கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீரோட்டாம்

sankariappan

Moderator
Staff member
நீரோட்டம் ஒரு முன்னோட்டம்.

ஒரு அழகான முதியோர் இல்லத்தை நடத்தும் தலைவி. அவள் ஏன் அதை நடத்துகிறாள்? அவள் அம்மாவுக்கும் அவளுக்குமான மன பேதம் என்ன? தங்கையை பிரிந்து அப்பாவை பிரிந்து அவள் வாழ்கிற வாழ்கைக்கு என்ன அர்த்தம்? அவள் யாரை சந்திக்கிறாள்? அவள் வாழ்க்கையை புரட்டிப் போடும் அவனை அவள் நெருங்க விடுகிறாளா? அப்படி ஒரு புதிர் பெண் தான் நம் கதாநாயகி. அவளை உங்களுக்கு பிடிக்கும். வாங்க அவளை நீரோட்டத்தில் சந்தியுங்கள்... நீரோட்டம்

அத்தியாயம் --1




அந்த முதியோர் இல்லத்தில் ஒரு மரணம். அது அந்த இல்லத்திற்கு புதிது இல்லை. சாவின் விளிம்பில் வாழ்க்கையை தொற்றிக்கொண்டு இருக்கும் அங்கிருந்த பலரின் கனவு தான் மரணம். எப்போ எனக்கு சாவு வரும், கனவு நிஜமாகும் என்று தவிக்கும் மனசுகள். எழுபதை தாண்டியவரும் இருந்தனர். தொண்ணுத்தாறு தொடும் வயதினரும் இருந்தனர். பலரும் விடுதலை வேண்டி காத்திருக்கும் காலம் இது. அதுவரை இது சிலருக்கு ஒருவித சிறைச்சாலை. சிலருக்கு ஓய்வு நேரம்...சிலருக்கு அமைதி கிடைத்த நேரம்...இன்னும் சிலருக்கு வேதாந்தம் பற்றி உணரும் நேரம்.

“சாந்தாம்மா போய்விட்டாள். மகராசி...இனி எனக்கு எப்பவோ ?” என்று பிரலாபித்தாள் பார்வதியம்மா.

“பாட்டி சாவை ஏன் இவ்ளோ அவசரப்பட்டு வெத்தலைப் பாக்கு வச்சு அழைக்றேங்க? அது வரும் போது வரும். ஜாலியா இருங்க.”என்றாள் முத்து.

“அடி செருப்பாலே... ஏன் சொல்லமாட்டே?...தளுக்கி மினுக்கற வயசு உனக்கு..நாங்க சருகுடி...”

“பொறாமையா இருக்கா.?”

“நான் ஏண்டி பொறாமைப்படணும்? நான் என்ன அந்த சாந்தாம்மா மாதிரி கொடுத்து வைக்காதவளா?...அழகு போலே மகன் இருக்கான் கொள்ளி போட.”

முத்தம்மா பெருக்கி முடித்துவிட்டாள். “மணி எட்டாகுது சாப்பிட ஹாலுக்கு வாங்க பாட்டி.” என்று அன்புடன் கூறிவிட்டுச் சென்றாள்.

முத்தம்மா இங்கு வேலைக்கு வந்த பிறகு நிம்மதியாக இருக்கிறாள். இங்கு வந்து சேர்ந்த புதிதில் அவள் கணவன் கோபாலு குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்தான். “ஏய்...முண்டச்சி..இந்த மாதம் சம்பளம் வாங்கி இருப்பே இல்லே....மரியாதையா கொடு..இல்ல நொறுக்கிப் போடுவேன் ..” இவன் எப்பொழுதும் இப்படித்தான்....அவள் வேலை பார்க்கும் வீடுகளில் மாதம் பிறந்ததும் குடித்துவிட்டு வந்து காலாட்டா பண்ணி காசை வாங்கிக்கொண்டு போய்விடுவான். சம்பளத்தில் பாதிய கொடு போதும்....நான் நாணயஸ்தன் என்று பெருமை பீற்றுவான்..இவனிடம் கொடுக்கமுடியாது என்று அவள் வாதாடினால்...முண்டச்சிக்கு அவ்வளவு திமிரா என்று முடியை பிடித்து இழுப்பான்.. கன்னத்தில் அறைவான்...அநியாயமாக அவள் நடத்தையைப் பற்றி அசிங்கமாகப் பேசுவான்..அவள் வைத்துக் கொண்டிருக்கும் காதலர்களுக்குப் போகிறதா காசு என்று கேட்பான். இவன் கலாட்டா தாங்காமல் கொடுத்துவிடுவாள். வீட்டுத் தலைவி முகம் சுளிப்பாள். அடுத்த மாதமும் இதே கதை தான்.....இரெண்டாம் மாதமே அவளை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். குழந்தைகள் பசியோடு இருப்பதைப் பார்க்க தாங்கமுடியாத வலி வரும். ஒன்றரை வயது பையன் மணிகண்டன் ...மூன்று வயது பெண்குழந்தை தாமரை...பசியில் வாடும் முகங்கள். ”நீயெல்லாம் ஒரு அப்பனா...” என்று அவள் சொல்லி, அவன் அடித்ததில் இடது பக்க இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. நல்ல வேலை சரியாகிவிட்டது. அது கடவுள் புண்ணியம்.

