முதுமையில் தனிமை கொடுமைஉன்னைக்கரம் பிடித்தேன்.
மாமா வீட்டைப் பார்த்துக்குங்க.நான் இன்னைக்கு நைட் லேட்டாதான் வருவேன்.பவி வந்தவுடன் அவளுக்கும்,உங்களுக்கும் டிபன் ஆர்டர் பண்ணிச் சாப்பிடுங்க" என்றாள் ப்ரீத்தி.
"சரி மா.பாத்து பத்திரமா போம்மா" என்றார் ராஜன்.
ராஜனுக்கு இரண்டு மகன்கள்.இருவருக்கும் திருமணம் ஆகி சென்னையின் ஒரு மூலையில் ஒருவரும்,இன்னொரு மூலையில் ஒருவரும் இருக்கிறார்கள். ஒரு மகனிடம் இவரும்,இன்னொரு மகனிடம் தாரணியும் இருக்கிறார்கள்.குழந்தைப் பள்ளியிலிருந்து வந்தால் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இருவரையும் ஆளுக்கொரு வீட்டில் வைத்திருக்கிறார்கள்.
மூத்தவன் மூர்த்தி அலுவலக நிமித்தம் அடிக்கடி வெளிநாடு செல்வான்.இப்போது கூட எங்கோ சீனாக்குப் பக்கத்தில் உள்ள ஊருக்குப் போயிருக்கிறான்.இளையவன் குமாரும், அவன் மனைவியும் டாக்டர்கள்.அவர்களுக்கு ஆண்,பெண் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
ராஜன் காலையில் டிபன் சாப்பிட்டு,தன் தட்டைக் கழுவி வைத்தார்.காலை அருகிலுள்ள நூலகத்திற்குச் செல்வது அவரது வழக்கம்.
நூலகத்தில் வேலைப்பார்க்கும் கணேசன் அவருடைய நண்பர்.அவரோடு கொஞ்ச நேரம் பேசி வருவார்.
"வாங்க இன்னும் உங்களைக் காணுமேன்னு பார்த்தேன்" என்றார் கணேசன்.
"ப்ரீத்தி இன்னிக்குக் கொஞ்சம் லேட்டா போனா."
"போன வாரம் உங்கள் மனைவியைப் பார்க்கப் போனீங்களா?"
"போனேன்.அவ ஒரே அழுகை.வயசான காலத்துல இப்படி பிரிந்து இருக்கணும் என்று தலையெழுத்து".
"உங்க பசங்க கிட்டப் பேசி இதுக்கு ஒரு வழி பண்ணுங்க".
"பேச வேணாம்னு சொல்றதும் என் மனைவிதான்".
"பெத்த பாசம் தடுக்குது போல".
"ஆமாம்.நான் வரேன் சார்".
காலையிலிருந்து தாரணி போன் பண்ணவேயில்ல.போனை எடுத்து டயல் செய்தார்.முழுவதும் ரிங் போனபிறகும் எடுக்கவேயில்ல.வாட்சப்பில் சீக்கிரம் போன் பண்ணு என்று தகவல் அனுப்பி,அவர் பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.டிவியில் செய்தி ஒன்று மட்டும் பார்ப்பார்.
மனதில் பழைய நினைவுகள் அசைபோட கண்களை மூடியிருந்தார்.
எப்போதும் வேலை வேலை என்று பிசியாக இருந்த காலத்தில் தாரணி மாமியார்,நாத்தனார்,குழந்தைகள் என்று அவர்களைக் கவனித்துக்கொண்டு காலத்தை ஓட்டினாள்.இளமையில் வேலை,நண்பர்கள்,கிரிக்கெட் என்று காலம் படு வேகமாகச் சென்றது.ஓய்வு பெற்றவுடன் குடும்பத்தில் அனைவருடனும் சேர்ந்து இருக்கலாம் என்று ஆசைப்பட்டால் அதுவும் நடக்கவில்லை.தாரணி கூடவாவது சேர்ந்து இருக்கலாம் என்றால் குமாருக்கு கைக்குழந்தை இருப்பதால் தாரணி கூடவே இருக்க வேண்டிய நிலைமை.இங்கே பேத்தியை விட்டு நானும் செல்ல முடியவில்லை.ஏதேதோ யோசித்து கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கக் கூட மனமில்லாமல் நினைவுகளின் அலைக்கழிப்பில் உறங்கிப்போனார்.
