கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காகித கப்பல்கள்

sankariappan

Moderator
Staff member
காகித கப்பல்கள்



சித்ராவின் வாழ்கை தலைகீழாக மாறிவிட்டது. மூன்று வருஷ மண வாழ்க்கையில் அவளுக்கு கிடைத்த பரிசு உதாசீனம் தான். மகன் பாபுவுக்கா அவள் தன்மானத்தை விட்டு தன் வீட்டுக்கே வேலைக்காரியாக வருகிறாள். அதுக்கும் ஒரு பெரிய முட்ட்ருமுல்லி வந்துவிடுமோ? படித்துப் பாருங்கள். சித்ராவோடு பயணியுங்கள் தோழிகளே.



சித்ராவுக்கு நடக்கப் பிடிக்கும். அதுவும் காலை நேர நடை திவ்யம். மனசுக்கு இதமான புதிய காற்று. வழியில் அவள் தாண்டிப் போகும் பிள்ளையார் கோவிலில் ஈரக் கூந்தல் மாமிகள் கையில் புஷ்பக் கூடையுடன் வருவது பார்க்க ரம்மியமாக இருக்கும்.

“சித்ரா...எப்படி இருக்கே?” ஆச்சி தேவயானி கேட்டதும் திடுக்கிட்டு திரும்பினாள் சித்ரா. தெரிந்தவர்கள் பார்த்துவிட்டால் தர்ம சங்கடம் தான். துருவித் துருவி கேள்விகள் கேட்பார்களே.

“நல்லாயிருக்கேன் ஆச்சி. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பிள்ளைக்கு வரன் பார்த்திட்டிருந்தீங்களே அமைந்ததா?”

“அது கிடக்கட்டும். உன் புருஷன் உன்னை சேர்த்துக்கிட்டானா?”

ஆச்சி ஆவலோடு கேட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. வெறுமனே புன்னகைத்தாள்.

“அது சரி உன் மாமியாக்காரி விடுவாளா என்ன? ரிமோட் கண்ட்ரோல் மாதிரி அங்கே சுவிட்ச் போட்டா இங்கே ஆடறான். நீ விட்டுக் கொடுக்காதே. வீணை வச்சிட்டிருக்கும் சரஸ்வதி அவனுக்கு வேண்டாமாம். காசு கொட்டும் லக்ஷ்மி தான் வேண்டுமாம். பயித்தியக்காரன்...” விட்டால் ஆச்சி புதிய புதிய உவமைகள் சொல்லி சித்ராவுக்கு இரங்கல் பா பாடிவிடுவாள் போலிருக்கிறது.

“ஆச்சி...உங்க கண் சிவந்திருக்கே என்னாச்சு?” என்று கேட்டு சிந்தனையை திசை திருப்பினாள். ஆச்சிக்கு வாயெல்லாம் பல்.

“அது தான் சித்ராங்கறது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் என்னைப் பத்தி கேக்றே பாரு....உன் குணத்துக்கு இப்படி வரவேண்டாம். விதி யாரை விட்டது? என்னமோ தெரியலைடியம்மா கண்ணிலே உறுத்தலா இருக்கு. லச்சுமியோட தாய் பாலை எடுத்து கண்ணில் விட்டேன். இப்ப கொஞ்சம் தேவலை.” லச்சுமி அவரது மகள். பிரசவித்து மூன்று மாதம் ஆகிறது. பெண் குழந்தை அப்படியே ஆச்சியை உரித்து வைத்திருக்கிறது. ஆச்சிக்கு ஏக பெருமை.

“ரொம்ப சந்தோஷம் ஆச்சி. நான் இப்படியே வாக்கிங் போயிட்டு வரேன்.”

கழண்டு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

கோவிலருகே பூக்காரி மல்லிகப் பூ விற்றுக் கொண்டிருந்தாள். நேற்றைய பூ தான். வாங்கி தலையில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். மெல்லிய காற்றுக்கும் பூவாசனைக்கும் மனம் எங்கோ சென்றது. ராகவனுக்கு மல்லிகப் பூ என்றால் உயிர். திருமணம் ஆன புதிதில் பந்து பந்தாக மல்லிகைப் பூ வாங்கி வருவான்.

“என்ன இது இவ்வளவு பூ?. தலையில் வச்சால் வைக்கப் போர் மாதிரி

இருக்கும். இரண்டு முழம் போதாதா? அதுவே ஜாஸ்தி.”

அவன் வைத்து விடுவான். வைக்கத் தெரியாமல் வைக்க பூ விழுந்துவிடும். விடமாட்டான். எப்படியோ வைத்துவிட்டு ரசித்துப் பார்ப்பான். அது எல்லாம் ஒரு நிலாக் காலம் ஆகிவிட்டது. இப்பொழுது அவள் அவனுக்கு சமைத்துப் போடும் வேலைக்காரி. தினமும் காலை வந்து அவன் அலுவலகம் போவதற்குள் சமைத்து கொடுத்து, வீட்டை சுத்தம் செய்து, அவன் பான்ட் ஷர்ட்டை வாஷிங் மிஷினில் துவைத்து காயப் போட்டு, காய்ந்ததை இஸ்திரி போட்டு என்று வேலைக்காரிக்குரிய வேலையினை பார்ப்பாள். அவன் அதிகாரம் தூள் பறக்கும். சலிப்பு வேறே!

“என்ன தினம் இட்லியும் சட்னியும் தானா? இதுக்கு பேசாமே ஹோட்டலில் வாங்கி சப்பிட்டுக்கலாமே. நீ வந்து தொலைக்கணுமா இதுக்கு? ” வீட்டை விட்டு துரத்திவிட்டு ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு அவளை படாத பாடு படுத்தும் அவனை தூக்கிப் போட்டு விட முடியும்...ஆனால் பாபு? அவனுக்காக பொறுத்துக் கொண்டிருக்கிறாள். பாபுவுக்கு நாலு வயது தான். இவர்களின் சண்டையை அவனால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? ஆனால் ஏதோ சரியில்லை என்று மட்டும் அவன் சின்ன மனசுக்குப் புரிந்தது.

“அம்மா...என்னை விட்டுப் போகாதேமா. பயமா இருக்கு. அப்பா சிடு சிடுன்னு இருக்கார். எரிஞ்சி எரிஞ்சி விழறார்.”

சித்ரா கண்ணில் நீர் சேகரமாகும். ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் மகனை அனைத்துக் கொள்வாள்.

“எல்லாம் சரியாயிடும் செல்லம். கொஞ்சம் பொறுத்துக்கோ.”



மார்க்கெட் வரை நடந்து வந்தாகி விட்டது. காய்கறி வாங்கிப் போய் விடலாம். இந்த வாரம் காய்கறிக்கு என்று அவளிடம் இரண்டு நூறு ரூபாக்களை கொடுத்திருந்தான். காசை எண்ணி எண்ணி பரர்த்து தான் வாங்குவாள். அவனுக்கு பீன்ஸ், காலிப்ளவர், காரட் தான் பிடிக்கும். விலை கூடுதலான காய்கறி வாங்க வேண்டும், ஆனால் செலவு ஆகக் கூடாது.

“ஒரு பொம்பளைக்கு காய் வாங்க தெரிய வேண்டாம்? அவ்வளவு ரூபாயையும் செலவு பண்ணிட்டியே? குடித்தனம் பண்ணத் தெரியலை. படித்திருந்தும் ஒரு வேலை பார்க்கத் துப்பில்லை. இந்த லட்சணத்தில் உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் உன்னை ஒதுக்கி வைத்தது தான் பெரிய குத்தம்னு சண்டைக்கு வராங்க.”

அவள் இந்த வசவு கேட்டு சிரித்தாள். அவன் கடுமையாகப் பார்த்தான்.

“எதுக்கு சிரிக்குறே? சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்...நான் சிரித்துக் கொண்டே அழுறேன்னு தத்துவ ஞானி ஆயிட்டியா?”

“நான் எதுக்கு அழணும்? நீங்க தான் அழணும். போனாப் போகுதுன்னு உங்களுக்கு சேவகம் செய்றேன். ஒரு அனாதைக்கு மனசு இரங்க மாட்டோமா? அப்படித்தான் நினச்சிட்டு செய்றேன். நான் ஒரு நாள் வராவிட்டால் வயத்த காயப் போட்டுக்கிட்டு ஒடுவீங்க. இதிலே திமிர் வேற! எங்கப்பா அம்மாவா உங்க கிட்டே சண்டைக்கு வந்தாங்க? நீங்க தான் அவங்க கிட்டே சண்டை போட்டு உங்க பொண்ணை வீட்டை விட்டு போகச் சொல்லுங்க எனக்குப் பிடிக்கலை, அப்படின்னு தையத் தக்கான்னு ஆடினீங்க. அவங்க என்ன சொல்வாங்க? ஆமாடாப்பா நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மை அவளை துரத்தி விடுன்னு சொல்வாங்களா? தாலி கட்டி மூணு வருஷம் குடித்தனம் பண்ணிட்டு இப்ப போய் பிடிக்கலன்னா என்ன அர்த்தம்னு கேக்கமாட்டங்களா?”

“உனக்கு வாய் ரொம்ப அதிகமாகிடுச்சு. எல்லாம் நான் கொடுக்கிற இடம். நீ என்ன எனக்கு சமைச்சு போடவா வரே? உன் மகனைப் பார்க்க வரே. பெரிய தியாகி மாதிரி பேசறதிலே ஒன்னும் குறைச்சல் இல்லை.”

“நான் தியாகியா இல்லையான்னு இப்ப பட்டிமன்றம் நடத்த வேண்டாம்

என் மகனை என்கிட்டே விட்டிடுங்க நான் போயிடறேன். நீங்க யாரை வேணா கல்யாணம் கட்டிக்கிட்டு புள்ளையை பெத்துக்கோங்க இல்லை பிள்ளையை பெத்துக்கிட்டு கல்யாணம் கட்டிக்கோங்க. எனக்கென்ன?”

இப்படித்தான் அவர்கள் உரையாடல் இப்பொழுதெல்லாம் நிகழ்கிறது.



பிஞ்சு கத்தரிக்காயை பொறுக்கி எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் பேரம் பேசி அறை கிலோ வாங்கினாள் சித்ரா. பிஞ்சு புடலங்கை பிரெஷ் ஆக இருந்தது. அவனுக்கு புடலங்காய் கறி என்றால் ரொம்பப் பிடிக்கும். இப்படி பார்த்து பார்த்து காய்கறிகள் வாங்கிக் கொண்டு சித்ரா கட்டைப் பையை சுமந்து கொண்டு நடந்தாள். அட...தேங்காய் வாங்க மறந்துவிட்டதே! தேங்காய் என்னமோ தங்கம் விலை விக்கிறது. ஒரு சின்ன தேங்காய் முப்பத்து ரூபாய். கையில் நாப்பது ரூபாய் மீதம் இருந்தது. ஒரு தேங்காயும் எலுமிச்சம் பழமும் வாங்கியதும் பணமெல்லாம் காலி. கத்தப் போகிறான். இங்கே வந்து காய் வாங்கினால் தானே தெரியும் அவள் எவ்வளவு பிரம்ம பிரயத்தனப் பட்டு காய் வாங்குகிறாள் என்று!. அவனுக்கு ஒன்றும் தெரியாது. குடித்தனம் நடத்திய மூன்று வருடமும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேப்பர் வாசிப்பது ஒன்று தான் அவனுக்கு தெரிந்த ஒரே வேலை. வலது கையில் சுடச் சுட காப்பி. இடது கையில் பேப்பர்.



“ஏன் அக்கா இப்படி நாப்பது வருஷம் முந்திய மனைவி மாதிரி நடந்துக்கிறே? தினம் தினம் போய் சமைச்சு போடறியே உனக்கு வெக்கமா இல்லை? மானம் இல்லை? ரோஷம் இல்லை? நானா இருந்தா அவனை தலை மூழ்கிட்டு வந்திருப்பேன்.” தங்கை சுஜிதா காட்டமாகக் கேட்பாள். இளம் வயது துள்ளுகிறாள். அவளுக்கு என்ன தெரியும் இவள் கவலை? பாபு இல்லாவிட்டால் அவள் எப்பொழுதோ சரிதான் போடா என்று சொல்லியிருப்பாள். பொதி சுமக்கும் கழுதை மாதிரி திட்டுக்களை சுமக்க யாரால் முடியும்?

“தூக்கிப் போட ரொம்ப நேரம் ஆகாது சுஜி. பாபு பத்தி யோசித்துப் பார்க்க வேண்டாமா? நான் அங்கு போறதே குழந்தைக்காகத் தான். சரி போறது போறோம் அவருக்கு உணவு தயாரித்து...”

“உன்னையெல்லாம் திருத்த முடியாது அக்கா. அவராம் அவர்...அவனுக்கு அந்த தகுதி ஏது?” அவளும் பெண்ணியம் பேசியவள் தான். நடை முறைக்கு சாத்தியமா? அவசரப்பட வேண்டாமே. ஒரு வருஷம் டைம் இருக்கு. அதுக்குள் இவர் புத்தி மாறாதா என்ற நப்பாசை தான் அவளை வழி நடத்திச் செல்கிறது.