“பிள்ளைகள் பசியோடு இருக்காங்க...நீ பெத்த பிள்ளைதானே...இப்படி காசைப் புடுங்கினா என்ன பண்ணுவேன்?”

“மைன்ட் இட்...பாதி காசுதானே தாரே...மீதியை வைத்துக் கொண்டு குடித்தனம் பண்ண முடியாது? எவன் கிட்டடி கொடுக்கறே? என் புள்ளைகளை பட்டினி போடறே.?” அதற்கும் இரண்டு அடி சேர்த்து கிடைக்கும். மீனாட்சியம்மா புண்ணியத்தில் இந்த வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்து அவள் சம்பளம் வாங்கிய முதல் நாளே மூக்கில் வேர்த்து வந்துவிட்டான் கோபாலு .”எடு எடு...நேரமாவுது காமான் குவிக்...” என்று கலெக்டர் உத்தியோகம் பார்க்கும் ஆள் போல் பந்தாவுடன் கேட்டான். அவள் இங்கும் வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் பாதி சம்பளத்தைக் கொடுத்தாள். “நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு இங்கலிசு வேறயா?” என்று திட்டினாள்.

“ஏய்...என்னடி முண்டச்சி...ரெண்டாயிரம் தாரே..இங்கு உனக்கு சம்பளம் சாஸ்தி...மரியாதையா இன்னும் ஆயிரம் கொடு ..”

“முடியாதுய்யா...தாமரையை பள்ளியில சேர்க்கணும்.. சீருடை வாங்கணும்...” என்றாள்

“அய்...அப்பனாகிய எனக்கு இல்லாத அக்கறை உனக்கு வந்திடுச்சா? எவன் கிட்ட கொடுக்றதுக்கு பதுக்கி வைக்கிறே ? ராஸ்கோல் ...” அடி உதை குத்து, முத்தம்மா கன்னத்தில் வீக்கம்...நெற்றியில் ரத்தம்...அவள் ஓவென்று அழ...அங்கே மரகதம் வந்தாள். விடுதி தலைவி. ஒல்லியான களையான முகம். முப்பத்திரண்டு வயது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வயதிற்கு மீறிய முதிர்ச்சியான பக்குவம் உடையவள்.

“என்ன கலாட்டா இங்கே ?”

“ஒண்ணுமில்லேம்மா..” முத்தம்மா மழுப்பப் பார்த்தாள்... இந்த வேலையும் போய்விட்டால்.!

“புரியுது...குடித்துவிட்டு வந்திருக்கியாடா...இனிமே இங்கே வந்து கலாட்டா பண்ணினே போலீசைக் கூப்பிடுவேன்..நீ இப்போ வாங்கின காசை திருப்பி முத்தம்மா கிட்ட கொடுத்திட்டு ஓடிப் போயிடு.” கடுமையாக தலைவி எச்சரிக்க கோபாலு மந்திரத்திற்கு கட்டுப் பட்டது போல் பணத்தை கொடுத்துவிட்டு கீழ் குரலில்....“வருவேல்ல..வச்சுக்கிறேன் ...” என்றபடி போனான். தலைவி அவளை வீட்டுக்குப் போக விடவில்லை .விடுதிக்குப் பக்கத்தில் உள்ள சிறிய அவுட் ஹவுசை அவளுக்குக் கொடுத்து “வசதியா இருக்கா? புள்ளைங்களை அழச்சிட்டு வந்து இங்கேயே இரு” என்று சொல்லிவிட முத்தம்மா நன்றிபெருக்கில் கண்ணில் நீர் மல்க மரகதம் காலில் விழுந்தாள். அது முதல் அவள் வாழ்கையில் வசந்தம் வந்தது. கோபாலு வேறு யாரோ ஒரு பெண்ணுடன் தொடுப்பு வைத்துக் கொண்டு இருப்பதாகக் கேள்வி. அவள் அவனை அடக்கி ஆள்வதாகப் பேச்சு..

