கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-9

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-9

மீரஜாவைப் புன்னைவனத்தில் விட்டுவிட்டு, தாமரைக்குளம் வந்த நாளிலிருந்து முத்துராக்கம்மாளுக்கும், சுப்பையாபிள்ளைக்கும் எந்த வேலையும் ஓடவில்லை…

இளையமகன் தனராஜன் கோயமுத்தூரில் வேலை பார்ப்பதால், புதுமனைவி பவானியுடன் கோயமுத்தூர் சென்றுவிட்டான்.

பார்த்துப் பார்த்து ருசியாகச் சமைக்கும் அப்பத்தா, நல்ல சமையல் செய்து ஒரு மாதம் ஆனது… தினப்படி சமையலில் ஏதோ ஒரு சுவை குறைந்தது. ஏனோ தானோ என்று ஏதோ செய்தார்…

அப்பத்தா, அடுப்பில் இட்லியை வைத்துவிட்டு, நிற்கையில்,

"தினமும் இட்லியா?" என்று மீரஜா கேட்பதும்,

"ஸ்கூலுக்குப் போகும்போது, லன்ச் சாப்பிடுறவரை வயிறு தாங்க வேண்டாமா! வேற பலகாரம் சாப்பிட்டா சீக்கிரமே வயிறு பசிச்சுடும் டா… வீட்லன்னா ஸ்னாக்ஸ் எதையாவது சாப்பிடுவ, அப்பத்தா பால் கலந்து தருவேன்… ஸ்கூல்ல என்ன பண்ணுவ?… அப்பத்தா, இட்லிக்கு தினமும் வெரைட்டியா சட்னி செஞ்சு தாரேன் ஓகே யா!" என்று அப்பத்தா சமாதனப்படுத்த,

மீரஜா யோசனையில் ஆழ்வதுமான பழைய நினைவுகளில் மூழ்குபவரை,

இட்லிச் சட்டியிலிருக்கும் தண்ணீர் ஆவியாகி, அடிபிடிக்கும் வாசனையாலேயே அப்பத்தா சுய உணர்வுக்கு வருவார்…

பல நேரங்களில் பாலை அடுப்பில் வைத்துவிட்டு, பாலை பார்த்தபடியேதான் நின்று கொண்டிருப்பார்.

"அப்பத்தா பால்ல ஏதாவது கலந்து குடுங்க வெறும் பால் வேணாம்" என்று தினமும் இரவு மீரஜா அடம்பிடிப்பதும்,
"ராத்திரி தூங்கும்போது வெறும் பால்தான் குடிக்கனும் மீராகுட்டி. அப்பதான் தூக்கம் வரும்… பகல்ல எனர்ஜியா ஓடி, ஆடுறதுக்குத்தான் ஹார்லிக்ஸ், பூஸ்ட்னு ஏதாவது கலக்கனும்…" என்று அப்பத்தாவோ, தாத்தாவோ கூற,

புருவங்கள் சுழித்து யோசனையாகப் பார்த்தபடி மீரஜா பால் குடிக்கும் அழகில் மயங்கும் அப்பத்தாவை,

பால் பொங்கி விழும் சப்தமோ அல்லது பால் முழுவதும் சுண்டித் தீயும் வாசனையோ தான், உணர்வுக்குக் கொண்டுவரும்.

இதுநாள்வரை தினமும் மீரஜா கேட்கும் உணவுதான் அந்த வீட்டில் சமைக்கப்பட்டது… அதனால் பெரியவர்கள் இருவருக்கு மட்டும், என்ன சமைப்பது? என்று யோசிக்கும் மனநிலையில் அப்பத்தா இல்லை…

தாத்தாவிற்கும் சாப்பிட ஆர்வமில்லாததால் அவரும் கண்டுகொள்ளவில்லை…

சாப்பாடு பரிமாறும் அப்பத்தாவிற்கும், சாப்பிடும் தாத்தாவிற்கும் நினைவு முழுக்க மீரஜாவே நிறைந்திருக்க, சாப்பாடு தொண்டையில் சிக்கியது….

