கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-11

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-11

'புன்னைவனத்தில் திறக்கப்பட உள்ள ஃபைனான்ஸ் கம்பனிக்கு நல்லதொரு பெயர் வைப்போம்' என்று எண்ணி தன் குடும்பத்தினரிடம் கலந்தாலோசித்தார் தாத்தா.

"மீரா பெயர் வைப்போம்!" என்று அப்பத்தா கூற,

தாத்தா, தன் புருவங்களுக்கிடையே இரு விரல்களால் வருடியவாறு யோசித்தார்.

"இதுல யோசிக்க என்னங்க இருக்கு? மீரா பிறந்த பிறகுதான பிஸினஸ் நல்லா டெவலப் ஆச்சு? அதே மாதிரி மீரா தாமரைக்குளத்திலிருந்து இங்க வந்தபிறகுதானே போட்டியா ஒரு கடை வந்து, நம்ம லாபம் கொறஞ்சிடுச்சு. இல்லையா? அவள மாதிரியே அவ பேரும் அதிர்ஷ்டம்தான்... அதையே வச்சுடுவோம்." என்று அப்பத்தா கூற,

"நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, நமக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க… தொழில்ங்கிறதும் சொத்துமாதிரிதான? இதிலயும் ரெண்டுபேருக்குமே சமமான உரிமை இருக்கு. மீரா பேர் வச்சா… அதுவே… பின்னாள்ல நம்ம பிள்ளைகளுக்கிடையில மனஸ்தாபத்த ஏற்படுத்திடக் கூடாது முத்துரா." என்று தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போது,

"தாத்தா! அப்பத்தாவை ஏன் நீங்க முத்துரான்னு கூப்பிடுறீங்க" என்று திடீரென்று தனது சந்தேகத்தைக் கேட்டாள் மீரஜா.

'இத்தனை வருசமா இப்படிதான கூப்பிடுறேன்?… இதுவர அத மீராகுட்டி கவனிக்கலையா? இல்ல இப்பதான் கவனிக்கிற அளவு வளர்ந்திருக்காளா?' என்று எண்ணியபடி ஆச்சரியமாகத் தாத்தா மீரஜாவை பார்த்தார். அதேவேளையில்,

"மீரா! பெரியவங்கட்டலாம் இப்படிப் பேசக் கூடாது" என்று மாலினி அதட்டினாள்.

"இதுல என்னம்மா இருக்கு? அவளுக்குச் சந்தேகம் வந்தா நம்மகிட்ட தான கேப்பா? நம்ம சொல்லலைனா, வெளியே போய்க் கேட்க ஆரம்பிச்சிடுவா. நல்லவங்கட்ட அவளுக்கு வர்ற சந்தேகத்த கேட்டா பரவாயில்ல… தப்பான ஆளுகட்ட கேட்டுடக்கூடாதில்ல? அதோட, நம்ம பிள்ளை நம்மட்ட மட்டுந்தானே அவ நெனச்சதெல்லாம் பேச முடியும். கேட்க முடியும். இதெல்லாம் கண்டிக்கக் கூடாதும்மா." என்று கூறிய தாத்தா, மீரஜாவிடம்,

"முத்துராக்குன்னு சொல்றத, முத்துரா னு சொல்லும்போது கொஞ்சம் நல்லா இருக்கு. இல்லையா மீராகுட்டி? உங்க பேர் மீரஜா தானே? அத மீரா, மீராகுட்டினு கூப்பிடும்போது மனசுக்கு நெருக்கமா இருக்கில்ல அந்தமாதிரிதான்..." என்று தாத்தா விளக்கம் கொடுக்கவும்,

"ஓஓஓ…" என்றாள் மீரஜா.

"வழக்கம்போல நாம பேச வந்த விசயத்த விட்டுட்டு எங்கோ போயாச்சு." என்று சிரித்தார் அப்பத்தா.

"சரி! ஏதாவது பேர் சொல்லுங்க ப்பா." என்ற தாத்தாவிடம்,

"உங்களுக்கு, சாமி பேர் வைக்க இஷ்டமிருக்காது." என்று அப்பத்தா தயங்கியவாறு கூறினார்.

"இதுல என் இஷ்டத்தவிடக் கஸ்டமர்க்கும் நெருடல் இல்லாம இருக்கனும் முத்துரா." என்றார் தாத்தா.

"சுபத்ரா ஃபினான்ஸ்?" என்று செல்வராஜ் கேட்டான்.

"ம்ம்ம்… அதோட ஜா வையும் சேர்த்து, "சுபத்ரஜா ஃபினான்ஸ்" இன்னும் நல்லா இருக்குமே?" என்று தாத்தா, செல்வராஜிடம் கேட்டார்.

