AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-30
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-30
குகையில் சந்தித்தவரிடம் மானசீகமாகப் பேசிக்கொண்டிருந்த மீரஜா, தன் பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தவளின் கண்கள் விரிந்தன.
தெருவிளக்கு ஒளியின் சிறு ஒளிக்கீற்று கூட உள்ளே வராமல் இருள் சூழ்ந்திருந்த மொட்டை மாடி…
மொட்டைமாடியின் பின்புறம் தெரிந்த மரம்கூடக் கருமைநிறம் பூசி, காற்றுடன் கூடி, விநோத ஒலியுடன் தலையசைத்துக் கொண்டிருந்தது.
எங்கோ சுவர்க்கோழியின் சப்தத்துடன், நாயின் ஊளைச் சப்தமும் சேர்ந்து அந்த இடத்தில் அமானுஷ்யம் இருப்பதை உணர்த்த, அவள் முன் ஆளுயர வெண்புகை நின்றிருந்தது…
தீடீரென்று பார்த்த அதிர்ச்சியில் இதயம் படபடக்க, மிரஜாவால் சப்தம் போட்டுக் கத்துவதற்கு வாயைத்தான் திறக்க முடிந்ததே தவிர, வாயிலிருந்து சப்தம் வரவில்லை.
‘ஒடிவிடலாம்’ என்றெண்ணி, இரண்டடி பின்னோக்கி நகர்ந்தவளுக்கு, எதிரில் நின்றிருந்த புகை மெல்ல கலைய அதன் பின்னணியில் ஒரு ஆடவர் நிற்பது தெரிந்தது.
'யாரோ நிற்கிறார்கள். ஆனா எனக்குத் தெளிவாத் தெரியாம கலங்கலாத் தெரியுதே?... என்று கண்களை இறுக முடித்திறந்தாள்.
அப்பொழுதும் அங்கே நிற்பது யார் என்று தெளிவாகத் தெரியாமல் போகவே,
'ரொம்ப நேரமா இருட்ட வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததால கண்களில் உள்ள ரெட்டீனா (விழித்திரை) விரிஞ்சிருக்கும்… இப்பொழுது குறைந்த வெளிச்சத்தில் யாரோ வந்து நிற்கவும் ரெட்டீனா சுருங்கிவிட்டது' என்று புரிந்துகொண்டு தன் கண்களைக் கசக்கி மீண்டும் பார்த்தாள்.
இப்பொழுதும் எதிரில் நிற்பவர் சரியாகத் தெரியவில்லை…
மீண்டும் கண்களைக் கசக்கச் சென்றவளிடம்,
"நான் உனக்குத் தெரிகிறேனாம்மா? உன் கண்களைக் கஷ்டப்படுத்தாதே…" என்றார் பரிவான குரலில்.
'இந்தக் குரலை இதற்கு முன் எங்கோ கேட்டிருக்கிறேனே?' என்று யோசித்தவளுக்கு,
எதிரில் நிற்பவர் மனிதரில்லையோ என்று தோன்றவும், சற்றே மனதிற்குள் நடுக்கம் வந்தாலும்,
"உங்களை நான் ஏற்கனவே…. என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, இப்போது தன் எதிரிலிருப்பவர், குகையிலிருந்தவரைச் சந்தித்துத் திரும்பியபோது, தோணியை ஓட்டி வந்தவர்தான், என்பது மீரஜாவிற்குப் புரிய,
"நீங்களா? அவர் எப்படி இருக்கிறார்?… என்னைப் பார்த்துட்டு வரச் சொன்னாரா? அன்னைக்கு நீங்கள் என் கண்களுக்கு… சாரி, என்னால் உங்களைப் பார்க்க முடியவில்லை… ஆனா இப்ப என் கண்களுக்கு நீங்கள் தெளிவில்லாத ரூபத்தில் தெரிகிறீர்களே! எப்படி?" என்று மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனவளைப் பார்த்துச் சிரித்தவர்,
"என்னை அடையாளம் கண்டு கொண்டதிலேயே, நீ வளரும்போதே, அவரின் நினைவும், உன்னுடனே வளர்ந்திருக்கிறதுன்னு தெரியுது… நான் உம் கண்களுக்குப் புலப்படுவதும் அதே காரணத்தால்தான்."
"எதே காரணம்?"
"ஒரு விசயத்தை அடிக்கடி நினைத்தால் அது சம்பந்தப்பட்ட விசயங்களும் நினைவில் நிற்கும்தானே?" என்றதும்,
“ஓ! அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டவள்,
"அவர் எப்படி இருக்கிறார்?" என்று ஆர்வமாகக் கண்கள் மின்னக் கேட்டாள்.
