கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-10

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-10


"மீரஜாவை விட்டுப் பிரிந்து தொழில்நடத்தி என்ன செய்யப்போகிறேன்?" என்று தாத்தா செல்வராஜிடம் ஃபோனில் கூறினார்.

"ஏன்ய்யா? கடை நல்லாதானே போயிட்டிருக்கு? நீங்க ஆசப்பட்டுச் செய்ற பிஸினசை ஏன் விடனும்? குவாட்டர்லி, ஆஃப்யியர்லி, ஆனுவல் எக்ஸாம்ன்னு கிடைக்கிற லீவுல எல்லாம் மீராவ தாமரைக்குளத்துல கூட்டிவந்து விடுறேன்ய்யா…" என்ற செல்வராஜிடம்,

"இல்ல செல்வம்… மீரஜா அங்க போனதுக்கப்புறம் நம்ம கடைக்கு எதிர்லயே இன்னொரு கடை திறந்துட்டாங்க... முன்னமாதிரி வருமானம் இல்ல… அந்த ஜவுளிக்கடைக்காரனே நம்ம கடைக்கு நல்ல விலை கொடுத்து வாங்குறேன்றான்… நம்ம கடை அந்த அளவுக்கெல்லாம் போகாது செல்வம்… அதான் கடைய குடுத்துடலாம்னு…"

"அப்புறம் உங்க இஷ்டம் ஐயா!" என்று செல்வராஜ் கூறியதும், மளமளவென்று தனராஜன் விரைந்து செயல்பட்டான்.

ஒரே மாதத்தில் தாமரைக்குளம் வீட்டையும், ஜவுளிக்கடையையும் விற்று வந்த பணத்தில் பாதியை ஷேர் மார்க்கெட்டிலும், கால்பங்கை பேங்க் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் லும், போட்டுவிட்டு, மீதி பணத்தைத் தாத்தா கையில் கொடுத்தான்.

அந்தப் பணத்தை வைத்துப் புன்னைவனத்தில் ஃபினான்ஸ் கம்பனியை உருவாக்கினார் தாத்தா…

கடை திறப்பு விழாவிற்கு இன்னும் பத்துநாள் இருக்கும் நிலையில், தமைரைக்குள வீட்டைக்காலி செய்த சாமான்களோடு புன்னைவனம் வந்திறங்கினர் தாத்தாவும், அப்பத்தாவும்.

மாலினியும், செல்வராஜும் வாசலில் நின்று சிரித்தமுகமாக வரவேற்க,

சாமான்களை இறக்குவதற்காக, செல்வராஜ் வரவழைத்திருந்த ஆட்கள் லாரியின் பின்பகுதிக்குச் சென்றனர்.

அவர்களை வழிநடத்த சொல்வராஜும் சென்றான்.

மாலினியின் முகத்தில் கொள்ளை கொள்ளையாக ஆனந்தம் தெரிய,

"நல்லவேளை! மாலினிக்கு நம் வருகை சங்கடப்படுத்தவில்லை!" என்றார் அப்பத்தா.

அப்பத்தாவைத் திரும்பிப் பார்த்த தாத்தா, "இது நம்ம சொந்த வீடு முத்துரா… இங்க நாம வர்றதுல என்ன சங்கடம்?" என்றதும்,

என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்த அப்பத்தாவைப் பார்த்துச் சிரித்தபடி, முன்னால் சென்று கொண்டிருந்த மாலினியிடம்,

"மீரஜா எங்கமா?" என்று பார்வையிலிருந்த ஏக்கத்தை மறைத்துக் கேட்டார் தாத்தா.

"மீரா ஸ்கூல் போயிருக்கா மாமா."

"எப்ப ஃபோன் பண்ணினாலும் ஒன்னு, ஸ்கூலுக்குப் போயிருப்பா, சாயந்திரமானா விளையாடப் போயிருப்பா, ராத்திரி தூங்கிடுவா… பிள்ளகிட்ட பேசி எவ்வளவு நாளாகுது…" என்று தாத்தா வருந்தினார்.

"நாங்க இன்னைக்கு வர்றோம்னு மீராகுட்டிக்குத் தெரியுமே? பின்ன எப்படி ஸ்கூல் போனா?" என்று அப்பத்தா கூறிய வார்த்தைகள் மாலினிக்கு சற்றே கசந்தது.

