கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-13

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-13


மாடியில் தனிக்குடித்தனம்…

இனி செல்வராஜையும், மீரஜாவையும் தங்களிடமிருந்து மாலினி பிரித்துவிடுவாள் என்று தாத்தாவிற்கு நன்கு தெரிந்தது. இதையே அப்பத்தா தன் கணவரிடம் கூறினார்.

"தனிக்குடித்தனம் வேண்டாங்க… செல்வத்தையும், மீராக்குட்டியையும் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது‌"

"அது புரியுதுல்ல? அப்பப் பேசாம இரு…"

"என்ன சொல்றீங்க?"

"இப்ப மட்டும் செல்வம், நம்மட்ட முன்னமாதிரி பேசுறானா?" என்ற தாத்தாவின் கேள்விக்கு, அப்பத்தா தலையைக்குனிந்து கொண்டார்.

"அடுத்து மீராக்குட்டிதான்… நாம பெத்த பிள்ளையே நம்மளப் புரிஞ்சுக்கல… மீராக்குட்டி, குழந்தை… யார் என்ன சொன்னாலும் நம்பும் பருவம்…"

"என்னங்க இப்டி சொல்றீங்க?"

"உனக்கும் இதுதான் நடக்குதுன்னு தெரியலையா?"

"நான்தான் அனுசரிச்சுப் போயிடுறேனே?"

"மேல் வேலைக்கு இருந்தவங்கள நிறுத்தியாச்சு… வீட்டு வெலை முழுசும் பெரும்பாலும் நீதான பார்க்கிற?"

"எப்பவும் பார்க்கிறது தானேங்க?"

"நிஜந்தான்… ஆனா அப்ப நீ ஒருத்திதான் நம்ம வீட்ல இருந்த பொம்பள. இப்ப, இரண்டு பொம்பளைங்க இருக்கிற இடத்துல நீ ஒருத்தி மட்டும் வேலை பார்க்கிறது மனசுக்கு வித்தியாசமா இருந்துச்சு முத்துரா."

"இருக்கட்டுமே நம்ம மருமகதான… நாளானா சரியாயிடுவா…"

"ம்ஹும்… இத, நீ நம்புற?... நானும் மாலினிய சோம்பேரிக்கழுதை ன்னுதான் இங்க வந்த புதுசுல நினைச்சேன். ஆனா நம்ம வீட்டுக்கு வர்றவங்கட்ட அவ நடந்துக்கிரும் விதம் மனச உறுத்தவும்தான் அவ நடவடிக்கைய கவனிக்க ஆரம்பிச்சேன்."

"சரி விடுங்க!" என்ற அப்பத்தா, மீண்டும் தன் கணவரைப் பார்த்து, "தனிக்குடித்தனம் போயிட்டா மட்டும் என்ன ஆயிருங்கிறீங்க?"

"செல்வமும், மீராக்குட்டியும் நம்ம விட்டு மனசளவுல தூரமா போயிட்டாலும் கண்ணுக்கெதிர நடமாடுவாங்கள்ல? இதுக்கு மேல சேர்ந்து இருந்தா வீட்டவிட்டே போயிடுவாங்க முத்துரா."

"மீராக்குட்டியால நம்ம விட்டு இருக்க முடியாதுங்க…"

"எனக்கும் அந்த நம்பிக்கைதான்… பார்ப்போம்!" என்று கூறிவிட்டு எழுந்து தங்களது அறைக்குச் சென்றார்.

தாத்தாவின் நடையிலேயே அவர் எந்த அளவுக்கு வருத்தப்படுகிறார் என்று அப்பத்தாவிற்குப் புரிந்தது.

"தாயே கம்பனரியா கமாட்சி! என் குடும்பத்த காப்பாத்து…" என்று மனமுருக வேண்டியவர், தன் கணவரின் மனம் புண்படுமே என்று அடக்கி வைத்திருந்த கண்ணீர், தாத்தா தனது அறைக்குள் சென்றதும், மளமளவென்று கொட்ட ஆரம்பித்தது.

கடவுள் கைவிடுவாரா என்ன?…

காலையில் ஆறு முப்பதுக்கு எழுந்ததும் கீழ் வீட்டிற்கு வரும் மீரஜா, பெரும்பாலும் இரவு தூங்குவதற்குத்தான் மாடிக்குச் சென்றாள்.