“ஏய் ...முத்து என்னடி சிரிப்பு.?” என்று ஒரு பெருசு கேட்க அவள் சொன்னாள் “பட்டக் கடனை என் புருஷன் அடச்சிட்டிருக்கான்..அதை நினைத்தேன் சிரித்தேன். என்னை அடித்து உதைத்தான் ..பதிலுக்கு நான் கொடுக்க வேண்டாம்....என்னால் கொடுக்கமுடியலை. அந்தக் கடனை இன்னொருத்தி வந்து அடச்சிட்டு இருக்கா. அடியும் உதையும் வாங்கிட்டு இருக்கான்.”

“அது சரி...சாமி சும்மா பார்த்திட்டு இருக்குமா? நேரம் வரும்போது பதிலடி கொடுக்கும்.”

இந்த விடுதியில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அதை பராமரிப்பதும் அவள் வேலைதான். ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும். வாசனை மனசையே அள்ளிக் கொண்டு போகும். செம்பருத்தி பூக்கள் சிவப்பும் மஞ்சளுமாக செடியெல்லாம் நிறைத்து பச்சை இலை தெரியாமல் அழகுடன் மிளிரும். புல்வெளி பச்சைக் கம்பளம் போல் விரிந்து வரவேற்கும். மரகதத்திற்கு அவளை மிகவும் பிடிக்கும். ”முத்து...நீ எதுக்கு கஷ்டப்படறே? தோட்டத்தை கவனிக்க ஆள் போட்ரவா?”

“அதெல்லாம் வேண்டாம்மா...எனக்கு இது ஒண்ணும் கஷ்டமில்லை...செடிகளுக்குத் தண்ணி ஊத்தறேன்...அது பூக்களாய் பூத்து நன்றி சொல்லுது.”

“பலே ...நல்லா பேசறியே. விட்டா கவிதையே எழுதிடுவே போலிருக்கே.”

“நான் ஒரு எழுத்து கூட படிக்காத முட்டாள்...எனக்கு என்ன தெரியும் கவிதை பத்தி?”

மரகதம் கனிவுடன் சிரித்துவிட்டு “நீயே கவிதைதான்...” என்றாள்.

“போங்கம்மா..”.என்று சிணுங்கினாள். அப்பொழுது பரபரப்பாக வந்தான் வேலு .

“அம்மா...இறந்துபோன சந்தாம்மா சொந்தக்காரங்க வராங்க.” என்றான்.

காரிலிருந்து நாலைந்து பேர் இறங்கி வந்தனர். மரகதத்திடம் வணக்கம் தெரிவித்தனர்.

“எல்லா ஏற்படும் பண்ணி இருக்கு. பாடியை எடுக்க வந்தோம்.”

“இவங்க சாவில் ஒரு வித்தியாசம் இருக்கு.” என்று அருகில் நின்ற ஈஸ்வரி முணுமுணுத்தாள்.

அகிலாப் பாட்டிக்கு மாத்திரை கொடுக்கும் நேரம் என்று நியாபகம் வர ஓடினாள் முத்து. சாவில் என்ன வித்தியாசம்...என்று வியந்தாள் முத்து. மூச்சு நின்று விடும் அவ்வளவுதானே....இதில் என்ன அதிசயம்!

அகிலாப் பாட்டி தமாஷாகப் பேசுவார். திருநீர் அணிந்த நெற்றி. முகத்தில் என்பது வயதின் மூப்பு தெரியாது.

மாத்திரைகளை கொடுத்துவிட்டு தயங்கி நன்றாள். ”பாட்டி ஒண்ணு கேக்கலாமா ?”

“என்ன கேக்கப்போறே ? அந்த சாந்தாம்மா பத்தியா ?”

“அட ...எப்படி பாட்டி கண்டுபிடுச்சே...கில்லாடி பாட்டி .”

“கில்லாடி பாட்டி இல்லைடி...அனுபவப்பட்ட பாட்டி. நீ இருபது நான் என்பது ...மனுசங்களைப் பத்தி இது கூட தெரியாதா?”

“சரி சொல்லு ..ஈஸ்வரி கூட சொன்னாங்களே...இவங்க சாவில ஒரு வித்தியாசம் இருக்குன்னு..அது என்னது பாட்டி?”

“ம்க்கும்...அவ்வளவு லேசிலே சொல்லிடுவேனா? எனக்கு என்ன தருவே ?”