“என்னை நீ திருத்த வேண்டாம் சுஜி. உனக்கு ஒரே ஒரு அட்வைஸ் பண்றேன். நல்ல படித்து கை நிறைய சம்பாதிக்கிற வழியைப் பார். நானும் நாலு காசு சம்பாதிச்சிருந்தா நானே வக்கீலைப் பார்த்து விவாகரத்து வாங்கிட்டு என் மகனோடு போயிருப்பேன்.”

“படிச்சாலும் படிக்காட்டியும் துணிச்சல் வேணும் அக்கா. உனக்கு அடிமையா இருக்கறதிலே அவமானம் தெரியலை.”

“ஒ கே. இது என் வாழ்க்கை. எனக்கு எது சரின்னு படுதோ அதைத் தான் நான் செய்ய முடியும். இப்ப நான் பொருளாதார ரீதியா பலகீனமா இருக்கறதாலே தானே ஏறி மிதிக்கிறாங்க. கோர்டுக்குப் போனால் நீ மகனை வளர்க்க முடியாது. நல்ல கல்வி கொடுக்க முடியாது. அதனாலே பிள்ளை அப்பாகிட்டே தான் இருக்கணும்னு சொல்லிட்டா? அப்புறம் அவர் என் மகனை பார்க்கவிடாம பண்ணிடுவார். அதான் பொறுமையா இருக்கேன். மேலும் உனக்கு கூடிய சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பாங்க. அக்கா டிவோர்சின்னு தெரிஞ்சா உன்னை பெண் கேட்டு வர தயங்குவாங்க. நாலையும் யோசிக்கணும் சுஜி.”



காய்கறி பையுடன் வீட்டுக்கு வந்தாள் சித்ரா. நன்றாக விடிந்திருந்தது. வீட்டை திறந்து கொண்டு உள்ளே போனாள். பாபு அவள் வருவதை கதவு திறக்கும் சத்தம் கேட்டு புரிந்து கொண்டு “அம்மா...இங்கே சீக்கிரம் வா...” என்றான். அவன் குரலில் பதற்றம் இருந்தது. அழுகையும் கலந்திருந்தது. என்னாச்சு? குழந்தைக்கு ஜுரமா?

“என்னாடா கண்ணா?” பதறிப் போய் அவள் அவன் படுத்திருந்த அறைக்குள் போனாள். அவன் முகம் சிவ்வென்றிருந்தது. படுக்கையில் அவன் காலைக் கடன்களை முடித்திருந்தான். அவன் முகம் வாடி

வெட்கம் வந்து சுண்டி இருந்தது. பயத்துடன் பார்த்தான்..

“ச்சோ...பரவாயில்லை...கண்ணாவுக்கு உடம்பு சரியில்லையா?”

பாபு பேந்த பேந்த விழித்தான். அவள் சகலத்தையும் மாற்றி அவனுக்கு ஹீட்டர் போட்டு வெண்ணியில் குளிக்க பண்ணி உட்கார வைத்தாள்.

“இரு கண்ணா...அம்மா உனக்கு ஹார்லிக்ஸ் கலந்து தரேன்.?” அடுப்படிக்கு ஓடினாள். பத்தே நிமிஷத்தில் சூடான இதமான பானத்துடன் வந்தாள். பாபு ஆவலோடு குடித்தான். அப்புறம் தான் அவனுக்கு தெம்பு வந்தது. “அம்மா..நான் உன் கூடவே வரேன்மா. இங்கே இருக்கப் பிடிக்கலை.” அம்மா மடியில் முகம் புதைத்தான். அவன் கண்ணீரை அவள் பார்த்துவிடக் கூடாது என்று மறைத்தான். விஷயம் இது தான். அவனுக்கு பாத்ரூம் போகணும். இருட்டாக இருந்தது. லைட் போட எழுந்து கொள்ள பயம். அப்பாவை கூப்பிட்டான். “எதுக்குடா கத்தி ஆர்ப்பாட்டம் பண்றே? உன் அம்மாக்காரி வாக்கிங் போயிருக்கா. வந்ததும் அவ கிட்டே உன் பிரலாபத்தை வச்சுக்கோ. என்னை தூங்க விடு.” பாபுவால் எவ்வளவு நேரம் தான் தாக்கு பிடிக்க முடியும்? படுக்கையிலேயே அவன் போனது அவனுக்கே அவமானமாக இருந்தது. மூன்று வயதில் தோன்றாத அவமானம் நாலு வயதில் வந்தது வியப்பில்லை தான். தட்டு தடுமாறி அவன் சித்ராவிடம் விஷயத்தை சொன்னபோது அவள் உள்ளம் கொதித்தது. ஏதேதோ காரணம் சொல்லி அவள் இந்த பந்தத்துக்குள் இருந்து கொண்டிருக்கிறாள். அவனாகப் பார்த்து “சரி உன் பிள்ளையை நீ வைத்துக் கொள்” என்று சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அது இன்று வரை நடக்கவில்லை. ஒரு வருஷம் ஓடிவிட்டது. இன்று அவனிடம் பேசிவிட வேண்டியது தான். மகனை பார்த்துக் கொள்ள முடியாதவனுக்கு எதுக்கு பிள்ளை? அவன் எழுந்து வருவதற்கு காத்திருந்தாள். அதற்குள் பிள்ளையின் ஆடைகள் உடமைகள் எல்லாவற்றையும் சூட்கேசில் அடுக்கினாள். அவனிடம் நாக்கை பிடுங்கிக் கொள்கிற மாதிரி சொல்லிவிட்டு பிள்ளையை கூட்டிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான். மணி ஏழைத் தாண்டியது. அவன் இன்னமும் எழுந்து கொள்ள வில்லை. இவ்வளவு நேரமா தூங்கறான்? குட்டிப் போட்ட பூனை மாதிரி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுள் எழுந்த கோபத் தீ அடங்குவதாக இல்லை. சுஜி சொன்னது உண்மை தான். உன்னை திருத்த முடியாது என்றாளே....திருந்திவிட்டேன் சுஜி. எனக்கு புத்தி வந்துவிட்டது. மகன் என்ற பாசமில்லாதவருக்கு பிள்ளை எதுக்கு?

பொங்கி எழுந்துவிட்டாள் சித்ரா. மெல்ல அவன் படுத்திருந்த அறையை

திறந்து பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. ஜன்னல் திரை சீலைகள் இருட்டை ஏற்படுத்தியிருந்தது. லைட்டை போட்டாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது. கட்டிலில் ராகவன் கத்தி குத்துப்பட்டு கிடந்தான். நிறைய ரத்தம் உறைந்து போயிருந்தது. உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. அருகே போவதற்கும் அவளுக்கு பயமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களிடையே நடந்துகொண்டிருக்கும் சண்டை எல்லோருக்கும் தெரியும். அவளைத் தானே சந்தேகப்படுவார்கள். அப்புறம் அவள் மகனின் கதி? சந்தேகத்தின் பெயரில் இவளை போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப் போய்விட்டால்? முதலில் ராகவனை காப்பாற்றவேண்டும். ஆம்புலன்சுக்கு போன் செய்தாள்.



மனதை திடப்படுத்திக் கொண்டு அவள் போலீசுக்கும் போன் செய்தாள். அறை மணிக்குள் அந்த வளாகம் பரபரப்படைந்தது. போலிஸ் வண்டி,. தொப்பி போட்ட காக்கி சட்டைகள், தெரு ஜனங்கள் என்று எல்லோரும் குழுமிவிட்டார்கள். அம்புலன்ஸ் வந்தது. ராகவனை ஸ்ட்ரேச்சரில் எடுத்து போட்டுக் கொண்டது. அவளும் கூட போவதாக சொன்னாள். இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தடுத்துவிட்டான்.

“அம்மா...உங்களை விசாரணை பண்ணனும்.” பாபு அம்மாவை ஒட்டி நின்று கொண்டான். அவன் பிஞ்சு உடல் நடுங்கியது. நிறைய கேள்வி கேட்டார்கள். அவள் பதிலில் அவர்களுக்கு திருப்தி இல்லை. என்னவோ மறைக்கிறாள் என்று அவர்கள் நினைப்பதை இவள் ஸூசகமாக புரிந்து கொண்டாள். என்ன இது புது சோதனை என்று அவள் நொந்து கொண்டிருந்த சமயம் அவளின் மாமியார் புயல் போல் உள்ளே வந்தாள்.

“இன்ஸ்பெக்டர் இவளை அரெஸ்ட் பண்ணுங்க. இவள் தான் என் மகனை குத்தியிருக்கணும். ‘ஐயோ...பாதகத்தி என் மகனை கொல்ல பார்த்தியே? அவன் குத்துயிரும் குலையுயிருமாக இருக்கானே. பிழைப்பானோ மாட்டானோ.” அவள் ஒப்பாரி கண்டு சித்ரா பயந்து போனாள். அவள் உடல் வெட வெடவென்று நடுங்கியது.



கப்பல் மிதக்கும்
 
Last edited by a moderator:

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்---2 காகித கப்பல்கள்.





ஒரு அழகான சித்திரை மாதத்தின் நிறைந்த பௌர்ணமி நாளில் தான் சித்ராவுக்கு கல்யாணம் ஆயிற்று. ராகவன் மாலையும் கழுத்துமாக நின்றபோது அசல் ராமனே எதிரே வந்து விட்டது போல் உணர்ந்தாள் சித்ரா. கருப்பு தான். ஆனால் அவ்வளவு லட்சனமான முகம்! அவன் சிரிக்கும் போது மனசின் பரிசுத்தங்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்த மாதிரி பூரிப்பு தெரிந்தது.. அவள் நெற்றியில் அவன் பொட்டு வைத்த போது அந்தக் கைகளை அவள் கண்ணில் ஒற்றிக் கொள்ள நினைத்தாள். சில பேரை பார்த்தவுடன் ஒரு பாதுகாப்பு உணர்வு வரும். அன்று அவளுக்கு அப்படி வந்தது. இவனுடன் கைகோர்த்துக் கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவள் நிம்மதி அடைந்தாள். தங்கை சுஜியிடம் கிசுகிசுத்தாள்.



“ஏண்டி..உனக்கு அத்தானை பிடிச்சிருக்கா?’

“எனக்கு எதுக்கு பிடிக்கணும்.? உனக்கு பிடிச்சா சரி. கொஞ்சம் கருங்குரங்கு மாதிரி இருக்கார்...” என்று சிரித்தாள். பதிமூணு வயசு பெண்ணுக்கு எல்லாம் கிண்டல் தான். இருபத்திமூணு வயசு அக்காவுக்கு பதிமூணு வயசு தங்கை இருந்தால் சரிப்பட்டு வராது. சித்ராவுக்கு தோழிகள் அவ்வளவு நெருக்கம் இல்லை. மனசு விட்டுப் பேச யாருமில்லை. எனவே அவள் எப்பொழுதும் ஒரு டைரி வைத்திருப்பாள். சந்தோஷமோ துக்கமோ அதில் பதிவு பண்ணிவிடுவாள். அவளிடம் ஐந்து டைரிகள் இருந்தன. எல்லோரும் மாப்பிள்ளையை பார்த்துக் கொண்டிருக்கும் போது இவள் தன் அறைக்குள் சேலை மாற்ற வந்தவள் எழுதினாள். பேனாவின் மை அவளுக்கு மட்டும் பொன் எழுத்துக்களை பொரித்துவிட்டது. மனசின் வெளிச்சம் பொன்னாய் வடிவெடுத்திருந்தது.



“எனக்கு கல்யாணம். மாப்பிள்ளை ராகவன். அந்த ராமனை ராகவன்னு சொல்வாங்க. எனக்கு அந்த ராமன் தான் கணவனா வந்திருக்கிற மாதிரி இருக்கு. அப்படியொரு சாந்தம். நான் கொடுத்து வைத்தவள்.”

அவளின் கல்யாண வாழ்க்கையின் முதல் வரிகள் இவை தான். பளிச்சென்று நிலா மேகம் விட்டு வந்தது போல் அவள் மனம் பயம் விட்டு வந்திருந்ததைத் தான் அந்த வரிகள் காட்டியது.



ஒரு வருஷம் வரை அவள் டைரி ராகவனின் புகழ் பாடியது. யாராவது படித்திருந்தால் ஒரு காதல் காவியத்தையே எழுதியிருப்பார்கள்.



“இன்று சினிமா போனோம். “நயன்ட்டி சிக்ஸ்”. அப்படியே சொக்கிப் போனார்கள் மற்றவர்கள். ஒரு குரூப்பா தான் போனோம். அதில் எனக்கு வருத்தம் தான். இட்ஸ் ஒ.கே. அருகருகே தானே உட்கார்ந்திருந்தோம். அவர் கையில் என் கை. என் வளையல்களை நெருடுவதும். இருட்டில் கையை உதட்டருகே சென்று முத்தம் கொடுப்பதும்...புதிய நயன்ட்டி சிக்ஸ் எங்களுக்குள் நடந்தது. நான் இந்த நாளை பத்திரப்படுத்தி வச்சுப்பேன். என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே...சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்..”

வீட்டுக்கு வந்ததும் சித்ரா அவனிடம் கேட்டாள்.