ஜவுளிக்கடையிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது, பலநாள் அப்பத்தா சாப்பிடாமல் உணவு அப்படியே இருப்பதைக் கண்ட தாத்தா,

"நான் மட்டும் தனியா சாப்பிட ஒருமாதிரி இருக்கு முத்துரா. நீயும் என்னோட சேர்ந்து சாப்பிடேன்." என்று கூற,

தன் கணவர் தனக்காகத்தான் கூறுகிறார் என்று அறிந்தும்,

"அப்புறம் யாரு பரிமாறுறது?" என்பார் முத்துராக்கு.

"நம்ம ரெண்டு பேருதான இருக்கோம்? ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டுச் சாப்பிடுவோம்" என்று கூறும்போதே தம்பதி இருவருக்கும் கண்கள் கலங்கியது.

மீரஜா இல்லாத வேதனையை ஒருவருக்கொருவர் காட்டாமல் மறைத்தனர்.

காலையில் எழுந்து கோலம் போடுவதிலிருந்து, இரவு பால் குடிக்கும்வரை மீரஜாவின் விருப்பம் கேட்டே நடந்ததால், அவளுக்குப் பிடித்த உணவை உண்பதும், உடையை உடுத்துவதும் மிகவும் கஷ்டமாக இருந்தது…

பூ வாங்கினால் கூட,

மீரஜாவிற்குப் பூ மீது இருக்கும் கொள்ளைப் பிரியமும்... தலைமுடியோ, காதுமுடியும் இடம்வரை ‘பாப்கட்’ ஆக வெட்டப்பட்டிருந்தாலும்… பூ, தோள்பட்டைவரைத் தொங்க வேண்டுமென்று ஆசைப்படுபவளின் பூமுகமும், அப்பத்தாவின் நினைவில் ஆட,

சம்பிரதாயத்திற்கு ஒரு இன்ச் பூவைத் தன் தலையிலும், மீதம் உள்ளதை சாமி படத்திற்கும் வைத்தார்.

கணவர் ஜவுளிக்கடைக்குப் போய்விட்ட பிறகு தனியாக அமர்ந்து அழுதார் முத்துராக்கம்மாள்… அழுதபடியே உறங்கியும் விடுவார். அதனால் பொரும்பாலும் படுக்கையில் கிடக்க ஆரம்பித்தார்…

இதைப் பார்த்த தாத்தா, அப்பத்தாவிடம் சென்று, "நாம மீராகூடக் கடைசிவரை இருக்க முடியுமா முத்துரா? அவ பொம்பளப்பிள்ளை, வேற வீட்டுக்குக் கல்யாணம் பண்ணிப் போகப் போறவ… அது என்னைக்கா இருந்தாலும் மீராவ விட்டு நாம தனியா இருந்துதான ஆகனும்? அவள விட்டு இருக்கப் பழகித்தான் ஆகனும்… இப்படிப் படுக்கையே கதின்னு கிடக்காத… எனக்கும் உன்ன விட்டா யாரிருக்கா?" என்று தன் வருத்தத்தைத் தெரிவிக்க,

"மீரா இருக்கும்போது ஏதாவது வேலை இருந்துகிட்டே இருக்குங்க… ஆனா இப்ப, வேலை எல்லாம் சீக்கிரமே முடிஞ்சுடுது… அப்புறம் என்ன செய்ய? சும்மா இருந்தா அழுகை தான் வருது… ம்ச்சு அதுவேற தலைவலிக்குது… அதான் தூங்கிடுறேன்" என்றவரைப் பார்க்கும்பொழுது தாத்தாவிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.

தாத்தாவாலும் மீரஜா இல்லாமல் இருக்க முடியவில்லை…

காலையில் எழுந்து, தாத்தா யோகா செய்ய, அவளும் வந்து அவர் செய்வது போலவே செய்ய முயற்சி செய்வதும், சரியாகச் செய்யாவிட்டால் இருவரும் சேர்ந்து சிரிப்பதும் கண்களிலாட, அதற்கு மேல் யோகா செய்ய மனம் இல்லாமல் அப்படியே அமர்ந்துவிடுவார்.