“லஞ்சமா கேக்றே....அம்மாக்கிட்டே போட்டுக் கொடுக்றேன்...”

“அடி பாவி.... வந்து ஆறு மாசம் ஆகலை...அதுக்குள்ளே அம்மாவே கணக்கு பண்ணிட்டியா? கில்லாடி நீதான்.”

“அங்கே என்ன அரட்டை...வேலையைப் பாரு முத்து...கௌரி அம்மாவுக்கு ரூம்லே தண்ணி இல்லையாம்...கொண்டு போய் கொடு...இங்க நின்னுக்கிட்டு வாயாட்ற. அதுக்குதான் சம்பளம் தரங்களா?”

என்று ஈஸ்வரியின் குரல் ஓங்கி ஒலிக்க, “மிலிட்டரி வந்திடுத்து ...அப்புறமா வா பேசலாம் .” என்றாள் அகிலாப் பாட்டி. பாட்டி தன்னை அப்படிக் கூப்பிடுவது ஈஸ்வரிக்குத் தெரியும். சிரித்துக் கொள்வாள். அந்த பயம் இருக்கட்டும் இல்ல இவங்களை சமாளிக்க முடியாது. முத்து ஓடிவிட்டாள். ஈஸ்வரியிடம் அவளுக்கு கொஞ்சம் பயம். ஈஸ்வரி நாற்பது வயது தாண்டியவள். திருநங்கை. இவள் மட்டும் அல்ல, இன்னும் சில திருநங்கைகள் இங்கு கௌரவமாக வேலை செய்து பிழைக்கிறார்கள்.

“பாட்டி இவ கிட்ட ஒண்ணு சொன்னா இந்த விடுதி பூரா சொன்ன மாதிரி...நீங்க சாந்தாம்மா பத்தி எதுவும் சொல்லாதீங்க .புரியுதுங்களா. அம்மா காதில விழுந்தா வருத்தப் படுவாங்க.”

என்று ஆடர் போட்டுவிட்டுப் போனாள் ஈஸ்வரி. அவளுக்கே அப்படி ஒன்றும் தெரியாது...ஏதோ ஓரளவு தெரியும். சில புதிர் புதிராகவே இருக்கட்டும், என்று நினைப்பவள்.

அந்த விடுதியில் ஒரு துடிப்பு இருந்தது. முணுமுணுக்கும் பாட்டிகள்...ஆலாபனை செய்யும் பாட்டிகள்...அடம் பிடிக்கும் பாட்டிகள் என்று ரகம் ரகமாக இருந்தார்கள். தொந்தரவு கொடுப்பார்கள். அவர்களே.... மரகதம் வந்து பேசிவிட்டுப் போனால் ...மெல்ல மெல்ல மனம் லேசாகி இந்த சூழலில் வாழக் கற்றுக் கொள்வர். மரகதம் ஒவ்வொரு மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஒரு சொற்பொழிவு நடத்துவாள். விரும்புகிறவர்கள் வந்து கேட்கலாம். அநேகமாக அனைவரும் வருவர். அகிலாப் பாட்டி “இவ என்ன லெக்சர் பண்ணறது? என்னை விட நாப்பத்தஞ்சு வயசு சின்னவ ...இவ வேதாந்தம் பேசறத நாம கேட்கணுமா?...போகாதீங்க.” என்று பிரசாரம் பண்ணினாள். “போய் தான் பார்ப்போமே என்னதான் சொல்றாங்கன்னு.” என்று போய் விட்டு வந்த சுந்தரி, கீதா, கோமதி பாட்டிகள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். அப்படி என்னதான் சொல்றா, என்று மறைந்து இருந்து பார்த்தாள் அகிலா. “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?” என்று லெக்சர் பண்ணிக்கொண்டிருந்த மரகதம் பாட ...என்ன அம்மா தீடீர்னு பாடறாங்க என்று புரியாமல் விழித்தார்கள். “என்ன பாடறேன்னு பார்க்றேங்களா... வாலி கதை தானே சொலிட்டிருந்தேன்...மறைந்திருந்து ராமன், வாலியும் சுக்ரீவனும் சண்டை இடுவதை பார்த்தான் இல்லையா ...அதைத்தான் பாடி காண்பித்தேன், என்று பேச்சைத் தொடர்ந்தாள். அகிலாப் பாட்டி மரகதம் தன்னைக் தான் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டாள். அவள் காட்டிக்கொடுக்கவில்லை என்ற நெகிழ்வில் மரகதத்தை மரியாதையுடன் பார்த்தாள். மனம் லேசானது. மரகதத்தைப் பற்றிய அவள் அபிப்பிராயம் மாறியது. இங்கு வந்த இந்த பத்து வருஷத்தில் அவள் மரகதத்தின் பல நல்ல குணங்களை கண்டு கொண்டாள். அவள் மனதில் பாசம் ஊறியது. எவ்வளவு சின்னப் பெண் இவ்வளவு மன முதிர்ச்சியுடன் இருக்கிறாள் என்று பெருமைப்பட்டாள். அன்று அவளே பேச்சை ரசித்து கேட்டாள். சேரில் வந்து உட்கார்ந்து கொண்டாள். பேச்சை கேட்க கேட்க அப்படியே மரகதத்தின் ரசிகை ஆனாள். மரகதம் சொல்வாள் -