"அத்தான் தான் ஸ்கூல்க்கு அனுப்பிவச்சுட்டாங்க…" என்ற மாலினிக்கு

காலையில், "ஸகூல்க்கு போகமாட்டேன்!" என்று அடம்பிடித்த மீரஜாவை, அடித்தும் திரும்பத்திரும்ப, "அப்பத்தா தாத்தாவப் பாக்கனும்." என்று அழ,

நாம் என்ன அடிச்சாலும் அடங்க மாட்டா… இவ அப்பாட்ட சொல்வோம், என்று நினைத்து செல்வராஜிடம் அழைத்துச் சென்று,

"அத்தை, மாமா வர்றதால இன்னைக்கு ஸ்கூல் போகமாட்டாளாம். என்னன்னு கேளுங்க" என்றதும்,

"பாவம் ஒருநாள் தானே? வீட்ல இருக்கட்டுமே?" என்ற செல்வராஜிடம்,

"அவளுக்கு ஸ்கூல்போகப் பிடிக்கல. இது ஒரு சாக்கு… டீச்சரா இருக்குற நீங்களும் சரிங்கிறீங்களே?" என்றதும்,

செல்வராஜ் மீரஜாவை அதட்டி ஸ்கூல்க்கு அனுப்பிவிட்டதும் ஞாபகத்திற்கு வர,

'இனி அவள கண்ட்ரோல் பண்ணி வச்சுக்கனும்.' என்று நினைத்தாள்.

மாலினியின் முகத்தில் தெரிந்த கடுப்பைப் பார்த்து, "செல்வம், மீராவ திட்டி ஸ்கூல்க்கு அனுப்பினானா?" என்று வேதனையாகக் கேட்டார் அப்பத்தா.

"அதெல்லாம் இல்ல அத்தை… அவளே கிளம்பிப் போயிட்டா"

"எப்ப வருவா?"

"சாயந்திரம் நாலுக்கு"

"சாயந்தரமா?" என்று நினைத்த அப்பத்தா சோர்ந்துபோய் அமர்வதைப் பார்த்த தாத்தா,

"நாம வர்ற அவசரத்துல பிள்ளைக்கு நொறுக்குதீனி எதுவும் வாங்கல… வர்றியா முத்துரா? வாங்கிட்டு, அப்படியே ஸ்கூல்ல போயி பிள்ளைய பார்த்துட்டு வந்துடுவோம்" என்றதும்,

பயணக்கலைப்பு இருந்த இடம் தெரியாமல் மறைய பதின்பருவப் பெண்போல் துள்ளி எழுந்த அப்பத்தா, "வாங்க! வாங்க!" என்று கிளம்பினார்.

"இப்பதானே வந்தீங்க? ரெஸ்ட் எடுங்க. அவ வந்துடுவா." எரிச்சலை மறைத்து மாலினி கூற,

"இல்லம்மா பிள்ளைய பாக்காம என்னால எதுவும் முடியல… ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வந்துடுறோம்" என்றார்.

"அத்தானுக்குத் தெரிஞ்சா என்னைத்தான் திட்டுவார் அத்தை… ஒருநாள் கூட லீவ் எடுக்குறது அவருக்குப் பிடிக்காது." என்று மாலினி கூறியதும், அப்பத்தா தயங்கி நின்றார்.

"நான் செல்வத்துட்ட சொல்லிட்டே போறேன். நீ கவலப்படாதம்மா!" என்று கூறிவிட்டு, அப்பத்தாவிடம் தன்னுடன் வருமாறு தலையசைத்து நடந்த தாத்தாவைத் தடுக்கமுடியாமல் தாத்தாவின் முதுகை முறைத்தாள் மாலினி.

பள்ளி வகுப்பறையில் இருந்த மீரஜாவிடம், "ரிசப்சன்ல மீரஜாவ கூட்டிட்டு வரச்சொன்னாங்க." என்று ஸ்கூல் அலுவலர் கூற,

"எதுக்கு?* என்று கேட்ட வகுப்பு ஆசிரியையிடம்,

"யாரோ பார்க்க வந்திருக்காங்க" என்று கூறி முடிக்கும்முன், ஓடிவந்த மீரஜா, "என் அப்பத்தா, தாத்தா வா?" என்று கேட்டாள்.

"எனக்குத் தெரியல." என்று கூறியவரை முந்திக்கொண்டு ஸ்கூல் ரிசப்சனுக்கு ஓடினாள் மீரஜா.

தன் பேத்தி ஓடிவருவதைப் பார்த்த தாத்தாவும் அப்பத்தாவும் தங்களின் இருக்கையிலிருந்து எழுந்து மீரஜாவை நோக்கி நடக்க,

ஓடி வந்தவள் சட்டென்று நின்றாள்.

