கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இனிய தனிமையே! - அன்னப்பூரணி தண்டபானி

Puvana Chandrasekaran

Moderator
Staff member
இனிய தனிமையே!


வெண்ணிலா வேலாயுதம் தம்பதியரின் ஒரே மகன் எழிலன். அவர்களுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த முத்துப் பிள்ளை. அவனுக்குப் பிறகு வெண்ணிலா கருத்தரிக்கவேயில்லை.

"இவன் இப்டி ஒத்த பிள்ளை நின்னுட்டானே.. நாளப் பின்ன இவனுக்கு எதாவது பிரச்சனைன்னா தோள் குடுக்க தம்பி தங்கச்சின்னு யாரும் இல்லைங்களே.. நம்ம பிள்ள என்னங்க பண்ணுவான்.." என்று சில சமயம் வெண்ணிலா வருத்தத்துடன் தன் கணவனிடம் கேட்பாள்.

"அவனால எல்லாம் சமாளிக்க முடியும்டீ.. அதனாலதான் ஆண்டவன் நமக்கு அடுத்தத குடுக்கல.. அஞ்சு வருஷம் கழிச்சி நமக்கு கிடைச்சிருக்கற வரம் அவன்!" என்று அவளை சமாதானம் செய்வான் வேலாயுதம்.

எழிலன் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறான். மிகவும் சுட்டிப் பையன். எல்லா பிள்ளைகளுக்கு இருக்கும் வழக்கமான ரசனைகள் இல்லாமல் மாறுபட்ட சிந்தனைகளும் ரசனைகளும் கொண்ட இளைஞன்.

எல்லா பிள்ளைகளும் வானத்தில் பறக்கும் பட்டத்தைப் பார்த்து வியந்தால் இவன் அதைச் செலுத்துபவர்களைப் பார்த்து வியப்பான்.

தொலைக்காட்சியில் இவனையொத்த பிள்ளைகள் எல்லாம் பாட்டுப் பாடி நடனமாடி பாராட்டுப் பெறுவதைப் பார்த்து இவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதேயில்லை. மாறாக, அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பேசும் பேச்சும் அவர்கள் செய்யும் ரகளையுமே இவனை ஈர்க்கும்.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது மிகவும் விளையாட்டாய் இருந்தவனைக் கண்டு வெண்ணிலாவுக்கும் வேலாயுதத்துக்கும், இவன் தேர்வில் தோற்றுவிடுவானோ என்று மிகவும் பயம் வந்தது. ஆனால் எல்லாரும் வாயைப் பிளக்கும் வகையில் 94% மதிப்பெண்கள் எடுத்து எல்லாரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினான்.

எல்லாரும் இந்த மதிப்பெண்ணுக்கு பொறியியல் படிப்பில் சேர்வான் என்று எண்ணியிருக்க, இவனோ பிஎஸ்ஸி அனிமேஷன் படிப்பை தேர்ந்தெடுத்தான்.

"இதுல என்ன ஸ்கோப் இருக்கு?" என்று கேட்டவர்களிடம்,

"நாளைக்கு நா வேலைக்கு போறப்ப உங்களுக்கே தெரியும்!" என்பான்!

எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் அவனுக்கு சிறிய வயதிலிருந்தே இருந்தது.

அப்படியே ஏதாவது விஷயத்தில் சோர்ந்து போனாலும் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளும் கலையும் அறிந்தவன்.

வீட்டில் இவன் இருந்தால் எப்போதும் சிரிப்புச் சேனல்கள் ஓடிக்கொண்டேயிருக்கும்.

அல்லது தன் கைப்பேசியில் மீம்ஸ் யூட்யூபில் ட்ரோல் பார்த்துப் பார்த்து வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பான்.

அதற்காக பொறுப்பில்லாமல் தன் வேலைகளை செய்யாமல் இருப்பவனும் அல்ல! அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை மறுக்காமல் செய்யும் சமத்துப் பையன்.

