கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-28

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-28

வீட்டினர் அனைவருமே பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடியபடியும் வாசலுக்குச் சென்று பார்த்தபடியும் இருந்தனர்.

வாசலை அடைத்து கலர் வண்ண கோலப்பொடியால் வரைந்த கோலம் கண்ணுக்கு விருந்தளித்தது.

அடுப்படியிலிருந்து வந்த உணவு வகைகளின் வாசம் அதிகாலைப் நேரப் பனிக்காற்றோடு கலந்து, ஊரையே வளைத்துப் போட்டது.

ஆரத்தி கரைத்து வைக்கப் பட்டிருந்தது. திருஷ்டி கழிக்க எலுமிச்சம்பழத்திலிருந்து பூசணிக்காய் வரை வரிசையாக காத்திருந்தன.

பெரியவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தைக் கவனித்த, பத்தாம் வகுப்பு முடித்த சித்தார்த்தும், ஏழாம் வகுப்பு முடித்த சுந்தரியும் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

பனிரெண்டாம் வகுப்பு முடித்த சந்தோஷியோ, 'இவர்களை விட்டால் சினிமாவில் காட்டுவதைப்போல், மேளதாளத்துடன், ஆளுயர மாலையுடன் ரயில்வே ஜங்சனுக்கே சென்று அழைத்து வருவார்கள் போல" என்று பொருமிக்கொண்டிருந்தாள்.

தெருமுனையில் வெள்ளைநிற புது செவரலெட் வருவது தெரிந்ததும்,

"மீராக்கா வந்துட்டாங்க!" என்று கத்தியபடி வீட்டிற்குள் ஓடினாள் சுந்தரி.

அடுத்த நொடியில் வீட்டினர் அனைவரும் வீட்டு வாசலுக்கு வர, வெள்ளைநிற செவரலெட் ஊர்ந்து வந்து நின்றது.

லேசாக தலை நரைத்த நல்லசிவம் பதினாறுவயது இளவட்டக் காளைபோல் ஓட்டுனர் இருக்கையிலிருந்து குதித்து இறங்கி, காரின் கதவைத் திறக்கச் செல்ல,

அங்கே காரைத் திறந்து விட்டு, "மீராமா!" என்று கண்கள் பனிக்க நின்று கொண்டிருந்தார் எழுபதுவயதை நெருங்கிக் கொண்டிருந்த தாத்தா…

மாலினி ஆரத்தித் தட்டைக் கொண்டுவந்து அப்பத்தாவிடம் கொடுக்க,

செவரலெட்டிலிருந்து இறங்கும் தனதருமைப் பேத்திக்காகக் காத்திருந்தார் அப்பத்தா…

காரிலிருந்து வெள்ளிக் கொலுசுகள் அணிந்த, பூப் பாதம் நோகாமல் காரிலிருந்து இறங்கிய மீரஜா தாத்தாவின் கைகளைப் பற்றி,

"தாத்தா…" என்று ஆனந்தக் கூச்சலிட,

அப்பத்தா ஆரத்தி எடுத்து, "உள்ள வாடாம்மா!" என்று முகமெல்லாம் மத்தாப்பாய்ப் பூத்தபடி வரவேற்றார்.

அப்பத்தாவைக் கட்டிக்கொண்டவள், குடும்பத்துப் பெரியவர்கள் அனைவருக்கும் சந்தோசமான பார்வையால் தனது வணக்கத்தைத் தெரிவித்தாள்.

சிறியவர்களை அன்பு பொங்கப் பார்த்து குசலம் விசாரித்தாள்.

இயற்கையிலேயே, திரட்டிங் செய்யப்பட்டதைப் போன்ற வடிவான புருவங்களுக்குக் கீழே இருக்கும் கண்களில் நிரந்தரமாகத் தேங்கியிருக்கும் அன்பும், மலர்ந்த தாமரை போன்று எப்பொழுதும் புன்னகையைச் சுமந்திருக்கும் இதழ்களும், இருபத்திரண்டு வயதுப் பெண்ணுக்கு ஆண்டவனால் வாரி வழங்கப்பட்ட இளமையும், இடைவரை நீண்ட சுருள் முடியும், அப்பத்தா பொடிசெய்து அனுப்பும் நலங்குமாவினால் லேசான சந்தன நிறத்திலிருந்த வதனமுமாக வீட்டிற்குள் வந்தவளைப் பார்த்த அப்பத்தாவிற்கு மகாலெட்சுமியே தன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து வந்ததைப் போன்று தோன்றியது.