“பிடிச்சிருந்ததா?’

“எது?’

“சினிமா தான்.”

“ப்பூ...அது சினிமா. அதை விட நம் காதல் உசத்தி. உன் பாத கொலுசு நீ அசைந்த போதெல்லாம் சத்தமிட்டதே. அந்த சங்கீதத்தை விடவா அந்தக் கதாநாயகன் நாயகியை ரசித்திருக்க முடியும்?’

பூபாள நாட்கள். பூத்து பூத்து செறிவுடன் மனத்திரையில் சிந்தியது. எவ்வளவு விளையாட்டு பேச்சு. பசும் பொன் கொஞ்சல்கள். சொர்க்கம் என்பது எங்கேயும் இல்லை—இதோ இங்கே தான் என்று மன்மதனே ஜன்னல் வழியே வந்து எட்டிப் பார்த்து சென்ட் பெர்சென்ட் மார்க் போட்டு விட்டுப் போனான்.



முதல் கர்ப்பம். முழு அர்த்தம் கொன்ட தாம்பத்தியத்தின் விளைவு. அழகிய கலையான காதல் தந்த பரிசு. காதல் ஒரு கலை தான்.

“அசையாத....அசையாத ...உன்னை வரையப் போறேன்.”

அவளுக்கு சிரிப்பு வந்தது. “நீங்க கவிஞனும் இல்லை. ஓவியனும் இல்லை. என்னை வரைய உங்களால் முடியாது. கவிதை எழுதவும் முடியாது.....சும்மா அலட்டாதீங்க...”

“அப்படியா சொல்றே? உன்னை வரஞ்சிட்டா?”

“நான் ஒரு பரிசு தரேன்...தாஜ் மகால் போலாம். நிலவொளியில் பார்க்கலாம். என் காசு போடுவேன். ஒ.கே யா? என் காசு எப்படின்னு பாக்றீங்களா? அது நீங்க வரஞ்ச பிறகு சொல்றேன்”

அவன் வரைந்தான். அவள் பார்த்தாள். விழுந்து விழுந்து சிரித்தாள். அது ஒரு குழந்தையின் கிறுக்கல் போல் இருந்தது.



“என்ன செய்யறது சித்ரா? சித்திரம் போல் இருக்கிற உன்னை வரைய எனக்கு ஆசைதான். என் விரல்களுக்கு உன் காதல் உருவத்தை சிறை பிடிக்கத் தெரியவில்லை. கவிதை எழுதலாம்னா ஆகா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்னு இரவல் கவிதை தான் வருது.”



“உங்கள் கைகளுக்கு திறன் இல்லை. உங்க மூளைக்கு கவிதை புனையும் வகை தெரியலை. ஆனா உங்களாலே என்னை வரைய முடியும்?”



“எப்படி? புதிர் போடறயே?”



“உங்க கண்களால் முடியுமே. வாலி எழுதியிருக்காரே

‘நீ வரைந்த ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே

நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே...’



“அட...ஆமாம். கண்ணை விட சிறந்த பென்சில் இருக்க முடியுமா?’

இருவரும் ரோஜா மாலையும் அதை சுற்றிய சரிகையும் போல் வாழ்ந்தார்களே! அதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது. நம்பவே முடியவில்லை. இப்படி கூட நடக்குமா? மென்மையான ரோஜா மலர் போன்ற மனம் ரோஜா முள் போல் இப்போது குத்துகிறது.



சித்ரா குழந்தை பற்றிய சுகமான கனவுகளில் இருந்தாள். தெருவில் ஒரு குழந்தையை பார்த்தாலும் என் குழந்தை இதை போல் இருக்குமா? இத விட அழகாக இருக்குமா? என்று அவள் மனம் கணக்கு போட்டது. ஆஸ்பத்திரியில் செக்-அப் செய்யும் போதெல்லாம் ஆஸ்பத்திரி சுவரில் பார்ப்பாள். ஒரு அழகான குழந்தை உதடுகளில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டிருக்கும். சைலென்ஸ் என்று அந்தப் படத்தின் அடியில் எழுதியிருக்கும். ராகவனும் கூடவே வருவான். டாக்டர் சொல்லும் அறிவுரைகளை கேட்டுக் கொள்வான். வீட்டில் வந்து அதை கடைபிடிப்பான்.



“சித்ரா...டானிக் சாப்பிட்டியா? பழம் சாப்பிட்டியா? கால்சியம் மாத்திரை எடுத்துக்கோ. நல்ல சாப்பிடு.” அவன் அதிகப்படியான கவனிப்பு சந்தோஷமாக இருந்தாலும் சில நேரம் எரிச்சலைத் தரும். எரிந்து விழுவாள்.



“பரவாயில்லை எரிந்து விழு தாங்கிக்கிறேன். இப்ப நீ ஒருத்தி இல்லை இரண்டு ஆள். உனக்கு நான் விசிறட்டுமா?” கரண்ட் நின்று போயிருந்தது. அவள் நெற்றியில் வேர்வை முத்துக்கள். அவனால் பொறுத்துக்க முடியவில்லை. விசிறியை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். அவன் மடியில் படுத்து உறங்கிவிட்டாள். அவள் தூக்கம் கலைந்து விடும் என்று அவன் அசையக் கூட இல்லை. நடு இரவில் அவள் விழித்த போது அவன் இன்னமும் விசிறிக் கொண்டு உட்கார்ந்து இருந்ததைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள்.



“என்னங்க இது. இன்நேரம் கரண்ட் வந்திருக்கும்.” போட்டுப் பாருங்க. உண்மை தான். மின்விசிறி போட்டவுடன் ஓடியது.



“சமர்த்து போங்க. மணி இப்ப இரண்டு. நடு இரவு. நான் எழுந்து கொள்ளாவிட்டால் இப்படித்தான் விசிறிக்கிட்டு தூங்காம இருப்பீங்களா? நல்ல கூத்து. பேசாம் படுங்க. இனிமே இப்படியெல்லாம் பண்ணினா எனக்கு கெட்ட கோவம் வரும். என்னை எழுப்ப வேண்டியது தானே?”



அவள் கடிந்து கொண்டாள். அவன் கால் நீட்டி படுத்தான்.

“உனக்கு இப்படி செய்யறதிலே ஒரு சுகம் இருக்கு சித்ரா. பெருமையா இருக்கு. குழந்தை பிறந்ததும் நான் அதுக்கிட்டே சொல்வேன்.”



“என்ன சொல்வீங்க?”



“நீ வயதிலே இருக்கும் போது உன் அம்மாவுக்கு விசிறி விட்டேன். ஊட்டிவிட்டேன். வாக்கிங் கூட்டிட்டுப் போனேன்....அப்புறம்...”



“அப்புறம் சப்பரம். பேசாம தூங்குங்க. கர்ணன் மடியில் பரசுராமர் தூங்கினாராம். குருவை டிச்டர்ப் பண்ணக் கூடாதுன்னு கர்ணன் அப்படியே இருந்தானாம். ஒரு வண்டு வந்து தொடையில் துளச்சுதாம். அப்ப கூட அசையாம இருந்தானாம். ரத்தம் வழிய, பரசுராமர் விழிச்சாராம். அவனை பாராட்டவில்லயாம். நீ பொய் சொல்லிட்டே. நீ ஒரு சத்ரியன்னு வெறுத்து ஒதுக்கினாராம். ஆனா நான் உங்களை பாராட்டுவேன். மனைவி தான் எல்லாம் செய்யனும்னு ஒரு தம்ளர் தண்ணி கூட எடுத்து குடிக்காத கணவர்கள் இருக்க, நீங்க இப்படி மனைவியை கவனிச்சது பெரிய காரியம். ஐ லவ் யூ டா...”



கொஞ்சலும் கெஞ்சலும் கலந்த காவிய வாழ்க்கை யாருக்கு கிடைக்கும்? மாசம் ஆக ஆக தலை பிரசவம் என்பதால் மனசுக்குள் பயந்தாள் சித்ரா. குழந்தை நல்லபடியாகப் பிறக்க வேண்டுமே...யாரும் இல்லாதபோது வலி எடுத்துவிட்டால்? ஆஸ்பத்திரி போவதற்குள் பிறந்துவிட்டால்? டாக்டர் வர தாமதமாகிவிட்டால்? கொடி சுத்தி பிறந்து

விட்டால்?---என்னென்னவோ பயங்கள். இதை அவனிடம் சொல்லி அவனை பயமுறுத்த அவள் விரும்பவில்லை.



“ஏன் அப்பப்ப ஒரு மாதிரி இருக்கே? டாக்டர் கிட்டே போலாமா?”



“அதெல்லாம் வேண்டாம். வளைகாப்பு முடிந்ததும் அம்மா வீட்டுக்குப் போய்விடுவேன். நீங்க எப்படி தனியா இருப்பீங்ன்னு கவலைப் பட்டேன். வேறு ஒன்னும் இல்லை.”



“கவலைப் படாதே. நான் எங்கம்மா வீட்டுக்குப் போயிடுவேன். என்னைப் பற்றி நினச்சு உடம்பை கெடுத்துக்காதே.”



“நல்ல வேளை என் அம்மா வீடும் உங்க அம்மா வீடும் ஒரே ஊரில் இருக்கு. நினச்சா வந்து போய் இருக்கலாம்.”



அவள் அப்படி சொன்னதை அவனும் ஆமோதித்தான். அதுவே பின்னால் மிகப் பெரிய விபரீதங்களில் போய் முடிந்தது . .



ராகவனின் அம்மா பவானி தன் மூத்த மகன் சந்துருவுடன் இருந்தாள். அவளுக்கும் சந்ருவின் மனைவி கவிதாவுக்கும் ரொம்ப நெருக்கும். கவிதா பாவானியின் தம்பி மகள். எனவே பாசம் அதிகம். கவிதா நல்ல பெண்தான். ஆனால் அளந்து அளந்து பேசுவாள். சித்ராவிடம் அவள் அன்பாக பேசினாள். வரவேற்றாள். உபசரித்தாள். ஆனால் தள்ளியே வைத்தாள். நெருங்க விடவில்லை. அவளுக்கு இரண்டு குழந்தைகள். எட்டாவதும் ஆறாவதும் படிக்கும் இரண்டு மகள்கள். பவானிக்கு அந்த பிள்ளைகள் என்றால் உயிர். பேத்திகளை தரையில் நடக்க விட மாட்டாள். சித்ராவிடம் அவள் மருமகளாக வந்தவுடனே சொல்லிவிட்டாள். “சித்ரா ....ஆம்பளைப் புள்ளை தான் பெக்கணும். என் மூத்த மகன் இரண்டோட நிப்பாட்டிட்டான். இரண்டும் பெண்ணாப் போச்சு. நீ தான் பையனைப் பெக்கணும். சரியா?”



அவளுக்கு சிரிப்பு வந்தது. பையன் வேண்டும் என்றால் உடனே கிடைத்துவிடுமா என்ன? யாருக்கு என்ன என்று இறைவன் எழுதி வச்சிருப்பான். அது படிதானே நடக்கும். சரி சரி என்று அப்பொழுது தலை ஆட்டி வைத்தாள். நாள் நெருங்க நெருங்க பெண்ணாக பிறந்துவிட்டால் மாமியார் என்ன செய்வார் என்ற பயமும் சேர்ந்து கொண்டது.



“எதுவான என்ன நம்ம பிள்ளை நமக்கு உசத்தி...அது ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன? நல்ல ஆரோக்கியமாக கை காலுடன் பிறந்தால் சரி. ஆண்டவனே எனக்கு பிறக்கும் குழந்தை நல்லபடியாக பிறக்கனுமே.” என்று வேண்டிக் கொண்டாள்.



வளைகாப்பு விசேஷம் மாமியார் வீட்டில் நடந்தது. உறவினர்கள் பலரும் கூடி இருந்தார்கள். அவளின் அம்மா வேதம் மசக்கை பலகாரம் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். தங்கை உற்சாகமாக இருந்தாள். அக்காவை கேலி பண்ணிக் கொண்டே இருந்தாள். வளைகாப்பு புடவை அணிந்து கொண்டு வந்து மனையில் உட்கார்ந்தாள் சித்ரா.



“என் கண்ணே பட்டிடும் போல இருக்கு சித்ரா. சூல் அழகுன்னு சொல்வாங்க. அந்த அழகு உனக்கு அதிகமா இருக்கு.” அப்பாவுக்கு மகிழ்ச்சி. பேரனோ பேத்தியோ எதுவானாலும் சரி என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் வாயெல்லாம் பல்.



“அதென்ன அப்படி சொல்லிட்டீங்க. பேரன் தான் பிறக்கணும். பேத்தி பிறந்தா அதை தொடவே மாட்டேன். ஆமா பார்த்துக்கோங்க.” என்றாள் பவானி. மாமியார் என்ன இப்படி சொல்றாங்களே என்று சிறிது கவலையுடன் அம்மாவை பார்த்தாள். அம்மா அவளை அனைத்துக் கொண்டாள். ஆறுதலாக இருந்தது.


“சும்மா கேலிக்கு சொல்றாங்க. பிறந்தா தூக்கி கொஞ்சாமலா போயிடுவாங்க. நீ என்ன எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கிறே.”