குளியலறை இருந்தாலும் மீரஜாவும், தாத்தாவும் சேர்ந்து குளிக்க ஆரம்பித்த காலத்தில்,

தோட்டத்தில் மரங்களுக்கு நடுவே, பெரிய தண்ணீர்த் தொட்டியும், அதன் அருகே ஒரு ஷவரும் பொருத்தப்பட்டது.

தண்ணீர்த் தொட்டியைச் சுற்றிலும் பான்னீர் பூ மரம், வேம்பு, எலுமிச்சை,அகில், ஆவாரம் பூ மரம் மற்றும் மாமரம்கள் இருந்தன. அம்மரங்களிலிருந்து குளிப்பதற்காகத் தோட்டியில் நிறைத்து வைத்திருந்த தண்ணீரில், பன்னீர்ப் பூ, ஆவாரம் பூ மற்றும் வேம்பு, எலுமிச்சை, ஆவாரம் பூ, அகில், மா மரத்து இலைகள் விழுவதால், அவை தண்ணீருக்கு நல்ல வாசனையைக் கொடுத்தது.

தாத்தா குளிப்பதைப் பார்த்துப் பார்த்தே, மீரஜா தானாகக் குளிப்பாள்… இருப்பினும் தாத்தா குளித்து முடித்த பிறகு, மீரஜாவை ஒருமுறை குளிக்க ஊற்றுவார்.

இவ்வாறு இருவரும் தோட்டத்தில் குளிப்பதும், பிறகு மாற்றி, மாற்றி ஷவரில் குளிப்பதுமாக விளையாடியது மனதில் நின்றால் ஒரு மனிதரால் எவ்வாறு குளிக்க முடியும்?

ஏதோ ‘நானும் குளித்தேன்’ என்று இப்பொழுதெல்லாம் குளியலறை ஷவரில் குளித்துவிட்டு வந்துவிடுவார்.

அதனால் தோட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டியும் பெரியவர்களின் மனம்போல ஈரம் இல்லாமல் வறண்டிருந்தது…

சாப்பிடும் வேளையில் தன்னோடு மல்லுக்கட்டும் மீரஜா இல்லாமல், தாத்தாவிற்குச் சாப்பாடு இறங்கவில்லை…

மீரஜாவிற்கு, சாப்பாடு ஊட்டிவிடமாட்டார்… அவளாகச் சாப்பிடுவதற்குச் சொல்லிக் கொடுத்தார்...

மீரஜாவிற்கு உணவைவிட, நொறுக்கு தீனி தான் ரொம்பப் பிடிக்கும்…

அதனால் தினமும் கடையிலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்கு வரும்போது மீரஜாவிற்கு நொறுக்கு தீனி, பழங்கள் வாங்கி வருவார்…

இப்பொழுதெல்லாம் பழங்கள் மட்டுமே வாங்கி வருகிறார்... அதுவும் சாப்பிட ஆள் இன்றிக் கெட்டுவிடுகிறது.

மீரஜா பிறக்கும் முன், தாங்கள் இருவரும் வாழ்ந்த வாழ்வை, அவர்கள் சுத்தமாக மறந்துவிட்டனர்… மீரஜாவை விட்டு வாழும் வாழ்வுதான் அத்தம்பதியை மிகவும் மிரட்டியது.

மீரஜா படித்த பள்ளியைக் கடக்கும்போது, பள்ளியைப் பார்த்தவருக்கு, அன்றொருநாள் நடந்த நிகழ்வுகள் இப்பொழுது நடப்பதுபோல் கண்கள் முன் விரிந்தது.