"வாவ்! அருமை!" என்று அப்பத்தாவுடன் அனைவரும் அந்தப் பெயரை அங்கீகரிக்க,

"அது யாரு பேரு தாத்தா?" என்று கேட்டாள் மீரஜா.

"சுப்பையாபிள்ளையைச் சுருக்கமா 'சு'னா 'ப'னா ன்னுவாங்க டா… அதுல வர்ற 'சுப' வும், முத்துரா ல வர்ற 'த்ரா' வையும் சேர்த்தா, சுபத்ரா வருதா?” என்று செல்வராஜ் ஆரம்பிக்க,

“சுபத்ரான்ற பேரோட, உன் அப்பா பேர்ல் கடைசி எழுத்து, சித்தப்பா பேரு, உன்பேர்ல கூடக் கடைசி எழுத்து 'ஜா’ தானே? அதையும் சேர்த்து தான் ‘சுபத்ரஜா’... எப்படி...?" என்றதும்,

விழிகள் விரியப் பார்த்தவள், "ம்ம்ம் நல்லாருக்கு" என்று சிரித்தாள்.

"இப்பவும் இவ பேர்ல ரெண்டு எழுத்து வருதே அத்தை. 'ரஜா'... மீரஜா?" என்று மாலினி சொன்னதும்,

"ஐ! ஆமா!" என்று குஷியான மீரஜாவைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, "இவ இல்லாம இனி நாங்க இருக்க முடியாது மாலினி!" என்று அப்பத்தாவும்,

"பொதுவாவே முதல் பெண் குழந்தை மகாலட்சுமி அம்சம்னுவாங்க… நம்ம மீராவோட ராசிய பத்தி, நான் சொல்லித் தெரிஞ்சுக்கனும்னு இல்ல… அதோட நான், 'ஜா' ன்ற எழுத்த, நம்ம செல்வத்தையும், தனாவையும் மனசுல வச்சுதான் சொன்னேன்… அத சேர்த்து பார்க்கும்போது மீரா வந்து ஒட்டிக்கிட்டா… இருக்கட்டுமே..." என்று தாத்தாவும் சந்தோஷமாகச் சிரித்தபடி கூற,

மாலினிக்கு, 'சந்தோஷியின் பெயர் வரவில்லையே?' என்று தோன்றியது.

"கடை திறப்பு விழாவுக்கு முன்னாடி நம்ம குலதெய்வம் கோயிலுக்கும், இராமேஸ்வரத்துக்கும் ஒரு நட போயிட்டு வந்துடுவமா?" என்று அப்பத்தா செல்வராஜையும், மாலினியையும் பார்த்துக் கேட்டார்.

"கடை தெறக்குறதுக்கு வேற, லீவெடுக்கனும்மா… நீங்க எல்லோரும் போயிட்டு வாங்களேன்." என்று செல்வராஜ் சொன்னான்.

"கூட ரெண்டு நாள் தானே லீவு வரும்… வாயேன்." என்ற அப்பத்தாவிடம்,

"உங்ஙளுக்குத் தெரியாததில்லம்மா… நான் வேல பார்க்கிறது சின்னக் கிராமத்துல… அங்க நானும் லலிதா டீச்சரும்தான் இருக்கோம்… இதுல நான் நாலுநாள் லீவெடுத்தா, அந்த டீச்சரால அஞ்சு வகுப்பயும் சேர்த்து சமாளிக்கிறது கஷ்டம். புரிஞ்சுக்குங்கம்மா." என்றான் சற்று கெஞ்சும் பாவனையில்.

"சரி செல்வம் இருக்கட்டும். நாம போயிட்டு வரலாம்." என்று தாத்தா கூறவும்,

வாயில் ஈ நுழைவதுகூடத் தெரியாத அளவுக்குத் தாத்தாவைத் திகைத்துப் பார்த்தார் அப்பத்தா.

"சரி! சரி! ஷாக் ஐ குறை… கடவுளுக்காக இல்லைனாலும் நம்ம மீராகுட்டிக்காக வர்றேன்." என்று தாத்தா சிரித்தார்‌.

"என் பேத்தி எப்படிப்பட்ட அதிர்ஷ்டக்காரி பார்த்தியா செல்வம்? இத்தன வருசத்துல உங்க ஐயாவ கோயிலுக்குக் கூட்டிட்டுப் போக முடிஞ்சதா நம்மனால?" என்று சந்தோஷமாக மீரஜாவிற்கு, அப்பத்தா திருஷ்டி கழித்தார்.