“அதுக்கில்லேம்மா...நான் குழந்தை உண்டான நாளிலிருந்து இதையே சொல்லிட்டு இருக்காங்க.”



“விடு...இப்படி சொன்னவங்களை நான் நிறைய பார்த்திட்டேன். அப்புறம் அவங்க தான் பேத்தியை எடுத்து கொஞ்சிக்கிட்டு கீழே விடவே மாட்டாங்க...நீ வேணா பார்..”



“அய்யோ..அப்ப எனக்கு பொண்ணு தான் முடிவு பண்ணிட்டியா?”



“அசடு...ஒரு பேச்சுக்கு சொன்னேன். உனக்கு பையன் தான்.”

ராகவன் அவளிடம் சொல்லியிருந்தான்.



“சித்ரா மனசை போட்டு உழப்பிக்காதே. அம்மா இப்படித்தான் ஏடா கூடமா சொல்வாங்க. ஒன்னும் கவலைப்படவேண்டாம். அப்படியே பொண்ணு பிறந்தா என்ன? நான் அதை தங்கமா பார்த்துப்பேன். தலைப்பிள்ளை பொண்ணா இருந்தா அதிர்ஷ்டமாம்.”



சித்ரா கொஞ்சம் சமாதானம் ஆனாள். கை நிறைய வளையல்கள் அடுக்கியதும் சித்ராவுக்கு அழகு இன்னும் கூடியது. எல்லோரும் விழா முடிந்து அன்றிரவு நிறைந்த மனதுடன் படுத்துக் கொண்டார்கள். மறுநாள் அவளை பிறந்த வீட்டுக்கு கூட்டிப் போக தயார் படுத்திக் கொண்டார்கள். சித்ராவின் அம்மா மட்டும் தங்கி விட அவள் அப்பாவும் தங்கையும் கிளம்பிப் போய்விட்டார்கள்.

நடு இரவு இடுப்பை சுற்றி வலிக்க சித்ரா விழித்துக் கொண்டாள். என்ன வலி இது? பிரசவ வலியா? அய்யோ அதுக்குள்ளேவா? இது ஏழாம் மாசம் தானே!. உடம்பெல்லாம் வியர்க்க..வலி பிடுங்க சித்ரா அம்மா என்று கத்தினாள். ராகவன் வளைகாப்பு முடிந்த கையோடு அலுவலக வேலையாக பெங்களூர் பயணமானான். மனைவியிடம்

“மூன்றே நாளில் வந்துவிடுவேன். நீ அம்மா வீட்டுக்குத் தானே போறே. பயப்படாம போ. சரியா.? நல்லா சாப்பிடனும். மாத்திரைகளை எடுதுக்கணும் டானிக் சாப்பிடனும்...” என்று அறிவுரித்துவிட்டுதான் போனான்.

சித்ரா கத்திய கத்தலில் வீடே விழித்துக் கொண்டது.



கப்பல் மிதக்கும்.
 

sankariappan

Moderator
Staff member
காகிதக் கப்பால்கள்.



அத்தியாயம்—3



நடு நிசி. அனைவரும் ஆழ்ந்து தூங்கும் நேரம். இருட்டை கிழித்துக் கொண்டு சித்ரா கத்தியதும் ஏதோ திருடன் தான் வந்துவிட்டான் என்று பதைத்துப் போனார்கள். ராகவனின் தந்தை குணசேகர் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார். பவானி தன் ஸ்தூல சரீரம் குலுங்க மாடி ஏறி வந்தாள். வேதம் ஒரு நொடியில் புரிந்து கொண்டாள். இது சித்ராவுக்கு இந்த நேரம் வரக் கூடாத வலி. மகளுக்கு என்னாச்சோ என்று மனம் படக் படக்கென்று அடித்துக் கொண்டது அவளுக்கு. ‘சித்ரா சித்ரா..” என்று அனைவரும் அவள் அறையில் குழுமிவிட்டார்கள். வேதம் மகளின் தோள் அணைத்து பிடித்துக் கொண்டு “என்னம்மா செய்யுது?” என்று கேட்டாள்.



“அய்யோ அம்மா...இடுப்பு வலிக்குதம்மா...” அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. வேதம் உடனே சமையலறைக்குப் போய் பார்லி நீர் கலந்து சூடாக கொண்டு வந்தாள். ‘சூட்டு வலியாக இருக்கும்..’ என்று சொன்னாள். வலி நிற்கவில்லை. அப்ப இது பிரசவ வலிதான் போலும்...குறை பிரசவம் ஆகப்போகிறதா? வேதம் உடம்பு பயத்தால் நடுங்கியது. சித்ரா ‘அம்மா தாங்க முடியலையே’ என்று அரற்றினாள்.



“இந்த சமயம் ராகவன் கூட இல்லை. அவன் இருக்கும் போதே வலிக்கிறதுன்னு சொல்லியிருந்தா அவன் உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போவான். இப்ப கையும் ஓடலை காலும் ஓடலை.”



பவானி முட்டாள்தனமாக உளறியதை கேட்டு குணசேகரன் மனைவியை அதட்டினார்.



“எந்த சமயத்திலே என்ன பேசணும்னு உனக்கு விவஸ்தையே இல்லை. நான் காரை எடுக்கிறேன். மருமகளை மெல்ல கூட்டி வாங்க.” என்று அவர் சொன்னதும் தான் வேதத்துக்கு உயிர் வந்தது. கைத்தாங்கலா வேதம் மகளை அழைத்துக் கொண்டு வந்தாள். காரில் சித்ராவை ஏறச் சொல்லிவிட்டு தானும் ஏறிக் கொண்டாள். கூடவே பவானியும் ஏறிக் கொண்டாள். கார் வேகமாக போனது. இரவு என்பதால் போக்கு வரத்து அதிகமில்லை. சித்ரா பல்லை கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அம்மாவின் கையை பிடித்துக் கொண்டே இருந்தாள். உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்தது. எப்ப ஆஸ்பத்திரி வரும் என்று தோன்ற வதங்கி வதங்கி தன்னிலை மறந்தாள். வாந்தி வரும் போல் இருந்தது. தலை சுற்றியது. கை கால் துணி போல் ஆயிற்று. பிரசவ வலி என்பது இவ்வளவு கஷ்டமானதா? அய்யோ அப்பா இனி குழந்தையே வேண்டாம் என்று முணுமுணுத்தது அவள் மனம். பல்லை கடித்ததில் உதடு கிழிந்து ரத்தம் வந்தது.



ஒரு வழியாக ஆஸ்பத்திரி வந்தது. கிடு கிடுவென்று அவளை பிரசவ வார்டுக்கு எடுத்துச் சென்றார்கள்.



“டாக்டர் இது பிரசவ வலியா? ஏழு மாசம் தான் ஆகுது. எப்படியாவது வலியை நிப்பாட்டமுடியுமா? குழந்தை இப்ப வர முடியாம பண்ண முடியுமா?” என்று வேதம் கேட்டதுக்கு டாக்டர் பதிலேதும் சொல்லவில்லை. ‘அவங்களுக்கு என்ன பிரச்சனை என்று டெஸ்ட் எல்லாம் பண்ண பிறகு தான் தெரியும்’. இரண்டு மணி நேரம் கடந்த பின் டாக்டர் சொன்னார்



“குறை பிரசவம் ஆகிவிட்டது. பெண் குழந்தை. மருத்துவ ரீதியா எவ்வளவோ முயற்சி செய்து, குறை பிரசவம் ஆகாம இருக்க ட்ரை பண்ணினோம். ஆனா...முடியலை.”





“டாக்டர்...குழந்தை எப்படி இருக்கு? இன்குபேட்டரில் வைத்து காப்பாற்ற முடியுமா? எப்படியாவது குழந்தையை காப்பாத்துங்க டாக்டர்.”



“கடவுளை பிரார்த்திப்போம். குழந்தை அழவில்லை. ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி இருக்கோம். ஐ வில் டூ மை பெஸ்ட்.”



டாக்டர் சொல்லிவிட்டுப் போய்விட்டார். வேதம் கண் நிறைய கண்ணீருடன் தவித்தாள். இரவு நேரம் கணவனை பயமுறுத்த வேண்டாம் என்று கணவன் கோமதினாதனுக்கு அவள் இன்னும் போன் செய்யவில்லை.



“பெண் குழந்தை தானா? இதுக்கு தானா இந்த ஆர்ப்பாட்டம்.? செத்தாலும் ஒன்னும் தோஷமில்லை. தப்பா நினைக்காதீங்க. ஒரு பேச்சுக்கு சொன்னேன்.”



இந்த நேரத்தில் பவானி இப்படி சொல்வாள் என்று வேதம் நினைக்கவேயில்லை. மூத்த மகனுக்கு இரண்டும் பெண் குழந்தையாகப் பிறந்த போதும், கொண்டாடிய பவானி இப்பொழுது மட்டும் இப்படி சொல்வதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அப்படியென்ன மூத்த பையன் மகள்கள் உசத்தி இளைய மகனின் மகள்

மட்டும் செத்தாலும் தோஷமில்லை என்று சொல்வது? நாக்கில் சூடு போட்டால் தேவலை என்று வேதத்துக்கு தோன்றியது.



“அப்படி சொல்லாதீங்க சம்பந்தி. எல்லாம் உயிர் தானே? உங்க இளைய மகனின் மகள் மட்டும் பொம்மையா என்ன? பிழைச்சு நல்ல படியா இருக்கணும்னு வேண்டுங்க.” என்றாள் கண்ணீரின் ஊடே.



“என்ன பேசறோம்னு புரிந்து தான் பேசறயா? உனக்கு பெண் குழந்தைகள் வேண்டாம் என்கறதுக்காக இப்படியா சொல்வே?. வெக்கமா இருக்கு உன் போக்கு. பெரிய மனுஷி இப்படியா பேசுவே.? தள்ளிப் போ அங்கிட்டு. வந்திட்டா ஆஸ்பத்திரிக்கு. நீங்க எங்களை மன்னிக்கணும் தங்கச்சி. அவ ஒரு உளறு வாய். குழந்தை நல்லபடியா இருக்கும். கடவுள் கைவிட மாட்டார்.” ஆறுதலாகப் பேசிய குணசேகரனை கை எடுத்துக் கும்பிட்டாள் வேதம்.



குழந்தை ஐ;சி.யூவில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. அவர்கள் தூர நின்று பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. குழந்தை தலை நிறைய முடியுடன் சின்னதாக இருந்தது. ஒன்றரை கிலோ இருந்ததாக நர்ஸ் ஹேமா சொன்னாள். எதுவும் சொல்வதற்கில்லை போகப் போக தான் தெரியும் என்று சொன்னாள். வேதம் மட்டும் தங்கிவிட ராகவனின் அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு போனார்கள்.



“நான் குளித்து முழுகி டிபன் செய்து என் மூத்த மகனிடம் கொடுத்துவிடறேன்.” என்று திரு வாய் மலர்ந்தருளினாள் பவானி.



“அதெல்லாம் வேண்டாம். இங்கே தான் காண்டீன் இருக்கே.” என்றாள் வேதம்.



“இல்லில்லே....அனுப்பிடறேன். பிறகு மதியம் சமைத்து கொண்டு வரேன். சித்திராவுக்கு பத்திய சாப்பாடு சமைக்கிறேன்.”



பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் ரகம் என்று வேதம் முணுமுணுத்துக் கொண்டாள். அவர்கள் போனதே நிம்மதியாக இருந்தது. சித்ரா மதியம் மூணு மணிக்குத் தான் கண்விழித்தாள்.



“அம்மா என்ன குழந்தைம்மா?” அவள் கண்களில் பயமும் ஆர்வமும் போட்டி போட்டது. உயிருடன் இருக்கா என்று கேட்க பயமாக இருந்தது.



“நீ ரெஸ்ட் எடு சித்ரா. எல்லாம் சரியா இருக்கு. பயப்பட வேண்டாம்னு டாக்டர் சொல்லியிருக்கா. சாப்பிடறயா? உனக்கு உன் மாமியார் பத்திய சாப்பாடு சமைச்சு கொண்டு வந்திருக்கா.”



“அம்மா...என்னை சோதிக்காதே. எனக்கு ஆவி இல்லை உன்னோடு போராட. சொல்லு என்ன குழந்தை? அது உயிரோடு இருக்கா.?”



“பெண் குழந்தைம்மா. உயிரோட இருக்கு. இன்குபேட்டரில் வச்சிருக்காங்க. பலகீனமா இருக்கா. நாங்க பார்த்தோம். ரொம்ப அழகா இருக்குடி. பிழைச்சுக்கும்னு சொல்றா டாக்டர்.”



இந்த தகவல் கேட்டு அவள் முகம் பூரித்தது. அம்மாவின் கையை இறுக பற்றிக் கொண்டாள்



“அது போதும்மா. அவருக்கு போன் பண்ணி சொல்லியாச்சா?”



“இல்லேம்மா. இப்ப சொல்ல வேண்டாம்னு உன் மாமியார் சொல்றா. மாப்பிள்ளையை பயமுறுத்த வேண்டாமாம். என்ன செய்யறதுன்னு தெரியலை.”