மீரஜா எல்.கே. ஜி படித்த சமயம். ஓர்நாள் காலையில், வழக்கம்போல மீரஜாவைப் பள்ளியில் விட்டுவிட்டு, ஜவுளிக்கடைக்குச் செல்வதற்காகக் கிளம்பினார் தாத்தா.

மீரஜாவை வகுப்பறையில் விட்டுவிட்டு, தாத்தா பள்ளியின் கேட் அருகே செல்லும்பொழுது ஒரு பெரிய மாணவன் ஓடிவந்தான்.

"லன்ச் டைம்ல, உங்க பேத்திய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக வருவீங்கள்ல… அப்ப க்ளாஸ் டீச்சர பார்த்துட்டுப் போங்கன்னு சொல்லச் சொன்னாங்க." என்று கூறினான்.

திரும்பி மீரஜாவின் வகுப்பறையைப் பார்த்த தாத்தா, அந்தப் பையனைப் பார்த்து, "சரி!" என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.

அன்று கொஞ்சம் சீக்கிரமே ஜவுளிக்கடையிலிருந்து புறப்பட்டு, மீரஜாவின் வகுப்பு ஆசிரியையை சந்திப்பதற்காகப் பள்ளிக்குச் சென்றார்.

பள்ளி வளாகத்தில் இன்னும் பெற்றோர் வந்திருக்கவில்லை.

ரிசப்ஷனில் இருந்த அலுவலர், "விசிட்டர்ஸ் ஹால் ல வெயிட் பண்ணுங்க. எல்.கே.ஜி, ‘பி’ செக்சன் க்ளாஸ் டீச்சருக்கு இன்ஃபார்ம் பண்றேன்" என்று கூறிவிட்டு அருகிலிருந்த இன்டர்காம் மை எடுத்தார்.
சிறிது நேரத்தில் மீரஜாவுடன் அவளுடைய பள்ளி ஆசிரியை பூங்குழலியும் கூடவே பவித்ரா மேம் மும் வந்தனர்.

மீரஜாவிடம், "நீ போய்க் கொஞ்ச நேரம் விளையாடுவாயாம், நாங்க, பேசினபின்னாடி தாத்தா உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவாங்கலாம் ஓகே யா?" என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

பிறகு தாத்தாவிடம், "கொஞ்ச நாளா மீரஜா பெக்கூலியரா பிகேவ் பண்றா. " என்று பூங்குழலி மேம் ஆரம்பித்தார்.

'வாண்டு! என்ன சேட்டை பண்ணி வச்சுச்சுன்னு தெரியலையே!' என்று யோசித்தபடி, "சொல்லுங்க" என்றார் தாத்தா.

"இன்டர்வெல் பீரியட்ல க்ளாஸ்சை விட்டு வெளியே போயி, கிரௌண்ட்ல தனியா விளையாடுறா." என்று கூறவும்,

'இதில் என்ன இருக்கிறது?' என்று நினைத்தபடி தாத்தா, பூங்குழலி மேம் ஐயே பார்க்க,

"ப்ளீஸ்! நா என்ன சொல்லவர்றேன்றத, நீங்க கொஞ்சம் சரியாப் புரிஞ்சுக்கிடுங்க... கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாருமே வெளியே போய்க் கிரௌண்ட்ல விளையாடும்போது, மத்தக் குழந்தைகளோட சேர்ந்து விளையாடாம, அவ மட்டும் தனியா விளையாடுறா." என்று கூறிய பொழுதும்,

தாத்தா, "அதனால் என்ன?" என்பது போல் பார்த்தார்.