வேறொன்றும் இல்லை நட்புக்களே மீரஜா வெளிமாநிலம் சென்று இன்டீரியர் டிசைனில் டிகிரி முடித்து வந்திருக்கிறாள்…

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஓய இரண்டு நாட்கள் ஆனது...

இரண்டு நாட்களாக தன் பேத்தியிடம் தனித்து இரண்டு வார்த்தை பேச முடியாமல் தவித்த தாத்தா, மாடிக்குச் செல்ல, அங்கே பார்ப்பவர் மனதுக்கு இனிமை சேர்க்கும் ஓவியம் போன்று பால்கனியில் நின்று கொண்டிருந்த பேத்தியைப் பார்த்தார்.

மீரஜாவோ, தாத்தா வந்து நிற்பதைக் கூட அறியாமல், வைகை ஆற்றின் அக்கரையை வெறித்துப் பார்த்தவாறு நின்று கொண்டிருத்தாள்.

‘நான் ஏன் இப்படி ஆயிட்டேன்? யாருன்னே தெரியாத ஒருத்தர் மேல, ஒரேநாள் சந்திப்புல இந்த அளவுக்கா மாறிப்போவேன்?’ என்று எத்தனையோ முறை, எத்தனையோ வகையில் ஆறேழு வருடங்களாக தனக்குள் கேட்டுவந்த கேள்வியை மீரஜா இப்பொழுதும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

இப்பொழுதும் மீரஜாவின் மனமானது அவள் வசப்படாமல் முரண்டுபிடித்து, குகைக்குள் சந்தித்தவரின் நினைவுகளால் வெல்லப்பட்டது.

நிதர்சனத்தை மீரஜாவின் மூளை உணர்ந்தாலும், மனமோ குகையிலிருந்தவரைக் கடந்து செல்ல அடம்பிடித்தது.

"மீராமா!" என்று தூரத்தில் தாத்தா குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த மீரஜா, தனதருகில் சந்தோஷமாக நின்றுகொண்டிருந்த தாத்தாவைப் பார்த்து திடுக்கிட்டாள்…

'இவ்வளவு அருகில் இருந்து தாத்தா அழைப்பது எங்கோ தூரத்தில் கேட்டது போலிருந்ததே?!! காதும் போச்சா?!!' என்று தனது மனநிலையை நினைத்து நொந்தபடி,

"தாத்தா… கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே?" என்று புன்னகை தவழக் கூற,

"எங்கே? அருகில் நின்று அரைமணிநேரமாக, மீராமா! மீராமா! ன்னு பாடியும் இப்பத்தானே திரும்பிப் பார்க்கிறாய்?" என்று வெள்ளந்தியாய்க் குலுங்கிச் சிரித்தார் தாத்தா.

தாத்தாவும் பேத்தியும் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு தாத்தா எடுத்து வந்திருந்த பழங்களைச் சுவைத்தனர்.

"மீராமா… படிப்பெல்லாம் எப்படி இருந்துச்சு?" என்று ஆரம்பித்தார் தாத்தா.

"சூப்பர் தாத்தா! நான் விரும்பி எடுத்த கோர்ஸ் இல்லையா? நிச்சயம் டிஸ்டிங்சன் வாங்கிடுவேன்."

"அடுத்து என்ன பண்ணலாம்னு நினைக்கிற?"

"போஸ்ட் கிராஜுவேட் பண்றேன் தாத்தா!"

"அது அப்புறம் பார்க்கலாம்… நம்ம ஊரிலேயே உன் படிப்புக்கு ஏத்த ஆபீசைத் திற…"

"பிஜி பண்ணிட்டு வேலை பார்க்கிறேனே தாத்தா…"

"இல்லடாம்மா… நம்ம சொந்தத்துல யூஜி முடிச்ச பையன்க தான் அதிகம்… நீ பிஜி முடிச்சுட்டதால, யூஜி முடிச்ச பையனா பார்க்கத் தோதா இருக்கும்…"

"எதுக்கு? புரியல தாத்தா" என்று புரியாமல் பார்த்த மீரஜாவிடம்,

"வேற எதுக்கு? உன் படிப்புக்கு ஏத்த மாப்பிள்ளை தானே தேடனும்?"

"உங்களுக்கு என்னாச்சு தாத்தா? அப்பத்தா தான் என்னைப் பார்த்தாலே, எப்படா இவளத் தள்ளிவிட்றலாம்னு இருப்பாங்க… இப்போ நீங்களுமா?"