மீரா காலையில் எழுந்து வந்து அப்பத்தா பின்னாடியே பேசிக்கொண்டே திரிவாள்… கிட்டத்தட்ட ஏழு மணிக்குத் தாத்தா வாக்கிங் போயிட்டு வந்ததும் தாத்தாவிடம் சென்றுவிடுவாள்…

அவருடன் சேர்ந்துதான் பல் விளக்குவது, குளிப்பது எல்லாம்…

"காலையில் எழுந்ததும் பல் விளகக்கிடனும் மீராக்குட்டி… நேரம் ஆக ஆக வாயில இருக்குற பூச்சிலாம் வயித்துக்குள்ள போயிடும்" என்று தாத்தா கூறும்போதே முகத்தைச் சுழித்த மீரஜா,

"அய்யே… இனி எந்திரிச்சதும் பல் விளக்கிடுறேன் தாத்தா... உவ்வே" என்றவளைப் பார்த்துச் சிரித்தபடி மீரஜாவைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டார்.

இருவரும் சேர்ந்து குளித்ததும்,

"சாப்பிட வாங்க ரெண்டு பேரும்!" என்று அழைத்துச்சென்று அப்பத்தா பரிமாறினார்.

பிறகு, தாத்தா ஃபினான்ஸ் ஆபீசுக்கும், மீரஜா ஸ்கூலுக்கும் சென்றுவிடுவர்.

வழக்கம்போல மதிய உணவை எடுத்துச்செல்ல வந்த வேலையாளிடம், தாத்தாவிற்கும் மீராஜாவிற்கும் கொடுக்க வேண்டிய டிபன் பாக்ஸ், தண்ணி பாட்டில், சிறிய டர்க்கி டவல் அடங்கிய பேக்கை கொடுத்துவிட்டு, "மாடியில மருமக இருப்பா… அவட்டயும் டிபன் பாக்ஸ் வாங்கி, பெரியவன்ட்ட குடுத்துடு." என்றார் அப்பத்தா.

மாடியிலிருந்து திரும்பி வந்த வேலையாள், "பெரியவர் ஸ்கூலுக்குப் போகும் போதே மத்தியான சாப்பாட எடுத்துட்டுப் போயிட்டாராம்மா!" என்றதும்,

"சரி! நீ போய் ஐயாட்ட குடுத்துட்டு, மீராக்குட்டி சாப்பிட்டதும் பேக்ஐ வாங்கிட்டு, அப்புறமா ஐயாட்டயும் பேக்ஐ வாங்கிட்டு வந்துடு." என்று கூறி அனுப்பியவர்,

மாடியிலிருக்கும் அழைப்புமணிக்கான பொத்தானை அழுத்த, மாலினி பால்கனி வழியாக எட்டிப் பார்த்து,

"யாரு?" என்றதும்,

"நான்தான் மாலினி! கொஞ்சம் கீழ வர்றியாம்மா?" என்று அப்பத்தா அழைத்தார்.

"கொஞ்ச நேரம் கதைபுக் படிக்க விடமாட்டாங்களே!" என்று முணுமுணுத்தபடியே கீழே வந்தாள் மாலினி.

"செல்வத்துக்குக் காலையிலேயே சாப்பாடு குடுத்துனுப்பிட்டியாம்மா?" என்று இயல்பான புன்னகையுடன் கேட்டார் அப்பத்தா.

"ஆமா அத்த!"

"காலைல செஞ்சது.‌‌.. இந்நேரத்துக்குச் சாப்பாடு நல்லாவா இருக்கும்? விடிகாலைல எழுந்து சமையல் பண்றதுக்கு இப்ப பண்ணி அனுப்பலாமேம்மா?"

"இங்க எப்பவுமே அத்தான் சாப்பாடு கொண்டு போயிடுவாங்க அத்த..." என்ற மாலினியின் குரலில் சின்ன எரிச்சல் இருந்தாலும்,

"சாப்பிடுறதுக்கு நல்லாயிருக்காதேன்னுதான் சொன்னேன்…" என்றார் அப்பத்தா.

"..."

"என்ன குழம்பு வச்ச?"