அவர் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட பூங்குழலி மேம், "மீரஜா தனியாதான் விளையாடுறா ஆனா, அவளோட யாரோ விளையாடுறது மாதிரி இருக்குது அவளோட பிஹேவியர். எதிர்ல ஒரு ஸ்டுடண்ட் இருக்கிற மாதிரியே, கண்ணுக்குத்தெரியாத அந்த ஸ்டுடண்ட்டோட பேசுறா, யாரையோ துரத்துற மாதிரி தனியா துரத்திக்கிட்டிருக்கா..." என்றதும், சற்றேப் புருவங்களைச் சுருக்கி யோசித்த தாத்தா,

"எங்க வீட்ல அவ மட்டுந்தான் குழந்தை. எங்க தெருவுலயும் அவ வயசுக் குழந்தைங்க இல்ல. அதனால, பெரியவங்க நாங்க, வேல பார்க்கும்போது, மீரா பொம்மைகளை வச்சுக்கிட்டு, அவளுக்கு அவளே பேசி விளையாடுறது வழக்கந்தான் மேம்… அந்தப் பழக்கத்தில் அவள் இந்த மாதிரி நடந்திருக்கலாம்." என்று தாத்தா பதற்றம் இல்லாமல் கூறியதைக் கண்ட பவித்ரா மேம்,

"நீங்க சொன்ன மாதிரியே வச்சுக்கிட்டாலும், முதல் தடவை பார்க்கும்போது, அவளைக் கூப்பிட்டு விசாரிச்சோம். அப்போ அவள், அவளோட படிக்கும் மாணவனை அழைத்து வந்து, 'நான் தனியா விளையாடல. இவனோடதான் விளையாடுனேன்’ என்றாள்.

அந்த மாணவனும், ‘நான் மீரஜாவுடன் விளையாடுனேன்.’ என்கிறான்.” என்று கூறிவிட்டு தாத்தவைப் பார்த்தார். பிறகு,

"ஒருவேளை அந்த மாணவனிடம், ‘நீ என்னோட விளையாடுனதா மேம்ட்ட சொல்லு’ என்று சொல்லி வச்சுக் கூட்டிட்டு வந்திருப்பாளோன்ற சந்தேகம் வந்துருச்சு எங்களுக்கு. உடனே, க்ளாஸ் ல எல்லா ஸ்டூடண்ட்ஸ் ட்டயும், ‘யார் யாரோட விளையாடுனீங்கன்னு’ பொதுவா விசாரிச்சோம். அப்போதும், மீரஜாகூட விளையாடினதா, அஞ்சு குழந்தைகளும் சொல்றாங்க. அதுக்கப்புறமும் நாங்க ரெண்டு பேரும் தொடர்ந்து மீரஜாவ நாலு நாள் தொடர்ந்து கவனிச்சதுல, மீரஜா தனியாத்தான் விளையாண்டா, யாரோடயும் விளையாடல... ஆனா அவட்ட கேட்டாலும், அந்த அஞ்சு குழந்தைகள்ட்ட கேட்டாலும், மீரஜாவோடதான், நாங்க விளையாடினோம்னு சொல்றாங்க. எங்களுக்கு என்ன நடக்குதுன்னு புரியல." என்று விளக்கமாகக் கூறினார் பவித்ரா.

மீரஜாதான் ஏதோ சேட்டை வேலை செய்திருக்கிறாள் என்று புரிந்துகொண்டார் தாத்தா. இதேபோல்,

தெருமுனையில் இருக்கும் மிக்ஸர் கடை, ஐஸ்கம்பனி, கோயில் என்று எங்குத் திரும்பினாலும் மீரஜாவே நிறைந்திருக்க, தாத்தாவிற்கு வீட்டிலும் இருக்க முடியவில்லை… வெளியேவும் இருக்க முடியவில்லை.

கடையிலும் பில் போடுவதில் தாத்தா, சில குளறுபடிகள் செய்ய, கல்லாவில் ஒரு பெரியவரை அமரவைத்து அருகிருந்து மேற்பார்வையிட்டார்.

மீரஜா இல்லாத கொடுமையைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் ஒருநாள், "மீராவ மறுபடியும் இங்க கூட்டிட்டு வர எந்த வழியும் இல்லையாங்க?" என்று அப்பத்தா கேட்டதும்,

மீரஜாவிற்குப் புண்ணியானம் செய்துவைத்த சிவனடியார் கூறிய விசயங்களைத் தாத்தா, தன் மனைவியிடம் கூறினார்.