"அவரின் நலனை விசாரிக்கும் பெண்ணும் இருக்கிறாயே? ஆச்சரியம்தான்!"
"ஏன்? அவர் நலனை விசாரிப்பது அவ்வளவு அரிதா?"
"ஆம்! மானுடர்கள், தங்களின் நலனுக்காகத்தான் அவரிடம் செல்வார்கள்…"
‘ஓ… அவர் வைத்தியரோ?’ என்று தனக்குள் கூறிக்கொண்டவள்,
“சரி… அவருக்கு என்னை ஞாபகமிருக்கிறதா?" என்று மீண்டும் ஆர்வமாகக் கேட்க.
"நீ எப்படியம்மா இருக்கிறாய்?"
"ம்ம் ரொம்ப நல்லா இருக்கேன்…” என்று சந்தோசமாகக் கூறிவிட்டு, “அவர் சொல்லித்தான் வந்திருக்கிறீர்களா?" என்றவளிடம்,
"படிப்பு முடிந்துவிட்டதா? இல்லை இன்னும் படிக்கச் செல்வாயாம்மா?"
"இல்லையில்லை. அவ்வளவுதான். வீட்ல ஒரு டிகிரி போதும்னு சொல்லிட்டாங்க…” என்று அவசரமாகக்கூறிவிட்டு, “அவர் என்னை ஏன் பார்க்க வரல?" என்று வருந்தும் குரலில் கேட்டாள்.
"படிப்பு முடிந்துவிட்டதென்றால் அடுத்து?"
"அடுத்துன்னா?... ஆமா... அவரும் இங்கே வந்திருக்கிறாரா?" என்று பரபரப்பாகச் சுற்றிலும் பார்வையைப் படறவிட்டாள்.
"வேலைக்குப் போகும் எண்ணம்…" என்று அவர் கூறி முடிக்கும்முன்,
"எங்க வீட்ல வேலைக்கு அனுப்ப மாட்டாங்க… என்னைய அவர்ட்ட கூட்டிட்டுப் போறீங்களா? ப்ளீஸ்!" என்றாள் கெஞ்சும் பாவனையில்
"அப்போ அடுத்ததா, கல்யாணப்பேச்ச எடுப்பாங்களே!"
"இப்பத்தானே படிச்சுட்டு ஊருக்கு வந்திருக்கேன்…” என்று சிரித்தவள், “வாங்க அவரப் பார்த்துட்டு, சீக்கிரமா விடியிறதுக்குள்ள வந்துடுவோம்." என்று அவரை நோக்கி மீரஜா நகர,
"உங்கள் வீட்டில் உனக்குத் திருமணம் பேசினால், அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் பண்ணுவாய். இல்லையாம்மா?" என்று கேட்டதும்தான்,
'அவர் எந்த விசயத்துக்கு வருகிறார்! என்பது மீரஜாவிற்குப் புரிந்தது.
அதனால் தான் குகையிலிருப்பவர் சம்மந்தமாக, தான் பேசிய வார்த்தைகளுக்கு எதிரில் நிற்பவர் பதிலளிக்கவில்லை என்பதும் புரிய,
"என் மனசுல ஒருத்தர் இருக்கும்போது வேறோரு ஆளை எப்படிக் கல்யாணம் பண்ணிக்குவேன்?..." என்று அவரைக் கூர்ந்து பார்த்தபடி, அழுத்தமாகக் கேட்டாள்.
"வாஸ்தவம்தான்… உன் மனசுல யார் இருக்காங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"
"ஏன்? அவர் யாரென்று உங்களுக்குத் தெரியாதா?"
"ஹஹ்ஹஹ்ஹா… அம்மா இது யூகத்தில் சொல்ற விசயமாம்மா?..."
"அப்போ நான் யாரை விரும்புறேன்னு உங்களுக்கு யூகமாகத் தெரியும் அப்படித்தானே?"
"இதில் இருவரின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது ம்மா… யூகங்கள் பல வேளைகளில் பொய்த்துப் போகின்றன."
சிறிதுநேரம் மௌணமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள்,
"அவர் எப்படி இருக்கிறார்?" என்று மீண்டும் ஆரம்பித்தாள்.
"நீ இன்னும் உன் மனதிலிருப்பவர் யாரென்று சொல்லவில்லை யம்மா… நான் நம்பிக்கைக்குரியவனா என்று சந்தேகிக்கிறாயாம்மா?"
"அப்படியெல்லாம் இல்லை… அன்று உங்களை நம்பித்தானே அவரே என்னைத் தோணியில் அனுப்பிவைத்தார்!"