தாரணி பேத்தியைப் பள்ளிக்கு அனுப்பி,பேரனைக் குளிப்பாட்டி உணவு ஊட்டி தொட்டியில் ஆட்டி தூங்க வைத்தார்.போனை சைலண்டில் போட்டிருந்தார்.அப்போது தான் எடுத்துப் பார்த்தார்.கணவருக்குப் போன் செய்தார்.
"ஹலோ நல்லா இருக்கீங்களா?"
"ஏன் தாரணி காலையில் இருந்து போனே பண்ணல.ப்ரெஸ்ஸர் மாத்திரை எல்லாம் ஒழுங்கா போட்டியா?"
"உங்க பேரன் இப்போ தான் தூங்கினான்.வரவர சேட்டை ரொம்ப அதிகமாப் பண்றான்.பார்த்துக்கவே முடியல.கால் வேற வலிக்குது."
"யாராவது ஆள் வைத்துப் பார்த்துக்கச் சொல்லு.நாம இரண்டு பேரும் நம்ம பழைய வீட்டுக்கேப் போயிடலாம்".
"கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.அப்புறம் நம்ம காசி,ராமேஸ்வரம்ன்னு போகலாம்".
"எனக்கு காலையில் இருந்து சாயங்காலம் வரை தனியா இருக்க எப்படியோ இருக்கு தாரணி".
"வருண் எழுந்துட்டான் போல அழறான்.நான் அப்புறம் பேசறேன்" என்று போனை வைத்துவிட்டார் தாரணி.
அவர் போனை வைத்தும் கூட இவர் போனை வைக்கவில்லை.மனைவியின் பேச்சுக்குரல் கேட்பதாகவே தோன்றியது. எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்தார் என்று தெரியவில்லை.அழைப்பு மணி ஓசைக்கேட்டதும் எழுந்தார்.
பவி நின்று கொண்டிருந்தாள்.
"எவ்வளவு நேரம் தாத்தா பெல் அடிக்கிறது.எனக்குப் பசிக்குது".
"போய் முகம்,கை கால் கழுவிட்டு வாடா.பால் தரேன் குடிச்சுட்டு ஹோம்ஒர்க் செய்வோம். அம்மா இன்னிக்கு லேட்டா வருவாங்க."
"இந்த அம்மா ரொம்ப மோசம் தாத்தா.எப்பவும் லேட்டா தான் வராங்க.அப்பா எப்பவாவது தான் வீட்டில இருக்கிறார்."
"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது பவிக்குட்டி. இரண்டு பேரும் உனக்காகத்தானே சம்பாரிக்கிறாங்க."
"நீங்க எப்பவும் உங்கள் பையனுக்கும்,மருமகளுக்கும் தான் சப்போர்ட் பண்ணுவீங்க".
'பத்து வயதில் எப்படியெல்லாம் பேசுது இந்த பவிக்குட்டி' என்று யோசித்துக்கொண்டே சிரித்தார் ராஜன்.
"சரி உனக்கு பிடித்த பக்கோடா வைத்திருக்கிறேன்.நல்ல பொண்ணு இல்ல.போய் முகம் அலம்பிட்டு வா".
சீருடையில் இருந்து வேறு உடைக்கு மாறி,தாத்தா கொடுத்தப் பாலைக் குடித்துவிட்டு,பக்கோடாவும் சாப்பிட்டாள்.
"தாத்தா நைட்டுக்கு எனக்கு நூடுல்ஸ் ஆர்டர் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு டிவியில் கார்ட்டூன் பார்க்க உட்கார்ந்து விட்டாள்.
"பவி அரை மணிநேரம் பார்த்துட்டு படிக்க உட்காரணும் சரியா".
"ம்…"
திரும்ப பால்கனியில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கலானார் ராஜன்.
மருமகளும்,மகனும் இரவு ஏழு மணிக்கு வந்தார்கள்.குழந்தையைக் கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டு,தாரணியிடமே விட்டுச் சென்றனர்.
"மூர்த்தி நான் அப்பா பேசறேன் பா.நல்லா இருக்கியா?"
