கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காகித கப்பல்கள்

sankariappan

Moderator
Staff member
காகித கப்பல்கள்



அத்தியாயம்---6

அன்று தென்றல் ஒரு புதிய வாசத்துடன் அந்த வீட்டை சுற்றி வந்தது. சந்தனத்தின் இனிய வாசம். பன்னீர் கமழும் நெடி. ரோஜாக்களின் இனிய நறுமணம். பாபுவின் பிறந்தநாள் என்று தேவர்கள் வந்து வாழ்த்தும் ஒலியாக அய்யரின் மந்திரங்கள். குழந்தை பாபுவுக்கு ஒரு வயது. மழலை மொழியின் அடுத்த கட்ட ஒலிகளாக ம்மா...ப்பா என்ற தேனிசை சொற்கள் அனைவர் காதிலும் விழுந்தது.பாபுவின் அம்மாவாக சித்ரா பெருமையுடன் அங்கும் இங்கும் அலைந்து விருந்தினரை வரவேற்றுக் கொண்டிருந்தாள் .அன்று அவள் முகத்தைப் பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள் அவளிடம் அழகு கூடியிருந்தது . புதுப் புடவையும் கழுத்தில் சின்ன சிகப்புக் கல் நெக்லசும் அவளுக்கு பாந்தமாக பொருந்தி இருந்தது. அது பார்த்து கவிதாவின் முகம் சுண்டிவிட்டது



“சித்ரா...எதுக்கு இப்படி ஓவரா சந்தோஷப் படறே?...”


“என்ன சொல்றீங்க அக்கா?. இன்று பாபுவின் பிறந்த நாள்...சந்தோஷமா இருக்க என்ன தடை? இன்று தான் நான் பிறந்த பயனை அடைந்தேன்.”



“அதுக்கு சொல்லலை சித்ரா. யார் கண்ணாவது பட்ருமேன்னு தான்...”



“கண்படுமேன்னு மூலையில் ஒடுங்கவா முடியும்.?”

பவானி குழந்தையிடம் அம்மா சொல்லு அப்பா சொல்லுன்னு சொல்லி கொஞ்சிக் கொண்டிருந்தது கவிதாவுக்குப் பிடிக்கவில்லை.

‘இன்று ஒரு நாள் கூத்து. பொறுத்துக் கொள்வோம். நாளை போய்விடுவாள். என்னம்மா அலட்றா? மகன் பிறந்த திமிர்.’ என்று குமைந்து கொண்டிருந்தாள். மாமனாரின் முகத்திலும் சந்தோசம். பாபு கை பிடித்து கேக் வெட்டி முடித்து அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து பாடி முடித்தனர். எல்லோருக்கும் ஒரு பேப்பர் ப்ளேட்டில் கேக்கை வைத்துக் கொடுத்தாள் சித்ரா. மாமனார் குணசேகரிடம் அவள் கொடுக்க அவர் வாங்கி ஆவலோடு வாயில் போட...அடுத்த வினாடி அவர் விக்கல் வந்து..நெஞ்சடைத்தது....நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார். யமன் ஆசைப்பட்டு விழாவுக்கு குழந்தையை வாழ்த்த வந்தது எவ்வளவு பெரிய தவறு! குணசேகரின் மூச்சு அந்த யமனுக்காக காத்திருந்தது போல் ஆயிற்று. பேரனின் பிறந்த நாள் தாத்தாவின் இறந்த நாள் ஆயிற்று. கவிதாவுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.





மீண்டும் சித்ரா மாமியாரின் வெறுப்புக்கு ஆளானாள். பவானியின் வெறுப்பு குழந்தையின் மேலும் விழுந்தது. இரண்டு வருடம் சென்றபோதும் அந்த வெறுப்பு போகவில்லை. ராகவனை மட்டும் பார்க்க அனுமதி அளித்தாள். சித்ராவோ குழந்தை பாபுவோ வரக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தாள். தாத்தாவை விழுங்கிய பேரன் என்று அவனுக்கு பட்டம் சூட்டப்பட்டது. வேண்டாத குழந்தையாக பாபு வளர்ந்தான். சித்ராவின் அம்மா வேதமும் அப்பா கோமதிநாதனும் பாபுவை எவ்வளவு தான் கொஞ்சினாலும் பவானியின் வெறுப்பு தந்த வலியை மறக்க முடியவில்லை. மகனிடம் அவள் கீதா என்ற பெண்ணைக் காட்டி அவளை கல்யாணம் செய்துகொள் என்று வற்புறுத்த ஆரம்பித்தாள். ராகவனுக்கு துளியும் இஷ்டமில்லை. அந்தப் பெண்ணைக் கண்டாலே அவன் காத தூரம் ஓடினான்.



“ராகவா...சொல்றேன்னு தப்பா நினைக்காதே, சித்ரா ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த பெண். அவளை விட்டு விடு. நம் குடுமபம் நல்லா இருக்கணும்னா நீ இத செய்.”



“அம்மா...உனக்கு பயித்தியமா? அப்புறம் பிள்ளையை என்ன செய்ய? தூக்கி தூர வீசவா? என்ன பேசறே நீ?”



வர வர அம்மாவின் மூட எண்ணங்கள் அவனுக்கு எரிச்சலைத் தந்தது. எதிர்க்க ஆரம்பித்தான் ராகவன்.



“பிள்ளையை யார் தூர எரிய சொன்னா? அவன் உன்னோடு இருக்கட்டும். சித்ரா நம் வீட்டுக்கு வேண்டாம்.”



“அப்படி எல்லாம் விரட்ட முடியாதும்மா. சட்டம்னு ஒண்ணு இருக்கு. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு. அப்பா செத்துப் போனதுக்கு அவளோ குழந்தையோ எப்படி பொறுப்பாவாங்க?”



அதுக்கு மேல் பவானி பேசவில்லை. ஆனால் மறுபடியும் பாரா முகம் காட்டினாள். அவன் பார்க்க வந்தால் கோவிலுக்குப் போயிட்டு வரேன்னு கிளம்பி விடுவாள். “போயிடாதே வந்திடுவேன். இன்னிக்கு பிரதோஷம்.”

என்பாள். போனால் வேண்டுமென்றே தாமதப்படுத்துவாள். அவன் போன் பண்ணி.....



“என்னம்மா...இன்னும் உன்னைக் காணும்? எப்ப வருவே? எனக்கு நேரமாச்சு. பாபு காத்திட்டிருப்பான். “ என்பான்.



“இருடா...அஞ்சு நிமிஷம். வந்திடறேன். தீபார்த்தனை நடக்குது.”

மேலும் பத்து நிமிஷம். அப்பொழுதும் அவள் வரவில்லை.



“சரி அண்ணி...அம்மா வந்தா சொல்லிடுங்க. எனக்கு நேரமாச்சு.”

ஏமாற்றதுடன் கிளம்பிப் போவான். ஏதாவது ஒரு குணஷ்டை செய்து அவனுடன் பேசுவதை அவள் தவிர்த்தாள். இப்படி கூட ஒரு அம்மாவா? என்று வெறுத்துப் போனான் ராகவன். அவன் மன நிம்மதி போயிற்று.



மெளனமாக கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருப்பது சித்ராவின் குணம். அம்மாவிடமும் கூட அவள் புலம்பினதில்லை. அவர்கள் தான் புலம்பினார்கள். அவள் பொறுமையை அவர்கள் பயித்தியக்காரத்தனம் என்றார்கள். வேதம் மட்டும் மகளின் வலி புரிந்து கொண்டாள்.



“ஏன் அப்படி அவளை இம்சை படுத்தறீங்க?. சுஜி வாய மூடு. உனக்கு என்ன தெரியும்? நீ சின்னப் பிள்ளை. அக்காவை காயப்படுத்தாதே.”



சித்ரா அம்மாவுக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டாள். என்றாவது கணவன் முன் போல் அன்பாக இருக்க மாட்டானா என்ற நப்பாசையுடன் எதிர்காலத்தை நம்பி இருந்தாள்.



திடீரென ராகவனின் போக்கில் வித்தியாசம் தெரிந்தது. ஒரு நாள் அவளிடம் வந்து அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் சித்ரா. இவன் நல்ல விதமாக மாறுவான் என்று அவள் கனவு கண்டு கொண்டிருக்க அவன் அவளை வீட்டை விட்டே துரத்துகிறான்.



“என்ன பேசறேங்க? நான் எங்கே போவேன்? நான் என்ன சம்பாதிக்கிறேனா என்ன? இதுவும் உங்க அம்மாவின் ஐடியா தானா?”



“சித்ரா....உன்கிட்டே சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கு. உன்னை நான் கை விட மாட்டேன். கொஞ்ச நாள்...கொஞ்ச நாள்...எனக்காக தனியே இரு. ப்ளீஸ். என் கிட்டே எதுவும் கேக்காதே.”



“என்ன உளறிக்கிட்டு இருக்கீங்க? அப்படி என்ன என்னிடம் சொல்ல முடியாத விஷயம்? கல்யாணம் ஆகும் போதே நாம் ஒருவர் ஆனோம். நீங்க வேற நான் வேற இல்லன்னு பேசினோமே. சுகத்திலும் துக்கத்திலும் நமக்கு சம பங்கு இருக்கு. இப்படி உங்களை தனிமை படுத்தறீங்க. வேண்டாம் ராகவன். ப்ளீஸ். என்ன விஷயம் அதையாவது

சொல்லுங்க.” சித்ரா கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

ராகவனின் முமெல்லாம் வேர்த்தது. பேச முடியாமல் நாக்கு மேலன்னதில் ஒட்டிக் கொண்டது. அவனுக்கு அழுகை வந்தது.



“சரி சொல்லவேண்டாம். எவ்வளவு நாள் எனக்கு இந்த தண்டனை?”



“ஒரு..ஒரு..ஒரு வருஷம் போதும். அதுக்குள்ளே எல்லாம் சரியாகிவிடும். நீ உன் அம்மா வீட்டில் அதுவரை இரு. சரியா சித்ரா.”

அவன் ஏதோ கெஞ்சுவது போல் கேட்க அவள் திக்பிரமித்து நின்றாள்.



“என்ன பேச மாட்டேங்கறே?”