"பிறகு ஏன் பதிலில்லை…"
"தாங்கள் யாரென்று நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று மீரஜா கேட்டதும் எதிரிலிருந்தவரின் கண்கள் மின்னின.
‘குழந்தை பெரியவளாகியிருக்கிறாள். எதிரில் நிற்பவர் யாரென்று அறிந்து கொண்டு மனதைத்திறக்க எண்ணுகிறாள்.’
"என்னை முனிவர்என்று கூறுவார்கள்… சீடர் என்றும் கூறுவார்கள்."
"என் கண்களுக்குத் தாங்கள் ஏன் புலப்படவில்லை… அந்த அளவுக்கு பாக்கியம் இல்லாதவளா நான்?"
"ஹஹ்ஹஹ்ஹா… முதல்நாள் சந்திப்பைவிட இப்பொழுது நான் புலப்படத்தானே செய்கிறேன்…"
"நீங்கள்… நீங்கள்…"
"என்னிடம் உனக்குத் தயக்கம் வேண்டாம்மா… கேட்க நினைப்பதைக் கேள்?"
"நீங்கள் ஆத்ம ரூபமா?"
"இல்லையம்மா இல்லை… அடியேனுக்கு அஷ்டமா சித்திகளில் கொஞ்சம் பரிட்சயம் உண்டு… இதுவும் அதுபோல்தான் இது சூட்சும உடல்… அதாவது நுண்ணுடல்"
"நீங்க முனிவர், சீடர்… அப்டீனா அவர் யார்?"
‘அருமை! இப்பொழுதாவது அவர் யாரென்று அறிய எண்ணுகிறாயே’ என்று மனதிற்குள் பாராட்டியவர்,
"நான் இங்கு வந்தது உன் மனதிலிருக்கும் விசயங்களை அறிந்துகொள்ளவே… அது தெரிந்தால்மட்டுமே உன் சந்தேகங்களை என்னால் தீர்த்து வைக்க முடியும்."
"அது வந்து… அந்தக் குகையிலிருந்தாரே அவர்தான் என் மனதை ஆள்பவர்."
‘மனதை ஆள்பவர்!!’, அற்புதமான சொல் பிரயோகம். ‘மனதுக்குப் பிடித்தவரை’ விட உயர்ந்த ஸ்தானம்’ என்று மனதிற்குள் மகிழ்ந்து,
"அவர் யாரம்மா?"
"ஏன் தெரியாததுபோலக் கேட்கிறீர்கள்?"
"உனக்குத் தெரிந்தாராம்மா?"
"அவர் உங்கள் கண்ணுக்கும் புலப்படவில்லையா?"
"நான் உன் மனதை அறிய வந்தவனம்மா… நீ மனம்திறந்து பேசினால் நல்லது."
"நான் அன்னைக்குக் குகையில் சந்தித்தவர்தான் என் மனதில் வாழ்கிறார்."
"மனதிற்குள் வந்தவர் யாரென்று அறிவாயா ம்மா?"
"இல்லை…"
"பிறகு எந்த நம்பிக்கையில் அவருக்கு மனதில் இடமளித்தாய்."
"ஒருத்தர விரும்புறதுக்குக் காரணம் எப்படிச் சொல்ல முடியும்?"
"ஏம்மா, கல்யாணம்னு ஒன்னு பண்ற யோசனை இருக்கா? இல்லையா?"
"இது என்ன கேள்வி?*
"இதுக்குத்தான் சொல்றேன்… கல்யாணம்ங்கிறது உனக்கு அவ்வளவு சாதாரணமா போச்சாம்மா… ரெண்டு பேரோட பெரும்பகுதி வாழ்க்கையே கல்யாணத்துலதானம்மா இருக்கு?"
"ஆமா"
"நம்மகூட ரொம்ப காலம் பயணிக்கப் போறவங்க, நமக்கு எல்லாவகையிலும் பொருத்தமா இருக்கிறதத் தெரிஞ்சுக்க வேண்டாமா?"
"மனம் பொருத்தம் ஒன்னு போதாதா?"
"போதுமா? திருமண வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். கருத்துவேறுபாடுகள் இருக்கும்… சூழ்நிலை மாற்றங்கள் வரும்…"
"நீங்கள் சொல்லும் எல்லா விசயங்களையும் மனப்பொருத்தம் இருந்தால் கடந்துவிட முடியும்."
"நீ இன்னும் அவரைச் சந்திக்கவில்லையேம்மா… பிறகு எப்படி மனப்பொருத்தம்? நேரில் சந்திப்பது புறத்தோற்றத்திற்காக மட்டுமில்லையம்மா… ஒருவருக்கொருவர் பழகும்பொழுதுதான் பிரியம் கூடும். நீ கூறும் மனப்பொருத்தமும் உண்டாகும்."
