

Sspriya

Well-known member
Awesome... Totally different concept... 😍💞💞💞மாலினிக்கு பெண் குழந்தை பிறக்கும் கரெக்டா 😍😍😍
 
Top