“பேச என்ன இருக்கு? ராகவன் என்னால் என் அம்மா வீட்டில் எல்லாம் போய் இருக்க முடியாது? இத பாருங்க...அம்மா வீட்டில் இருந்தால் அவங்க கஷ்டப்படுவாங்க. தினமும் கண்ணீரும் வலியுமாக வாழ வேண்டியிருக்கும். நானும் பாபுவும் போயிடறோம். நீங்க சந்தோஷமா இருங்க.” சித்ரா பேசியதைக் கேட்டு ராகவன் சொன்னான்.



“சித்ரா...பாபு என் கூட தான் இருப்பான்.”



“உங்களுக்கு புத்தி தான் கெட்டுப் போச்சு. மூன்று வயசு பிள்ளையை உங்க கிட்ட விட்டிட்டுப் போக எனக்கு என்ன பயித்தியமா?’



“சரி..உன் இஷ்டம். நான் இந்த வீட்டை விட்டுப் போறேன். அது தான் நிலைமை. புரிஞ்சுக்கோ.”

சித்ராவுக்கு எந்த முடிவு எடுக்கும் சந்தர்ப்பமும் கொடுக்கப்படவில்லை.



சித்ரா ஒரு சிறிய வீட்டுக்கு குடி வந்தாள். ராகவன் அவளை தன் வீட்டுக்கு அருகில் பிள்ளையார் கோவில் அருகே இந்த வீட்டை பார்த்து வைத்தான். வீடு சிறியது தான். ஒரு ரேழி. ஒரு படுக்கை அறை. சமையலறை. ஒரு சின்ன குளியலறை. அவ்வளவு தான்.



“சித்ரா...நீ பாபுவை பார்க்க வரலாம். காலை எட்டு மணிக்கு வந்துவிடு. அவனை எல்.கே.ஜி யில் சேர்த்து விட்டிருக்கோம். நீ அவனை பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு வா. வீட்டில் சமையல் பண்ணி வை. மதியம் மூணு மணிக்கு அவனை பள்ளியிலிருந்து கூட்டி வந்துவிடு. சாயங்காலம் நான் வந்தவுடன் நீ போகலாம்....” அவன் பேசியதை கேட்டு அவள் திடுக்கிட்டாள். அவளை ஒரு வேலைக்காரி மாதிரி அல்லவா நடத்த திட்டமிட்டுள்ளான். அவனுக்கு அப்படி என்ன கஷ்டம்? எதுக்கு இப்படி விநோதமாக நடந்து கொள்கிறான்? மாமியாரிடம் போய் அவள் ஒன்றும் கேட்க முடியாது. சொல்லவும் முடியாது. இது அவர்கள் வேலையா அல்லது இவனின் குறுக்கு புத்தியின் வேலையா? அவளுக்குப் புரியவில்லை. இதுக்கு சம்மதிக்க வேண்டுமா? அப்பாவும் சுஜியும் அவளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க. அம்மாவிடம் இந்த ஏற்பாட்டை சொல்லிவிடுவோம். சுஜி எதர்பார்த்தது போல் எகிறி குதித்தாள். “அக்கா...நீ அருந்ததியா? அனுசியாவா? அந்தக் காலத்து பத்தினி தெய்வமா? அவர் வேறே வீடு பார்த்து இருக்கச் சொல்வாராம். தினமும் வந்து சமைத்து கொடுக்கணுமாம். சாயங்காலம் வீட்டுக்கு ஓடிட வேண்டுமாம். என்ன அக்கா..உனக்கு வெக்கமா இல்லையா?”

சித்ராவின் அப்பா கோமதினாதன் ராகவனிடம் போய் எகிறி குதித்தார்.



“என்னப்பா இது? என் மகளை திராட்டிலே விட்டிட்டு நீ என்ன செய்யப் போறே? உன்னை மாப்பிள்ளைன்னு சொல்லக் கூட பிடிக்கலை கொதிச்சு போயிருக்கேன். என் மகளை நீ அப்படியெல்லாம் ட்ரீட் பண்ண விட மாட்டேன். மரியாதையா அவ கூட குடித்தனம் பண்ணு.”



“உங்க மகளும் நானும் சேர்ந்து ஒப்பந்தம் பண்ணிக் கிட்டோம். நீங்க எது பேசறதானாலும் உங்க மகக் கிட்டவே பேசிக்கோங்க.” என்று அவன் அலட்சியமாக பேசி அவரை விரட்டி விட்டான். அவர் பவானியிடம் போய் வாதாடினார். அங்கேயும் ஆவேசமாகவே பேசினார்.



“பவானி அம்மா உங்களுக்கு அறிவிருக்கா? பச்சை புள்ளைங்க வாழ்க்கையில் இப்படி விளையாடறீங்க? உங்க மகன் உங்க பேச்சைக் கேட்டுக் கொண்டு என் மகளை தனியா இருக்க வீடு பார்த்து வைச்சிருக்கார். தினம் வந்து சமையல் பண்ணி கொடுத்திட்டுப் போணுமாம். அதுக்கு சம்பளம் தருவாராம். என்னம்மா இது? கேக்க ஆளில்லைன்னு நினச்சீங்களா?”



“உங்க மகளுக்கு இருக்கும் திமிர் எங்கிருந்து வந்திருக்குன்னு இப்ப புரியுது. பொண்ணை பெத்த மாதிரியா பேசறீங்க? கொஞ்சம் அடக்கி பேசுங்க. உங்க பெண்ணுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கலன்னா டிவோர்ஸ்ஸுக்கு அப்பளை பண்ணச் சொல்லுங்க. யார் வேண்டாம்னு சொன்னது? அவ்வளவு தான். காப்பி சாப்பிடறேளா?”



“கொஞ்சம் விஷம் கொடுங்க சாப்பிடறேன்.” கொதித்துப் போய் அழுது கொண்டே போனார். கவிதாவுக்கு நிம்மதியாக இருந்தது. அப்பாடா...என்று பெருமூச்சு விட்டாள். சித்ராவின் கிழக்கே அஸ்தமித்துவிட்டது. இனி அவள் ராஜ்ஜியம் தான்.



சித்ராவுக்கு விவாகரத்து வரை போக விருப்பமில்லை. அதுக்குக் காரணம் ராகவனோடு அவள் வாழ்ந்த வாழ்க்கை. அளப்பரிய சந்தோஷ சாம்ராஜ்யத்தில் மிதந்துக் கொண்டிருந்த காலம் அவள் மனத் திரையிலிருந்து அகலவில்லை. சுஜியும் அப்பா கோமதிநாதணும் அவளை திட்டிக் கொண்டே இருகின்றனர்.



“அக்கா...உனக்கு எருமைத் தோல். ஆம்பளை என்ன வேனா செய்யலாம், பொம்பளை குட்டக் குட்டக் குனியனுமா? எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. அக்கா..உனக்கு என்ன குறைச்சல்? இந்த கோட்டிக்காரனை விட்டு விலகி வா. காலம் ரொம்ப மாறிடுச்சு. உனக்கு வேறு நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். உனக்கு சின்ன வயது தானே?”



“ஆமா சித்ரா? அந்த அம்மா உன்னை வாழவே விடமாட்டா. நான் தான் போய் பேசிப் பார்த்தேனே. கொஞ்சம் கூட இதயமே இல்லாத ஆள்.”



“தெரியும் அப்பா. ஆனா உங்க மாப்பிள்ளை இதயமே இல்லாதவர் இல்லை. ஏதோ குழப்பத்தில் இருக்கார். எதிலோ சிக்கி கொன்ட மாதிரி. கொஞ்சம் பொறுமையா இருந்தா சிக்கலோட நுனி கிடைச்சிடும். சரி பண்ணிடலாம். எனக்கு நம்பிக்கை இருக்கு.”



“அவ சொல்றது சரிதான். அவளை விடுங்க அவ வாழ்க்கையை அவ தீர்மானிக்கட்டும். அவளுக்கே இனி போராடி பிரயோசனம் இல்லன்னு தெரிஞ்சா அவளே விலகிடுவா.” என்று சித்ராவுக்கு பச்சை கொடு காட்டினாள் தாய் வேதம்.



ஒரு வருஷம் ஓடிவிட்டது. இன்னும் ராகவனின் மனம் மாறவில்லை. அவன் விவாகரத்து என்கிற பேச்சும் எடுக்கவில்லை. அவன் அம்மா பார்த்த பெண் கீதா இவனுக்காக காத்துக் கொண்டிருப்பதாக இப்பவும் சொல்கிறாள் பவாணி. ஆனால் எந்த நடவடிக்கையும் அதற்கு மேல் எடுக்கப் படவில்லை. ஒரு மாலை பொழுதில் வேலையெல்லாம் முடித்துவிட்டு சித்ரா தன் வீட்டுக்கு வரும்போது ஒரு அதிசயம் நடந்தது. அவள் வீட்டு முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்.



“உங்களுக்காகத் தான் காத்திட்டிருக்கேன். என் பெயர் கீதா.”

சித்ராவுக்கு பக்கென்றது. இவள் எதுக்கு இங்கு வந்திருக்கிறாள்? அவளை அப்படியே துரத்திவிடலாமா? என்று ஒரு கனம் யோசித்தாள். பிறகு என்ன நினைத்தாளோ “உள்ளே வாங்க..” என்று வீட்டை திறந்தாள். கீதா அப்படி ஒன்றும் அல்ட்ரா மார்டர்ன் டைப் இல்லை. கண்ணியமாகவே உடை உடுத்தி வந்திருந்தாள். கண்களில் ஒரு கூர்ப்பு இருந்தது. நடையில் ஒரு பிடிவாதம் இருந்தது. தனம்பிக்கை என்றும் சொல்லிக் கொள்ளலாம். இவள மூலமாக ராகவன் ஏன் பப்டி நடந்து கொள்கிறான் என்று தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கு என்று தான் அவளை உள்ளே விட்டாள் சித்ரா. காபி போட்டுக் கொடுத்தாள். தானும் குடித்தாள்.



“சொல்லுங்க...என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?”



“நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுதா?”



“தெரியும்.” சூர்பனகை என்று மனதுள் சொல்லிக் கொண்டாள். ராகவனை அபகரிக்க திட்டமிட்டிருக்கும் மாயப் பெண். வேறென்ன சொல்வது?



“உங்க கிட்டே ஒண்ணு சொல்லத் தான் வந்தேன். நீங்க உங்க கணவருக்கு விவாகரத்து கொடுத்திடுங்க. இல்லை அவரை நான் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன். இது விளையாட்டில்லை.”

சித்ரா இதை எதிர்பார்க்கவில்லை. ஜெயிலுக்கா? என்ன உளருகிறாள் இவள்.