சித்ரா போனை எடுத்தாள் கணவனுக்கு போன் செய்தாள்.



“ஹலோ...நான் மீடிங்கில் இருக்கேன் சித்ரா. அப்புறம் கால் பண்றேன்.”

சொல்லிவிட்டு அவன் லைனை கட் செய்துவிட்டான்.



“மெசேஜ் பண்ணவா அம்மா?”



“வேண்டாம்மா. நேரில் பேசறது ஒ.கே. மெசேஜ் அனுப்பிச்சா ஏழு மாசத்திலேயே பிறந்திடுச்சான்னு கவலைப் படுவார். அவர் கால் பண்ணும் போது விவரமா சொல்லு. அப்ப தான் அவருக்கு நிம்மதியா இருக்கும். சரி நீ சாப்பிடு.”



பத்திய மிளகு குழம்பை போட்டு பிசைந்து புடலங்கா கூட்டு சேர்த்து கொடுத்தாள் வேதம். குழந்தை உயிரோடு இருக்கிறாள் என்று கேட்டதும் தெம்படைந்த சித்ரா ஆவலுடன் சாப்பிட்டாள். மாலை அப்பா கோமதிநாதனும் தங்கை சுஜியும் வந்து பார்த்தார்கள். குழந்தையை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.



“அம்மா நீ தான் பார்த்தியே எப்படிம்மா இருக்கா பாப்பா?” என்று நச்சரித்துவிட்டாள் சுஜி. நொந்து போன வேதம் சலித்துக் கொண்டாள்.



“பெத்தவளே சும்மா இருக்கா. நீ என்ன இந்த வரத்து வரே? நாளை பார்க்க விடுவார்கள். பள்ளி முடிந்ததும் அப்பாவோடு வந்து பார்.”



பேசிக் கொண்டிருந்துவிட்டு சித்ராவுக்கு தைரியம் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள். மாலை டிபன் கொடுத்து விட்டிருந்தாள் பவானி. சந்துரு வந்து கொடுத்தான். சிறிது நேரம் பேசிவிட்டு போனான். கவிதா பிள்ளைகளுடன் நாளை வருவதாக சொல்லிவிட்டுச் சென்றான். இரவு டாக்டருக்குத் தெரியாமல் இஞ்சிச் சாறு கொடுத்தாள் வேதம். வாயிக்கு வந்தபடி பேசினாலும் பவானி நேர நேரத்துக்கு பத்திய சாப்பாடு கொடுப்பதில் தவறவில்லை. வேதத்துக்கு அவள் மேல் இருந்த கோபம் கொஞ்சம் குறைந்தது. இரவு நர்ஸ் வந்து பி.பி சுகர் டெம்ப்ரச்சர் செக் பண்ணிவிட்டுப் போனாள்.



இரவு ஆஸ்பத்திரியில் இருப்பது பெரிய சாவால் தான் வேதத்துக்கு. நிசப்தமான இரவு ஒரு விதமான விதிர் விதிர்ப்பை ஏற்படுத்தியது.



முகம் வேர்த்து தூக்கம் வர மறுத்தது. சித்ரா பாத் ரூம் போக அவள் உதவியை நாடலாம். அப்ப அவள் பாட்டுக்கு தூங்கிக் கொண்டிருந்தால்

சரிப்படுமா? அந்த இரவு அவளுக்கு விசித்திரமாக இருந்தது. ஒரு போர்வையை விரித்து சில புடைவைகளை தலைக்கு வைத்து படுத்தாள் வேதம். சித்ராவுக்கும் தூக்கம் வரவில்லை. குழந்தை எப்படி இருப்பாள்? கடவுளே குழந்தை பிழைத்து விடவேண்டும். எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி வருமோ? குழந்தையுடன் போவாளா இல்லை.....நினைக்கும் போதே நடுங்கியது. கண்ணீர் துளிகள் கர கரவென்று தலையணையை நனைத்தது. என்ன சோதனை இறைவா? எதுக்கு எனக்கு குறை பிரசவம் ஆச்சு? செக்கப்புக்கு வரும்போதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று தானே சொன்னார்கள். யாரையும் குறை சொல்ல முடியாது. திடீர் என்று திசை மாறும் கேசுகளுக்கு யாரை பொறுப்பாக்க முடியும்? டாக்டர் ருக்மணி தேவி ரொம்ப நல்ல மாதிரி. அவளே இதை எதிர்பார்த்திருக்க மாட்டாள். சித்ரா ஏதேதோ எண்ணியபடி சுமார் பதினோரு மணிக்கு கண் அயர்ந்தாள்.



குழந்தை இன்னும் ஐ.சி.யூ விட்டு வரவில்லை. பத்து நாட்கள் ஆகிவிட்டது. சித்ராவுக்கு பால் ஊற ஆரம்பித்தவுடன் டாக்டர் அதை பீச்சி கொடுக்கச் சொன்னாள். அதை எடுத்துக் கொண்டு போய் வேதம் நர்ஸிடம் கொடுப்பாள். நர்ஸ் அதை குழந்தைக்கு கொடுத்து வருவாள். ரத்தம் ஊறி குழந்தை கொஞ்சம் சுறுசுறுப்பாக இருப்பதாக சொன்னாள் ஹேமா நர்ஸ்.



“நானெல்லாம் உள்ளே போக முடியாது அம்மா. பாலை கொடுத்துவிட்டு வந்திடுவேன். அதுக்குன்னு நர்ஸ் விஜயா இருக்காங்க. இன்பெக்க்ஷன் ஆகிவிடும்னு யாரையும் உள்ளே விடறதில்லை. விஜயா அக்கா குழந்தை நல்லா இருக்குன்னு சொன்னாங்க.”



ஹேமா நர்ஸின் இந்த வார்த்தைகள் தான் சித்ராவுக்கும் வேதத்துக்கும் அரும் மருந்தாக இருந்தது. பால் பீச்சி பீச்சி சித்ராவின் மார்பகங்கள் வலி கண்டது. இருந்தாலும் குழந்தைக்காக அவள் பொறுத்துக் கொண்டாள். தாய்ப் பால் குடிக்க குடிக்க குழந்தை குழவி சேர்ந்து ஆரோக்கியமா ஆயிடும்னு அவர்களுக்கு சந்தோசம். வேதம் பார்த்துவிட்டு வந்தாள். மகளிடம் சொன்னாள்.



“சித்ரா...பாப்பா ரொம்ப அழகா இருக்கா. இப்ப விரும்பி பால் குடிக்றாளாம். எனக்கு போன உயிர் திரும்ப வந்தா மாதிரி இருக்கு.”



குழந்தைக்காக சித்ராவும் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி வந்தது.

பாப்பாவைப் பற்றி தினமும் நல்ல செய்தி வர ஆரம்பித்ததும் சித்ரா தெம்பு அடைந்தாள். அவள் நடக்க முடிகிற நிலைக்கு வந்ததும் அவள் குழந்தையை தூர நின்று பார்த்தாள். பரவசமானாள். ராகவன் வேலை முடித்து வந்திருந்தான். அவனுக்கு குழந்தை ஏழு மாதத்தில் பிறந்தது வருத்தம் தான். டாக்டர் ரத்னாவிடம் சொன்னான்.



“டாக்டர் என் மகளை காப்பாத்துங்க. எவ்வவளவு செலவானாலும் பரவாயில்லை. எப்படியாவது காப்பாத்துங்க.”



“குழந்தை இம்ப்ருவ் ஆகிட்டே வரா. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க கவலைப் படாதீங்க மிஸ்டர் ராகவன்.” என்று டாக்டர் சொன்னதும் ராகவனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.



“சித்ரா...நான் குழந்தையை தூர இருந்து பார்த்தேன். அவ்வளவு அழகா இருக்கா. டாக்டர் பயமில்லைன்னு சொல்லிட்டாங்க. சித்ரா தாங்க்யூ.”



“எதுக்கு தாங்க்ஸ்?”



“இப்படி ஒரு அழகான பெண்ணை பெத்துக் கொடுத்ததுக்கு. என்னை அப்பவாக்கியதுக்கு. உனக்கு ஒரு பரிசு வாங்கி வந்திருக்கேன்.”



“நீங்க கொடுத்த பரிசு தான் நம்ம குழந்தை. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நீங்களே எனக்கு கிபிட் தான்.”

அவன் சந்தோசத்துடன அவள் நெற்றியில் முத்தமிட்டான்.



“இத பாருங்க...உங்க கிட்டே ஒண்ணு சொல்லணும்.”



“சொல்லு. நீ எப்ப வீட்டுக்கு வருவேன்னு இருக்கு. அம்மா வீட்டிலே இருக்கறது கஷ்டமா இருக்கு. எப்ப வரே சொல்லு?”



“அம்மா வீட்டிலே இருக்கறது கஷ்டமா இருக்கா? உங்க அம்மா வீடு தானே? உங்கம்மகூட இருக்க ஒரு சந்தர்ப்பம் வந்ததுக்கு நீங்க சந்தோஷப்படணும். ஆனா ஒண்ணு. அவங்க பெண் குழந்தைன்னு தெரிஞ்சதும் அது செத்தாக் கூட பரவாயில்லைன்னு சொன்னாங்க. ரொம்ப வருத்தமா இருந்தது...”



“தெரியும். அப்பா சொன்னார். சில சமயம் அம்மா இப்படித்தான் உளறுவாங்க. சங்கடமா இருக்கு. நீ பீல் பண்ணாதே சித்ரா.”



“எனக்கு என்ன பயம் தெரியுமா? அவங்க கூட இருக்கீங்க. அவங்க உங்க மனசை பாய்சன் பண்ணிடுவாங்களோன்னு தோணுது. ப்ளீஸ் நீங்க தனியாவே நம்ம வீட்டிலே இருங்க. குழந்தையை அவங்க எப்ப கொடுக்றாங்கன்னு தெரியலை. எனக்கு உடம்பு சரியாயிடுச்சு. நானும் வந்திடறேன். காலையில் சமையல் டிபன் எல்லாம் பண்ணி வச்சிட்டு ஆஸ்பத்திரி வந்து குழந்தைக்கு பால் கொடுக்க போயிடறேன். சாயங்காலம் வரேன். சரிதானே?”

“ஒ. எஸ். எனக்கு சம்மதம் தான்.”

சித்ராவுக்கு நிம்மதியாக இருந்தது. அவள் நிம்மதி நீடிக்கவில்லை. பவானி பண்ணிய அழிச்சாட்டியும் கண்டு சித்ரா நிம்மதி போனது.



கப்பால் மிதக்கும்
 

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்—4



சித்ரா ஓரளவு மனம் தேறி வந்து கொண்டிருந்தாள். குழந்தை பிழைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அது அவளுக்கு எல்லையில்லா சந்தோஷத்தையும் தெம்பையும் கொடுத்தது. இந்த நேரத்தில் இப்படியொரு சிக்கல் வரும் என்று சித்ரா எதிர்பார்க்கவில்லை. சித்ராவின் பெற்றோர் பிரசவ செலவுக்கு என்று நிறைய செலவழித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தை இன்குபேட்டரில் இருப்பதால் அதை ஒட்டி நெறைய செலவு ஆகிக் கொண்டிருந்தது. எனவே சித்ரா கணவனிடம்



“அம்மா அப்பா நிறைய செலவு பண்ணிவிட்டார்கள். இனி நாம் தான் குழந்தைக்கான செலவை ஏத்துக்கணும்.” என்று சொல்லியிருந்தாள். ராகவனும் ஒப்புக் கொண்டிருந்தான். அவன் அதை தெரியாமல் அம்மாவிடம் உளறிக் கொட்டிவிட்டான். பவானி கட் அண்ட் ரைட்டாக சொன்னாள்.



“அதெல்லாம் நீ எதுக்கு செலவை ஏத்துக்கணும்? முடியாது என்று சொல்லிவிடு. முதல் பிரசவ செலவு அவர்களுடையது தான். இளிச்ச வாயா இருக்காதே.” என்று போதித்தாள். அம்மாவிடம் சொல்லியிருக்க வேண்டாமோ என்று ராகவன் தலையில் அடித்துக் கொண்டான்.



“அம்மா இது என் குழந்தை அம்மா. அவங்க ஓரளவு பார்த்திக்கிட்டாங்க. குழந்தை வீடு வர, நார்மல் ஆக இன்னும் நாளாகும் போலிருக்கு. எவ்வளவு தான் அவங்க செலவு செய்வாங்க?”



“செய்யணும். அதுக்குத் தானே பெற்றோர். எனக்கு ஒரு மகள் இருந்தால் இப்படி சூழ்நிலை வந்தால் நான் ஒன்றும் மாப்பிள்ளையிடம் பிச்சை கேட்டு நிக்க மாட்டேன். இதில் கணக்கு பார்த்தால் எப்படி?’ இன்னும் ஏதேதோ சொன்னாள் பவானி. சரிம்மா என்று சொல்லிவிட்டு ராகவன் அம்மாவுக்குத் தெரியாமல் அலுவலகத்தில் லோன் போட்டு பணம் பெற்று செலவழித்துக் கொண்டிருந்தான். குழந்தை தேறிக் கொண்டு வந்தது. இன்னும் ஒரு வாரம் இருந்தால் போதும் என்ற நிலைமை வந்தது. அப்பாடா என்று சித்ராவும் ராகவனும் இன்ப பெருமூச்சு விட்டனர். அதற்குள் ஒரு பெரிய சோதனை வந்தது. குழந்தைக்கு நிமோனியா கண்டது. மீண்டும் ஐ.சி.யூ வில் அட்மிட் ஆனாள் குழந்தை. பத்து நாள் போராட்டத்துக்குப் பின் குழந்தை இறந்து போனது.