"இதுக்கும் இவதான் காரணமா?" என்று முகம் சுணங்கிய மாலினியிடம்,

"நீ கோயிலுக்கு வர்ற நாளா பார்த்துச் சொல்லு ம்மா… கிளம்புவோம்." என்றார் அப்பத்தா.

"மாலினி இங்க இருக்கட்டும் ம்மா… கடை திறப்புக்கான வெளி வேலை நிறைய இருக்கு… இதுல சமையலும் பண்ண என்னால முடியாது…" என்று செல்வராஜ் இழுக்கவும்,

"ஆமா! ஆமா!" என்று அப்பத்தா தலையாட்டி ஆமோதித்தார்.

'இவர்தான் ஊருக்கு வரமாட்டேங்கிறார். என்னையுமா அனுப்பக் கூடாது?… காலம்பூரா வடிச்சுக்கொட்டுறதுலயே என் வாழ்க்க கழியுது… இந்த வீட்டு வேலையிலருந்து என்னைக்கோ ஒன்னுரெண்டு நாள் கிடைக்கிற விடுதலையையும் இவர் கெடுத்துட்டார்.' என்று எண்ணிய மாலினி, சட்டென்று உள்ளே சென்றுவிட்டாள்.

மாலினியின் மனம் புரிந்த பெரியவர்கள், 'மகனுக்காகப் பார்ப்பதா? மருமகளைப் பார்ப்பதா?' என்று குழம்பிப் போயினர்.

இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடி, இராமநாதரையும், பர்வதவர்த்தினிதாயாரையும் தரிசித்துவிட்டு, சேதுமாதவரோடு மற்ற பரிவார தெய்வங்களையும் வணங்கியபிறகு, தாத்தா, அப்பத்தா, மீரஜா மூவரும் கடற்கரையில் அமர்ந்தனர்.

சிறிது நேரம் அங்கிருந்த குழந்தைகளுடன் ஓடிவிளையாடிக் களைத்தவள், தனது அப்பத்தா தாத்தா அருகில் அமர்ந்து, மணலில் விளையாட ஆரம்பித்தாள்.

"பிள்ளை டயர்டாயிட்டா... நான் ஏதாவது நொறுக்குத்தீனி வாங்கிட்டு வாரேன்" என்று கூறிவிட்டு தாத்தா எழுந்து சென்றார்…

'கல்யாணமாகி இத்தன வருசத்துல மொதமொதலா, பொண்டாட்டி பிள்ளையோட வெளியே வந்திருக்கார்… கோயிலுக்கு வந்திருக்கார்ங்கிறதத்தாண்டி, தன் குடும்பத்துடன் எந்த வேலைப்பளுவும், டென்சனும் இல்லாம, இப்படி ரிலாக்ஸாக எங்குமே இவர் வந்ததில்லை…' என்று நடந்து சென்று கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்தவாறு அப்பத்தா, பழைய நினைவுகளுக்குச் சென்றார்.

அப்பத்தா அருகில் அமர்ந்திருந்த மீரஜா மணலை அலைவதும், சேர்ப்பதுமாக விளையாட, அவளருகே, தாமரைக்குளத்தில் மீரஜாவுடன் பழகிய சிறுவன் வந்து அமர்ந்தான்.

"மீரா என்ன பண்ற?" என்று கேட்டான்.

"ஐ! நீயும் இங்க வந்துட்டியா?" என்று மீரஜா கேட்டதும் அச்சிறுவன் சிரித்தான்.

"என்ன பண்ற மீரா?"

"பொம்ம செஞ்சு விளாடுறேன்."

"இங்க இருக்கிற மண் ஒட்டாது மீரா… அதனாலதான் உன்னால பொம்ம பிடிக்க முடியல… அங்க பாரு, மண் ஈரமா இருக்கு… அங்க வந்து செஞ்சு பாரேன்... நீ நினைக்கிற மாதிரி மண்ணுவச்சு விளையாடலாம்... வா!" என்று கூறி அழைத்துச் சென்றான்.

சிறுவனுடன் சென்ற மீரஜா, "அப்பத்தாட்ட சொல்லிட்டு வர்றேன்." என்று திரும்ப,

"நாம துரமா போகல… உங்கப்பத்தாவுக்குத தெரியிற இடத்துலதான் விளையாடப்போறோம் வா!" என்றதும் சிறுவனுடன் தன் அப்பத்தாவைப் பார்த்தபடியே சென்றாள் மீரஜா.

ஐம்பதடிதூரம் சென்றதும் ஈர மணற்பரப்பு வந்தது.