“அவர் என்ன தப்பு செய்தார்? அவர் என் ஜெயிலுக்குப் போக வேண்டும்? சும்மா வந்து மிரட்டாதீங்க. இங்கிருந்து போயிடுங்க.”



“ஒ.கே. நான் கெஞ்ச வரவில்லை. உங்களை எச்சரிக்க வந்தேன்.”

அவள் உடனே எழுந்து போய்விட்டாள். சித்ரா அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ராகவனிடம் போன் பண்ணி சொல்லவேண்டும்.



கப்பல் மிதக்கும்
 

sankariappan

Moderator
Staff member
காகித கப்பல்கள்.



அத்தியாயம்---7



மிகப் பெரிய இருட்டை தன் சின்ன டார்ச் லைட்டால் பிரகாசப்படுத்திவிட முடியும் என்று அவள் போராடிக் கொண்டிருக்கும் போது கீதா அந்த டார்ச் லைட்டை கூட பிடுங்க வந்துவிட்டாளே!

சித்ராவை பொறுத்தவரை இந்த இழுபறி வாழ்க்கையாவது நீடிக்கிறதே என்று சமாதானம் ஆகி இருந்த சமயம், அது கூட உனக்கு இல்லை என்று பயமுறுத்தும் விதியின் சின்ன புத்தியை அவள் வெறுத்தாள்.

ஜெயிலுக்குப் போக வேண்டியவனா ராகவன்? அவனை என்ன பிளாக் மெயில் பண்ணுகிறாளோ? பாபுவை இனி பார்க்க முடியாதா? என்னதான் அவளின் எதிர் காலம்? போட்ட கோலங்கள் எல்லாம் அலங்கோலமாகிக் கொண்டிருக்கிறதே! சித்ராவுக்கு இந்த ஒரு வருஷ வாழ்க்கையில் அவளுக்குக் கிடைத்த வெளிச்சங்களை நினைத்துப் பார்த்தாள்.



ராகவனை அவள் இன்னமும் நேசிக்கிறாள். அதனால் அவனைப் பற்றி யாரிடமும் அவள் புகார் சொல்ல விரும்பவில்லை. காலை எட்டு மணிக்கு அவள் பரபரப்புடன் பாபுவை பார்க்க வருவாள். பாபு அவளை தாவி அனைத்துக் கொள்வான். அவனின் குட்டிக் குட்டி பேச்சுக்கள் அவளுக்கு தாலாட்டு மாதிரி இருக்கும்.



“அம்மா...உனக்கு தெரியுமா சுதா எனக்கு புது ரப்பர் கொடுத்தாள்.”



“ஏய்...அவ கொடுத்தாளா இல்லை நீ அபேஸ் பண்ணிட்டியா?”



“ச்சே...அப்பா யார் பொருளையும் எடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கார். நான் எடுக்கலைம்மா. இத பார் அழகா இல்லை? அவ தான் கொடுத்தா?”



குழந்தைகளுக்கு தங்கள் தோழி கொடுக்கும் பொருள் பெரிய பொக்கிஷம். தேய்ந்து போனா ரப்பரால் அவன் அழிக்கும் போது அவள் கேட்பாள்.



“ஏண்டா..உன் தோழி தான் புது ரப்பர் கொடுத்தாளே நீ ஏன் அதை யூஸ் பண்ணக் கூடாது?”



“அது என் ப்ரண்ட கொடுத்தது. அப்படியே வச்சிருப்பேன்.”



அவனை குளிப்பாட்டி உடை அனுவித்து டிபன் சாப்பிட வைத்து அவள் பள்ளிக்கு அனுப்பும் வரை அவளுக்கு நேரம் போவதே தெரியாது. அவன் அம்மா அம்மா என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பது கடவுள் எழுதிய ஒரு கவிதை போல் இருக்கும். அவள் ராகவனோடு சண்டை போட்டுக் கொண்டு அதையே நினைத்துக் கொண்டிருந்தால் இதை எல்லாம் அனுபவிக்க முடியுமா? சித்ரா யதார்த்தமானவள் தான். ஏமாற்றமும் வலியும் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த சூழ்நிலையின் ஏற்றமும் மகிழ்ச்சியும் அவளுக்கு பெரிசாகப் படும். இருளை ஒளி விழுங்குவது போல் அது மத்தாப்பு நிமிடங்களாக இருக்கும். தினமும் அவள் சூரியனின் புது ஒளியை ஜன்னல் வழியாகப் பார்ப்பாள். சாயங்காலம் வரும் போது அந்த ஒளி மங்கிவிடும். அய்யோ மங்கிவிட்டதே என்று ஒப்பாரி வைக்கவா முடியும்.? சிறிது நேரத்தில் நட்சத்திரங்கள் ஒளி வீசும் அழகை பார்க்கலாமே. ஒளிக்கும் இருளுக்கும் இருக்கும் பிணைப்பு சாதாரனமானதில்லை. பல கிளைகள் உள்ள மரம் இலைகளின் அடர்த்தியுடன் விரிந்து இருக்கும் போது சூரிய ஒளி இலைகளின் இடைவெளியில் ஊடுருவி மண் தரையில் விழும் போது பார்த்திருக்கிறாள் சித்ரா. நிழலாய் இருக்கும் இடங்களுக்கு நடுவில் காசு காசாய் சூரிய ஒளி நிலா ஒளி போல் தெரியும். அது ஒரு அழகு. அப்படித்தான் வாழ்க்கை. நிழலும், துண்டு துண்டு வெளிச்சமும் கலந்து தான் வரும். அந்த வெளிச்சங்களை பார்க்க சித்ரா கற்றுக் கொண்டாள்.



ராகவன் கத்தினாலும் அதில் வெறுப்போ சூடோ இருந்ததில்லை. அவன்

தலையை மடியில் வைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் போல் தான் இருக்கும்.



“ஏண்டா உன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு என்னையும் கஷ்டப்படுத்ற? ஆசைப்பட்டபடி ஆண் குழந்தை. போதுமான வருமானம்...சின்னதாக ஒரு வீடு. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவான்னு வாழத் தெரியலையே. எப்படி காலத்தை வேஸ்ட் பண்றே?”



என்று சொல் வேண்டும் போல் இருக்கும். இன்று சொல்லலாம்...நாளை சொல்லலாம் என்று அவள் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாள். காரணம் பயமில்லை..அவன் சஞ்சலம். எதற்கும் அடங்காத ஒருவித பயம் அவன் கண்களில் தெரிந்தது. அது என்ன என்று அவளால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பாவமாக இருந்தது.



“ஏன் எப்பவும் ஒரு மாதிரியாக இருக்கீங்க? அம்மாவுக்கு பயமா? இல்லை என் மேல் கோபமா? சொல்லுங்க. என் மேல் என்றால் நான் என்னை திருத்திக்கிறேன். அம்மா மேல் என்றால் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. எப்ப அவங்க உங்களை அலட்சியப் படுத்த

ஆரம்பிச்சாங்களோ அப்பவே நீங்க அவங்களை மனசாலே விலக்கிடனும். இதுவும் கடந்து போகும்னு விட்டிடனும். காலம் நேரம் வரும்போது சரியாகும். அதை விட்டிட்டு. தடியால் கனியை பழுக்க வைப்பது மாதிரி அவங்க அன்பை பலவந்தமா அடைய நினைக்கக் கூடாது.”



இந்த சாராம்சம் உள்ள அறிவுரைகளை முடிந்த போதெல்லாம் அவள் அவனுக்கு வேறு வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டு தான் இருந்தாள். சில சமயம் மௌனமாகக் கேட்பான். சில சமயம் வாய் மூடு என்று சொல்வான். சில சமயம் அவன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும். கோபப் படும்போது பாபுவுக்கு திட்டு விழும். தட்டை தூக்கி வீசுவான். டிபனை சாப்பிடாமல் கை கழுவிக் கொண்டு எழுந்து விடுவான். அவனுடைய சுபாவம் இதுவல்ல என்று அவளுக்கு தெரியும். என்னவோ இருக்கு.



‘சொல்லத் தான் நினைக்கிறேன் முடியவில்லை. அதை சொன்னாலும் கேட்பவருக்கு புரியவில்லை...’என்று பாட்டாக பாடிக் காட்டுவான்.



‘ராகவனே ரமணா ரகுநாதா. பாற்கடல் வாசா. ஜானகி நேசா...பாடுகிறேன் வரம் தா..:’ என்று அவளும் பாடுவாள். அவர்களிடையே இருக்கும் விசித்திர பிணைப்பும் இழுபறி கோபமும் வேறு யாருக்குப் புரியும்.? அவள் வேலைக்காரியாக அவனுக்கு அடிமையாக இருக்கிறாள் என்று தான் அவர்களுக்குத் தோன்றும். அவளுக்கே சில சமயம் மனம் வெறுத்து அப்படியும் தோன்றும்.



நிழலை பார்த்துக் கொண்டு நிஜத்தை துரத்திக் கொண்டு அவள் படும் அவஸ்தையை புரிந்து கொள்ளாத அவள் அப்பாவும் தங்கையும் அவளை கோழை என்றும் சுரனை இல்லாதவள் என்றும் சாடினார்கள். சித்ரா...தான் படும் கஷ்டத்தை விட இந்த மேம்போக்கான குற்றச்சாட்டுகள் கேட்டு தான் பலகீனப் பட்டுப் போவாள். அவரவர் பிரச்சனையை அவரவர் அவர்கள் விருப்பப்படி கையாள விட்டால் என்ன? மூக்கை நுழைத்துக் கொண்டு தங்கள் ஈகோ மட்டுமே பிரதானமாக்கி கலாட்டா பண்ணுவது எதுக்காக என்று பல முறை சிந்திந்து நொந்திருக்கிறாள். அம்மா அவளை அவள் போக்கில் சிந்திக்க செய்யல் பட, விட்டுவிட்டாள். அவளுக்கு சித்ரா மேல் நம்பிக்கை இருந்தது. எந்த எல்லை வரை அவள் பொறுப்பளோ அந்த எல்லையை அவள் இன்னும் தொடவில்லை. தொடும் முன் பிரச்சனை நேர்பட்டுவிடும் என்று அவள் நம்புகிறாள். வாழ்க்கையில் தனக்கு தானே சான்ஸ் கொடுத்துக் கொள்வது நல்லது தானே. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வெட்டிக் கொண்டு போவதற்கு இது என்ன

சாதாரண விஷயமா?