“எல்லாருக்கும், அப்பா பெத்த பாட்டி ,அம்மா பெத்த பாட்டின்னு இரண்டு பாட்டிதான் இருப்பாங்க...நான் கொடுத்து வைத்தவள், ஐம்பது பாட்டிகள் எனக்கு “

அந்த விடுதியே ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் மாதிரி இயங்கிற்று. அதற்குக் காரணம் மரகதத்தின் அன்பு.

பாட்டிகள் அனைவரும் அவளை அம்மா என்று தான் கூப்பிடுவார்கள். தொண்ணூறு வயது பாட்டிக்கும் அவள் அம்மா தான்.



காலை சிற்றுண்டி முடிந்தது. காபி பருகிக்கொண்டே பேப்பர் பார்த்துக்கு கொண்டிருந்த சந்தானத்திடம் விமலா புலம்பினாள்.

“சாந்தா மதனி இறந்த பதினாறாம் நாள் விஷேசம் நல்லா நடந்ததாம்...நமக்குதான் போக முடியலை.”

“இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை. அவங்க இருக்கும் போது பாடாப் படுத்திட்டு...செத்த பிறகு ஊரைக் கூட்டி நடத்தற போலி மரியாதைக்கு போகாம இருந்ததுதான் ஓட்டயாப் போச்சாக்கும் ... இவங்கல்லாம் மனுஷங்கதானா .?”

“ம்க்கும்...ரொம்ப இடுக்கிட்டு வராதீங்க. சொந்தப் பிள்ளைகளே பெத்தவங்களை எங்க கவனிக்கறாங்க.? இந்த மட்டில் கொள்ளி வச்சு பதினாறாம் நாள் காரியத்தையும் பண்ணி மொட்டை வேறு போட்டிருக்கானே சொக்கலிங்கம்...அப்புறம் என்ன?”. “அடடா...பெரிய தியாகி தான். ஆமா...அந்த விடுதி தலைவி எதுக்கு கூடவே வந்து தானும் கொள்ளி வச்சா? எனக்கு ஒண்ணும் புரியல்லை. நீ கவனிச்சியா விமலா? சொக்கலிங்கம் எப்படி விட்டான்.?”

“ஆமாங்க ...எனக்கும் ஒண்ணும் பிடிபடலை...யார் நம்மக்கிட்டே யோசனை கேக்றா...தங்கமானவங்க மதனி ...யாருமில்லாத அநாதை மாதிரி விடுதியிலிருந்து நேரே மயானம் கொண்டு போகப் பட்டாங்க.....அங்க நாலைந்துபேர் வந்து இருந்தாங்க.. எப்பேர்ப்பட்ட மனுஷிக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா?”

“அந்த மரகதத்தம்மா ஒரு மாதிரியான ஆள் போல தெரியுது...நாட்டமை ஜாஸ்த்தி..தேவை இல்லாம மூக்க நுழைச்சு காரியம் பண்றா. இவ யாரு, சேர்ந்து கொள்ளி வைக்க? பொம்பளப் புள்ள எதுக்கு மயானம் வரை வந்து கொள்ளி வைக்கணும்? அங்கேயே கத்தி கலாட்டா பண்ணி இருப்பேன்.. சரி அக்கா சாவு காரியம் வில்லங்கம் இல்லாமே நடக்கட்டும்னு சும்மா இருந்தேன்.’

“யாருக்கும் பிடிக்கலைதான். சொக்கலிங்கம் அனுமதிக்கிற போது என்ன பண்ண முடியும்.?”

“சரி நடந்தது நடந்து போச்சு. அவங்க தெய்வம் மாதிரி. அவங்க ஆத்மா சாந்தி அடையட்டும்.”