அதைக்கேட்டதும் அப்பத்தா சட்டென்று எழுந்து, அவிழ்ந்து விழுந்த கூந்தலை கொண்டையாக முடிந்து,

"என்னங்க சொல்றீங்க? அப்ப வாங்க, புன்னைவனத்துக்குப் போயி, நம்ம மீராக்குட்டி காதுல, உன்னைப் பிரிஞ்சு எங்கனால இருக்க முடியலன்னு சொல்லுவோம்." என்றதும், விரக்தியாகச் சிரித்த தாத்தா,

"இதுலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லனாலும், மீராகூட இருக்கிறதுக்காக எதையும் செய்வேன்னு உனக்குத் தெரியாதா?"

"அப்புறம் என்னங்க?"

"சிவனடியார் என்ன சொன்னார்? மூனு தடவ, நம்மைவிட்டு மீரஜா பிரிய நேரும். ரெண்டு தடவ மீரா காதுல, சொன்னா பிரிய மாட்டோம்னார். மூனாவது தடவ மீரா காதுல சொன்னாலும், நம்ம விட்டு அவ பிரிஞ்சுட்டா, மீரா பல துன்பங்களுக்கு ஆளாவான்னு அவர் சொன்னாருன்னேன்... இல்லையா?"

"ஆமா!"

"அதுனாலதான், ரெண்டாவது முறையா, இப்ப யூஸ் பண்ண யோசிக்கிறேன்."

"ஏன்ங்க?"

"இப்ப அப்டி செஞ்சு, நாம சேர்ந்துட்டா சந்தோசம்தான்... ஆனா அந்த மூனாவது முறை பிரியிறது, மீராவோட கல்யாணமா இருந்தா என்ன செய்றதுன்னு யோசிச்சேன்"

"புரியலங்க"

"இப்பவாவது மீராவ அவள பெத்தவங்கட்டதான் விட்டுட்டு வந்திருக்கோம்… என்னதானிருந்தாலும் பெத்தவங்கனால ஒரு பிள்ளைக்கு என்ன துன்பம் வந்துடப்போகுது?" என்று தாத்தா கூறும்போதே,

"முதுகுல ரெண்டு வச்சா சொன்னதக் கேட்பா!" என்று மாலினி புன்னைவனதில் கூறியது இருவருக்குமே ஞாபகத்திற்கு வந்தது.

"மீராக்குட்டியோட கல்யாண வாழ்க்கையில நம்ம அருகாமை அவளுக்கு வேணும் முத்துரா… கல்யாணம் பண்ணிப்போற இடத்துல, ஒருவேளை, நம்ம மீரா கஷ்டப்படும்போது நம்மால அவகூட இருக்கமுடியாம பிரிஞ்சிருந்தா, அவ நிலை என்னாகும்? யோசிச்சுப் பாரு… அதான் ரெண்டாவது முறை இப்ப சொல்லல." என்று தாத்தா சொல்வதும் சரியென்று தோன்ற,

என்னசெய்வதென்று தெரியாமல் விழித்தார் அப்பத்தா.

இரு மாதங்கள் கூட ஆகாத நிலையில் பெரியவர்கள் இருவரும் மெலிந்து காணப்பட்டனர்.

எதிலுமே பிடிப்பு இல்லாமல் இருந்தனர். அப்பொழுது தாமரைக்குளம் வந்த இளையமகன் தனராஜன், தன் பெற்றொரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

"இப்படியே இருந்தா உங்க உடம்புதான் கெட்டுப் போகும்… கொஞ்சநாள் கடையை மூடிட்டு என்னோட வந்து தாங்கியிருங்க" என்று கூற,

மன மாற்றத்திற்காக, இருவரும் தங்களின் இளைய மகனோடு கோயம்முத்தூர் சென்றனர்.

கோயம்முத்தூரிலும் இருவராலும் பழைய நிலைக்கு வரமுடியவில்லை… தினமும் அருகில் உள்ள கோயிலுக்கு, பவானி அழைத்துச் சென்றாள்.