அங்கே அமர்ந்து விளையாட ஆரம்பித்தனர்
சிறுவனும் மீரஜாவும்,

மீரஜா மணலை எடுத்து, எடுத்துக் குவித்து வைக்க, அது லிங்க வடிவில் வந்தது.

"இங்க பாரேன்… நீ செஞ்சிருக்கிறது கோயிலுக்குள்ள இருக்கிற சாமி மாதிரி இருக்கு?… " என்று சிறுவன் கூறியதும்,

தான் செய்த லிங்கவடிவத்தைப் பார்த்த மீரஜா, "அப்படியா?" என்றாள்.

"ஆமா மீரா! இந்தச் சாமிட்ட நீ எது கேட்டாலும் கிடைக்கும். வேண்டிக்க." என்று அந்தச் சிறுவன் கூறியதும்,

மீரா, கும்பிடுவதுபோல் கைகளைச் சேர்த்து, கண்களை மூடி, சிறிது நேரம் இருந்துவிட்டு கண்விழிக்க,

"சாமிட்ட என்ன கேட்ட?" என்று ஆர்வமாகக் கேட்டான் சிறுவன்.

"ஒன்னும் கேக்கல."

"அப்புறம் கண்ணமூடிட்டு என்ன பண்ண?"

"சும்மாதான் இருந்தேன்."

"சாமிட்ட எதுவும் கேக்கலையா? ஏன் மீரா?"

"என்ன கேக்க? நமக்கு என்ன வேணும்னு சாமிக்குத் தெரியுமாம். எங்கப்பத்தா சொல்வாங்க" என்று மீராஜா சொன்ன வரிகளுக்கு அவளுக்கே அர்த்தம் தெரியுமா? என்பதை நினைத்துக் கொண்ட சிறுவன்,

"இந்த வார்த்தை ய எப்பவுமே மனசுல வச்சுக்க என்ன?"

"எத?"

'நமக்கு என்ன வேணும்னு கடவுளுக்குத் தெரியும்!' என்று மீரஜா சொன்னதைக் குறிப்பிட்டிருந்தாலும், அதைச்சொல்லாமல்,

"இந்த இடத்துல மண்ணால லிங்கம் செஞ்சு கும்பிட்டா நாம கேட்டத கடவுள் நிச்சயமா தருவார். சரியா?... " என்று சமாளித்தான்.

"அது ஏன் இந்த இடம்? இங்க சாமிகூட இல்லையே?" என்ற மீரஜாவிடம்,

"அது ஏன்னா? இராவணன்னு ஒருத்தன ஸ்ரீராமர் கொன்னுட்டார்… "

"அச்சச்சோ ஏன்?"

"அத இன்னொரு நாள் சொல்றேன். சரியா?

"ம்ம்?... ம்ம்ம்" என்று மீரஜா தலையாட்டினாள்.

"கெட்டவனா இருந்தாலும் இராவணனைக் கொன்னது தப்புதான?"

"ஆ...ஆமா ஆமா…"

"அந்தத் தப்புக்கு மன்னிப்பு கேக்கிறதுக்காக, ஸ்ரீராமர, இந்த இடத்தில் சிவலிங்கத்தைச் செஞ்சு சாமி கும்பிடச் சொன்னாங்க…"

"யாரு?"

"ஒரு முனிவர்… அப்புறம், சாமி கும்பிட சிவனோட லிங்கம் வேணும்ல? அத கொண்டு வர்றதுக்கு, ஆஞ்சனேயர் வேற ஊருக்குப் போயிட்டார்.

"ஆஞ்சனேயர்? எந்த ஊருக்குப் போனாரு?"
"காசின்னு ரொம்பத் தூரத்து இருக்கு அந்த ஊர்…"

"ஓ…ஏன் இங்கெல்லாம் சிவனோட லிங்கம் கிடைக்கலையா?" என்ற மீராஜாவைப் பார்த்த சிறுவன்,

"அதுக்கும் ஒரு காரணம் இருக்கு… ஒவ்வொரு ஊர்ல இருக்கும் தெய்வத்துக்கு ஒவ்வொரு சக்தி அபரீதமா இருக்கும்… காசியில இருக்கிற லிங்கத்துக்கு, பாவத்த போக்கி மன்னிக்கிற சக்தி இருக்கு."

"ஓ… அப்போ, ஆஞ்சனேயர் சிவன கோண்டுவந்துட்டாரா?"