"புளிக்குழம்பு"

"புளிக்குழம்பா?" என்றவருக்கு, ‘செல்வராஜுக்குப் புளிக்குழம்பு பிடிக்காதென்பதை மாலினி அறியவில்லையோ?’ என்று நினைத்து,

"புளிக்குழம்பு செல்வத்துக்குப் பிடிக்காதேம்மா…" என்றார் கவலையாக,

"அதுக்கு என்னத்தைப் பண்றது? தினமுமா சாம்பார் வைக்க முடியும்?"

"குருமா, மோர்க்குழம்பெல்லாம் செல்வத்துக்குப் பிடிக்குமேம்மா."

"விடியக்காலைல மோர்க்குழம்பெல்லாம் வைக்கமுடியுமாத்த? மெதுவடை சுடுறதுக்குள்ள விடிஞ்சுடுமே?" என்ற மாலினியைப் பார்த்த அப்பத்தாவிற்கு இயல்பான சிரிப்பு மறைந்தது.

"ம்ம்… நாளைலருந்து நான் செல்வத்துக்கும் சேர்த்துக் குடுத்துவிடவாம்மா?" என்று இதமாக அப்பத்தா கேட்டாலும்,

மாலினிக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. கோபத்தை வெளிக்காட்டாமல்,

"நீங்க இப்ப வந்ததால உங்களுக்குத் தெரியலத்த… இத்தனை நாள்ல அத்தான் புளிகுழம்பு சாப்பிடவும் பழகிட்டார். சரிங்கத்த மேல வேலைகிடக்கு. நான் போகவா?"

"ம்ம் சரிம்மா!" என்றவருக்கு மனம் வேதனையால் வெந்தது.

மதிய உணவு பேக்ஐக் கொடுக்க வந்த வேலையாள்,

"அம்மா! மீராவும் மத்தியான சாப்பாடு கொண்டு போயிட்டாங்களாம்மா." என்றதும்,

‘அடக்கடவுளே குழந்தையும் புளிக்குழம்பையா கொண்டு போனாள்?' என்று பதற்றத்தை மறைத்துக்கொண்டு,

"ம்ம் சாப்பாடு எடுத்துட்டு நீ போனபின்னாடி, மருமக சொன்னா…" என்றபடி பேக்ஐ வாங்கியவர்,

"மீராக்கு கொடுத்த சாப்பாட நீ சாப்பிடுரியாப்பா!" என்று அப்பத்தா கேட்க,

"மீரா நீங்கக் குடுத்துவிட்ட சாப்பாட சாப்பிட்டுட்டாங்கம்மா…"

"ஓ… சரி… கொஞ்சம் இரு உனக்குச் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன். " என்று உள்ளே சென்றார்.
மாலையில் வீடு திரும்பிய மீரா நேராக அப்பத்தாவிடம் சென்றாள்.

"வாடாம்மா… மாடிக்குப் போயி உடம்பக் கழுவி ட்ரஸ் மாத்திட்டு வா… அப்பத்தா உனக்குப் பால் தர்றேன்." என்றவருக்கு மாலினியும் பால் காய்ச்சி வைத்திருப்பாள் என்று தோன்ற,

மீரஜாவிடம், "அம்மா பால் காய்ச்சி வச்சிருப்பா குடிச்சுட்டு வா!" என்றார்.

"அம்மா வெறும்பால்தான் குடுப்பாங்க… நான் இங்க வந்து குடிச்சுக்கிறேன்."

"அம்மா பாவம்ல உனக்காகப் பால் காய்ச்சி வச்சிருக்கும்போது குடிக்காம வரலாமா?"

"சீனி கூடப் போடமாட்டாங்க அப்பத்தா!"

"சாப்பாட்ட குறை சொல்லக்கூடாதுடா… குடிச்சுட்டு வா!" என்றவருக்கு மதிய உணவு ஞாபகம்வர,

"மீராக்குட்டி… மத்தியானத்துக்கு அம்மா குடுத்துவிட்ட சாப்பாடு எங்க?"

"என் ஃபிரண்டுக்குக் குடுத்துட்டேன் அப்பத்தா."

"அந்தப் பொண்ணு சாப்பாடு கொண்டு வர்லயா?"