அங்கு விஷால் வர பேச்சு நின்றது. “ என்ன மாநாடு போடறேங்க? சாந்தா அத்தை பத்தியா? அம்மா எனக்கு அன்று வந்த ஆத்திரத்துக்கு அந்த சொக்கலிங்கத்தை அப்படியே வெட்டிப் போட்டிடணும்னு வந்தது. யார் அந்த மரகதம் ? இவளை எதுக்கு கொள்ளி போடுவதில் பங்கு சேர்த்துக் கிட்டான்? .”

“ சொக்கலிங்கம் உன்னை விட வயசில பெரியவன் மரியாதை இல்லாமே பேசாதே. எல்லாரும் அப்ப பேசாம இருந்திட்டு இப்ப குதிச்சு என்ன புண்ணியம்.?”

“சரி விடுங்க...ஏன்டா சாப்பாடு கட்டிக் கொடுக்கவா? எலுமிச்சை சாதம் தான்.”

“வேண்டாம் தாயே ...எங்க கேண்டீன்ல இதை விட நல்லாத்தான் இருக்கும்.” என்று விட்டு ஓடிவிட்டான். கொழுப்பை பார் என்று முறைத்தாள் விமலா. சந்தானம் சிரித்தார் .இறந்த சாந்தா இவருக்கு ஒன்று விட்ட சகோதரி. நல்ல பெண்மணி இப்படி மரனத்திலும் தனிமைப் படுத்தப்பட்ட பரிதாபம் கண்டு அவர் நெஞ்சு வலித்தது. யாரைச்சொல்லி என்ன பயன் அவள் விதி அப்படி...



இரவு நேரம் முத்து மணிகண்டனுக்கு இட்டலி ஊட்டிவிட்டு தூங்க வைத்தாள். தாமரை “அம்மா...சிலேட்லே எழுத்தி இருக்கேன் பாரு.” என்றாள். முத்து அவளை முத்தமிட்டாள் “சமர்த்து” என்றாள். மரகதம் அங்கு வந்தாள். ”யாரு சமர்த்து நானா?”

“அம்மா...வாங்க வாங்க ...” எழுந்து நின்று வாயார வரவேற்றாள் முத்து. மடக்கு சேரை எடுத்துப் போட்டாள்.

சேரில் வசதியாக உட்கார்ந்துகொண்டு மரகதம் பேசினாள் .

“முத்து..சாப்டியா? புள்ளைங்க சாப்டாச்சா?”

“ஆச்சுமா...உங்க புண்ணியத்திலே நாங்க நல்லா இருக்கோம் .”

“அதிருக்கட்டும் முத்து ...அந்த உன் குடிகாரப் புருஷன் என்ன பண்றான்?”

“அம்மா...அவன் என்னை அத்து விட்டிட்டான். பெரிய இடத்திலே சிபாரிசு பிடுச்சிட்டேனாம்...அடங்கமாட்டேனாம்...அதனாலே வேறு ஒரு சிறுக்கியோட வாழ்றான் .”

“ அப்படியா? அய்யோ...என்னாலே உனக்கு இந்த...”

“ரொம்ப நல்லது தான் நடந்திருக்குமா. பெத்த புள்ளங்களை காப்பாத்த துப்பு இல்லாத ஒருத்தனுக்கு கட்டின பொண்டாட்டி மேல தானா அக்கறை வரும்.? இதை ஒரு சாக்கா வச்சு ஓடிட்டான். நிம்மதியா இருக்கேன்.”

“ஏன் முத்து உன்னைப் பார்த்தா புள்ளை பெத்தவ மாதிரி தெரியலையே.! இது உன் பிள்ளைகளா அல்லது ...”

“மூத்தாள் புள்ளங்கம்மா. என் ஆத்தா சாக கிடக்கிற சமயம் என் மவளை தனியா விட்டிட்டுப் போறேனே கோபாலு அப்படின்னு புலம்பிச்சு. நான் கட்டிக்கிறேன் அய்த்தே. எனக்குதான் பொண்டாட்டி செத்துப் போயிட்டாளே...பத்து மாசம் ஆச்சு...என் புள்ளைங்க அனாதையா இருக்கு அப்படின்னான். ஆத்தா, உன்னை நம்பி எப்படிப்பா கட்டி வைக்கறது நீ குடிகாரனாச்சேன்னு சொன்னா. அதுக்கு அவன், பொண்டாட்டி செத்த சோகம் தான் நான் குடிகாறன் ஆனேன்....முத்தைக் கட்டிக்கிட்டா நான் ஏன் குடிக்கப் போறேன் அய்த்தே? ...தங்கமா பார்த்துப்பேன்னு கையில அடிச்சு சத்தியம் பண்ணினான்...அதை அம்மா நம்ப கழுத்தை நீட்டிட்டேன் இப்ப பெத்த புள்ளைங்களை அனாதையா விட்டிட்டு ஓடிட்டான். அவளே வளர்த்துக்கட்டும் என்று வெட்டிட்டுப் போய்ட்டான்.’