"நானும் அவரைச் சந்திக்கத்தான் ஆசைப்படுகிறேன். அவரிடம் என்னைக் கூட்டிட்டுப் போங்களேன்"
"நமக்கு விருப்பமானதை நாமதான் தேடிப்போகனும்மா." என்று கூறி, ‘விரைவில் தேடி வருவயாக மீரா!’ என்று எண்ணியபடி மறைந்தார்.
"குகையிலிருப்பவரை என்னால் சந்திக்க முடியும் டாலி!" என்று தனது தோழி டாலி செல்சியாவிடம் குதூகலமாகக் கூறினாள் மீரஜா.
"என்னாச்சு? எப்படி?" என்று டாலி செல்சியாவும் தோழியின் சந்தோசத்தில் அகமகிழ்ந்து கேட்டாள்.
"என்னைத் தோணியில் கொண்டு வந்து விட்டாரே அவர் நேற்று எங்கள் வீட்டிற்கு வந்தார்."
"என்ன மீரா சொல்ற?"
"ஆமா… அவருடைய விருப்பமில்லாமலா, இந்த முனிவர் வந்திருப்பார்?" என்று முதல்நாள் முனிவரைச் சந்தித்தபோது நடந்தவற்றை மீரஜா விலாவாரியாகக் கூறினாள்.
"குகையிலிருந்தவரே நேரில் வந்திருக்கலாமே?" என்று டாலி செல்சியா யோசனையுடன் கூற,
"என் மனதைத் தெரிந்துகொள்வதற்காகக் கூட முனிவரை அனுப்பியிருக்கலாம்"
"நீ ‘முனிவர்’ என்று கூறுகிறாய்… ஆனால் அவரோ ‘சீடர்’ என்றும் கூறினார். யாருக்கு சீடர் அவர்? அந்தக் குகையிலிருந்தவருக்கா? அப்டீனா குகையிலிருந்தவரும் முனிவராகத்தானே இருக்க முடியும்?"
"இருக்கலாம்"
"என்ன இருக்கலாம்னு சாதாரணமா சொல்லிட்ட? சீடர்களுடன் இருக்கும் முனிவர்கள், திருமண பந்தத்தில் ஈடுபடுவார்களா என்ன?"
"பிறகு எதற்கு என் வீட்டிற்குச் சீடனை அனுப்ப வேண்டும்?"
"சரி… முனிவரைத் திருமணம் பண்ணிக்கிட்டு, காலம்பூரா அவரோட நீ காட்டுலயா வாழ முடியும்?"
"மனதிற்குப் பிடித்தவர் அருகிலிருக்கும்போது காடு, சோலையாகும"
"நல்லாவே பேசக் கத்துவச்சிருக்க… எப்படி அவரப் போயி பார்க்கப் போற?"
"அதுதான் தெரியல… ஆனா முனிவர் வந்ததே, எனக்கு நல்ல அறிகுறியாத் தெரியுது."
"முதல்ல குகைல பார்த்தவரோட பேர் என்னன்னு தெரிஞ்சுக்க… அவர பத்திப் பேசும்போது யாரோ முன்னபின்ன அறியாத ஒருத்தரப் பத்திப் பேசுற மாதிரி இருக்கு." என்று டாலி செல்சியா கூறவும்,
‘ஆமாம்’ என்பதுபோல் யோசனையுடன் தலையசைத்த மீரஜா, சட்டென்று உற்சாகமாகி,
"நாமே அவருக்கு ஒரு பேர் வைப்போமா?"
"அவரோட பேரக் கேட்டுட்டு வரச்சொன்னேன்… உன்னை, அவருக்குப் பேர் வைக்கச் சொல்லல…"
"அதுவரை எப்படிக் கூப்பிடுறது?"
"நீ முடிவெடுத்துட்ட… ம்ம் நடத்து…"
‘குகையிலிருக்கிறவருக்குப் பொருத்தமான பேர், என்ன வைக்கலாம்?....’ என்று யோசித்துக் கொண்டிருந்தவள்,
"கண்டீரவன்!" என்று மீரஜா சொன்ன கணம்,
வானத்தில் இடி முழங்க, சூரைக்காற்று சுழன்றடித்து ஆளுயரத்திற்கு மணல் மேலெழும்ப, பறவையினங்கள் அதனதன் இடத்திலிருந்து வானத்தை நோக்கிச் சிறகடிக்க, விலங்கினங்களும் பாய்ந்தோட,
குகையிலிருப்பவரும், சேது மாதவரும் சட்டென்று திரும்பி மீரஜாவைப் பார்த்தனர்...
கண்ணன் வருவான்!