"மீராகுட்டி! வாங்க… வாங்க" என்று தாத்தா இருகையை மீரஜாவை நோக்கி நீட்ட,

சுற்றிலும் பயம்கலந்த பார்வையை வீசியவாறு, மெல்ல நடந்துவந்த மீரஜாவின் தோற்றம் பெரியவர்களின் மனதை பிசைய,

"யார தேடுறா என் செல்லம்?" என்று அருகில் சென்று மண்டியிட்ட தாத்தாவின் கழுத்தை, வழக்கம்போல் கட்டிக் கொள்ளாமல்,

"அப்பா, அம்மாக்கு"வீட்டுக்குப் போயி, மீரா அங்க இல்லைனதும், அப்பாட்ட சொல்லிட்டுத்தான் வந்தோம். ம்ம்ம்?" என்றதும் வழங்கம்போல் கழுத்தைக் கட்டிக்கொண்டவள் எதுவும் கூறாமல் கண்ணீர் சிந்த,

பதைபதைத்துப் போன அப்பத்தா, மீராவைத் தூக்கி இடுப்பில் வைக்க முனைய,

"நான் பெருசாயிட்டேன் அப்பத்தா. என்னைத் தூக்கக் கூடாது* என்று இறங்கினாள்.

"எனக்கு எப்பவுமே மீரா குட்டிதான். சரியா? " என்று கூறி மீரஜாவைத்தூக்கி இடுப்பில் வைக்க,

"போங்க உங்ககூட “டூ”… என்னை விட்டுட்டு போயிட்டீங்கல்ல?" என்று கூறி அழுதவாறு அப்பத்தாவின் தோளில் சாய்தவளை,

வாங்கிய, தாத்தா, "இனி என் செல்லத்தைவிட்டு போகவே மாட்டோம்." என்றார்.

"பொய் சொல்லாதீங்க தாத்தா… உங்களுக்கு அங்கதான் வேலையாம் இங்கே வரமாட்டீங்களாமே?”என்றவளை அணைந்து தோளில் சாய்த்து, "தாமைரக்குளத்தில் இருந்த வீடு கடையெல்லாம் வித்துட்டேன்… நிரந்தரமா மீராகுட்டிட்ட வந்துட்டோம்" என்றதும் சட்டென்று விலகி, தன் தாத்தா முகத்தைப் பார்த்தவள்,

"நிஜமா?" என்றதும்

"தாத்தா என்னைக்காவது மீரட்ட சும்மா சொல்வேனா?" என்றதும் பழைய மீராவாகத் துள்ளி இறங்கித் தன் கைகளைத் தட்டியபடி தன் தாத்தாவையும் அப்பத்தாவையும் சுற்றி வந்தாள்.

"பேக் ஐ எடுத்துட்டு வா… ஹோட்டல் போலாம்." என்று தாத்தா கூறவும்,

"ஐய்… " என்று ஆடியவாறு ஓடிய மீரஜாவைப் பார்த்த அப்பத்தா கண்கள் கலங்க,

"மீரா கண்ணுல மிரட்சி தெரியுதே" என்று கேட்டார் அப்பத்தா. தெரியுமா?" என்ற கேள்வியில் இருந்த பயம் மேலும் பெரியவர்களை வேதனைப் படுத்த,



"நாம வந்துட்டோம் ல இனி அவளுக்கென்ன? ராஜகுமாரியாட்டம் இருப்பா… நீ அழுது பிள்ளைய கலவரப்படுத்தாத" என்று கூறி முடிக்கும்முன்பே வந்தவள் அப்பத்தாவிடம் பேக்ஐக் கொடுத்துவிட்டு, தாத்தாவை நோக்கிக் கைகளை உயர்த்த, அள்ளி அணைத்துக் கொண்டவர் மனதில்,

'வீடு கடையெல்லாம் விற்கும்போது தப்பு பண்றேனோனு நெனச்சேன்… உன்னைப் பார்த்தபிறகு நான் சரியான முடிவுதான் எடுத்திருக்கேன்னு புரிஞ்சது’ என்று நினைத்தவர் மீரஜாவின் நெற்றியில் முத்தமிட,

ஒரு நிமிடம் விலகிப் பார்த்தவள், சிரித்தபடி தாத்தாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு,

"என்னை யாரும் கொஞ்சுறதில்ல தெரியுமா? நா பெருசியிட்டேன் ல?" என்றவளை இதமாகத் தடவிக் கொடுத்து,

"மீராக்குட்டி பாட்டியானாலும் இந்தத் தாத்தா கொஞ்சுவேன் ஆமா…" என்று சிரித்தபடி கூறியவரின் தோள்களில் சாய்ந்தபடி ஸ்கூலை விட்டு வெளியேறினாள்.