ஆனால் சில சமயம் வெண்ணிலா எதாவது உதவி கேட்டால்,

"வாய்ப்பில்ல ராஜா!" என்று சிரித்துக் கொண்டே தன் ஆதிக்கத்தை மறுக்காமல் அவளிடம் செலுத்தவம் செய்வான், குறும்பு மகனாய்.

உலகம் முழுதும் வைரஸ் கிருமித் தொற்றின் காரணமாக வீட்டில் அடைபட்டுக் கிடக்க, இவனுக்கு வீட்டில் கற்றுக் கொள்ள நிறைய நேரம் கிடைத்தது.

சமையல் செய்ய, வீட்டு வேலைகள் செய்ய என்று ஆவலுடன் கற்றான். கூடவே தன் பாடம் சம்மந்தமாக இணையத்தில் புதிது புதிதாக நிறைய கற்றுக் கொண்டான்.

வெண்ணிலாவுக்கும் வேலாயுதத்துக்கும் தன் மகனை நினைத்து எப்போதும் போல இப்போதும் பெருமையே!

இணையத்தில் ஏதோ போஸ்டர் தயார் செய்யும் போட்டி ஒன்று பற்றி அறிய வர, மிகவும் ஆர்வமாக இவனும் அவர்கள் கேட்டிருந்தபடி போஸ்டர் தயார் செய்து அனுப்பி வைத்தான்.

அதன் முடிவு அறிவிக்கும் நாளன்று இவனுக்கு பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இருந்தன். ஆனால் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் மிகவும் சோர்ந்து போனான்.

இதைப் பார்த்த அவனுடைய அப்பா வேலாயுதம்,

"பரவால்ல எழில்.. இதுல தோத்துட்டா வாழ்க்கையே முடிஞ்சா மாதிரி ஏன் நினைக்கிற.." என்று தேற்றினான்.

"இல்லப்பா.. நா தோத்ததுக்காக வருத்தப்படல.. அந்த ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கின போஸ்டர் சரியாவே இல்ல.. அதுல அவங்க வரைஞ்ச படம் கூட சொந்தமா வரைஞ்ச மாதிரி தெரியல.. நெட்ல எடுத்த படம் போல இருக்கு.. கலர் காம்பினேஷன் சரியில்ல.. எழுத்து தெளிவாயில்ல.. எதை பேஸ் பண்ணி முதல் ப்ரைஸ் குடுத்தாங்கன்னு புரியல.. ஒரு சாதாரண காம்ப்பட்டீஷன்.. அதுல கூட நேர்மையா இல்லன்னா.. எப்டிப்பா.." என்று தன் மனக்குமுறல்களைக் கொட்டினான். அவன் கண்கள் கலங்கின.

வெண்ணிலாவும் வேலாயுதமும் அவனைத் தேற்றி சாப்பிட வைத்தனர்.

அன்றிரவு முழுதும் அவனால் உறங்கவே முடியவில்லை.

எனக்கு ப்ரைஸ் கிடைக்கலங்கறத விட ஒரு தப்பான போஸ்ட்டருக்கு எப்டி ப்ரைஸ் குடுக்கலாம்.. என்பதே அவன் மனதில் குடைந்து கொண்டிருந்தது.

எப்படியோ உறங்கியவனைப் பார்த்து வெண்ணிலாவும் வேலாயுதமும் கவலை கொண்டனர்.

சரி.. தானா சரியாகும்.. இப்பதானே வெளி உலகத்த பாக்க ஆரம்பிச்சிருக்கான்.. என்று தங்களை சமாதானப் படுத்திக் கொண்டனர்.

மறுநாள் எழுந்து சுறுசுறுப்புடன் தன் வேலையைப் பார்த்தாலும் எழிலன் சோர்வாகவே காணப் பட்டான்.

அப்போது அவனுடைய கைப்பேசி அழைக்க, அதை உயிர்ப்பித்து காதுக்குக் கொடுத்தான்.