அதிர்ச்சியில் உறைந்து போனாள் சித்ரா. கடவுளே நம்பிக்கை கொடுப்பது போல் கொடுத்து இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியே என்று திட்டினாள் சித்ரா. சோகம்...அழுகை...கவலை ஏக்கம் என்று அவள் பட்ட அவஸ்த்தை போதாதென்று அவள் அம்மா வேதா உளறிய உண்மை மேலும் சிக்கலை உருவாகிற்று.



“மாப்பிள்ளை இவ்வளவு செலவு செய்தும் அதுக்கு பலன் இல்லாமல் போச்சே..” என்று அழுதாள். அவ்வளவு தான் பிடித்துக் கொண்டாள் பவானி. அவள் போட்ட அதட்டலில் ராகவன் உண்மையை ஒப்புக் கொண்டான். குழந்தையை குழியில் இறக்கிவிட்டு வந்த துக்கம் கூட ஆறவில்லை பவானி அவனை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டாள்.



“நான் அப்பவே சொன்னேன். இந்த பொட்டப் புள்ள வேண்டாமுன்னு. அப்பவே செத்து தொலைஞ்சிருந்தா இவ்வளவு தண்ட செலவு ஆகியிருக்குமா? என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது ராகவா நீ செலவழிச்ச காசை அவங்க திருப்பி தந்தாகணும்.”



சித்ராவுக்கு பொறுக்கவில்லை. மாமியாரை பார்த்துக் கேட்டுவிட்டாள்.



“நீங்க எல்லாம் ஒரு பெரிய மனுஷியா? இப்படி பேசறீங்க. அது உங்க வீட்டு வாரிசு. அதுக்கு முழு பொறுப்பும் உங்களோடது தான். என் அம்மா அப்பா அளவுக்கு மீறி செலவழிச்சிட்டாங்க. அப்பாவா உங்க மகன் செலவு செய்தது ஞயாயம் தான். நான் எங்க அப்பா அம்மாவிடம் அந்த பணத்தை திருப்பி கொடுங்க என்று கேக்கமாட்டேன். வேணா நீங்களே கேட்டு வாங்கிக் கோங்க.” என்று திடமாக சொல்லிவிட்டாள்.



பவானி வாயடைத்துப் போய்விட்டாள். சம்மந்திகளிடம் அவளுக்கு தானே போய் கேட்க விருப்பமில்லை. அவர்கள் விஷயத்தை பரப்பினால் அவள் மானம் போய்விடும். மருமகள் பயந்து போய் கேட்டு வாங்கித் தருவாள் என்று பார்த்தால் இப்படி தைரியமாக எதிர்க்கிறாளே! எவ்வளவு துணிச்சல்?



“சரி உன் இஷ்டம். கொடுக்காதே. என் பிள்ளையே நான் சொல்வதன் நியாயம் புரியாமல் இருக்கும் போது நீ என்ன செய்வே ஆடத்தான் செய்வே.” என்று முடித்துக் கொண்டாள். அதோடு பிரச்சனை முடிந்தது என்று நினைத்தாள் சித்ரா. ஆனால் அதுக்குப் பின் தான் எல்லாம் ஆரம்பமாயிற்று.



பாராமுகம் காட்டுதல். ஒதுக்கி வைத்தல். சபையில் குத்திக் காட்டி மறைமுகமாக சீண்டுதல் என்று பவானி புதிய சண்டை முறைகளை கையாண்டாள். சித்ராவுக்கு ஒர்படி கவிதாவின் சப்போர்ட் இல்லை. சந்துரு அவளை புழு போல் பார்த்தான். அவர்கள் மகளின் ஐந்தாவது பிறந்த நாளுக்கு சந்துரு மட்டும் வந்து அழைத்துவிட்டுப் போனான். கவிதா வரவில்லை. சந்துருவும் வந்துடுடா என்று தம்பியை அழைத்தான். சித்ராவை அழைக்கவில்லை. சித்ரா வரமாட்டேன் என்று சொன்னாள்.



“இத பார் சித்ரா. கடமைக்கு போய் வந்திடுவோம். நீ இல்லாம அங்க போக எனக்கு விருப்பமில்லை. அம்மா ஏதாவது ஓதிகிட்டே இருப்பா. தலைவலியா இருக்கும். ப்ளீஸ் வா சித்ரா. “ கணவனுக்காக சென்றாள். ஏன் சென்றோம் என்று ஆகிவிட்டது. பவானியின் புறக்கணிப்பு தாங்க முடியவில்லை. நிறைய விருந்தினர்கள் குழுமி இருக்கும் போது கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு அவளை அவமானப் படுத்தினாள் பவானி.



“இங்கே வாயேன்..இந்த ஜமுக்காளத்தை விரிக்க ஹெல்ப் பண்ணு.” என்று பவானி சித்ரா பக்கம் பார்த்து சொல்ல சித்ரா அப்பாடா மாமியார் பேசிவிட்டாள் என்று களிப்புடன் ஓட. பவானி மூக்கறுத்தாள்.



“நீ பிள்ளையை பறிகொடுத்திட்டு இருக்கே. நீ என் பேத்தி சமந்தப்பட்ட எதுவும் செய்ய வேண்டாம். காமினியை கூப்பிட்டேன்.”



பந்தி பரிமாறலாம் என்று சித்ரா புடவையை வரிந்து கட்டிக் கொண்டு சாம்பார் பாத்திரத்தை எடுத்து பரிமாறிய போது கவிதா வந்து பிடுங்கிக் கொண்டாள்.



“சித்ரா பிள்ளை பெத்த உடம்பு. நீ ரெஸ்ட் எடு. நான் பார்த்துக்கறேன்.” என்று அன்புடன் சொன்னாள். அது அன்பில்லை ஏளனம் என்று சித்ராவுக்குப் புரிந்தது. ராகவனுக்கும் இதே ட்ரீட்மென்ட் தான்.



“பழம் தீர்ந்து போச்சு. டேய் யாரையாவது விட்டு முக்கு கடை

யிலே வாங்கி வரச் சொல்லுடா.” என்று பவானி மூத்த மகன் சந்ருவிடம் சொன்ன போது ராகவன் “நான் வாங்கிட்டு வரேன்மா.” என்றான்.



“நீயே போடா சந்துரு. அவனை யார் கூப்பிட்டது.?” என்று விட்டாள். சித்தப்பா சித்தப்பா என்று அவன் காலை சுற்றி வந்த குழந்தைகள் ஆர்த்தி, ஸ்வேதா கூட அவனை அலட்சிய படுத்தின. வீட்டுக்கு வந்த பின் ராகவன் முகம் இறுகி இருந்தது. அவனால் அம்மாவின் இந்த தடாலடி நடவடிக்கைகளை தாங்க முடியவில்லை. அவன் அண்ணனும் இப்படி ஜால்ரா போடறானே!



“விடுங்க...இதுக்கு போய் அலட்டிக்கலாமா? அவங்க குணம் தான் தெருஞ்சுப் போச்சே.” என்று பாரமான தன் மனதை தேற்றிக் கொண்டு சொன்னாள் சித்ரா. ராகவன் சொன்ன பதில் அவளை நிலை குலைய வைத்தது. அவன் ஏமாற்றத்தை அவள் மேல் காட்டினான்.



“எல்லாம் உன்னால் வந்த வினை. எல்லோரும் தான் பிள்ளைய பெக்றாங்க. உன்னை மாதிரியா? பொம்பளைப் புள்ளை. அதுவும் குறை பிரசவம். நீ மட்டும் எல்லோரையும் போல் பெத்திருந்தா இந்த கஷ்டம் பாராமுகம் வந்திருக்குமா? எல்லாம் என் தலை எழுத்து...” விக்கித்து நின்றாள் சித்ரா. காதல் கணவன் இப்படியா சொல்வான்? அவளுக்கு வலித்தது. மோகமும் காதலும் மூணு வருஷம் தானா”



“நானா மாட்டேன்னு சொன்னேன்.? எதுக்கு என் மேல் பழிய போடறீங்க? உங்கம்மா அடிச்ச கூத்துக்கு அவங்களை நாலு வார்த்தை கேக்க துப்பில்லை. என் மேல் குறை சொல்றீங்க.”



அவ்வளவு தான். ராகவன் ருத்ர மூர்த்தி ஆகிவிட்டான்.

“நான் ஒரு முட்டாள். உன் மேல் பயித்தியமா இருந்தேன் பார்.”



அவர்களிடையே மூண்ட பெரிய சண்டை இது. சித்ரா முதலில் அதை அவ்வளவாக பொருட்படுத்தவில்லை. நாலு நாளானால் சரியாகிவிடும் என்று நினைத்தாள். ஆனால் அது சரியாகவில்லை. அவனால் அவன் வீட்டவரின் புறக்கணிப்பை பொறுத்துக் கொள்ள முடியலை. ஒரு வேளை குழந்தை இறக்காமல் இருந்திருந்தால் அவன் இந்தளவு பாதிக்கப்பட்டிருக்கமாட்டான். இழப்பும் அலட்சியமும் சேர்ந்து அவனை சோர்வடையச் செய்தது. அதை சித்ராவிடம் காட்டினான். சித்ரா ஏற்கனவே குழந்தையை பறிகொடுத்துவிட்டு மனம் ஒடிந்து இருக்கிறாள். கணவனின் சுடுசொல் அவளை மேலும் கீறி காயப்படுத்தியது. துன்பம் வரும் போது சொந்தங்கள் ஆறுதலாக இல்லாவிட்டாலும் குத்தி கிழிக்காமல் இருந்தாலே போதுமானது. வீழ்ந்து கிடக்கிறவர்களை அடிக்கத் தானே சந்தர்ப்பம் பார்கிறார்கள்.



ஒரே வீட்டில் இரண்டு துருவங்கள் போல் சித்ராவும் ராகவனும் வாழ்ந்து கொண்டிருப்பது இதுவே முதல் முறை. சித்ரா நிலாக் காலங்களை நினைத்துப் பார்த்தாள். எவ்வளவு இனிமையான நாட்கள்! யார் கண் பட்டுதோ? பெண் தான் தன்னை தேற்றிக் கொண்டு குடும்பத்தை காக்க முன்வருவாள். சித்ராவும் அதைத் தான் செய்தாள்.



“சாப்பிட வாங்க உங்களுக்கு பிடிச்ச கருவேப்பிலை குழம்பு செஞ்சிருக்கேன்.” என்று அன்புடன் அழைத்தாள்.



“அதான் கருவேப்பிலை மாதிரி தூக்கி எரிஞ்சிட்டாங்களே. நீ வேறு குத்திக் காட்டிறியா?” சித்ரா பிறகு மௌனம் காத்தாள்.



“இன்னிக்கு கண்ணன் பிறந்த நாள். கிருஷ்ண ஜெயந்தி. பாருங்க நம் வீட்டுக்கு கிருஷ்ணன் வரணும். அதான் குழந்தை கண்ணனின் பாதங்களை கோல மாவில் போட்டிருக்கேன். நல்லாயிருக்கு இல்லே.”



“நல்லாயில்லை. குழந்தை தங்காமல் ஓடிவிட்டதே எப்படி வரும்? உனக்கு வேறு வேலை இல்லை. அதேயே ஞாபகப்படுத்தறே.”



“சரி ஸாரி. கோவிலுக்குப் போலாமா?”



“வேண்டாம்...” என்று அலறினான்.



“ஏன்? கோவிலுக்குப் போனால் மனசு கொஞ்சம் ஆறுதல் அடையும்.”



“எனக்கு எங்கும் போக வேண்டாம். காலையில் அம்மா போன் பண்ணி சொன்னாங்க.....மனசு வெறுத்திடுச்சு.”
“என்ன சொன்னாங்க...உங்க நொம்மா...”



“கிண்டலா பண்றே? கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட முடியாதபடி ஆயிடுச்சே. பிள்ளை மட்டும் குறை பிரசவத்தில் பிறந்து சாகாட்டி உன்னையும் சித்ராவைவும் விசேஷத்துக்கு அழச்சிருப்பேன். எல்லாம் உன் பொண்டாட்டியின் ஆஜாக்கிரதையால் வந்த வினை அப்படின்னு குத்தி காட்டறாங்க. எனக்கு அப்படியே செத்துப் போலாம் போல் இருந்துச்சு. நீ இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருந்தா இப்படி ஆகியிருக்குமா? உனக்கு சுய புத்தியும் இல்லை சொல் புத்தியும்...”



“போதும் நிறுத்துங்க. ஏதோ நான் வேணும்னே குறை பிரசவத்தில் பிள்ளை பெத்தா மாதிரி உங்கம்மா பேசினா நீங்க அதை கிளிப் பிள்ளை மாதிரி சொல்வீங்களா? பொம்பளப் புள்ள செத்தா என்னன்னு கேட்டவங்க தானே அவங்க. நீங்க வராட்டி இருங்க நான் கோவிலுக்குப் போறேன்.”