"அது இல்லடாம்மா… தாத்தாவுக்கும் வயசாயிடுச்சுல்ல… படிப்பு எப்ப வேணும்னாலும் படிக்கலாம்… உன்ன ஒரு நல்லவன் கையில ஒப்படைச்சுட்டா தாத்தாவுக்கு ஒரு நிம்மதி."

தாத்தாவின் மொழிகள் காதில் ஈட்டியாய் விழ, மீரஜாவின் கண்களோ கலங்கியவாறு ஆற்றுக்கு அக்கரையை வெறித்தன.

"என்னடாம்மா அமைதியாயிட்ட? இப்பவே நாலு இடத்துல சொல்லி வச்சாதான் வீட்டோட மாப்பிள்ளையா பார்க்க முடியும்…" என்று கூற,

"இப்பத்தானே தாத்தா வந்திருக்கேன்… கொஞ்ச நாள் போகட்டுமே?" என்று கெஞ்சும் பாவனையில் கேட்ட பேத்தியைப் பார்த்து,

'நல்லவேளை… அந்த மட்டும் கல்யாணம் வேணாம்ன்னு சொல்லல' என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் தாத்தா.

டாலி செல்சியாவுடன் முத்தாலம்மன் கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்திருந்தாள் மீரஜா…

மீரஜாவைக் கவலையுடன் பார்த்தவாறு, "நீ இன்னும் அவரையா நினைச்சுக்கிட்டிருக்க?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள் டாலி செல்சியா.

"எப்பவுமே அவரத்தான் நினைச்சுக் கிட்டிருக்கேன்…" என்று சற்றே வலி நிறைந்த புன்னகையைத் தவழ விட்டாள் மீரஜா.

"அவர் யார்னே தெரியலையே மீரா? இத்தனை வருசத்துல அவர் உன்னைத் தேடி வந்தாரா மீரா?"

"இல்ல… மொதமொதலா என்னைக் குகைக்குக் கூட்டிட்டுப் போனாரே அதுதான் நான், அவரைக் கடைசியா பார்த்தது…"

"பின்ன எந்த நம்பிக்கையில இருக்க?"

"தெரியல டாலி…"

"நானும் வைகையாத்தப் பார்க்கும் போதெல்லாம் யாராவது தெரியிறாங்களான்னு பார்ப்பேன் மீரா… உங்க வீட்ல கல்யாணப் பேச்ச எடுத்துட்டாங்க… என்ன பண்ணப் போற?"

"அதான் தெரியல"

"எல்லாத்துக்கும் தெரியல தெரியல்லன்னா எப்படி மீரா?"

"என்னை என்ன பண்ணச்சொல்ற?"

"நான் சொன்னா கோவிச்சுக்காத மீரா… அவருக்கும் உன் மேல பிரியம் இருந்திருந்தா இந்நேரம் வந்திருப்பார்ல? சின்னப் பொண்ணு, குகைல தனியா மாட்டிக்கிட்டயேன்னு உதவியிருக்கார் அவ்வளவு தான் மீரா."

"அப்போ குகைக்குக் கூட்டிட்டுப் போனது யாரு? நீயும் அப்பத்தா மாதிரியே பேசாத டாலி"

"பின்ன எப்படி பேசச்சொல்ற? அது வெறும் கற்பனைதான் மீரா…"

"இல்ல டாலி! என் மனசு வேற சொல்லுது"

"என்னத்தச் சொல்லிக் கிழிக்குது?"

"அவரும் என்னைத்தான் நினைச்சுட்டிருப்பார்னு?"

"அப்ப ஏன் தேடி வரல?"

"நான்தான் இந்த ஊர்லயே இல்லையே?"

"உன்னை ஏன் அவ்வளவு தூரத்துலகொண்டுபோய்ப் படிக்க வச்சாங்கன்னு தெரியும்ல? இவர நீ மறக்கனும்னுதான?"

"ஆனா முடியலையே டாலி! அப்பத்தா சொல்றதெல்லாம் சரின்னு பட்டாலும், என் மனசு ஏதோ மூலையில அவரப் பார்ப்பேன்னு தோணுது." என்று கூறியவளின் கைமேல் தன் கையை வைத்து அழுத்திய டாலி,

"அதுதான் எப்படி?" என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

"மறுபடியும் தோணில போய்ப் பார்க்கனும்."

"அதோட நம்ம வீட்ல, நம்ப சோலிய முடிச்சுடுவாங்க… என்னையவே, ஆத்துப் பக்கம் நான் போறத பார்த்தா உங்க அப்பத்தாவும், தாத்தாவும் ஆயிரம் கேள்வி கேட்பாங்க… இதுல எங்க போயித் தோணியத் தேடுறது?"