"ஹலோ.. யாருங்க.."

"தம்பி! எழிலன் நீங்கதானே.."

"ஆமா நாந்தான்.." என்று எழிலன் சொல்ல, அந்தப் பக்கத்தில் பேசியவர் என்ன சொன்னாரோ, எழிலனின் முகம் ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வந்தது போட்டதைப் போல ஔிர்ந்தது.

பேசி முடித்துவிட்டு,

"அப்பா.." என்று மகிழ்ச்சியாகக் கத்திக் கொண்டே வந்தவனை கட்டிக் கொண்டான் வேலாயுதம்.

"என்னடா.. என்ன இவ்ளோ சந்தோஷம்.."என்றார்.

"அப்பா.. இப்ப யார் பேசினாங்க தெரியுமா.. ஆக்டர் ஹரீஷ்.. அவரோட கம்பெனில என்னை வொர்க் பண்ண கூப்பிட்டிருக்கார்.. நேத்திக்கு நடந்த அந்த போஸ்டர் மேக்கிங் காம்ப்படீஷன்ல என் போஸ்ட்டர் பார்த்தாராம்.. அவருக்கு ரொம்ப இம்ப்ரசிவ்வா இருந்துச்சாம்.. கலர் காம்பினேஷன்லாம் சூப்பரா இருந்ததுன்னு சொன்னார்.. அதுல இருந்த படம் நானே வரைஞ்சதுன்னு தெரிஞ்சப்ப என்னை ரொம்ப பாராட்டினார்ப்பா.. வீடியோ ஆடியோ எடிட்டிங் தெரியும்னு சொன்னே்.. அவரோட கம்பெனிலேர்ந்து வர எல்லா போஸ்ட்டர்ஸ், லிரிக் வீடியோஸ்.. ஃபர்ஸ்ட் லுக் எல்லாமே இனிமே நானேதான் செய்யணும்னு சொல்லியிருக்கார்ப்பா.. நீ ஒரு ஒன் மேன் ஆர்மி மேன்-ன்னு என்னை பாராட்டினார்ப்பா.." என்று மகிழ்ச்சி பொங்க கூறினான் எழிலன்.

"வெரி குட்.. நா சொன்னேன்லப்பா.. திறமைக்கு என்னிக்குமே மதிப்பு உண்டு.. பாரதியார் செந்தமிழ்நாடு பாட்டு எழுதனப்ப அவருக்கு அதுக்கு மூணாவது பரிசுதான் கிடைச்சிதாம்.. ஆனா இப்ப அவர்தான் மக்கள் மனசில நீங்காம நீடிச்சி இருக்கார்.. முதல் பரிசு வாங்கினர் யார்ன்னு கூட நமக்கு தெரியாது.. அது மாதிரிதான்.. நீ உண்மையான உழைப்பை அதில போட்ட.. உன் உழைப்புக்கும் முயற்சிக்கும் கண்டிப்பா பலன் உண்டு.. நல்லா பண்ணு.. நல்ல பெயர் எடு.." என்றான் வேலாயுதம்.

"நீ தனியா இருக்கியேன்னு ரொம்ப கவலைப்பட்டேன்.. ஆனா நீ தனியா நின்னு சாதிச்சிட்ட.. இனிமே வரவங்களுக்கு புதிய பாதை வகுக்கப் போற.. ஆல் த பெஸ்ட்.." என்று மகனை வாழ்த்தினாள் வெண்ணிலா.

எழிலன் மகிழ்ச்சியுடன்,

“என் இனிய தனிமையே.." என்று பாடிக் கொண்டே தன் கணிணி முன் அமர்ந்தான்.



♥♥♥♥♥♥
very nice.congrats
 

Nithya Mariappan

Moderator
Staff member
உண்மையான திறமை என்னிக்குமே சோடை போகாது.... அருமையான கதை சிஸ்... வெற்றி பெற வாழ்த்துக்கள் :love: :love: 💐
 
Top