“லிங்கத்த ஆஞ்சனேயர் கொண்டுவர லேட் ஆயிடுச்சு. அதனால, ஸ்ரீ ராமரோட மனைவி சீதை, இந்த மண்ணுலதான் லிங்கம் செஞ்சாங்களாம். அந்த லிங்கம்தான் கோயிலுக்குள்ள இருக்கிற ராமநாதஸ்வாமி இருக்கார்ல? அவராம்…"

"அப்படியா?"

"ஆமா! அதனாலதான் இந்தச் சேதுமாதவர் சன்னதிக்கு எதிர்ல இருக்குற மண்ல லிங்கம் மாதிரி செஞ்சு கும்பிட்டா கேட்டது கிடைக்கும் னு வாங்க."

"ம்ம்ம்… இப்ப எதுவும் வேணாம்… அப்புறமா யோசிச்சு கேக்கவா?" என்ற மீரஜாவின் குழந்தைந்தனத்தில் மகிழ்ந்த சிறுவன்,

"கேட்கலாமே? எப்ப வேணும்னாலும், அப்பன் சிவன் கொடுக்கமாட்டாரா என்ன?"

"அப்பாவா? ஹாஹ்ஹஹா… உனக்கு எங்கப்பாவ தெரியாதுல்ல? அவர் ஊர்ல இருக்கார்."

"எந்த ஊர்ல?"

"எங்க ஊர்ல…"

"ஓஹோ… சரி... அப்பத்தா உன்னத்தேடுறாங்க பாரு… நீ போ! நாம அப்புறம் பாக்கலாம்." என்று சிறுவன் விடைகொடுத்தான்.

தன் அப்பத்தாவைப் பார்த்த மீரஜா அவர்களை நோக்கி ஓடியவள், மீண்டும் திரும்பி வந்து,

"ஆமா... உன் பேர் என்ன?" என்று கேட்ட அதேசமயத்தில் மீரஜா பின்பக்கமிருந்த ஒரு பெண்மணி, "நந்தா!" என்று அழைக்க,

அந்தச் சிறுவனும் அந்தப்பெண்மணியை எட்டிப் பார்த்தான்.

அதைக் கவனித்த மீரஜா, "ஓ! உன் பேர் நந்தாவா?" என்று கேட்டுவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் மீண்டும் தன் அப்பத்தாவை நோக்கி மீரஜா ஓடினாள்.

சிறுவன் சிரித்துக்கொண்டான்‌.

"அவள் வரமாகக் கேட்பதைத் தரத்தயாராகு கண்ணா!" என்று குடைவரையிலிருந்து குரல் வந்ததும்,

'நமக்கு என்ன வேணும்னு கடவுளுக்குத் தெரியும்' என்ற மீரஜாவின் குரல் காதோரம் ஒலிக்க,

மீண்டும் சிரித்தான், "நந்தா!" என்று மீரஜாவால் அழைக்கப்பட இருக்கும் சிறுவன்...


வார்த்தைகளின் எண்ணிக்கை -1153

கண்ணன் வருவான்!

🎼🎼🎼🎼🎼🎼









 

Shailaputri R

Well-known member
என்ன சொல்றது கண்ணா நீ அவளோ அழகா பேசுறா.. ரெண்டு தெய்வ குழந்தைகள் கண்ணு முன்னாடி விளையாடுற மாதிரி இருக்கு.. அவளோ அழகு.. நமக்கு என்ன வேணும்ன்னு கடவுளுக்கு தெரியும்.. 🙏
 

aas2022-writer

Well-known member
என்ன சொல்றது கண்ணா நீ அவளோ அழகா பேசுறா.. ரெண்டு தெய்வ குழந்தைகள் கண்ணு முன்னாடி விளையாடுற மாதிரி இருக்கு.. அவளோ அழகு.. நமக்கு என்ன வேணும்ன்னு கடவுளுக்கு தெரியும்.. 🙏
தொடர்ந்து கருத்துக்கள் சொல்றதுக்கு மிக்க நன்றி சகோதரி...
இருவருமே தெய்வக்குழந்தைனா நினைக்கிறீங்க? எனக்கும் அதே சந்தேகம்தான் சகி...
 

Sspriya

Well-known member
ரொம்ப அழகான வரி அது உண்மையும் கூட... 💞💞நமக்கு என்ன வேணும்னு கடவுளுக்கு தெரியும் 💞💞.. தாத்தா மீராகாக எது வேணா செய்வார் போல... 😍😍😍
 

Sspriya

Well-known member
Todays thought 💞💞

நமக்கு எது நல்லது என்றும்

நமக்கு எந்த நேரத்தில் எது தேவையென்றும்

நம்மை விட கடவுளுக்கே நன்கு தெரியும்

💞💞be patient when you wait for something 💞💞
 
Top