"அப்புறம் என்னதான் பண்ண?"

"நல்லா கேட்டியா எங்கிட்ட? மொத தடவ இந்த விசயத்த நீ சொன்னப்ப, பயத்துல எனக்குக் காய்ச்சலே வந்துடுச்சு… ஆத்தோரமா போகும் போதெல்லாம், கழுத்து ஒரு பக்கமா திரும்பிக் கிட்ட மாதிரி ரோட்டுப் பக்கமாவே பார்த்து நடந்தவ நான்… வந்துட்டா" என்று கூறும்போதே தன் ஆருயிர் தோழியின் முகம் வாடுவதைக் கண்டு பொறுக்க முடியாத டாலி,

"எனக்கும் ஒரு வழியும் தெரியலையே மீரா? மனுசனா இருந்தா ஃபோன் பண்ணலாம்… அட்லீஸ்ட் லெட்டராவது போடலாம்னா அட்ரசுக்கு எங்க போறது?" என்று பலவாறாக யோசிக்க,

யோசிக்கும் திராணி கூட இல்லாமல் டாலியின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த மீரஜாவிற்கு மனம் வலிக்க,

'அவ்வளவு தானா? இனி உங்களப் பார்க்கவே முடியாதா? இன்னும் ஒரு மாசம்தான் பார்ப்பேன்… நீங்க வரலைன்னா நான் ஆத்துல விழுந்து என் உயிர…' என்று வேதனையாக எண்ணமிடும் போதே,

"வருவேன் வாசல் தேடி
வருத்தம் ஏனடி?...

தருவேன் பாடல் கோடி…
தனிமை ஏதடி...

பிரியசகி ஓ… பிரியசகி"

என்று கோயிலுக்கு வெளியே இருந்த கல்யாணமகால் ஸ்பீக்கர் அலற…

சட்டென்று எழுந்த மீரஜாவின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாகக் கொட்ட ஆரம்பித்தது.

"என்ன மீரா?" என்று டாலி செல்சியாவும் பதறி எழுந்திரிக்க,

" வா! என் பின்னாடி! என்ற மீரஜா,

கோயில் வாசலில் விற்ற இலையை வாங்கி அதில் மெழுகால்,

"நீ வரும் பாதையைப்
பார்க்கிறேன் நான்…"
(அதே பாடல்)

என்று எழுதி ஆற்று நீரில் இலையை விட, அது வைகை ஆற்றில் மிதந்து சென்றது.

ஆற்றில் மிதந்து வந்த இலையை ஒரு வலிய ஆண்கரம் எடுத்தது.

வார்த்தைகளின் எண்ணிக்கை - 925

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼

மன்னித்து விடுங்கள் தோழமைகளே... குறிப்பிட்ட கெடுவிற்குள் கதையை முடிக்க முடியவில்லை...

இதுவரை ஆதரவு அளித்தமைக்கு நன்றி!
மீண்டும் சந்திப்போம்...
 

Sspriya

Well-known member
Full லா போடுங்க எங்களுக்காக 😍😍😍😍... Please 🙏🙏🙏💞...

மீராவும் குகை மனிதரும் சந்தித்தார்களா 🤔🤔🙄... தாத்தா ஓட ஆசை நிறைவேறுமா 🤔🤔🤔... ஆவலுடன் அடுத்த ud காக 👍🏻👍🏻
 

aas2022-writer

Well-known member
Full லா போடுங்க எங்களுக்காக 😍😍😍😍... Please 🙏🙏🙏💞...

மீராவும் குகை மனிதரும் சந்தித்தார்களா 🤔🤔🙄... தாத்தா ஓட ஆசை நிறைவேறுமா 🤔🤔🤔... ஆவலுடன் அடுத்த ud காக 👍🏻👍🏻
வாய்ப்பு கிடைத்தால் இதே தளத்தில் மீதி எபி தொடர்கதையாக கட்டாயம் பதிவிடுகிறேன்...
இதுவரை என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼😍
 

aas2022-writer

Well-known member
Oooooo... Appram எப்படி மிதி கதை ah padikirathu maa
கட்டாயம் இதே தளத்தில் தொடர்கதையாக பதிவிடுகிறேன் தோழி...
நன்றி... உங்கள் ஆதரவு எனக்கு இருந்தும் கதையை முடிக்க முடியாமல் போனதற்கு சாரி...
 
Top