“சித்ரா...மனசை விட்ராதே. நான் இருக்கேன் உனக்கு.” என்று அடிக்கடி சொல்லி வந்தாள்.



நிகழ் காலத்துக்கு வந்தாள் சித்ரா. அன்று ஞாயற்றுக் கிழமை. நேற்று இரவு அவள் வீட்டுக்குப் போகவில்லை. பாபுவுக்கு லேசாக உடம்பு சரியில்லை. சளியும் இருமலும் அவனை வாட்டி எடுத்தது. இரவு பாலில் மஞ்சள் பொடியும் மிளகும் பனங்கல்கண்டும் போட்டு இளம் சூடாக கொடுத்து அவனைப் படுக்க வைத்தாள். சில சமயம் அவள் மகனின் சௌகர்யத்துக்காக இரவு தங்கி விடும் போது ராகவன் அதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. காலை அவன் அசந்து தூக்குகிறான் என்பதால் சித்ரா நடை பயிற்சிக்குப் போனாள். திரும்பி வந்தபோது தான் அவளுக்கு அதிர்ச்சி. ராகவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை போய்கொண்டிருந்தது. இவளை இன்ஸ்பெக்டர் மகேந்திரன் குடைந்து கொன்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பவானி ஒப்பாரி வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அவளை அரெஸ்ட் பண்ணச் சொல்லி கத்தினாள்.



“இன்ஸ்பெக்டர்...உண்மையை சொல்றேன். எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் ஆஸ்பத்திரி போணும். தயவு செய்து என்னை அனுமதியுங்கள்.” என்றால் சித்ரா.



அவள் மாமியார் அவளை முறைத்துப் பார்த்தாள்.



“இல்லே இன்ஸ்பெக்டர் இவளை விடாதீங்க. இவளுக்கு எங்க மேல் கோபம். அவனுக்கு நாங்க கீதா என்ற பெண்ணை மணமுடிக்க தீர்மானித்தோம். அதான் ஆத்திரம் வந்து புருஷனையே குத்திட்டா.”



இன்ஸ்பெக்டர் இருவரையும் விசாரித்து குடும்ப சண்டைகளை தெரிந்து கொண்டார். யோசனையுடன் பார்த்தார். பின் சொன்னார்.





“கத்தியில் கைரேகை இருந்தா அதை எக்ஸாமின் பண்ணணும். அப்புறம் தான் எதுவும் சொல்ல முடியும். மேடம் சித்ரா...நீங்க எங்கும் போகக் கூடாது. நாங்க தேவைப்பட்டபோது வந்து விசாரிப்போம். நீங்க ஒத்துழைக்கனும். அம்மா நீங்க பொறுமையா இருக்கணும். அப்படி ஆதாரம் இல்லாம யாரையும் அரெஸ்ட் பண்ண முடியாது.”


“இன்ஸ்பெக்டர்.....நான் ஆஸ்பத்திரி சென்று என் கணவரை பார்க்க முடியுமா?” ஏதோ கத்த வாய் எடுத்தாள் பவானி. அதற்குள் இன்ஸ்பெக்டர் முந்திக் கொண்டு சொன்னார்.



“தாராளமா போய் பாருங்க. கூடவே ஒரு கான்ஸ்டபிள் இருப்பார்.”



சித்ரா ஆஸ்பத்திரிக்குப் போன போது அவளுக்கு கிடைத்த தகவல், ராகவன் அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டிருக்கிறான் என்பது தான். அவளும் பாபுவும் ஒரு பக்கம் உட்கார்ந்திருக்க. பவானியும் அவளின் மூத்த மகன் சந்ருவும் உட்கார்ந்திருந்தார்கள். சந்துரு அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பவானி அவ்வப்போது அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். இரவு எட்டு மணிக்கு தான் நல்ல செய்தி கிடைத்தது.



“கத்திக் குத்து ஆழமாக இல்லை. உங்க மகன் பிழைத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு இன்னும் சிகிச்சை பாக்கி இருக்கு. புண்கள் ஆறும் வரை அவர் ஆஸ்பத்திரியில் இருந்தாகணும். இது போலிஸ் கேஸ். எனவே உங்களுக்கு அனுமதி பத்து நிமிடம் தான்.”



நர்ஸ் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். முதலில் விழுந்தடித்துக் கொண்டு பவானி உள்ளே சென்றாள். போன வேகத்திலேயே திரும்பி வந்தாள்.



“என்னம்மா? என்னாச்சு?” என்று பதட்டமுடன் கேட்டான் சந்துரு.



“அந்தப் பிடாரியை தான் முதலில் பார்க்கணுமாம்.” அவள் கத்தி முடிக்கும் முன் சித்ரா பாய்ந்து கொண்டு உள்ளே சென்றாள். பாபுவிடம்



“நீ நான் கூப்பிடும் போது வா கண்ணா. அம்மா முதல்லே பார்த்திட்டு வரேன். இங்கேயே நில்லு.”



என்று சொல்லிவிட்டுப் போனாள். பாபு பயத்துடன் ஒரு நாற்காலியில் ஒடுங்கி உட்கார்ந்து கொண்டான். சந்துருவோ பவானியோ அவனை அழைத்து ஆறுதல் சொல்லவே இல்லை. என்ன சண்டை என்றாலும் இப்படியா சின்ன பிஞ்சிடம் காட்டுவார்கள் என்று யாரோ சொல்லிக் கொண்டு போனார்கள். அங்கு இருந்த பலருக்கும் ராகவனின் குடும்ப நிலைமை தெரிந்துவிட்டிருந்தது..



“மூதேவி...இவளாலே குடும்ப மானம் போகுது. இவளை தலை முழுக்கச் சொன்னால் அந்த கடன்காரன் அவளைக் கூப்பிட்டு கொஞ்சிக் கொண்டிருக்கான். தலையெழுத்து.”



என்று சத்தமாக கத்திக் கொண்ருந்தாள் பவானி. உள்ளே என்ன பேசுகிறானோ மகன் என்ற திகில் அவளுக்கு இருந்தது. அம்மாவை பார்க்கவே முடியாது என்று சொல்லிவிட்டால்? அதெல்லாம் சொல்ல மாட்டான் என்றான் சந்துரு.



ஆஸ்பத்திரி கட்டிலில் சோர்ந்து போய் படுத்திருந்த ராகவன் மனைவி உள்ளே நுழைந்ததும் மெல்ல சிரித்தான். அந்த சிரிப்பு அவனை பழைய ராகவனாகக் காட்டியது. அதில் அன்யோன்யம் இருந்தது. அதே சமயம் ஒரு வித கலக்கம் இருந்தது. “உட்கார்...” என்று அவளை கட்டிலில் உட்காரச் சொல்லி இடம் ஒதுக்கி கொடுத்தான்.



“சித்ரா...உன் கிட்டே நிறைய பேசணும். என்னால் இப்ப அதிகம் பேச முடியாது. சுருக்கமா சொல்றேன். இந்த கத்திக் குத்து யாராலும் எனக்கு ஏற்படலை. நானே தான் குத்திக் கிட்டேன். எதுக்குன்னு இப்ப சொல்ல மாட்டேன். போலீசிடம் உண்மையை சொல்லிட்டேன். எனக்கு கௌன்சலிங் கொடுத்து என் மனநிலை சரியானதும் தான் வீட்டுக்கு அனுப்புவாங்களாம். நீ கவலைப் படாதே. இப்ப அம்மாவை வரச் சொல்.”



இதை சொல்வதற்குள் அவனுக்கு களைப்பு மிகுதியால் மூச்சு வாங்கியது. கேள்விக்குறியுடன் மனதில் ஆயிரம் வலியுடன் சித்ரா வெளியே வந்தாள். மாமியாரை பார்த்து



“உங்களை உள்ளே கூப்பிடுடறார்.” என்று சொன்னாள். பவானி அவளை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு உள்ளே போனாள். சந்துருவும் சென்றான். இவள் சொல்லி நாம் போக வேண்டி இருக்கறதே என்ற வெறுப்பு அவர்கள் இருவர் முகத்திலும் தெரிந்தது. மகனிடம் சென்று


“பாருடா உன்னை எந்த கதிக்கு ஆளாகிட்டான்னு. அதன் சொன்னேன் கீதாவை கல்யாணம் பண்ணிக்கோன்னு.”



“அம்மா...என்னை தொந்தரவு செய்யாதீங்க. இனிமே நான் ஆஸ்பத்திரியை விட்டு டிஸ்சாஜ் ஆன பிறகு நானே வந்து உங்களைப் பார்க்கிறேன். எனக்கு ஒண்ணுமில்லை. நான் நல்லாத்தான் இருக்கேன். இப்ப போங்க. வேறு எதுவும் பேச வேண்டாம். அண்ணா உங்களுக்கும் தான். லீவ் மீ அலோன். சித்ரா பார்த்துக்குவா. இப்ப போங்க.’



பவானிக்கு சப்பென்று மூஞ்சியில் அறைந்தது போல் இருந்தது. மகன் சொல்லிவிட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டான். அங்கிருந்து வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை. நர்ஸ் உள்ளே வந்து சொன்னாள்.



“உங்க மகன் சொல்லிட்டார். இனிமே நீங்க அவங்களை பார்க்க வரவேண்டாமாம். போயிட்டு வாங்க.”



பவானி அதிர்ச்சியும் கண்ணீருமாக வெளியேறினாள்.



“பாருங்க நர்ஸ். அழுதிட்டுப் போறாங்க. ஏதோ நான் கொடுமை படுத்தினா மாதிரி. இப்படி ஆனதுக்கே இவங்க தான் காரணம்.”



மகன் இப்படி சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டாள் பவானி. அவள் என்ன செய்தாள்? எதற்கு இப்படி சொல்கிறான்? நிற்க முடியாமல் அவள் கால் தள்ளாடியது. சமாளித்துக் கொண்டு வெளியே சென்றாள் பவானி. மாமியார் துக்கத்துடன் செல்வதைப் பார்த்து ராகவனுக்கு ஏதாவது சீரியஸ் ஆகி விட்டதோ என்று பயந்து போனாள் சித்ரா. பாபு வேறு பேசத் தெரியாத குழந்தை போல் வாய் அடைத்து நிற்பதை பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். வந்திருப்பது துன்பமா

அல்லது குளறுபடியா? என்று தெரியாமல் முதல் முறையாக ஸ்தமித்துப் போனாள் சித்ரா.
 

sankariappan

Moderator
Staff member
காகித கப்பல்கள் எட்டாம் அத்தியாயம் உங்க்பாளுக்கா.