"நந்தா சாப்பாடு கொண்டு வர்லயாம் அப்பத்தா…"

"ஓ… சரிடாம்மா. நீ போ. அம்மா தேடுவா." என்றதும் மீரஜா மாடிக்கு ஓடினாள்.

பதினைந்தே நிமிடத்தில் திரும்பியவள்,

"அப்பத்தா பால்!" என்றாள்.

'அதுக்குள்ள உடம்ப கழுவி பால் குடிச்சிட்டு வந்துட்டாளா?' என்று புருவம் உயர்த்திப் பார்த்த அப்பத்தா, ஒரு டம்ளர் பாலில் வீட்டில் தயாரித்த புரோட்டின் பவுடரைக் கலந்து, கொடுத்தார்.
"அம்மாட்ட பால் குடிக்கலையா மீராக்குட்டி…"

"குடிச்சிட்டேன்… குடிக்கலைனா அம்மா திட்டுவாங்களே!..." என்றவளைப்பார்த்து அப்பத்தா சிரிக்க,

"ஹி...ஹி… அம்மா வெறும் பால் குடுத்தாங்களா? அதான் இங்கயும் குடிக்கிறேன்…" என்றவளைத் தூக்கித் தன் மடியில் இறுத்தி,

"குடிக்கலாமே? எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம்…" என்று மீரஜாவின் பட்டுக்கன்னத்தில் முத்தமிட்டார்.

"நான் விளையாடிட்டு வர்றேன்." என்று கூறி சிட்டாகப் பறந்தாள்.

அந்தியில் கதிரவன், கடல் அன்னையின் மடியில் தலைசாய,

"அப்பாடா போயிட்டானா? இனிமேலாவது ஜில்லுனு மேகத்துல உலாவுவோம்" என்று நிலா வெளிவந்தது.

நிலவைவிடக் குஷியாகத் தன் தோழிகளுடன் மீரஜா துள்ளித்துள்ளி விளையாடினாள்.

மாலை மயங்கி, வானம் இருள் எனும் போர்வைக்குள் தஞ்சம் புக,

குழந்தைகள் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர்.

வீட்டுக்குள் சென்ற மீரஜா கை, கால்கள், முகம் கழுவிவிட்டு அடுப்படியில் இருந்த அப்பத்தா அருகில் சென்று அமர்ந்து, தன்னாலான உதவிகளைச் செய்தாள்.

அப்பத்தாவின் இரவு சமையல் முடிவதற்கும், தாத்தா வீட்டிற்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

தாத்தா உடல் கழுவி அமர்ந்ததும், வழக்கம்போல, பள்ளியில் நடந்த விசயங்களை மீரஜாவும், அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்யமான விசயங்களைத் தாத்தாவும் கூறிக்கொண்டிருக்க, அவர்கள் உரையாடலைக் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் அப்பத்தா.

பிறகு கடிகாரத்தைப் பார்த்த அப்பத்தா, "மணி எட்டாகப் போகுது… வாங்க சாப்பிட!" என்று கூறிவிட்டு சென்றார்.

இரவு கோதுமை இடியாப்பம் சாப்பிட்டு விட்டுத் தாத்தாவுடன் சேர்ந்து பேசிக்கொண்டே வீட்டு வாசலில் நடை பயின்றவளை,

"மீரா… மாடிக்கு வா!" என்று மாலினியின் குரல் கேட்டதும்,

"அம்மா கூப்பிடுறாங்க. நான் வர்றேன் தாத்தா!" என்று கூறிவிட்டு மாடிக்குச் சென்று,

அன்று அதிகாலையில், மதிய உணவுக்காகத் தயாரித்த குழம்பும், காயையும் சுடவைத்து, சாதம் மட்டும் புதிதாக வேகவைத்து டைனிங் டேபிளில் இருந்தது.

செல்வராஜ் வந்து சாப்பிட, மாலினி பரிமாறிக்கொண்டிருந்தாள்.

மீரஜா கைகளையும் தனது தட்டையும் கழுவிவிட்டு வந்து அமர்ந்தாள்.

"ஏய்! நீ கீழே, தாத்தாவோட சேர்ந்து பலகாரம் சாப்பிட்டேல?" என்று மாலினி கேட்டதும்,

"ஆமாம்மா!" என்றாள் மீரஜா.