ஹேட்டலில் சாப்பிடப்போவதாக வீட்டுக்கு ஃபோன் செய்தபிறகு, மூவரும் ஹோட்டலுக்குப் போய்விட்டு, பார்க்கில் சிறிது நேரம் மீரஜாவை விளையாட விட்டு வேடிக்கை பார்த்தார்கள்.

சிறிது நேரத்தில் அப்பத்தா முகத்தில் கலைப்பு தெரியவும் தாத்தா, "வீட்டுக்குப் போகலாமா?" என்றதும், மீரஜாவின் முகம் இருண்டது.

"அப்பத்தா ஊர்லயிருந்து வந்து உட்காரக்கூட இல்ல... அவங்க முகத்த பாரு எவ்வளோ டயர்டா இருக்கு… நாம நாளைக்கே இங்கே வருவோம். ஓகேயா?" என்று தாத்தா கேட்டதும், விருப்பமில்லாமல் மெதுவாகத் தலையசைத்த மீராவைத் தூக்கி அணைக்க,

அந்த அணைப்பே, 'பயப்படாதே நான் இருக்கிறேன்' என்று மீரஜாவிற்கு உணர்த்தியது.

மீரஜாவைத் தூக்கியபடியே வீட்டிற்குள் வந்த தாத்தாவைப் பார்த்த மாலினி, மீரஜாவிடம்,
"நீ என்ன குழந்தையா? கீழ இறங்கு!" என்று அதட்ட,

"நான்தானம்மா தூக்கிருக்கேன்."

"ஆறு வயசாகப் போகுது இன்னும் தூக்கக் கூடாது மாமா…" என்ற மாலினியைப் பார்த்தவர்,

"இவ குழந்தைத்தனத்தை, நாம கெடுக்காம இருந்தா போதும் மா." என்று கூறியபடி மீரஜாவைத் தூக்கிக்கொண்டே தனது அறைக்குச் சென்றார்.

அவர் கைகளில் இருந்தபடி பயத்துடன் மீரஜா மாலினியைப் பார்க்க, மாலினியோ, ஒன்றும் செய்யமுடியாமல் கோபமாகத் திரும்பி நடந்தாள்.

மூன்று மாதங்களாக மாலினி ஒன்று சொல்லி, அதை மீரஜா கேட்காவிட்டால் அடி பின்னுவதும், அதைத் தன் அப்பாவிடம் சொன்னபோது, செல்வராஜைத் தூண்டிவிட்டு மேலும் அடிவாங்கிக் கொடுத்ததும் ஞாபகம் வர,

'அப்போ, தாத்தாட்ட இருந்தா அம்மா அடிக்கமாட்டாங்க' என்பது அந்தப் பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்தது.

வழக்கம்போல, செல்வராஜிடம் மாலினி போட்டுக் கொடுக்க,

"ஐயாட்ட என்னால சொல்ல முடியுமா? வேலையப் பாரு!" என்றுவிட்டு நகர்ந்தான்.

அடுத்தநாள் காலை, பதினோரு மணியளவில் மனோகரியிடமிருந்து ஃபோன் வந்தது,

‘மாமியார், மாமனார் புன்னைவனம் வந்தது தெரிந்துதான் ஃபோன் பண்ணுகிறார்’ என்று எண்ணியவாறே ரிசீவரைக் கையில் எடுத்த மாலினி,

"சொல்லுங்கம்மா!"

"பெரியவங்க வீடு, கடைய வித்துட்டு அங்க வந்துட்டாங்களாமே?"

"ஆமா!"

"ஏன்மா சோர்வா பேசுற? ரொம்ப வேலை வாங்குறாங்களோ? எப்படீல்லாம் வளர்த்தேன்." என்று ஆரம்பிக்க,

"நானே செம கடுப்புல இருக்கேன். வெறுப்பேத்தாதீங்க." என்ற வார்த்தையில் மனம் குளிர்ந்த மனோகரி மிகவும் பரிவாக,

"அவங்க வந்துட்டாலே எம்பொண்ணுக்குக் கஷ்டம்தான்." என்று நிறுத்தினார்.

"அதெல்லாம் இல்ல… இந்த மீரவ நெனச்சாதான்… அத்தானும் மாமாட்ட பேசமுடியுமாங்கிறார்."

"நான் சொன்னா நீ தப்பா எடுத்துக்கக் கூடாது… முதல்ல தனிக்குடித்தனம் போ!"

"அவங்க இங்க வந்தபின்னாடி எப்படி மா? அத்தான் என்னைக் கொன்னுடுவார்."