அத்தியாயம்---8



நெடு வழி சாலை, போக்கு வரதுக்கு சரியில்லை என்றால் மாற்று குறுக்கு வழி கண்டுபிடித்துவிடலாம். பயணம் தொடரும். ஆனால் குறுக்கு பாதையும் அடைபட்டுப் போனால்? டெட் எண்டு என்பார்களே அதைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும். சித்ரா அப்படித் தான் உணர்ந்தாள். மர்மமாக பேசும் கணவன். கத்தியால் குத்திக் கொல்லும் அளவுக்கு அவனுக்கு என்ன தலை போகும் பிரச்னை? அவளல்லவோ கத்தியால் குத்திக் கொண்டு போய் சேரவேண்டிய நிலையில் இருக்கிறாள். அவளே தைரியமாக இருக்கும் போது இவனுக்கு என்ன வந்தது? ஒன்றும் புரியவில்லை. அவள் குழம்பி நின்று கொண்டிருக்கும் போது அவள் அம்மா அப்பா தங்கை பரபரப்புடன் வந்தார்கள்.



“என்னாச்சு சித்ரா? மாப்பிள்ளையை யார் கத்தியால் குத்தியது? என்ன நடந்தது? போலிஸ் கேசாகிவிட்டதா?”



ஆயிரம் கேள்விகள் சரமாரியாக அவளிடம் கேட்டார்கள். அவள் என்ன பதில் சொலிவிட முடியும்?



“அம்மா....நான் நடை பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்தேன்....” நடந்ததை விளக்கினாள். அவன் தன்னைத் தானே குத்திக் கொண்டான் என்று சொல்வதா வேண்டாமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர்களை நர்ஸ் பார்க்க அனுமதித்தாள். ஆனால் கறாராக சொல்லிவிட்டாள்.



“அவரிடம் பேச்சுக் கொடுக்க கூடாது. போலிஸ் இன்வெஸ்டிகேக்ஷன் நடக்குது. எனவே அமைதியா பார்த்திட்டு வந்திடுங்க. ஐஞ்சு நிமுஷம் டைம். அவ்வளவு தான். கத்தி கூச்சல் போடக் கூடாது.”



அவர்கள் வருகிறார்கள் என்று நர்ஸ் சொன்னதும் ராகவன் தூங்குவது போல் கண்களை மூடிக் கொண்டான். இது ஒரு நல்ல டெக்னிக்.



“மாப்பிள்ளை நல்ல தூங்கறார். நல்ல வேளை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. யார் இந்த வேலையை செய்ததோ?” கிசுகிசு

தொனியில் பேசிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்கள்.



“என்னம்மா இது? ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது போலிருக்கே. நீ அப்பவே...” அப்பா பேச்சை முடிக்கவில்லை அம்மா குறுக்கிட்டாள். அவள் குரலில் வருத்தம் இருந்தது.



“கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? எப்ப என்ன பேசறதுன்னு உங்களுக்கு விவஸ்தையே இல்லை. சித்ரா சாப்பிட்டியாம்மா?”

தலையாட்டினாள் சித்ரா. அவளுக்கு இப்பொழுது தனிமை தேவைப்பட்டது. ஆளாளுக்கு ஏதாவது சொல்வார்கள். போகாத ஊருக்கு வழி சொல்வார்கள். அவளே குழம்பிப் போயிருக்கிறாள்.



“சரிம்மா...நீங்க எல்லாம் இப்ப போங்க. ஏதாவதுன்னா நான் உங்களை கால் பண்றேன்....” என்று அவர்களை விரட்டி விடுவதிலேயே குறியாக இருந்தாள் சித்ரா. அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்ப இரவு ஒன்பது மணியாயிற்று.



அவள் ஆஸ்பத்திரி காண்டீனில் இட்லி வாங்கி மகனுக்கு கொடுத்தாள். அவன் மெளனமாக சாப்பிட்டான்.



“பாபு...பயப்படாதே. அப்பாவுக்கு சரியாயிடும்.”



“பயமா இருக்கும்மா. போலிஸ் என்ன செய்யும்? உன்னை ஜெயில்லே போட்டிடும்மா? நான் தனியா எப்படிம்மா இருப்பேன்.?”



“அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது. அம்மா எப்பவும் உன் கூடத் தான் இருப்பேன். போலிஸ் என்னை ஒன்னும் அரஸ்ட் பண்ண மாட்டாங்க.”



பாபு தலையசைத்தான். அவன் கண்களில் ஒரு சின்ன நம்பிக்கை தெரிந்தது. அம்மாவின் புடவை முந்தானையை இருக்க பற்றிக் கொண்டான். அவள் எங்கே போய்விடுவாளோ என்று பயந்திருந்தான்.



கை ரேகை நிபுணர்களின் ரிப்போர்ட் வந்தது. அதில் ராகவனின் கைரேகை தான் இருந்ததாக ரிப்போர்ட் சொன்னது.



“அம்மா...உங்க கணவர் மன உளைச்சல் காரணமா தன்னை முடித்துக் கொள்ள முயற்சி பண்ணியிருக்கார்னு தெரியுது. அறுவை சிகிச்சை ரணம் ஆறியதும் அவர் ஆஸ்பத்திரி விட்டு போக முடியாது. மன நல மருத்துவர் சர்டிபிக்கேட் கொடுக்கணும் இவர் இனிமே இப்படி செய்ய மாட்டார்ன்னு சொல்லணும். பார்த்துக்கோங்க சரியா?”



அப்பாடா இத்தோடு போலிஸ் தொல்லை முடிந்ததே என்று அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளுக்கு வருத்தமாக இருந்தது. தன்னை அவன் வெறுத்தது ஒரு பக்கம் இருக்கட்டும்...இப்படி தான் பெற்ற குழந்தையை கூட வெறுத்து இந்த உலகத்தை விட்டே போக துணிஞ்சது எதனால்? மனசுக்கு சங்கடமாக இருந்தது. அம்மாவின் தொல்லை தாங்காமல் மன உளைச்சலா? இல்ல வேறு காரணங்களா என்று தெரியவில்லை. அவளுக்கு காரணம் தெரியவேண்டும். அப்ப தான் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். இரவு அவளை அங்கு தங்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அவளுக்கு மனசு ஒப்பவில்லை.



“அவர் மீண்டும் ஏதாவது தப்பான முடிவுக்கு வந்து...”



“கவலைப் படாதீங்க. அவரை தனியே விட மாட்டோம். நர்ஸ் மட்டுமல்ல செக்குரிடியும் இருப்பார்.”



வேறு வழியில்லாமல் வீட்டுக்குச் சென்றாள் சித்ரா.



பத்து நாட்கள் ஓடிவிட்டது. இந்த பத்து நாட்களின் இரவும் சித்ரா நல்ல தூக்கம் இல்லமால் அவதிப்பட்டாள். பகலில் அவனுடன் ஆஸ்பத்திரியில் இருந்தாள் என்றாலும் அவனுடன் அவள் பிரச்சனைகள் பற்றி எதுவும் பேசவில்லை. அவனுக்கு கௌன்சலிங் கொடுத்த டாக்டர் முரளிதரன் மிகவும் நல்ல மாதிரியாக இருந்தார். சின்ன வயது தான். முப்பது அல்லது ஒன்று இரண்டு கூட இருக்கலாம். தெளிவாக பேசினார்



“மிஸ்ஸஸ் ராகவன்....நீங்க கவலை பட வேண்டாம். பேஷன்ட் மனநிலை அறிந்து மெல்ல மெல்ல அணுகி அவருக்கு எடுத்துச் சொல்வோம். யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத சில விஷயங்களை அவர் என்னிடம் பகிர்ந்து கொள்ளும்படி செய்யணும் அவருக்கு முதலில் என் மேல் நம்பிக்கை வரவேண்டும். பிறகு தான் அவரோட கவலையை மன அழுத்தத்தை புரிந்து கொள்ள முடியும். பொறுமை வேண்டும். நீங்களும் ஒத்துழைக்க வேண்டும். உங்க கிட்டே சில கேள்விகள் கேக்கலாமா?”



“உங்களுக்கும் அவருக்குமான உறவு சுமுகமாக இருந்ததா?”



என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் சித்ரா. அவள் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. இவ்வளவு கனிவாக யாரும் அவளிடம் பேசினதில்லை. அப்படியே எல்லாவற்றும் கொட்டி விட வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் தயங்கினாள்.



“நீங்க சொன்னா தான் சூழ்நிலையை புரிந்து கொண்டு நான் அவருக்கு கௌன்சலிங் கொடுக்க முடியும். மேடம் பயப்பட வேண்டாம். மனுஷங்களுக்கு எல்லா சமயமும் தைரியம் வருவதில்லை. குழப்பங்கள் பயங்கள் விரக்தி என்று இருண்ட மேகம் போல் அது மனதை கவ்வி மூடும். அப்ப அவர்கள் இது மாதிரி முடிவுகள் எடுப்பார்கள். தானே போட்டுக் குழப்பிக் கொள்வதால் தான் மன இறுக்கம் அதிகமாகிறது. அடிப்படை தெரிந்து கொண்டால் நான் உதவ முடியும். சொல்லுங்க..” ஏதோ கடவுளே நேரில் வந்து பேசுவது போல் இருந்தது.



தனி அறை. ஏ.சி ஓடிக்கொண்டிருந்தது. கனிவான அந்தக் கண்களை சந்தித்த போது இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் கட்டாயம் வரும். ராகவனுக்கு நல்ல முறையில் இவர் பேசி கௌன்சலிங் பண்ணினால் பலன் கிடைக்கும் என்று அவளுக்கு நம்பிக்கை வந்தது. கண்களை துடைத்துக் கொண்டாள்.



“கேளுங்க...சொல்றேன்...”



“உங்களுக்கும் உங்க கணவருக்குமான உறவு எப்படி இருந்தது?’



“நானும் அவரும் நகமும் சதையும் போல் ஒற்றுமையாக காதலாகத் தான் வாழ்ந்தோம். எனக்கு குழந்தை பிறந்து இறந்து போனது. அது முதல் பிரச்சனை ஆரம்பாகியது.”



“அவரால் அந்த சாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லையா? நீங்க தான் அதுக்கு காரணம்னு சொல்லி கோபப்பட்டாரா?”