"பார்த்தீங்களா? தினமும் இதான் நடக்குது… இங்க நான் சாப்பாடு வச்சுக்கிட்டு இருக்கேன்… இவ அத்தைட்ட கொட்டிக்கிட்டு வர்றா." என்று செல்வராஜிடம், மாலினி புகார் அளித்தாள்.

ஆனால் செல்வராஜ் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை…

மாறாக அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மீரஜாவைப் பார்த்துச் சிரித்தான்.

அதைப் பார்த்த மாலினிக்கு மேலும் கோபம் வந்து, "நீங்க என்ன சிரிக்கிறீங்க?"

"இப்ப நீ கூப்பிடவும் வந்து சாப்பிடுறாள்ல? அப்புறம் என்ன?" என்று சிரித்தான்.

‘இதற்கு மேல் பேசினால் செல்வராஜிற்குக் கோபம் வரக்கூடும்’ என்று பயந்து மாலினி அத்துடன் பேச்சை நிறுத்தினாள்.

தனிக்குடித்தனத்திற்குப் பின் இதேபோல்தான் சிறுசிறு மாறுதலோடு தினமும் நாட்கள் நகர்ந்தது.

மூன்றாவது முறையாக மாலினி கர்ப்பம் தரித்தாள்.

அதே சமயத்தில் தனராஜனுக்கு, புன்னைவனத்துக்கு அருகில் உள்ள சிற்றூருக்கு வேலை மாற்றம் ஆக, தனராஜன் குடும்பத்துடன் புன்னைவனத்திற்கு வந்தான்

இச்செய்தி குடும்பத்தினர் அனைவருக்கும் சந்தோசத்தைத் தந்தது.

ஒருநாள் பவானி, மாலினியிடம், "அக்கா நான் சொன்னா தப்பா எடுத்துக்கக் கூடாது." என்று ஆரம்பித்தாள்.

"சொல்லு பவானி!"

"உங்களுக்கு ரெண்டும் பொம்பளப்பிள்ளைங்க… இப்பப் பிறக்கிறது பையனா இருக்கட்டும்னு சாமிட்ட வேண்டிக்குங்க…" என்றாள்.

இதுவரை, ‘தனக்கு இந்தக் குழந்தைதான் வேண்டும்’ என்ற எண்ணம் இல்லாத மாலினிக்கு,

'மூன்றாவது, பெண் குழந்தையா இருந்தா என்ன?' என்று தோன்றியதும் வழக்கம்போல் தனது தாய் மனோகரிக்கு ஃபோன் செய்தாள்.

"இந்தக்காலத்துல பொம்பளப்பிள்ளைய வளக்கிறதே பெரும்பாடு.‌‌.. இதுல அதுகள கல்யாணம் பண்ணிக் கொடுக்குறதுக்குள்ள பாதிச் சொத்து கரைஞ்சுடும்…"

"என்னம்மா சொல்றீங்க?"

"பின்ன? பொம்பளப்பிள்ளைய வளக்கிறது சும்மான்னு நினைச்சியா? என்னைக்கா இருந்தாலும் அடுத்தவன் வீட்டுக்குப் பொறதுக தானே பொம்பளப்பிள்ளைங்க?"

"என்னம்மா நீங்க வயித்தக் கலக்கிவிடுறீங்க?"

"பொம்பளப் பிள்ளைனாலே செலவுதான் மாலினி… காலத்துக்கும் சீர் செஞ்சே ஓஞ்சுடுவ…"

"சாமிட்ட ஆம்பளப்பிள்ள வேணும்னு கேட்கவா?"

"வேண்டிக்க… வேறென்ன பண்றது? உன் கொழுந்தன் பொண்டாட்டிய பாரு! தலைப்பிள்ளையே ஆம்பளப்பிள்ளையா பெத்துருக்கா… எதுக்கும் குடுப்பிணை வேணும்… ஹரின்னு தலைப்பிள்ளையா பொம்பளப்பிள்ளைய பெத்த… அடுத்தடுத்துப் பொண்ணா பிறக்குது… தலைப்பிள்ளை நல்ல நேரத்துல பிறக்கனும்" என்று அதற்கும் மீரஜாவின் ராசியே காரணம் என்று பலிபோட,

மாலினியின் மனதில், மீரஜாதான் தனது அத்தனை கஷ்டத்துக்கும் காரணம் என்று பதிவானது.

மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்து, ஊரே கைகொட்டி சிரிப்பது போலெல்லாம் மாலினிக்குக் கற்பனை விரிய…

வீட்டில் யாரிடமும் கூறாமல் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்குச் சென்று கருவைக் கலைத்தாள்.

விசயம் தெரிந்து குடும்பத்தினர் அனைவரும் கலங்கினர்.

மீரஜா, தனது அப்பத்தாவிடம் சென்று, "அம்மா வயித்துல இப்ப பாப்பா இல்லையா அப்பத்தா?" என்று கேட்டுவைத்தாள்.

எதார்த்தமாக அங்கே வந்த மாலினியின் செவியில் மீரஜாவின் வார்த்தைகள் விழுந்தது.

மனதில் இருந்த கோபத்தையெல்லாம் திரட்டி மீரஜாவை மாலினி அடித்தாள்.
பதறித்துடித்து மீரஜாவை இழுத்துத் தன் பின்னால் நிற்க வைத்த அப்பத்தா,

" இப்ப எதுக்கு மாலினி இப்படிப்போட்டு பிள்ளைய அடிக்கிற?" என்று கேட்டார்.

"பிள்ளையா இது பிசாசு! எந்த நேரத்துல பிறந்து தொலச்சுதோ அடுத்தடுத்துப் பொம்பளப்பிள்ளையா பிறக்குது…" என்று கோபமாகப் பேசிய மாலினியை,

"என்ன மாதிரியான வார்த்தை இது மாலினி? ஏன்? பொம்பளப் பிள்ளையப் பெத்தநால எதுல கொறஞ்சுட்ட?"

"பொம்பளப் பிள்ளைய பெறுவதே பாவம் தானே?"

"என்ன இப்படீலாம் பேசுற? இந்தப் பொம்பளப்பிள்ளைக்குத்தான் தவமா தவமிருந்தேன் நான்… மறந்துடுச்சா? பொம்பளப் பிள்ளைகதான் வீட்டுல லெட்சுமி"

"ஆமா அப்படித்தான் சொல்றாங்க!"

"நீ பார்க்கிற பார்வைதான் மாலினி தப்பு… எந்தக் காலத்துலயும் பொம்பளப் பிள்ளைங்க இருக்குற இடந்தான் செழிக்கும்… நீதான் நல்லது எதுன்னு புரிஞ்சுக்காம ஏதாவது பண்றன்னா, மீராக்குட்டிய எதுக்கு அடிக்கிற"

"இந்தப் பிசாசு எப்பப் பார்த்தாலும், "பாப்பா பிறக்கப்போகுதான்னுதான் கேட்டுத்தொலைக்குது… தம்பின்னு ஒரு வார்த்தை சொல்லுதா?"

"மனச போட்டுக் குழப்பிக்காம போய் வேலயப் பாரு!" என்று கூறிவிட்டு மீரஜாவையும் கையில் பிடித்துக் கொண்டு அறையினுள் சென்றார் அப்பத்தா.

காரணம் புரியாவிட்டாலும் மீரஜாவின் மனதிற்குள் தன்னால்தான் தம்பி பிறக்கவில்லை என்று பதிந்தது.

அடுத்தநாள் பள்ளிக்குச் செல்லும் வழியில் நந்தன் (தாமரைக்குளத்தில் விளையாடிய சிறுவன்) நின்றிருந்தான்.
நந்தனைப் பார்த்ததும் அவனிடம் ஓடிச்சென்று, விட்டில் நடந்த விசயங்களை, தான் அறிந்தவரைக் கூறி, "எனக்குத் தம்பி பிறக்க நான் என்ன பண்ணனும் நந்தா?" என்று கேட்டாள்.

மீரஜாவின் மனக்குழப்பத்தை அறிந்த நந்தன்,

"அதுக்கென்ன உனக்குத் தம்பி கிடைப்பான். போதுமா?" என்றான்.