"எனக்கு எப்படித்தான் பிறந்தியோ? முதல்ல உன் புருசனை, உன் மாமனார் மாமியார்ட்ட இருந்து பிரி…"

"அதெப்படி முடியும்? அவங்க ஐயா அதான் எம் மாமனார் சிலோன்ல இருந்தப்ப, அவங்க அம்மா, அவரையும், என் கொழுந்தனையும் கஷ்டப்பட்டு வளர்த்த கதைய இதோட கோடிதடவ சொல்லிட்டார்."

"அப்ப நானெல்லாம் பிள்ளைகளத் தெருவுலயா விட்டேன்? அதவிடு, ஒரே வீட்ல இருக்கும்போது சின்ன மனஸ்தாபம் வராதா? அதப் பெருசாக்கு உன் புருசன்ட…"

"ம்ம் பார்க்குறேன்."

"மொதல்ல அந்தக் குட்டிப் பிசாசை அவங்கட்டப் போகவிடாத."

"எங்க? வந்ததிலருந்து அவங்ககூடத்தான் ஒட்டிக்கிட்டு திரியுது… இன்னைக்கு ஸ்கூல்க்கு கூடப் போகல… ரெண்டு அடி போடலாம்னா அவங்க தாத்தா அப்பத்தாட்ட ஓடிடுது"

"லூசு மாதிரி பண்ணாத மாலினி… அவங்க எப்படி மீராமேல உசுரையே விடுற மாதிரி நடிக்கிறாங்க?… நீயும் அவட்ட இனி கோவப்படாத… அப்புறம் மொத்தமா அவங்கட்டயே போயிடும் பிசாசு."

"என்னம்மா பயமுறுத்துறீங்க?"
"பின்ன? இனி அந்தக் கழுதைய அடிக்காத… மெல்ல மெல்ல அதை உன்பக்கம் இழு… நீ சொல்றதக் கேட்கவை. பிறகு பார்க்கலாம்… புரியுதா? அதே மாதிரி உன் புருசன் வந்ததும், நாள் முழுக்க வேலை பார்த்து ஓய்ஞ்சு போன மாதிரி படுத்துக்க."

"எப்பவும் போல அத்தைதான் சமையல் பண்றாங்க… சாப்பாடு டேஸ்ட் காட்டிக்குடுத்துடாதா?"

“மத்தவேலையெல்லாம் நீயே பண்ணு… வேலக்காரிய நிறுத்து."

"ஐய்யோ! அப்புறம் யாரு வீடு வாசல கூட்டி, பாத்திரம் தேய்க்கிறது."

"ஏன் உன் உடம்பு வளையாதோ? நான் சொல்றபடி கேட்டா உன் புருசனும் பிள்ளையும் உனக்கு…"

"வேவைக்காரிய ஏன் நிறுத்துனேன்னு அத்தான் கேட்டா?"

"உன் மாமியாட்ட போ… நீங்க சமைக்கிறீங்க, நா சும்மாதான இருக்கேன். வீடு கூட்டுறது பாத்திரம் தேய்க்கிறதெல்லாம் நானே பண்றேன்னு சொல்லு.”

“அத்தை ஒத்துக்க மாட்டாங்க.”

"நீங்களே பாருங்க… வேற வழியில்லாமதான் வேலைக்கு ஆள் வச்சிருந்தேன்… என்னதானிருந்தாலும் நாம கூட்டுற மாதிரி வருமா? பாத்திரமெல்லாம் பாருங்க அப்டீனு சொல்லு."

"அப்புறம்?"

"இதுக்கு அத்தான் ஒத்துக்க மாட்டாங்க... நீங்க வேலையவிட்டு நிறுத்தினா ஒன்னும் சொல்லமாட்டாங்க. அப்டீனு சொல்லுற விதமா சொல்லு. அப்புறம், உன் புருஷன்ட்ட, நான் சும்மா இருக்கேன்னுட்டு அத்தை வேலக்காரிய நிறுத்திட்டாங்கன்னு சொல்லு… மாமியாவுக்குச் சப்போர்ட் பண்றமாதிரி பேசு… குறை சொல்ற மாதிரி பேசாத… புரியுதா?"

"இப்படீலாம் செஞ்சும் தனிக்குடித்தனம் வரலன்னா?"

"எல்லாத்தையும் இப்பவே கேட்காத. முதல்ல நான் சொன்னபடி செய்யி… பிறகு சொல்றேன்… மறந்துடாத, உன் புருசன் முன்னாடி வேலைசெஞ்சு டயர்டா இருக்குற மாதிரியே பேசனும் புரியுதா? ஃபோன வக்கிக்கிறேன் சூதானமா நடந்துக்க." என்று கூறிவிட்டு பப்ளிக் பூத்திலிருந்து இறங்கிய மனோகரியை உரசிக்கொண்டு சென்றது லாரி…

கையில் சிராப்புடன் மயிரிழையில் உயிர்தப்பியதை உணர்ந்த மனோகரி லாரியைப் பார்க்க, அதில் சிவப்பு நிறத்தில்,

"கெடுவான் கேடு நினைப்பான்!" என்று எழுதியிருந்தது.