எப்படி இவ்வளவு சரியாக சொல்கிறார் என்று சித்ராவுக்கு வியப்பாக இருந்தது. இது வரை எல்லாத்துக்கும் அவள் தான் காரணம் என்று பவானியும் கவிதாவும் அவள் கணவரும் குற்றம் சாட்டி சாட்டியே அவளுக்கு தான் தான் எல்லாவற்றுக்கும் காரணமோ என்ற எண்ணமே வந்து விட்டது.



“ஆமாம். அப்படித்தான் கோபப்பட்டார்கள்.” சொல்லிய போது அவளையும் மீறி துக்கம் உடைபட்டு கண்ணீர் குபு குபுவென்று பெருக்கெடுத்து ஓடியது. இத்தனை நாள் அடைபட்டுக் கிடந்த துக்கம் அணையை உடைத்துக் கொண்டு வரும் வெள்ளம் போல் கொட்டியது.



“ஏதாவது கேட்டால் முகம் சுளிக்கிறாள். தப்பை ஒத்துக்கொள்ளவே மாட்டாள்.” என்று மாமியாரும் கவிதாவும் மாறி மாறி சொல்லியிருக்கிறார்கள். பதில் பேசினால் அழுதுவிடுவோமோ என்று அஞ்சி அஞ்சி உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு பாபுவுக்காக மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறாள். இன்று அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு சொல் அவளை அந்த அந்தகாரத்திலிருந்து வெளிக் கொண்டு வந்தது.



இந்த கத்திக் குத்து சம்பவம் நடந்து கூட நல்லதுக்குத் தான் போலிருக்கு என்று அவள் எண்ணினாள். சுகமா அவளை அழவிட்ட முரளி பிறகு மெதுவாகச் சொன்னான். டன் கணக்கில் அதில் கனிவு இருந்தது.



“இதில் உங்க மேலே என்ன தவறு இருக்க முடியும்? அந்த குற்ற உணர்விலிருந்து வெளியே வாருங்கள். அப்போது தான் தெளிவாக சிந்திக்க முடியும்? எந்த தாயும் குழந்தை சாக வேண்டும் என்று நினைக்க மாட்டாள். அது கூட புரிந்து கொள்ளாத மனிதர்களின் ஏச்சுக்கு நீங்க இனி முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. பிறகு அடுத்து என்ன நடந்தது? உங்க பக்க நியாங்களை தைரியமா சொல்லுங்க.”



“எனக்கு பிள்ளை பெற்றதன் விளைவாக உடல் பலகீனம் அடைந்திருந்தது. உடனே அடுத்த பிள்ளை வேண்டும் என்று என் கணவர் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார். சிறிது இடைவெளி..அதாவது ஒரு ஆறு மாசமாவது ரெஸ்ட் வேண்டும் என்று சொன்னேன்...”



“அதுக்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை. அப்படித்தானே. மேடம் நீங்க அப்ப கட்டாயப்படுத்தப்பட்டு தான் அடுத்த தாய்மை பேற்றை அடைந்தீர்களா? இதுக்கு உங்க கணவரின் வற்புறுத்தல் மட்டும் தான் காரணமா இல்லை அவர் அம்மாவின் தலையீடு இருந்ததா?”



சித்ராவுக்கு மனதில் சின்னச் சின்ன பூக்கள் பூக்க ஆரம்பித்தது. நீ தான் ….நீ தான் துப்புக் கெட்டவள்...சரியில்லாதவள் என்ற இருட்டு வார்த்தைகளைக் கேட்டு கேட்டு, இதுக்கு நீங்க வற்புருதப்பட்டீர்களா என்று கேட்ட போது அந்தக் கேள்வி அவளுக்கு தெம்பை கொடுத்தது. இந்தக் கேள்விகள் மூலம் அவள் தன்னுடைய ஸெல்ப் கான்பிடன்ஸ்சை பெற்றாள். அவள் அவளாக இருப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது!



“அன்பு என்பது ஒரு வழி பாதையாக இருப்பது ஆரோக்கியமானதல்ல. உங்களிடம் உங்க கணவர் மனம் விட்டு பேசினாரா?”



“என் மாமியார் என்னை திருமணம் ஆன புதிதிலேயே தனி குடித்தனம் வைத்து விட்டார்கள். ஒரே ஒரு நாள் தான் என் கணவரோட குடும்பத்துடன் இருந்தேன். அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. மனுஷங்களை நேசிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். கலகல என்று எல்லோருடனும் வாழ்வது ஒரு அழகு. ஆனால் என் மாமியாருக்கு நான் கூட இருப்பதில் விருப்பமில்லாமல் போனதற்கு என் ஒர்படி கவிதா தான் முக்கிய காரணம்.’



“ஒ...அவங்க எதிர்ப்பு காட்டினாங்களா?”



“என்னுடைய யூகம் தான். அவங்க என் மாமியாரின் அண்ணன் மகள். அவர்களிடையே ஒரு பலமான பிடிப்பு இருக்கிறது. எங்கே அது திசை மாறி என் பேச்சு எடுபட்டுவிடுமோ என்ற பயம் காரணமாக அவங்க...”



“புரியுது. ஸோ...நீங்க உங்க மாமியாருக்கு வேண்டாத மருமகளா இருக்கணும்கறது தான் அவங்களோட பிளான்.”



“சரியா சொன்னீங்க. இந்த விரோதம் காரணமா அவங்க ஏன் ஆள் விட்டு உங்க கணவரை குத்தி இருக்கக் கூடாது? தன் குடும்பத்து ஆட்களை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு உங்க கணவர் தானே குத்திக் கொண்டதா சொல்லியிருக்கலாம் இல்லையா?”



“தெரியலை...அந்த அளவுக்கு போவாங்களான்னு சந்தேகமா இருக்கு. என் கணவர் மனசிலே என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலை. அது தான் சிக்கல். அவருக்கு தன் மகன் மேல் அவ்வளவாக பிடிப்பு இல்லை. அது ஏன் என்று என் மனம் கேட்டுக் கொண்டே இருக்கிறது....”



“உங்க முதல் குழந்தை இறந்தபோது உங்க மாமியார் ரீயாக்ஷன் என்ன?”



“நான் குழந்தை உண்டானது தெரிந்ததுமே அவங்க எனக்கு பொன் குழந்தை பொறக்கக் கூடாதுன்னு சொன்னாங்க.”



“ஆச்சர்யமா இருக்கே. எதுக்கு அப்படி சொன்னாங்க?”

“அவங்களுக்கு ஏற்கனவே இரண்டு பேத்தி இருக்காங்களாம். அதனாலே எனக்கு பையன் தான் பிறக்கணும்னு உத்தரவு போட்டாங்க.”



முரளிதரன் தன் தாடையை தடவிக் கொண்டு யோசித்தான். எத்தகைய மனநிலை இது? மூத்த மகனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் என்பதற்காக இரண்டாவது மகனுக்கு பெண் குழந்தை பிறக்கக் கூடாதுன்னு சொல்றது எவ்வளவு அர்த்தமற்ற எண்ணம். இந்தப் பெண் பாவம் ஒரு சைக்கிக் குடும்பத்திலே போய் மாட்டிக்கிட்டா போலிருக்கு என்று எண்ணினான். அவளை அனுதாபத்துடன் பார்த்தான். நல்ல பெண்ணாகத் தெரிகிறாள். அன்பானவளாகத் தோன்றுகிறது. அடாவடி பேர்வழி மாதிரி தெரியலை. அப்படியிருந்தும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் சம்திங் பேசிகலி ராங் வித் தெம்.



“இது ஒரு சிக்லி மென்டாலிட்டி. பேசாம அவங்களை இக்னோர் பண்ணிட்டு நீங்க ஏன் வாழ முயற்சிக்கலை?”



என் கணவருக்கு அவங்க அம்மாவின் அன்பும் அங்கீகாரமும் ரொம்ப அவசியமா தோணுது. பெண் குழந்தை இறந்ததுக்கு.....பெண் குழந்தை தானே செத்தாலும் பரவாயில்லை என்று அவங்க அம்மா பேசினாங்க. அதுக்கு அவருக்கு கோபம் வந்தது உண்மை. உடனே குழந்தை உண்டாகனும்னு பிடிவாதம் பிடிச்சார். அப்படியாவது அம்மாவின் கவனம் தன் மேல் படாதான்னு ஒரு நினைப்பு. அப்ப கூட என் மாமியார் இது ஆண் குழந்தையாக இருக்கணும்னு சொல்லிட்டாங்க.”



“அதான் அவங்க விருப்பபடி ஆண் குழந்தை பிறந்திடுச்சே. பிறகு என்ன சிக்கல்? மேலும் மேலும் எதுக்கு பகை?”



“அதுக்கு விதியை தான் காரணம் சொல்லணும். என் மகன் முதல் பிறந்த நாள் அன்று என் மாமனார் இறந்துவிட்டார்...அது ஒரு சோக நிகழ்ச்சி. அதுக்கப்புறம் நான் ஒரு கெட்ட சகுனம் என்று என்னை ஒதுக்கவும் வெறுக்கவும் ஆரம்பிச்சுட்டாங்க. படிப் படியா அது என் கணவரின் மன நிலையை பாதிச்சிடுச்சு. அவரை குத்தும் அளவுக்கு யாரும் இல்லை. எனக்கு யார் மேலும் சந்தேகம் இல்லை. அவரும் இப்படிப்பட்ட காரியம் செஞ்சிருப்பார்னு தோணலை. அவர் தான் இதுக்கு தீர்வு சொல்ல முடியும். டாக்டர்...எனக்கு என் கணவர் வேண்டும். நாங்க முன் போல் மகிழ்ச்சியா குடித்தனம் நடத்த வேண்டும். அவரை நான் அதிகமா நேசிக்கிறேன். அதனாலே என்னாலே அவரை மன்னிக்கவும் முடியும். ப்ளீஸ்...நீங்க அவருக்கு அட்வைஸ் பண்ணி எங்களை சேர்த்து வையுங்க.”



“கண்டிப்பாம்மா. நிச்சயம் உங்க எண்ணம் பலிக்கும்.” அவர் சொல்வதை கேட்டு மகிழ்ச்சியோடு போனாள் சித்ரா.



முரளிக்கு எப்படியாவது இந்தப் பெண்ணின் வாழ்வில் சந்தோஷத்தை கொண்டு வரணும் என்று தோன்றியது. முதலில் ராகவன் மனதில் புதைந்து கிடக்கும் ரகசியத்தை வெளிக் கொண்டு வரணும் என்று முரளி தீர்மானித்தான்.