“கேள்விப்பட்டேன் முத்து. உனக்கு இந்த புள்ளைங்களுக்கு அம்மாவா இந்த இருபது வயதிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. உன்னாலே முடியுமா? ஆம்பளைத் துணை இல்லாமே?”

“இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் என்னையே அம்மான்னு நினச்சி அப்பிக் கொண்டதுகள். எப்படியம்மா விட்டிட்டுப் போக முடியும்?”

“அவன் கட்டின தாலியை கூட கழட்டி போட்டிட்டியாமே! ஈஸ்வரி சொன்னா..”

“ஆமாம்மா...தங்கப்பன் மாமா அன்னைக்கு வந்தார் நீங்க பார்க்கலை... அவர் தான் சொன்னாரு, புள்ள அவன் வேற பொண்ணைக் கட்டிகிட்டான்னு. கேட்டவுடன் தாலிய கழட்டி வீசிட்டேன். இந்தக் குடிகாரனோடு ரெண்டு வருசமா குப்பை கொட்டினதுக்கு காரணம் இந்தக் கொழந்தைகள் தான்மா. அவனே ஓடிட்ட பிறகு அவன் கட்டிய தாலி எதுக்கு? அதன் எறிஞ்சுட்டேன். “

அவள் கண்ணில் லேசாக நீர் துளிர்த்தது. ”கேக்கவே சங்கடமா இருக்கு..மனசு உறுத்துது. நான் இங்கு வந்து இருக்க சொன்னதாலே தானே உன் வாழ்கையே போச்சு...மனசு கேக்கலை அதான் மன்னிப்பு கேக்க வந்தேன். அவன் கிட்ட வேணா பேசி பார்க்கட்டுமா?”

முத்து பலமாக சிரித்தாள்.” அது ஒரு வாழ்க்கையாங்காட்டியும்...அது நரகம்மா. ,உங்க புண்ணியத்தில் தப்பிச்சேன்.”

“இப்படி ஸ்ட்ரிக்டா இருந்தா திருந்திருவான்னு நினைச்சேன்...அவன் இப்படி செய்வான்னு நினைக்கலையே.”

“விடுங்கம்மா...அதான் அந்தாளு தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கான். அவனை கட்டிகிட்டவ சரியான பஜாரியாம் ....பெட்டிப்பாம்பாக அடங்கிட்டானாம்.”

“நல்லதுக்கே காலமில்லைன்னு சொல்வாங்க. சரியாத்தான் இருக்கு. பூ மாதிரி இருக்கிற உன்னை மிதிச்சிட்டு சருகு மாதிரி ஒருத்தியை கட்டிக்கிட்டான் வேடிக்கைதான். முத்து தப்பா நினைக்காதே, ஒரு வேளை உன்னைக் கட்டிக்க ஒரு நல்லவன் முன்வந்தா நீ..”

“அதைப் பத்தி எல்லாம் நான் யோசிக்கலை அம்மா. ஆனா என்ன ஆனாலும்.....இந்தப் பிள்ளைகளை கைவிட மாட்டேன் “

“சந்தோசம் முத்து...அந்த சாந்தாம்மா மாதிரி பண்ணிடாதே...சரி வரட்டுமா..” மரகதம் எழுந்து போய்விட்டாள். முத்து மனம் முழுக்க கேள்வியுடன் நின்றாள்.

மறுபடியும் அந்த சாந்தாம்மா பற்றிய பேச்சு...மரகதம்மா சொன்னது என்னன்னு விளங்கலையே. சந்தாம்மா மாதிரி செய்யாதேன்னு சொல்றாங்க..அப்படி என்னதான் செய்தாங்க அந்தம்மா? யோசித்தப்படி சாப்பிட்டு உறங்கிப் போனாள் முத்து.

மறுநாள் அழகாக விடிந்தது. அங்கு இருந்த சின்னக் குளத்தின் மேல் தாமரைப் பூக்கள் மெல்ல மலர்ந்து சூரியனை வரவேற்ற காட்சி ஓவியம் போல் மிளிர்ந்தது.