"அப்பா நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்."
"நானும்,அம்மாவும் நம்ம பூர்வீக வீட்டுக்கே போகலாம்னு இருக்கோம்".
"என்னப்பா திடீர்னு.ப்ரீத்தி எதுவும் சொன்னாளா?"
"இல்லப்பா.எனக்கும் வயசாகுது.இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்னு தெரியல.இருக்கிற கொஞ்ச நாள் நானும்,என் மனைவியும் சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்படறேன்".
"நான் அடுத்த வாரம் வருவேன்பா.நேரில் பேசிக்கொள்ளலாம்".
"இது என்னோட முடிவு."
"அம்மா ஒத்துகிட்டாங்களா?"
"உனக்கு அம்மா ஆகிறதுன்னு முன்னாடியே அவ என் மனைவிடா. நான் சொன்னா கேட்பா".
"சரிப்பா.எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க".
மூர்த்தி ப்ரீத்திக்குப் போன் பண்ணி அப்பா சொன்னதைச் சொன்னான்.
"அப்பா போயிட்டா,நீ வேணா உங்க அப்பா,அம்மாவை வரச் சொல்றியா?"
"எங்க அப்பாக்கு மூட்டுவலி.அவர் இங்க வந்து தங்க மாட்டார்.நான் வேணா மாமாகிட்டப் பேசிப்பார்க்கிறேன்."
"வேண்டாம் விடு.அம்மாகிட்ட பேசுவோம்.குமாரிடமும் பேசறேன்.நான் சீக்கிரம் வரேன் பேசிக்கலாம்".
போனில்"குமார் அப்பா சொன்னது தெரியுமா உனக்கு?"என்றான் மூர்த்தி.
"என்ன சொன்னார்"?
"அம்மாவும்,அவரும் தனியா போறதைப் பத்தி".
"என்ன சொல்ற நீ.அம்மா போயிட்டா குழந்தையை யார் பார்த்துக்கொள்வது?"
"எனக்கும் அதே பிரச்சனை தான்டா.
நீ சொன்னா அம்மா கேட்பாங்க.அம்மாகிட்ட பேசிட்டு சொல்லு".
"சரி நான் நாளைக்குப் பேசறேன்".
இரவில் குமாரும்,அவன் மனைவி சுதாவும் என்ன செய்வது என்று பேசிக்கொண்டார்கள்.
மறுநாள் காலை அம்மாவிடம் வந்து உட்கார்ந்தான் குமார்.
"அம்மா இங்க உனக்கு ஏதாவது கஷ்டமா இருக்கா?"
"இல்லையே.என்னடா புதுசா கேட்கிற."
அப்பா நேற்று மூர்த்தியிடம் பேசிய விஷயங்களைச் சொன்னான்.
'அவர் ரொம்ப நாளா இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்' என்று நினைத்தார்.
"என்னம்மா ஒண்ணுமே பேச மாட்டேன்கிற?"
"நான் என்ன சொல்றது?"
"நீ போயிட்டா இங்க பாப்பாவும்,தம்பியும் எப்படி பார்த்துக்கொள்வது"?
"எங்களுக்கும் வயசாகுடா.உடம்பு முடியல.அவரோட கோவில்,குளம்ன்னு போகணும்ன்னு எனக்கும் ஆசையாயிருக்கு".
"அப்ப சரி மா.நான் குழந்தையைப் பார்த்துக்க ஆள் ஏற்பாடு பண்றேன்".
மகனும்,மருமகளும் கோபத்துடன் செல்வதைப் பார்த்தார்.
இனியாவது அவருக்கு சமைத்துக்கொடுத்து சந்தோசமா பார்த்துக்கொள்ளனும் என்று முடிவெடுத்து நிம்மதியாகத் தூங்கப் போனார்.
"காலையிலேயே ராஜன் போன் பண்ணினார். தாரணி பசங்க உன்கிட்ட சொல்லியிருப்பாங்களே?"
"நீங்க நம்ம வீட்டைச் சுத்தம் செய்ய சொல்லுங்க.இந்த வாரமே கிளம்பிடலாம்".
"நிஜமாவா சொல்ற தாரணி"!