அதற்குள் சுற்றியிருந்தவர்கள் பதறி அருகில் வந்து,

"நல்லவேளை ஒன்னும் ஆகல"

"எப்படி வண்டி ஓட்டுறான் பாரு? ஒரு நிமிசத்துல பயமுறுத்திட்டான்."

"எமன் வாய்வர போயிட்டு வந்துட்டீங்கக்கா... வீட்ல போயி சுத்திப்போடுங்க"

என்று ஆளுக்கொரு விதமாகப் பேசிவிட்டுப் போனதும், யாரோ கொடுத்த தண்ணீரைக் குடிக்கும்போது,

"அடுத்தவங்க குடிய கெடுக்காத… இன்னும் ரெண்டு பசங்கள நீ கரையேத்தனும். இல்லைனா, நீ பண்ற வேலைக்கு இப்பவே சிவலோகம் அனுப்பீருப்பேன்" என்ற குரல் கேட்டதும் புரையேறியது மனோகரிக்கு,

"மெதுவா! மெதுவா! மெல்லக்குடிமா" என்ற அருகிலிருந்த பெண்மணியைப் பார்த்த மனோகரி, தன்னிடம் முதலில் பேசியது இந்நப் பெண் இல்லையே என்று நினைத்தபடி சுற்றிலும் பார்த்தார்.

"என்னம்மா? யாரத் தேடுற?"

"இப்ப என்கிட்டப் பேசுனாங்களே?"

"நாந்தான் உங்கிட்ட இருக்கேன் வேற யாரு பேசுனா? ரொம்பப் பயந்துட்ட போலிருக்கு…" என்று கூறியபடி அந்தப் பெண்ணும் நகர,

"எனக்கு நன்றாகக் குரல் கேட்டதே?" என்றபடி மீண்டும் சுற்றிலும் பார்வையை ஓட்ட,
ஈ, காக்கைகூடத் தெருவில் இல்லை.

'வீட்டுக்கு வந்த மனோகரிக்கு லாரி, வேண்டுமென்றே தன்னை இடிப்பதுபோல் வந்ததோ?' என்று சந்தேகம் எழுந்தது.

லாரியிலிருந்த வரிகளும், காதருகே கேட்ட குரலும் வயிற்றைப் பிசைய, எழுந்து சென்று திருநீறைப் பூசிக்கொண்டு, வேலை பார்க்கலானார்.

மாலைக்குள் மனம் தெளிந்தது… "இந்த மனசாட்சி பண்ற வேலயா இருக்குமோ?" என்று தனக்குள் பேசிச் சிரித்துக்கொண்டார்.

அடுத்தநாள் விடிகாலையில், தான் திரும்பி வர ஒரு நாள் ஆகும் கூறிவிட்டு, சுப்பிரமணியம் வசூலுக்குக் கிளம்பினார்.

மதிய உணவுக்குப் பிறகு கட்டிலில் படுத்தும் மனோகரிக்கு உறக்கம் வரவில்லை.

‘பிள்ளைகள் இரவு வரத் தாமதமாகும். தான் மட்டும் ஏன் தனியா வீட்ல இருக்கனும்?’ என்று நினைத்த மனோகரி, மாலைவேளையில், பக்கத்து வீட்டுக்கார பெண்மணியுடன் சினிமா தியேட்டருக்குச் சென்றாள்.

படம் முடிந்து திரும்பும்பொழுது, மழைக்காலம் என்பதால் தெரு விளக்குகளும் எரியாமல் கும்மிருட்டாக இருந்தது.

இரு பெண்களும் பேசிக் கொண்டே நடக்கையில் திடீரெனப் பிச்சிப்பூ வாடை நாசியைத் துளைத்தது.

தன் அருகில் வந்த பெண்மணியின் தலையிலும் பூ இல்லை… பிறகு எங்கிருந்து வந்தது பூ வாசம்? என்று நினைத்தவர் அருகில் வந்த பெண்மணியிடம் கேட்க,

"மூக்கு போச்சா? மதுரைல சின்ன மழை வந்தாலே தெரு நாறிடும்… கவுச்சி நாத்தத்தைத்தவிர எனக்கு எந்த வாடையும் வரலயேக்கா?" என்று சிரித்தபடி புரளி பேச்சை, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்…

சிறிது நேரத்தில் அவர்களுக்குப் பின்னால் கொலுசு சப்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்த மனோகரிக்கு இருட்டில் எதுவும் தெரியவில்லை.