மீரஜாவையும் அறியாமல் தனக்கு ஒரு தம்பி வேண்டும் என்ற ஆவல் வளர்ந்தது...

அடுத்த மாதத்தில், சந்தோஷிக்கும், தனராஜனின் மகன் சித்தார்த்துக்கும் முடி எடுப்பதற்காக நயினார் கோயிலுக்குக் குடும்பததோடு சென்றனர்.

ஆண்கள் பூஜைப் பொருள் வாங்கச் சென்றனர்.

மாமியாரும் இரு மருமகள்களும், பிள்ளைகள் இருவருக்கும் முடி எடுப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களின் அருகில் நின்றிருந்த மீரஜா சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது சிறுவன் ஒருவன் மீரஜாவைக் கையசைத்து அழைக்க,

மீரஜா அவனருகில் சென்று, "என்ன?" என்று கேட்டாள்.

"ள்ளாடுவோமாக்கா?"

"ம்ம்"

"நான் ஓடுறேன் நீ என்னைப்பிடிக்கா?"

"இங்கேயே விளையாராடுறதுன்னா சொல்லு,"

"சரி!" என்று கூறிவிட்டு ஓடலானான்.

சிறிது நேரம், இருவரும் அங்கேயே ஓடிப்பிடித்து விளையாடினர்.

அப்பத்தாவும் மீரஜாவைப் பார்த்தபடி இருந்தார்.

அருகில் இருந்த கிணற்றைச் சுற்றி ஓடியபோது அச்சிறுவனின் கையிலிருந்த பொம்மை கிணற்றுக்குள் விழுந்தது...

வார்த்தைகளின் எண்ணிக்கை -1403
கண்ணன் வருவான்
!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
ஏன் மாலினி நீ எப்போ ஆம்பளையா மாறுன.. உன் அம்மா கூட ஆம்பளையா மாறிடுச்சு போல.. பொம்பள புள்ளன்னா செலவுன்னு உன் அம்மா சொல்லும் போது நீ ஏன் அப்ப நான் உனக்கு செலவாம்மா எனக்கு சீர் செஞ்சே நீ கறைஞ்சிட்டியான்னு கேக்கல.. உனக்கு யோசிக்கல ஆனா ஒன்னும் அறியாத உன் புள்ளைய அடிக்கிற.. சும்மா விடாத கண்ணா இந்த மாலினிய அவ அம்மாவ விட இவ ரொம்ப மோசம்..
 

aas2022-writer

Well-known member
ஏன் மாலினி நீ எப்போ ஆம்பளையா மாறுன.. உன் அம்மா கூட ஆம்பளையா மாறிடுச்சு போல.. பொம்பள புள்ளன்னா செலவுன்னு உன் அம்மா சொல்லும் போது நீ ஏன் அப்ப நான் உனக்கு செலவாம்மா எனக்கு சீர் செஞ்சே நீ கறைஞ்சிட்டியான்னு கேக்கல.. உனக்கு யோசிக்கல ஆனா ஒன்னும் அறியாத உன் புள்ளைய அடிக்கிற.. சும்மா விடாத கண்ணா இந்த மாலினிய அவ அம்மாவ விட இவ ரொம்ப மோசம்..
நானும் அந்தக் கண்ணன் எப்ப வருவான்னுதான் பார்க்கிறேன் சிஸ்
 

Sspriya

Well-known member
மனோகரியும் மாலினியும் இன்னும் கருத்தம்மா காலத்திலேயே இருக்காங்க 🙄🙄... வாய்க்கு ருசியா எங்க கிடைக்குதோ அங்க தானே சாப்பிட பிடிக்கும் 💞.. நமக்கு நல்ல சாப்பாடு தான் முக்கியம்... அப்பத்தா பாவம்.. அமைதியாவே இருக்காங்களே... தாத்தா எல்லாம் கரெக்டா நோட் பன்றாரு 👍🏻👍🏻
 

Sspriya

Well-known member
Todays thought 💞💞

பெண்ணுக்கு எதிரி பெண் என கூறுவது சரிதானோ🤔🤔

மனோகரியும் மாலினியும் தன் ரத்த பந்ததையே வெறுகிறார்களே பெண் மகவு என்பதனால் 🙄🙄🙄😳😡
 
Top