கப்பல் மிதக்கும்
 

sankariappan

Moderator
Staff member
காகிதக் கப்பல்கள் ஒன்பதாம் அத்தியாயம் உங்களுக்காக தோழியரே. படித்துப் பார்த்து விமர்சனம் செய்யுங்கள் . நன்றி

அத்தியாயம்---9



ராகவன் புண்கள் ஆறிவிட்டது. மனதின் ரணம் தான் ஆறவில்லை. ஆனால் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றியது. நல்லதோ கெட்டதோ தி எண்டு என்ற வார்த்தை வரவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நாளாகவே கீதாவைக் காணும். அது ஒரு பெரிய நிம்மதியை கொடுத்தது. எங்கே போயிருப்பாள்? திரும்ப வந்துவிடுவாளோ? அவளுக்கு இந்த கத்தி குத்து விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டது. அதான் தலை மறைவாகிவிட்டாள். அவள் செய்த திருட்டுத்தனம் அம்பலமாகிவிடுமோ என்ற பயம் அவளுக்கு வந்திருக்கும். ஆஸ்பத்திரியில் இன்னும் ஒரு மாசம் இருக்கவேண்டும் என்பது கசப்பான விஷயம் தான். நிலா மெல்ல ஆஸ்பத்திரி ஜன்னலை வந்து எட்டிப் பார்த்தது. வானத்தில் ஒரு காம்பஸ்சால் ஒரு அழகான வட்டத்தை ஒரு சின்னப் பையன் வரைந்தது போல் நிலா பூரணத்துவதுடன் மிளிர்ந்தது. நிலா....நீ அங்கே காய்...நான் இங்கே காய்கிறேன். எங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பூக்க எப்ப காயப்போகிறாய்?



“மிஸ்டர் ராகவன்...நான் உள்ளே வரலாமா?”



“ஒ...டாக்டர் முரளி வாங்க வாங்க...ஒரு நாற்காலி கூட இல்லையே, உங்களை உக்காரச் சொல்ல...”



“இட் ஆல்ரைட். இப்ப எப்படி இருக்கீங்க?”



“மச் பெட்டர். உடம்பு சரியாகிவிட்டது.”



“ஆனால் மனசு? அதுக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவை போலிருக்கே.”



“நோ..நோ. அதெல்லாம் இல்லை. இனி என்ன பிரச்சனை?”



“சொல்லுங்க அந்த கீதா பத்தி.”



“அது...அவள், அம்மா எனக்கு பார்த்த பெண். அவ்வளவு தான். எனக்கு வேறு விவரம் தெரியாது.”



“மறைக்காதீங்க ராகவன். அவங்களைப் பத்தி நாங்க இன்வெஸ்டிகேட் பண்ணிட்டோம். அதுக்கப்புறம் தான் உங்க கிட்டே வரோம்.”



“என்ன...என்ன கண்டு பிடிச்சீங்க? நீங்க சொல்றது என்னன்னு எனக்குப் புரியலை. ப்ளீஸ் என்னை விசாரணை பண்ணறேன் பேர்விழி என்று என் வாயிலிருந்து வார்த்தைகளை புடுங்காதீங்க.”



“கீதா உங்க பேரிலே கேஸ் போடப் போறதா பயமுறுத்திக்கிட்டு இருக்கா இல்லையா? அதனாலே நீங்க கத்தியால் குத்திக்கிட்டு ஆஸ்பத்திரி வந்து படுத்துக்கிட்டீங்க. சரி தானே?”



“இல்லை...இல்லை....”



“பின்னே? சொல்லுங்க. நீங்க என் கிட்டே மனம் விட்டு பேசினாத் தான் நான் உங்களை காப்பாத்த முடியும் இல்லை அந்த கீதா உங்களை சும்மா விட மாட்டா. கம்பி எண்ண வச்சிடுவா.”



மென்று வழுங்கினான் ராகவன். அவன் முகம் வெளுத்துவிட்டது.



“அம்மாவோட டார்ச்சர் தாங்க முடியவில்லை. அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோ என்று தொந்தரவு. அதான் இப்படி செய்தேன். எனக்கு வேறு வழி தெரியலை.”



“அம்மாவின் டார்ச்சரை சமாளிக்க முடியாத கோழையா நீங்க?”



“ஆமாம். நானும் சித்ராவும் மனம் ஒன்றி வாழ்ந்து வந்தோம். அவளுக்கு குழந்தை பிறந்து இறந்ததிலிருந்து எங்கள்...எங்கள்...”



ராகவன் தலை குனித்தான். அவன் கண்களில் மினுமினுத்த கண்ணீரை மறைக்கவே அவன் தலை குனித்தான் என்று முரளி புரிந்து கொண்டான். நர்ஸ் வந்து ராகவனின் பி.பி...சுகர் எல்லாம் செக் பண்ணிவிட்டு மாத்திரை கொடுத்தாள். ராகவனுக்கு நீர் தேவைப்பட்டது. தாகம் நாக்கை வரட்டியது.



“சிஸ்டர்..கொஞ்சம் தேநீர் வேண்டும்...அல்லது தண்ணீர்.”



“இருங்க ராகவன்...நான் போய் சூடான தேநீர் கொண்டு வருகிறேன்.”

முரளி எழுந்து சென்றவுடன் சிஸ்டரிடம் அவன் சொன்னான்.



“சிஸ்டர்...உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன் டாக்டர் முரளியிடம் ஒன்றும் சொல்லிவிட வேண்டாம். நான் இப்ப வெளியில் போக முடியாத நிலையில் இருக்கேன். போக முடிந்த போது உங்களுக்கு ப்ராமிஸ் பண்ணிய படி ஒரு லட்சம் கொடுத்து விடுகிறேன்.”



“முதல்லே நீங்க அவரிடம் உண்மையை உளறிக் கொட்டாதீங்க. சொன்ன பொய்யான நீங்களே தான் குத்திக் கிட்டீங்கங்கறதை மாத்தி சொல்லிடாதீங்க. கீதா எங்க வீட்டிலே தான் இருக்கா. உங்க அம்மா மேலேயே பழியை போடுங்க. சரியா? பணம் மெதுவா கொடுங்க. போலீசில் மாட்டிக்காம சாமர்த்தியமா பேசுங்க. நான் வரேன்...” அவள் விருட்டென சென்றாள்.



முரளி இந்த உரையாடலை கேட்டு விட்டான். அவன் தேநீர் வாங்கப் போவதாக நடித்துவிட்டு கதவருகில் நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். ஆக நான் யூகித்தது சரிதான். இது வெறும் அம்மா செண்டிமெண்ட் பிரச்சனை இல்லை. அதோடு கூட எதுவோ இருக்கு. கீதா என்பவளை எப்படியாவது சந்திக்க வேண்டும். அவன் உண்மையில் சைக்கியாட்ரிக் டாக்டர் இல்லை. தனிப்பட்ட முறையில் துப்பறியும் வேலை செய்யும் ஒரு கம்பனியின் ஏஜென்ட். போலீஸால் அமர்த்தப்பட்டவன். தேநீர் வாங்கிக் கொண்டு அவன் ராகவன் அறைக்கு வந்தபோது ராகவனை டாக்டர் மாத்யுஸ் செக் பண்ணிக் கொண்டிருந்தார். அவன் தயங்கி நிற்க அவர் உள்ளே அழைத்தார்.



“வாங்க மிஸ்டர் முரளி. பேஷண்ட்டை அதிகம் டாக்ஸ் பண்ணாதீங்க. அவர் இப்ப தான் தேறி வருகிறார்.”



“எஸ் டாக்டர். என் செஸ்ஷன் இன்று முடிந்துவிட்டது. அவர் சூடான தேநீர் கேட்டார். அதான் வாங்கி வந்தேன்.”



“நீங்க எதுக்கு சிரமப்படுறீங்க. வார்டு பாயை சொன்னா அவன் வாங்கிக் கொடுத்திடுவான். ஒ.கே...ஸீ யூ...”



சொல்லிவிட்டு அவர் போக. முரளி ராகவனை பார்த்து புன்னகைத்தபடி “சூடா இருக்கு. தேநீர் குடியுங்க.” என்றான். ராகவன் மடக் மடக்கென்று குடித்துவிட்டு “தாங்யூ டாக்டர்.” என்று நன்றி கூறிவிட்டு படுத்துக் கொண்டு மெல் கண்ணை மூடிக் கொண்டான்.



“உங்களுக்கு நல்ல தூக்கம் அவசியம். நாளை வரேன்.”

முரளி போனதும் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டு தூங்க ஆரம்பித்தான் ராகவன். அவன் வெகு நாளைக்குப் பின் நன்றாகத் தூங்கினான். எல்லாம் சரியாகிவிடும் என்று அவனுக்கு தோன்றியது.



ராகவன் பார்த்த அதே நிலவை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சித்ரா. பால் நிலவு. வெளிச்சம் தந்து குளுர்வித்தது. மனசு குளிரவில்லை. அலைபாயுதே என்ற பாட்டை மெல்ல பாடியபடி மடியில் படுத்திருந்த மகன் பாபுவின் தலை முடியை கோதி விட்டாள் சித்ரா. ஒரு முறை அவளும் ராகவனும் கடற்கரை மணலில் பௌர்ணமி இரவில் எவ்வளவு சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த இனிய நினைவு அவளுக்கு வந்தது. வாழ்க்கை அப்பொழுது எவ்வளவு சுலபமாக இருந்தது. அவன் ரசிக்கும் கண்களை பார்த்துக் கொண்டு உலகமே என் கையில் தான் என்று இறுமாந்திருந்தது நினைவுக்கு வந்தது. அன்று அவர்கள் அவ்வளவு பேசினார்கள்.

இப்பொழுது நினைத்தால் எல்லோரும் இந்த நிலவைப் போலத் தானோ? தங்களுக்குள் இருக்கும் அம்மவாசையை மறைத்துக் கொண்டு வெள்ளி கிரனங்களை காட்டிக் கொண்டு...அந்த நிலவைப் போல்...

ராகவன் அப்படித்தான். அந்த நிலவில் பார்த்த ராகவனா இன்றுள்ள ராகவன்? இந்த நிலவில் அவள் பார்க்கும் ராகவன் வேறு. “நிலவே நீ சாட்சி. பார் அன்று என் கணவர் உன்னைப் போல் வெளுச்சமாக இருந்தார். இன்று அவர் நீ காணாமல் போகும் அம்மாவாசை போல் இருக்கிறார். நிலவே நீ தான் என் தோழி....உன்னிடம் தான் சொல்வேன். பேசுவேன். என்னையும் உன்னுடன் சேர்த்துக் கொள்வாயா நிலவே?.”