மலையில் வீடு திரும்பும் தனராஜன், பார்க் மற்றும் கோயமுத்தூரில் சுற்றிப்பார்க்கத் தகுந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றான்.

இதில் அப்பத்தா நிலைதான் மிகவும் மோசமானது.

எப்பொழுதும், காலையில் எழுந்தால், மதிய உணவு முடித்து உறங்கும்வறை பம்பரமாகச் சுழல்பவர், இன்று, சமைக்கும்பொழுது பவானி சொல்லும் வேலையைச் செய்வார், போட்டதை உண்டார். பெரும்பாலும் படுக்கையே கதி என்று கிடந்தார்.

"இப்படியே இருந்தா நல்லதில்லப்பா… மனச தேத்திக்கிட்டு ஆகவேண்டியத பாருங்க." என்றான் இளையவன்.

‘இனிமேல் இவர்கள் இருவரையும் தனியாகத் தாமரைக்குளத்தில் விடுவது சரிவராது’ என்று நினைத்த தனராஜன்,

ஞாயிற்றுக்கிழமை தன் பெற்றொர் அருகில் அமர்ந்து, "கடையை என்னப்பா செய்யலாம்?" என்று தனராஜன் கேட்டான்.

"இனிமே சம்பாரிச்சு என்ன பண்ணப்போறேன்? கடைய வித்து, பேங்க்ல போட்டுடு. அதுல கிடைக்கிற வட்டியே போதும்… அரிசி, காய்கறிலாம்தான் நம்ம வயல்ல இருந்தே வந்துடுமே..." என்று கூறுபவர் தன்னுடைய தந்தையா? என்று வியந்து பார்த்தான் தனராஜன்.

‘எப்படி இருந்தவர்கள் இருவரும்?’ என்று நினைத்தவன்,

“ஏன் இப்படி வருத்திக்கிறீங்க? என்னையும், அண்ணனையும் படிக்கும்போது ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டு நல்லாதான இருந்தீங்க?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லத்தெரியாமல் விழித்தனர் தனராஜனின் பெற்றோர்.

‘இவர்களை இப்படியே விட முடியாது’ என்ற முடிவுக்கு வந்த தனராஜன்,

"அப்போ நான் சொல்றத கேட்கிறீங்களாப்பா?. நீங்க சொன்ன மாதிரி கடையையும் தாமரைக்குளத்துல இருக்கிற வீட்டையும் வித்து, பேங்க ல போட்டுடுறேன்… நீங்க ரெண்டு பேரும் புன்னைவனத்துக்கே போயிடுங்களேன்.…" என்றதும்

மூன்று மாதம் கழித்துத் தாத்தா, அப்பத்தா கண்களில் ஒளி தெரிந்தது.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1456

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
தாத்தா பாட்டிக்கே இந்த நிலைமைன்னா மீராக்குட்டிக்கு என்னன்னே தெரியாது பாவம் குழந்தை.. நமக்கு இப்படி ஒரு தாத்தா பாட்டி இல்லன்னு feel பண்ண வச்சிட்டிங்களே writer ji கண்ணு கலங்குது..
 

Sspriya

Well-known member
எவ்ளோ பாசம் மீரா குட்டி மேல 💞💞... மாலினி ஓட அம்மா மேல கோவம் கோவமா வருது... பாவம் இப்போ இவங்க எவ்ளோ கஷ்ட படுறாங்க... சீக்கிரமா மீரா கூட வந்து happy யா இருங்க 💞💞
 

Sspriya

Well-known member
Todays punch 💞💞

பிறந்ததில் இருந்து கொஞ்சி வளர்த்த குறும்புகாரி பிரிந்து பெற்றவர்களுடன் செல்கயில்

பாசம் வைத்த மனமும் பறித்தவித்து கதறுகையில்

வயதான உடம்பும் வலுவிழந்து விழுகிறது படுக்கையில்😔😔
 
Top