"வேகமா நடப்போம். தெருவுல நாம மட்டும்தான் இருக்கோம் பாரு… தெருவிளக்கு வேற எரியல" என்றதும் அந்தப் பெண்மணியும் நடையை வேகப்படுத்தினார்.

கொலுசொலி மிக நெருக்கமாகக் கேட்டது.

அருகில் வரும் பெண்மணிக்கு, கொலுசுச் சத்தம் கேக்கலையா? இல்ல… பொரணி பேசுற சுவராசியத்துல கவனிக்கலையா?’ என்று எண்ணியபடி நடந்த மனோகரியின் காலை யாரோ தன் கையால் பற்றி இடற, அப்படியே தலைகுப்புற விழுந்தார் மனோகரி.

"அச்சோ அக்கா! பார்த்து நடக்கக் கூடாதா?" என்று அருகில் வந்த பெண்மணி மனோகரியை தூக்க முயல,

மனோகரியால் எழுந்திருக்க முடியவில்லை. மாலைவேளையில் தூரல் போட்ட மழையின் காரணமாக, சற்று ஈரமாக இருந்த மண் தரை, எழுந்திருக்க விடாமல் வழுக்கி, வழுக்கி விட.

"என்னக்கா பண்றீங்க? கைய புடிச்சு எந்திரிங்க. திரும்பத் திரும்ப விழுகுறீங்க?” என்ற அந்தப்பெண்மணி சுற்றிலும், 'யாராவது துணைக்கு இருக்கிறார்களா?' என்று பார்த்தாள்.

தூரத்தில் ஒரு பெட்டிக்கடை இருக்க, 'அந்தப் பெட்டிக்கடைக்காரரைத் துணைக்கு அழைப்போம்.' என்று எண்ணி,

"அண்ணே! அண்ணே!" என்று அழைத்துக்கொண்டே அவரை நோக்கிச் சென்றார்.

அதைப் பார்த்த மனோகரி, அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணியை, "போகாதீங்க! என் பக்கத்திலேயே இருங்க!" என்னை விட்டுப் போயிடாதீங்க" என்று அலறினார்.

"அவள் உன் பக்கத்தில் இருந்துவிட்டால் என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்ற முடியுமா?" என்ற குரல் கேட்டதும் மிரண்டு போய் எழுந்திருக்க நினைத்த மனோகரி, மீது யாரோ அழுத்தமாக அமர்ந்து, மனோகரியை எழுந்திருக்க விடாமல் செய்தார்.

"யார் நீ? என்னை ஏன் பயமுறுத்துற?" என்று மனோகரி கேட்ட மாத்திரத்தில்,

அந்த வீதியே நடுங்கும்படியான சிரிப்பொலி கேட்டது…

தனது முகத்திற்கு அருகில், யாரோ ஒருவருடைய முகம் நெருங்கி இருப்பதுபோல் வெப்பமும், பூ வாசமும் தாக்க, திரும்பிப் பார்த்த மனோகரியின் கண்களுக்கு யாரும் தென்படவில்லை.

ஆனால், ‘நிச்சயமாகத் தன் முகத்திற்கு அருகே, தன்னைப் பார்த்தவாறு யாரோ இருக்கிறார்கள்’ என்று உணர்ந்த மனோகரி, பயந்து நடுங்கி,

"யார் நீங்கள்? ஏன் என்னைக் கஷ்டப்படுத்துறீங்க? என்று கேட்டார்.

"நான் யாருன்னு சொல்லிட்டா உனக்குத் தெரியுமா?" என்று அந்தக் குரல் கேட்க,

"ஏன் அடிக்கடி என் காதுல வந்து பேசுறீங்க! அன்னைக்கு ஆம்பளக் குரல்ல பேசுனீங்க. இன்னைக்குப் பொம்பளக் குரல்ல பேசுறீங்க... யார் நீங்க?" என்று மழைக்காலத்திலும் பயத்தால் உடலெங்கும் வியர்த்து வடிய கேட்டார் மனோகரி.

"ஏன்? உன் வாழ்க்கையில நிறையக் குடும்பத்த கலச்சட்டியோ? அந்தப் பாவந்தான் மீரா வாழ்க்கையில உன்னை நுழையவிட்டு இருக்கு போல." என்று கூற,

"மீராவா? எந்த மீரா?"