மனிதர்கள் யார் யாரிடமோ பேசுகிறார்கள். அன்று ஒரு நாவல் படித்தாள் சித்ரா. அதில் அந்தக் கதாநாயகி கடிதத்தோடு பேசுகிறாள். அவள் கணவன் மறைந்துவிட்டான் போர்முனையில். கார்கில் போர். அவன் எழுதிய கடிதம் வரும் முன் அவன் இறந்த செய்தி வந்துவிடுகிறது. அவன் உடல் வரும்முன் அவன் கடிதம் வந்திருந்தது. அவள் அந்தக் கடித்தத்தைப் பார்த்துக் கேட்கிறாள்.



“கடிதமே...உனக்கு வாழத் தெரியவில்லையே. என் கணவன் உயிரை நீத்தார் நாட்டுக்காக. நீ உயிர்விட்டது எதுக்காக? வார்த்தை என்னும் துப்பாக்கியால் என்னை சுட்டுவிட்டு நீ இறந்து கிடக்கிறாய். வேடிக்கை பார்த்தாயா? உனக்கும் ஒரு சவப்பெட்டி தயாரித்துவிட்டேன்.” தன் நகை பெட்டியில் அந்தக் கடிதத்தை புதைத்து விட்டாள் என்று நாவல் முடிகிறது. அவள் ரசித்த கணவன் அவளை மறந்துவிட்டான். புதிய அவதாரம் எடுத்துள்ள இந்தக் கணவனின் நினைவுகளை அவள் மனம் என்னும் சவப்பெட்டியில் போட்டு விட்டாள். ஏசு உயிர்த்து எழுந்தது போல் அவன் ஒரு நாள் உயிர்த்து எழுவானோ? சொல் நிலவே சொல்...

அவள் கொஞ்சம் சத்தமாக சொல்லிவிட்டாள். பாபு விழித்துக் கொண்டான்.



“என்னம்மா? என்ன சொல்லனும்னு நிலா கிட்டே சொல்றே? என் கிட்டே சொல்லும்மா. நிலா பேசுமா என்ன?”



“கண்ணா...உன் கிட்டே சொல்ல முடிஞ்சா சொல்ல மாட்டேனா.? உனக்குப் புரியாது. உன் மழலை மனம் இன்னும் பால் வடியும் நிலையில் தானே இருக்கு. அதில் உலகத்தின் பொய் வடிய வேண்டாமே.”



“அம்மா....நான் உண்மை சொல்லாமல் இருந்தாக் கூட அது பொய் தானே?”



அவன் அப்படி சொன்னதும் அவள் திடுக்கிட்டாள். என்ன சொல்கிறான் இவன்? அவள் பரபரப்புடன் கேட்டாள்.



”என்னடா சொல்றே?

உண்மையை மறைக்கிறயா? பொய்யை காப்பாத்றியா?”



பாபு அந்த நிலவைப் பார்த்தான். இதே மாதிரி நிலவில் தானே அப்பா அவனை...அவனிடம்...ஒரு உண்மையை சொன்னார். இந்த நிலவு தான் சாட்சி. அவனுக்கு இன்னமும் குழப்பமாக இருந்தது. அவன் பிஞ்சு மனதில் அன்று நடந்தது கனவா நிஜமா? அவனுக்கு பயமாக இருந்தது. அம்மாவிடம் சொல்லலாமா? சொன்னால் அம்மா அடிப்பாளா?



“சொல்லுடா...எதுவானா அம்மாக்கிட்டே சொல்லுடா.”



“சொன்னா நீ அடிப்பே...”



“அடிக்க மாட்டேன். சொல்லு. என்ன நடந்தது? எந்த உண்மையை மறச்சிட்டு இருக்கே? அம்மாவுக்கு சொன்னா நான் எல்லாம் சரி பண்ணிடுவேன். என்னை நம்பு”



சித்ராவுக்கு அவன் மௌனம் கவலை அளித்தது. அவன் இத்தனை நாளாக அவனாக இல்லாமால் ஏதோ ஒரு நிழல் போல் அசைந்துக் கொண்டிருந்தது இந்த உண்மையை மறைத்ததன் கனம் தாளாமல் தானா? அவள் அந்த நிலவைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.



“ஒரு பூவுக்குத் தெரியும் எப்ப அதன் பட்டாம்பூச்சி திரும்ப வரும் என்று. நிலவு வெளிநடப்பு செய்தால் அந்த வானம் புரிந்து கொள்ளும். ஆனால் எனக்கு வலிக்கிறது நீ என்னை பிரிந்திருக்கும் இந்த கணம். திரும்ப வருவாயா என்று எனக்குத் தெரியவில்லையே.” சநோபர் கான் என்பவர் தன் காதலி பிரிந்து போனது குறித்து ஒரு இலக்கியம் படைத்திருக்கிறார். அவளுக்கும் தான் தெரியவில்லை அவளின் அவன் நல்லபடியாக அவளுக்கு திரும்பக் கிடைப்பானா என்று. மகன் பாபு வாய் திறந்தால் அவளுக்கு அவள் வாழ்வின் பாதை தெரியும் என்று தோன்றியது. பாபு கண்களில் பயம் தெரிந்தது. அவனிடம் அழுத்திக் கேட்டால் அவன் அந்த சுமையை தாங்குவானா? அவனே சொல்லட்டும் என்று அவள் காத்திருந்தாள். இரவு நிலவும் போய் கொண்டிருந்தது அவன் மௌனம் மட்டும் நின்று கொண்டிருந்தது.



“சரி வா பாபு...நேரமாச்சு படுக்கப் போகலாம்.”

எவ்வளவு நேரம் உண்மை படுத்துக் கொண்டிருக்கப் போகிறதோ?



ஒளி எங்கிருந்தாலும் நிழல் நிச்சயம் விழும். இங்கே நிழல் மட்டும் தான் தெரிகிறது. ஒளி எங்கிருக்கிறது என்று சித்ராவுக்குப் புரியவில்லை.

முகங்கள் மாறுகின்றன. மனசுகள் மாறுகின்றன. ஐஸ்கிரீம் சாப்பிட ஆர்டர் கொடுத்தால் சுண்டக்காயும் பாவக்காயும் வந்தால் கூட பரவாயில்லை, உடம்புக்கு நல்லது என்று சமாதானமாகிவிடலாம். ஆனால் விஷம் அல்லவா வந்து விழுகிறது. விழுங்கிவிட்டு சிவனைப் போல் தொண்டையில் தாங்கிக் கொள்ளும் திறன் அவளிடமா இருக்கு?

கணவன் தான் ஏதோ மறைக்கிறான் என்றால் பாபுவும் பயத்தில் ஏதோ மறைக்கிறான். யார் முதலில் வாயை திறக்கப் போகிறார்கள்?



மறுநாள் அவள் ஆஸ்பத்திரிக்குப் போன போது ராகவன் அவளை ஆவலோடு வரவேற்றான். அவன் முகத்தில் ஒரு தெளிவு இருந்த மாதிரி இருந்தது. அடைக்கலம் தேவை என்று அவன் கண்கள் சொல்லியது. கொண்டு வந்த பலகாரத்தை அவனுக்கு கொடுத்துவிட்டு அவள் அவன் முகத்தை கூர்ந்து பார்த்தாள்.



“சித்ரா..உன் கிட்டே ஒரு உண்மையை சொல்லப் போறேன். இத்தனை நாள் மறைச்சு வச்சது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். சித்ரா நீ என்னை மன்னிப்பாயா?”



“மன்னிக்கத் தானே நான் பொறந்திருக்கேன். பாபுவுக்காக அந்த முடிவுக்கு வந்து தானே இத்தனை நாள் உங்க கூட ஒட்டிக்கிட்டு இருக்கேன். சொல்லுங்க...என்ன உண்மை?”



“அது வந்து என் மேல் எந்த தப்பும் இல்லை...அம்மா தான்...”

அவன் சொன்ன தகவல் அவளுக்கு அதிர்ச்சி அளித்தது.



“நீங்க பொய் சொல்றீங்க? என்னை முட்டாளாக்கப் பார்க்கிறீங்க.”



“இல்லே...நான் உண்மையை தான் சொல்றேன்.”



“உங்களுக்கு சுய புத்தி இருந்தால் இப்படி அவங்க சொன்னாங்கன்னு என்னை தனியா வீட்டிலே வச்சிருப்பீங்களா? தினமும் வந்து உங்களுக்கு சமைத்துப் போட்டு...மனைவி ஸ்தானத்தை விட்டு வேலைக்காரி ஸ்தானத்தை கொடுப்பீங்களா? எல்லாம் நான் சம்பாதிக்கலைன்னு தானே அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டீங்க?”



இவ்வளவு நாள் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்தாள் சித்ரா. அவனுக்கு உரைத்தால் சரி. அன்ஜலினா ஜோல்ஸ் அப்படிங்கற பெண்மணி சொல்லியிருக்காங்க, அவள் பத்திரிகையில் படிச்சிருக்கா. அவங்க சொல்றாங்க—



“எனக்கு என் கணவன் துரோகம் செய்வது தெரிந்தால், அவனை நான் கொல்ல மாட்டேன். ஏன் தெரியுமா? நான் அவனுடைய குழந்தைகளை நேசிக்கிறேன். அவங்களுக்கு தந்தை வேண்டும். ஆனால் அவனை அடித்து நொறுக்குவேன். எனக்கு தெரியும் அவனின் ஸ்போர்ட்ஸ் காயங்கள் எங்கெல்லாம் இருக்குன்னு.” ஒரு புகழ் பெற்ற விளையாட்டு வீரனின் காதல் மனைவியான புகழ் பெற்ற நடிகை கூட குழந்தைக்கு தந்தை வேண்டும் என்று நினைக்கிறாள். அப்புறம் நான் நினைப்பதில் என்ன தவறு? முடிந்த வரை பார்ப்போம். இன்னும் இறுதி சுற்று வரவில்லையே!. ராகவன் அவளிடம் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் சித்ரா. அவள் கண்களில் கொதிக்கும் பிழம்பு போல் இறங்கியது கண்ணீர். எதிர்பாராத தாக்குதல்.



கப்பல் மிதக்கும்



?
 
Top