"ஆமாங்க.மத்தவங்களுக்காக வாழ்ந்தது போதும்.இனி நமக்காக வாழ்வோம்ன்னு தோணுது."
"இப்ப தான் உன்னை எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு".
"சரிசரி நான் வைக்கிறேன்."
"நீ வெட்கப்படும் குரலை இனி கேட்க வேண்டியது இல்ல.நேரில் பார்க்கலாம்.உன் கையைப் பிடித்துக்கொண்டு நடைப்பயிற்சிக்குப் போகலாம். யாருடைய தொந்தரவும் இல்லாமல் நிறைய பேசலாம்" என்று நினைவில் மலர்ந்தார் ராஜன்.
மகன்கள் இருவருக்கும் வருத்தம் இருந்தாலும் ஒன்றும் பேச முடியவில்லை. மூர்த்தி வெளிநாட்டில் இருந்து வந்துவிட்டான்.
"பவிக்குட்டியிடம் தாத்தா வேற வீட்டுக்குப் போறேன்டா குட்டி.நீ தாத்தா வீட்டுக்கு சனிக்கிழமையே வந்துடு என்ன".
"தாத்தா நீ போக வேண்டாம்"என்று அழ ஆரம்பித்தாள்.
"பவிக்குட்டி சமத்து இல்ல.அழக்கூடாது.
நானும்,பாட்டியும் உன்னைச் சனிக்கிழமை எதிர்பார்ப்போம் சரியா என்று சமாதானம் செய்தார்.
தாரணிக்கு ஆறு மாத கைக்குழந்தையை விட்டுப் பிரியக் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் பெற்றவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று கிளம்பி விட்டார்.
சின்னவன் திருமணம் ஆகி குழந்தைப் பிறந்த பிறகு தான் கடந்த ஐந்து வருடமாக இருவரும் பிரிந்து இருக்கிறார்கள்.
தனது பூர்வீக வீட்டை சுத்தப்படுத்தி தாரணிக்குப் பிடித்த ஜாதிமல்லி நட்டு வைத்தார்.கொல்லையில் செம்பருத்தி,மல்லிகை, ரோஜா என்று பூக்கள் செடிகளும் வைத்தார்.
தாரணி அடுப்படிக்கு வந்து பால் காய்ச்சினார். இருவரும் அருகருகே உட்கார்ந்து காபி குடித்தபடியே பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் சேர்ந்தே இருக்கும் போது அவ்வளவு பிரியம் வெளிப்படையா காட்டியதில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பிரிவு இருவருக்கும் ஒருவரையொருவர் நெருக்கமாக வைத்துக்கொண்டது என்பதே உண்மை.
"தாரணி நமக்கு கல்யாணம் ஆகி 40 வருடம் ஆச்சு.ஆனா இப்ப தான் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."
தாரணி சிரித்தபடியே தலை கவிழ்ந்தார்.
"இந்த வெட்கம் கோடிரூபா கொடுத்தாலும் கிடைக்காது."
"சரி வாங்க சமைப்போம்.நீங்க காய் வெட்டிக் கொடுங்க.உங்களுக்குப் பிடித்த அடையும்,அவியலும் செய்யறேன்".
அடையும்,அவியலும் செய்து அவர் சாப்பிடும் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தார் தாரணி.
ஒரு மாதம் சென்றதே தெரியவில்லை. புது வாழ்க்கைப்போல் இருவரும் சேர்ந்தே கோவில், மார்க்கெட் என்று சந்தோசமாகப் பொழுது போக்கினார்கள்.வாரக்கடைசியில் பேரப்பிள்ளைகளும் வந்தார்கள்.மகன்கள் முகம் தூக்கினர்.
"அவர்களுக்கும் நம் வயது வந்தால் புரியும்" என்று மனைவிக்குச் சமாதானம் சொன்னார்.
'பென்சன் பணம் வருவதால் அவர்களை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.எத்தனை வயதானவர்கள் ஆதரவில்லாமல் இருக்கிறார்கள்' என நினைத்தார்.
இப்போது தாரணி யோகா கற்றுக்கொள்கிறார். ராஜன் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுகிறார். அவர்களுக்காக வாழ்கின்றனர்.
-ஜெயா சிங்காரவேலு.
புவனா சந்திரசேகரன்