"உனக்கு எத்தன மீராவ தெரியும்? இல்ல... எத்தன மீராவோட வாழ்க்கைய கெடுத்திருக்க? நீ ஒரு பொம்பளை தானே? நீ அழிக்கிறது மீரா வாழ்க்கைய மட்டுமில்ல, உன் பொண்ணோட வாழ்க்கயுந்தான்னு மறந்துட்டு திரியிற…" என்று கூற

"எங்க விவகாரத்துல தலையிட நீங்க யாருன்னு சொல்லுங்க." என்று தன்னை மீறி யாரிடம் பேசுகிறோம் என்பதையே மறந்து மனோகரி கத்தவும்,
ஓங்கி ஒரு அடி! இடிபோல் கன்னத்தில் இறங்கியதும், வாய் கிழிந்து குருதி வெளியேறியது... அந்த வலி பொறுக்க முடியாமல் அழுதார் மனோகரி.

"வலிக்குதா? வலிக்குதா? தாயையும் மகளையும் பிரிக்கிறியே? அவங்களுக்கும் இப்படித்தானே வலிக்கும்?" என்று கேட்க,

"யாருமா நீ? ஆம்பளயா? பொம்பளயான்னே தெரியல…"

"அது எதுக்கு உனக்கு? தெரிஞ்சு என்ன செய்யப் போற? நீ சொல்றதை நான் கேட்க இங்கே வரல. நான் சொல்றதை நீ கேளு!" என்றது அந்தப் பெண்ணின் உக்கிரக் குரல்.

தன் மீது யாரோ ஏறிய பாரதத்தின் காரணமாகவும், பயத்தினாலும் மூச்சுத்திணற, மனோகரி மீண்டும், பக்கத்துவீட்டுப் பெண்மணியை, சத்தம் போட்டு அழைத்தார்.

மனோகரிக்கு, சிறிது நேரத்தில் வாயிலிருந்து சத்தம் வராமல் வாயைத் திறக்கும்போது வெறும் காற்று மட்டும் வந்தது…

"என்னிடமிருந்து உன்னால் எப்போதுமே தப்பிக்க முடியாது மனோகரி. ஒழுங்கா உயிர் வாழ ஆசையிருந்தா, மீராவிற்கு எந்த வகையிலும் துன்பம் நேர்வதற்குக் காரணமாகி விடாதே... இல்லை? உன் வம்சத்தையே அழிச்சுடுவேன்…" என்று கூறி, மனோகரியின் முடியைப் பிடித்து, தலையைத் தூக்கி தரையில் ஓங்கி மோத,

அதுவரை மண் தரையாய் இருந்த இடம், திடீரென்று பாறையாக மாறி, மோதிய வேகத்தில் தலையில் மின்சாரம் தாக்கியது போல் உடலேங்கும் அதிர்ச்சிப் பரவ மயங்கி விழுந்தார் மனோகரி.


வார்த்தைகளின் எண்ணிக்கை -1927

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
பெண்ணுக்கு பெண் தான் எதிரின்னு சொல்லுவாங்க.. போதுவா நம் இனத்தை (பெண் இனத்தை) நம்மளே தாழ்த்திக்கிறது எனக்கு புடிக்காது.. ஆனா இந்த மனோகரிய பார்க்க அது நிஜமோன்னு தோணுது.. அவளுக்கு நல்லா வேணும் ஒரு குழந்தைய போய் இப்படி மிரட்டி பயமுறுத்தி வச்சிக்கிறதுல என்ன அம்மா அவ.. இந்த மாலினிக்கும் அறிவு இல்ல.. அடிச்சா புள்ளைக்கு நம்ம மேல எப்படி பாசம் வரும் ன்னு யோசிக்க மாட்டாளா.. அவ அம்மா ஒரு காரணம்ன்னா அவளும் ஒரு காரணம் தான்.. அவளுக்கும் 2 வை கண்ணா..
 

Sspriya

Well-known member
அம்மா மாதிரியே நடந்துக்கல அவங்க.. இந்த தண்டனை தேவை தான் அவங்களுக்கு 👍🏻👍🏻👍🏻... மீராக்குட்டி இனிமேல் ஆச்சு தாத்தா பாட்டி கூட happy யா இருக்கனும்... மாலினியும் அன்பா மாறிட்டா நல்லா இருக்கும் 👍🏻👍🏻
 

Sspriya

Well-known member
Todays punchu 💞💞💞

பெற்ற தாயே மகளுக்கு துர்போதனை வழங்குவது தான் கலிகாலம்

இதனை தடுத்து மீராவை காக்க வந்தார் மாதவன் எனவே,இனி அவளுக்கு ஆரம்பம் ஆனது நல்ல காலம் 💞💞💞
 

Mohanapriya Ayyappan

Active member
இது என்ன கேரக்டர்னே தெரியல மீரா பாவம் குழந்தை எவ்வளோ பயப்புடுது.
தாத்தா பாட்டி லவ்லி❤️😍
 
Top