சித்ரா மனதில் கண்ணீர் வழிய தனியே கோவிலுக்குப் போனாள். மனசுக்கு ஆறுதலாக இருந்தது. நாலு பேரை பார்த்து பேசி கலகலத்த பின், அவள் லேசான ஆறுதல் பெற்றாள். விபூதியும் குங்குமமும் பெற்றுக் கொண்டு அவள் வீடு வந்தாள். அவன் நெற்றியில் விபூதியை பூச வந்தாள். அவன் தடுத்துவிட்டான்.



“கோவில் அர்ச்சனை விபூதி. வேண்டாமுன்னு சொல்லாதீங்க. நமக்கும் நல்ல காலம் பிறக்கும். இந்தாங்க பெருமாள் கோவில் புளியோதரை. நான் சாப்பிட்டேன். நல்லாயிருக்கு. பெருமாள் கோவில் புளி சாதாமே ஒரு ஸ்பெஷல் தான். பிரசாதம் தான் சாப்பிடுங்க.”



அவன் அதை ஓங்கி தள்ளினான். பிரசாதம் தரை எங்கும் சிதறியது. சித்ரா எதுவும் பேசாமல் சுத்தம் பண்ண ஆரம்பித்தாள்.



“ஏய்...உனக்கு கொஞ்சம் கூட கஷ்டமா இல்லை? ஜாலியா புளி சாதம் பத்தி அளந்து விடறே. குழந்தை பறிபோனது உனக்கு மகிழ்ச்சி தான்.”



“ஆமா. எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அதுக்குத் தான் பத்து மாதம் சுமந்து..”



“ஏழு மாசம்னு சொல்லு. வேண்டா வெறுப்பா பிள்ளை உண்டாகி ஏழு மாசத்திலே பெத்து போட்டே. இதுக்கு நீ ஆரம்பித்திலேயே கலைச்சு

போட்டிருக்கலாம். அம்மா சொன்னது சரிதான் உனக்கு பொறுமை இல்லை. ஆசையும் இல்லை. இருந்திருந்தால் திருப்பரங்குன்றம் கிரி வலம் வந்திருப்பியா? அதான் ஓவர் ஸ்ட்ரைன் பண்ணி புள்ளையை கொன்னிட்டே.” சித்ராவுக்கு அழுகை அழுகையாக வந்தது.



“கிரி வலம் போலாம் அப்ப தான் ஆண் குழந்தை முருகன் மாதிரி பிறக்கும்” என்று இவன் தான் இழுத்துக் கொண்டு போனான். இப்ப அவள் மேல் பழி போடறான். குறை பிரசவம் ஆனதுக்கு அதெல்லாம் காரணமில்லை என்று டாக்டர் சொன்னது அவன் காதில் விழுந்தால் தானே?. அம்மா சொல்வது தான் அவன் காதில் இப்ப ஏறுது.



இரண்டு ரோபோ போல் அவர்கள் நடமாடி வந்த போது ஒரு நாள் ராகவன் தயங்கி தயங்கி அவளிடம் பேச வந்தது அவளுக்குப் புரிந்தது.



“சொல்லுங்க...என்ன விஷயம்? குட்டி போட்ட பூனை மாதிரி அங்கும் இங்கும் நடக்றீங்க? மனசு விட்டு சொல்லுங்க.”



“அது வந்து...நீ கோவிச்சுக்கக் கூடாது?” அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். என் கோபத்தை நீ ரொம்ப பொருட்படுத்தப் போறயாக்கும்? வெளியே சொன்னால் சண்டை வளரும்.



“கோபிச்சுக்க மாட்டேன் சொல்லுங்க. நீங்க தன்மையா பேசறதே பெரிய விஷயம்.” அவன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்.



“சித்ரா...குழிப் பிள்ளை மடியிலேன்னு சொல்வாங்க. குழந்தை இறந்த தூக்கம் போணும்னா. நாம இன்னொரு குழந்தை உடனே பெத்துக்கணும். அப்ப தான் என் மனசு ஒரு நிலைக்கு வரும்னு அம்மா சொல்றாங்க.”



பேஷ்...குழந்தை என்னவோ கடையிலே கிடைக்கிறே மாதிரி. உடனே பெத்துக்கணுமாம். நான் என்ன மிஷினா? என் உடம்பு அதுக்கு இன்னும் தயாராகலைன்னு சொன்னா அவனுக்கு எங்கே புரியப் போறது?



“என்ன? பேசாம இருக்கே. உனக்கு இஷ்டமில்லையா? தெரியும்...உனக்கு குழந்தை பெத்துக்கற ஐடியாவே இல்லைன்னு நினைக்றேன்.”



“இல்லைன்னு சொன்னா என்ன பண்ணப் போறீங்க?” என்று அவன் என்னதான் அது பத்தி சொல்கிறான் என்று தெரிந்து கொள்வதற்காக கேட்டாள். விளையாட்டாகத் தான் கேட்டாள்.



“அம்மா வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்வாங்க. புரியுதா?”

அவள் இதை எதிர்பார்க்கவில்லை. ஸ்தமித்து நின்றாள். அன்று தான் அவள் புரிந்து கொண்டாள் அவனும் அவளும் அருகருகே இருந்தாலும் அவர்கள் மனம் வெகு தூரத்தில் இருக்கிறது என்று. அம்மா எனும் கோடாரியினால் வந்த பிளவா? இல்லை இவனுகுள்ளேயே ஏற்பட்ட மாற்றமா? இரு துருவம் போல் ஆகிவிட்டார்கள்.



கப்பல் மிதக்கும்.
 

sankariappan

Moderator
Staff member
காகிதக் கப்பல்கள்

அத்தியாயம்—5



கனிவு என்பது ஒரு சின்ன வார்த்தை தான். ஆனால் அதை மனசில் வைத்து செயல் பட பலருக்கும் நேரமில்லை. கடினமான வழிகளில் சோதிக்கிறார்கள். வெராண்டாவில் பாயும் சூரிய ஒளி போல் பளிச்சென்று தன் எண்ணங்களை சொன்னால் தீர்வு வரும். மூடு மந்திரமாக பனி மூட்டமாக, மலை போன்ற துவேஷத்தை மனதில் மூடி மறைத்து குடும்பத்துள் ஆட்டம் ஆடினால்---பிளவு தான் வரும். சித்ராவுக்கு வந்த அதிர்ச்சி இமைய மலை அளவுக்கு பெரிதாக இருந்தது. எப்படி இதை சரி பண்ணுவது என்று தெரியவில்லை.



“நிஜமாத்தான் சொல்றீங்களா? ப்ரெக்னன்சியை கட்டாயப் படுத்த முடியுமா? ஒரு இழப்புக்கு பின் மனம் அதுக்கு தயாராக வேண்டாமா? உடம்பு தேற வேண்டாமா? மீண்டும் ஒரு தாய்மை பேற்றை சுமக்க உடல் வலிமை வேண்டாமா? எதுவும் சிந்திக்காமல் இப்படி தடாலடியா சொன்னா எப்படிங்க? இது என்ன பொம்மை வாங்கும் முயற்சியா என்ன?”



சித்ரா மெதுவாகத் தான் பேசினாள். தன்னுகுள்ளேயே பேசினாள் என்று கூட சொல்லலாம். அவன் இந்த பதிலை உள் வாங்கிக் கொள்ளவேயில்லை. திடமான குரலில் சொன்னான்.



“நான் சொல்றதை சொல்லிட்டேன். பிறகு பிரச்சனை பெரிசா ஆனா. அதுக்கு நான் பொறுப்பில்லை.”



அன்றிரவு அவளுக்கு தூக்கம் போனது. அவனுடன் ஒரே கட்டிலில் படுக்காமல் தனி அறையில் பாய் விரித்து படுத்துக் கொண்டாள். வேகமாக சுற்றிய மின் விசிறியை பார்த்துக் கொண்டே சிந்தித்தாள். சுவிட்ச் போட்டவுடன் காற்றை கொடுக்கும் மின்விசிறி போல் தான் அவனுக்கு மனைவி போலிருக்கு. இயந்திரம் தன் கடமையை செய்யும். அவள் நின்று போன மின்விசிறி. காற்றை கொடுக்க முடியுமா? அழக்கூட அவளுக்கு சக்தி இல்லை.



மறு நாள் அவள் அம்மாவுக்கு போன் செய்தாள். விஷயத்தை ஒப்பித்தாள். எந்த உணர்ச்சியுமின்றி சொல்லி முடித்தாள்.



“என்னடி சொல்றே? நல்ல கூத்தா இருக்கே. உன் புருஷனுக்கு என்ன பயித்தியம் பிடிச்சிருக்கா?. பச்சை உடம்பு. அதுக்குள்ளே மறுபடியும் மாசமானா சிக்கல் வரும். சரி இரு நான் சம்பந்தியிடம் பேசறேன்.”



என்ன நடக்குமோ அது நடக்கட்டும். அம்மா பேசிவிட்டு என்ன சொல்கிறாள் பார்ப்போம். கணவன் மனைவி இடையே இடைவெளி வந்தால் யாராலும் அதை தீர்க்க முடியாது.

அம்மா அன்று மதியமே அவளிடம் பேசினாள்.



“சித்ரா...நீ பயப்பட வேண்டாம். நான் உன் மாமியாரிடம் பேசினேன். அவங்க மகனை கோபிச்சுக்கிட்டாங்க. அப்படியா சொன்னான். கூறு கெட்ட பய. நீங்க கவலைப் படாதீங்க. நான் பார்த்துக்கிறேன்னு சொன்னாங்க. அப்பாடா. நான் கூட பயந்துட்டேன். மாப்பிள்ளை சிறு பிள்ளைதனமா பேசறார். நீ எடுத்து சொல்லு.”



“சரிம்மா...”



அம்மாவுக்கு மன நிம்மதி கிடைத்தது போல் சித்ராவுக்கு கிடைக்கவில்லை. மாமியாரின் திருகு தாளம் அவளுக்கு மட்டுமே தெரியும். அம்மாவிடம் எடுத்து சொன்னால் அவள் புரிந்து கொள்ள மாட்டாள். மாமியார் மாறிவிட்டாள் நீ தான் புரிந்து கொள்ளவில்லை என்பாள். அவள் ராகவனின் கட்டாய ஆசைக்கு பலியாக தன்னை தயார்படுத்திக் கொண்டாள். அவள் முகம் ஒரு விரக்தியை பிரதிபலித்தது. தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முழம் என்ன? கடவுளே எனக்கு எது நல்லுதுன்னு நீ நினைக்கிறியோ

அதை செய். எது நடந்தாலும் அது என் நன்மைக்கு என்று இருக்கட்டும்.

என் உடல் நிலையை, மனநிலையை நீ தான் காப்பாற்ற வேண்டும்.



“என்ன முடிவு பண்ணியிருக்கே?”



“முடிவு பண்ண நான் யார்? அதான் நீங்களும் உங்க அம்மாவும் போட்ட பிளான் படி நான் நடக்கனும்னு சொல்லாம சொல்லிட்டீங்களே.”



அவன் மேலும் மேலும் விவாதம் பண்ண தயாராக இல்லை. இது அவள் கொடுத்த சம்மதமாக எடுத்துக் கொண்டான். அவன் எண்ணத்தில் இரண்டாவது பிறக்கும் குழந்தை மூலம் அம்மாவின் புறக்கணிப்பிலிருந்து மீண்டு விடலாம் என்ற கணக்கு போட்டான்.



“ஸாரி சித்ரா. எனக்கு வேறு வழி தெரியலை. மதுரையில் பூ கொட்டல் திருவிழாவின் போது திண்டுக்கல் ரோடு முனையில் சாமி வரும் போது இரு பொம்மைகள் பூ கொட்டும். அந்த அர்ச்சனை பார்க்க அழகாக இருக்கும். அந்த மாதிரி ஒரு அன்பில் அம்மா திளைக்க விட்டாள். இப்போ அது இல்லாமல் என்னால் இருக்க முடியல்லை. பாலை வனத்தில் இருப்பது போல் இருக்கு. அம்மாவை திருப்தி படுத்தவே இந்த ஸ்டெப். என் கண்மணி சித்ரா என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.”



மனதுள் அப்படி அவன் சொன்னது அவளுக்கு எப்படி தெரியும்? இவன் ஒரு அரக்கனாக மாறிவிட்டான் என்று அவள் மௌனக் கண்ணீர் விட்டாள். அவள் அவன் நிழல் தேடுகிறாள். அவன் அம்மாவின் நிழல் தேடுகிறான். அம்மாவுக்கு இவர்கள் அன்பின் ஆழத்தை புரிந்து

கொள்ளும் பெரிய மனசு இல்லை. ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து கொண்டு மகனின் வாழ்க்கையை விலை பேசுகிறாள்.



இரண்டு மாதம் கடந்தது. சித்ரா தாய்மை அடையவில்லை.



“ஒரு வேளை அவள் மலடி ஆகிவிட்டாளோ? என் அக்கா மகள் முதல் குழந்தை பிறந்த மூன்றாம் மாதம் மீண்டும் குழந்தை உண்டாகிவிட்டாள்

இவளுக்கு எதுவும் வாய்க்கவில்லை. டாக்டர் கிட்டே கூட்டிப் போடா.”

அம்மாவின் அட்விஸ் படி டாக்டரிடம் ஓடினான்.



“இதெல்லாம் ஒரு பிரச்சனையா? உங்க மனைவிக்கு கொஞ்ச ரெஸ்ட் கொடுங்க. இது சரியான நேரமில்லை ப்ரெக்னேன்ட் ஆறதுக்கு. படிச்சவங்க நீங்க. இதெல்லாமா சொல்லணும். அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. அனிமிக்கா இருக்காங்க. இப்ப குழந்தை வேண்டாம். ஒ.கே”

என்று சொல்லி அனுப்பிவிட்டாள் டாக்டர் ஷீலா. இப்பவாவது புருஷனுக்கு புத்தி வரும் என்று எதர் பார்த்தாள் சித்ரா.



“பெரிய தலை வலியா இருக்கு. சித்ரா சீக்கிரம் தாய்மை அடைஞ்சா நல்லது. அம்மாவின் இம்சை தாங்க முடியல்லை.”



“இத பாருங்க...இது நம்ம வாழ்க்கை. உங்க அம்மா தலையிடுவத நீங்க அனுமதிக்காதீங்க. ஆறு மாசம் டைம் கொடுங்க. பிறகு நீங்க நினைப்பது போல் நடக்கும். எல்லாம் சரியாயிடும். கவலைப்படாதேங்க.”



ராகவன் செய்வதறியாது திகைத்தான். டாக்டர் சொல்வதை மீறி நடந்தால் பிறகு மறுபடியும் குறை பிரசவம் ஆனால் என்ன செய்வது?

“சரி...” என்றான். அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள் சித்ரா. ஆறு மாசம் அவள் தன் உடம்பை தேற்றிக் கொள்ள நல்ல சத்தான ஆகாரம் உட்கொண்டாள். சந்தோஷமாக இருந்தாள். ராகவன் அவளை படுத்தாமல் இருந்ததே அவளுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. அவன் உற்சாகம் இழந்து காணப்பட்டான். ஆனால் அவள் உடல் நிலை தேற வேண்டும் என்பதில் அவனுக்கு உடன்பாடு தான். வாழ்க டாக்டர் ஷீலா என்று மனதார வாழ்த்திக் கொண்டாள் சித்ரா.



பவாணியின் உள்ளம் வெந்து கொண்டிருந்தது. கடைசியில் மகன் பொண்டாட்டி பக்கம் சாய்த்து விட்டான்.



“ஏண்டி கவிதா...சித்ராவுக்கு உடம்புக்கு என்ன? நல்லாத் தானே இருக்கா? அந்த டாக்டர் சொன்னது நிஜமா, இல்லை இவளே கிளப்பிவிட்ட பொய்யா? ஒரு குழந்தை பெக்கறது அவளுக்கு இப்படி ஒரு

மலைப்பான விஷயமா போச்சே. என்ன கன்றாவியோ?”



“அத்தே...சித்ராவுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை. இன்னொரு குழந்தை உண்டாகி அதுவும் குறை மாசத்தில் பிறந்தால் என்ன செய்வது என்ற பயம் தான். நீங்க கொளுந்தனாரிடம் சொல்லி பயப்பட வேண்டாமுன்னு அட்வைஸ் பண்ணச் சொல்லுங்க. இல்லை பிள்ளை பிறக்காமலே போயிடும்.” என்று கொளுத்திப் போட்டாள். தன் அண்ணன் மகள் கவிதா என்பதால் அவள் சொல்வது பவாணிக்கு வேத வாக்கு. அடுத்த முறை ராகவன் வந்த போது அவள் சொன்னாள்.



“ராகவா..நீ ரொம்ப மெத்தனமா இருக்கே. உன் பொண்டாட்டி உன் காதில் பூ சுத்றா. நான் சொல்றதை கேள். பிள்ளை உண்டாகணும் இல்லை நான் வேறு கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லு..என்ன புரியுதா?”

ராகவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.



“பிள்ளை பிறக்கும் போது பிறக்கட்டும். சும்மா என்னை பாடா படுத்த வேண்டாம். நான் பிள்ளை இல்லாத மலட்டு தகப்பனாவே இருக்கேன். ஆளை விடு. டாக்டரே சொன்ன பிறகு நான் என்ன செய்ய முடியும்.?”



“ஏன்டா இப்படி கோவிச்சுக்கிறே? உன் நன்மைக்குத் தானே சொல்றேன்.”



“என் நன்மையை நானே பார்த்துக்கிறேன். இனிமே இங்கே நான் வர தயாரா இல்லை. சும்மா பிள்ளை பிள்ளைன்னு சொல்லி எங்க மனசை புண்படுத்தறே. உனக்குத் தான் இரண்டு பேத்தி இருக்காங்களே. என்னை தொந்தரவு செய்யாதே...” கத்திவிட்டு அவன் எழுந்து போனான்.



“பாருடி கவிதா. உன் கொழுந்தன் என்ன சொல்லிட்டுப் போறான் பார்..” அம்மா மூக்கை சிந்தி போட்டு அழுகையுடன் சொன்னதை கேட்டுக் கொண்டே ராகவன் வீடு நோக்கி சென்றான்.



எவ்வளவு தான் மன தைரியம் உள்ள ஆளாக இருந்தாலும் சதா இப்படி சொந்தங்களால் மட்டம் தட்டப் படும் போது மனசு விட்டுத் தான் போகும். அம்மா இப்படி தன்னை அவமனப்படுதுவாள் என்று ராகவன் நினைக்கவே இல்லை. பேசாமல் செத்துப் போய்விடலாம் போன்று இருந்தது. அவன் சஞ்ஜலத்தை கோபமாக சித்ரா மேல் தான் கட்டினான்.



“சித்ரா...நீ எவ்வளவு நாள் உடம்பு தேறணும்னு என் ஆசையை தள்ளிப் போடுவே? இன்னிக்கு ஒரு முடியவு சொல்லு.”



சித்ராவுக்கு கணவனின் வற்புறுத்தல் பிடிக்கவே இல்லை. இருந்தாலும் தன் மன நிம்மதிக்காகவும் கணவனின் மன நிம்மதிக்காகவும் அவள் விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதை அவள் புரிந்துகொண்டாள். அவள் சரி என்று தலையாட்டிய போது ராகவன் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியதை அவள் உணர்ந்தாள்.



நாலைந்து மாதங்கள் எந்த பலனும் இல்லை. ஐந்தாவது மாதம் அவள் குழந்தை உண்டான போது ராகவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். அலுவலகம் போகும் வழியில் அம்மா வீட்டில் இறங்கி நல்ல செய்தியை சொன்னான். அம்மா அடுப்படியில் வேலையாக இருந்தாள்.



“என்னடா.....ஏதாவது விசேஷமா?” இந்த மாதிரி அம்மா ஒவ்வொரு மாசமும் கேட்பது வழக்கமாக இருந்தது. உதட்டை பிதிக்கிவிட்டு விரக்தியுடன் அவன் எழுந்து போவான்.



“இது சரிப்பட்டு வராது. அவள் சரியில்லைன்னு சொன்னா கேக்க மாட்டேங்கரே நீ. எப்படியோ போங்க. பெரிய மனுஷிக்கு என்ன மரியாதை இருக்கு?” என்று குத்துவாள்.



இன்றும் அவளுக்குப் பிடித்தமான அந்தக் கேள்வியை கேட்ட போது மகன் முகம் மலருவதை பார்த்தாள். “அம்மா...அவ மாசமா இருக்கா?” என்றான் பெருமையுடன். அம்மா உடனே மகிழ்ச்சியில் கூத்தாடுவாள் என்று நினைத்தான். அவள் கேட்டாள்.



“நிஜமாதானா டா? டாக்டர்கிட்டே போய் உறுதி பண்ணிக்கிட்டாச்சா? அவசரப்பட்டு சந்தோஷப் பட்டுக்காதே.”



என்ன பதில் இது? அம்மா முகத்தில் துளி நெகிழ்வு கூட இல்லையே? ஏன் அவள் இப்படி இருக்கிறாள்? குற்றம் சொல்லத்தான் அவளுக்கு ஆசையோ? மகனின் சிந்தனை இப்படி போகிறதோ என்று யூகித்த பவாணி சட்டென்று சொன்னாள்.



“ரொம்ப சந்தோசம் டா. டாக்டர்கிட்டே காட்டு உறுதி செய்துகிட்டா மனசுக்கு தைரியமா இருக்கும். அதுக்குத் தான் சொன்னேன்.” என்று மழுப்பினாள். விடை பெற்று ராகவன் எழுந்து கொள்ளும்போது



“சாபிட்டிடுப் போடா. நல்ல செய்தி சொல்லியிருக்கே. கவிதா நேத்து உன் புருஷன் வாங்கி வந்த ஸ்வீட்டில் ஒன்றை எடுத்து வா, “ என்றாள்.



“அத்தே....எதுக்கு அவசரம்? டாக்டரிடம் கன்பர்ம் பண்ணிட்டு வரட்டும்.” என்று தன் அறையிலிருந்தே சொன்னாள் அவள்.



“நான் வரேன்மா...” ராகவனுக்கு அம்மாவின் இந்த ரீயாக்க்ஷன் ஏமாற்றத்தை கொடுத்தது. சோர்வுடன் அலுவலகம் போனான்.



அலுவலகத்திலும் அவனுக்கு வேலை ஓடவில்லை. என்னதான் இவர்கள் நினைகிறார்கள்? பழைய அன்பும் ஒட்டுதலும் வரேவே வராதா?



“என்ன மிஸ்டர் ராகவன்? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று கேட்டாள் அவனோட சீனியர் ஜெகதா.



“ஒண்ணுமில்லை மேடம். பாமிலி ப்ரோப்ளம்.”



“யாருக்குத் தான் பாமிலி ப்ரோப்ளம் இல்லை. சும்மா சொல்லுங்க. அதனாலே உங்க மனநிலை லேசாகும்.” என்று ஊக்குவித்தாள்.



“என் மனைவி சித்ராவுக்கு குழந்தை பிறந்து இறந்தது உங்களுக்கு தெரியும்? இப்ப அவ மாசமா இருக்கா. அம்மா அது கேட்டு சந்தோசம் பாடுவாங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க திருப்தி அடையலை. அதான் ஒரே கவலையா இருக்கு...எப்படி அவங்களை ப்ளீஸ் பண்ணறதுன்னே தெரியலை...”



“ராகவன் சார்...இதுக்கெல்லாமா கவலைப் படுவது? டேக் இட் ஈஸி. உங்களுக்கு இதிலே சந்தோஷமா இல்லையா? அது தான் முக்கியம். உங்களுக்குன்னு ஒரு குடும்பம் வந்தாச்சு. இன்னும் அம்மாவின் அப்ரூவலுக்காக சின்னப் பையன் மாதிரி ஏங்றது சரியில்லை.”

அந்த அறிவுரை அவன் மனதில் இறங்கியது.



சித்ராவுக்கு பிரசவ நேரம் நெருங்கிற்று. உரிய நேரத்தில் அவளுக்கு பாபு பிறந்தான். இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பாடா ஒரு வழியாக குறை பிரசவம் ஆகாமல் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறந்துவிட்டது. அம்மாவின் மனம் குளிர்ந்துவிடும். குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு என்று அம்மா கொண்டாடுவாள். அம்மாவின் அன்பும் அரவணைப்பும் தனக்கு மீண்டும் கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைந்தான். கவிதா வந்து குழந்தையை பார்த்துவிட்டுப் போனாள். அவளுக்கு பொறாமை கொழுந்துவிட்டு எரிந்தது. இனி அத்தை அந்த மகனை கொண்டாட ஆரம்பித்து விடுவாளோ? தன் செல்வாக்கு குறைந்து விடுமோ என்று பயந்தாள். அவள் பவாணியிடம் சொன்னாள்.



“அத்தே...பிள்ளைக்கு ஒன்றரை கண் மாதிரி தெரியுது. நீங்க கவனிச்சீங்களா? மேலும் பிள்ளை சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்திருக்கு. சித்திரை அப்பன் தெருவிலேன்னு சொல்வாங்க. பிள்ளையையும் அலைக்கழிக்கும் மத்தவங்களையும் பாடு படுத்தும். குழந்தை பிறந்து ஒரு புண்ணியமும் இல்லை.” பவாணிக்கு மனசு இளகும் போதெல்லாம் இப்படி ஏதாவது சொல்லி கவிதா பவாணி மனசை திசை திருப்பி விடுவாள்.



கவிதா சொன்னது சரிதான் என்று நினைக்கும் வண்ணம் அடுத்து நடந்த சம்பவம் தான் சித்ராவின் தலையெழுத்தை தீர்மானித்தது. பாபுவின் முதல் பிறந்தநாள். சித்ராவின் முதல் சரிவு நாளாக அமைந்தது.





கப்பல் மிதக்கும்.
 
Top