முத்து அந்த அதிகாலை நேரத்திலேயே எழுந்து பெரிய கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். .ஈஸ்வரி வாசலில் நின்றிருந்த வேனிலிருந்து பழக் கூடைகள் இறங்குவதை மேற்பார்வை பார்த்தபடி நின்றிந்தாள். பாட்டிகளுக்கு தினமும் பழம் கொடுக்க வேண்டும் என்பது மரகதத்தின் கட்டளை. சமையல் அறை பக்கத்திலே இருக்கிற ஸ்டோர் ரூமில் வைக்கச்சொல்லி உத்தரவு கொடுத்து விட்டு வந்தாள் ஈஸ்வரி.

“என்ன முத்து...இவ்வளவு பெரிய கோலம் போடுறே? சின்னக் கோலம் போட்டா போதாதா? கோலப் பொடிய இப்படி வேஸ்ட் பண்ணலாமா?”

“ம்க்கும்...மாமியார் இல்லாத குறைய தீர்க்க வந்துட்டீங்களா?”

“ஆமாடி...ஓவரா செலவு ஆனா நீயா பதில் சொல்லணும்? நான்தானே சொல்லணும்?” இவர்கள் இப்படி எசலிக் கொண்டடிருந்த போது கவிதா ஓடிவந்தாள் .

“ஈஸ்வரி அக்கா...சாம்பு பாட்டிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது. பயமா இருக்குக்கா “

அடுத்த அரைமணியில் அந்த இடமே பரபரப்பானது. அருகிலேயே குடி இருந்த டாக்டர் உமா சந்தர் வந்தாள். நர்ஸ் நளினி உதவி செய்ய சாம்பு பாட்டி இயல்பாக மூச்சு விட்டார். “என்பது வயது ஆகிவிட்டது...நுரையிரல் பாதிக்கப் பட்டிருக்கு..மாத்திரைகள் எழுத்தித் தரேன்...சரியா கொடுத்திட்டு வாங்க..

அப்பப்ப இப்படிதான் வரும். இன்ஹலேர் உபயோகிக் பழக்கணும்” சொல்லிவிட்டு டாக்டர் விடை பெற்றாள். மரகதம் குனிந்து பாட்டியிடம் பேசினாள்.

“பாட்டிம்மா..இப்ப எப்படி இருக்கு?” பாட்டி தலை ஆட்டினார். தன் மகனைப் பார்க்கவேண்டும் என்று மெல்லிய குரலில் சொன்னார். மரகதம் உடனே அவர் மகனுக்கு போன் போட்டாள். விஷயத்தை சொன்னாள். பிறகு “பாட்டிம்மா..அவர் வெளியூர் போயிருக்காராம்..வந்ததும் வராராம்..” என்று தகவல் சொன்னாள்.

பாட்டி முகத்தில் ஏமாற்றம். “கவலைபடாதேங்க பாட்டி நாங்க எல்லாம் இருக்கோம்லே...நல்லா ரெஸ்ட் எடுங்க. மனசப் போட்டு உழப்பிக்க வேண்டாம் .உங்க மகன் வேலை வேலைன்னு அலையறார். வருவார்.

நாங்களும் உங்க புள்ளங்க மாதிரித்தான்...சரியா?” வற்புறுத்தி சிறிது கஞ்சி குடிக்க வைத்து ஆறுதல் சொல்லி..நளினியிடம் “வேளா வேளைக்கு மருந்து கொடுத்துடு..ஏதாவது சிக்கல்னா டாக்டர் கைலாஷைக் கூப்பிடு. டாக்டர் உமா டியுட்டியா தன் ஆஸ்பத்ரிக்கு போய்டுவாங்க. சரியா? உன் பொறுப்பிலே விடறேன் பத்திரம். என்று விட்டுப் போனாள் மரகதம். அவளை வியப்புடன் பார்த்தாள் முத்து. பாட்டி முகத்தில் தெளிவு வந்ததை பார்த்தாள். தேவதைகள் சிலர் பூமியில் இறங்கி

வந்து விட்டது போல் சில மனிதர்கள் கருணையை மனதிலும் கண்ணிலும் தேக்கி வைத்தபடி வருவார்களோ.! மரகதம் ஒரு தேவதை தான். இந்த இல்லத்திற்கு “பனி வீடு “ என்று வைத்திருப்பது எவ்வளவு பொருத்தம் என்று நினைத்தாள் முத்து. உருகி ஓடும் பனி போல் இங்கு அன்பும் கவனிப்பும் உருகி ஓடுகிறது. இதமான பனி குளிர்ச்சியும் வீட்டின் கதகதப்பும் உடைய கூடாரம். ”என்ன மலைச்சு நிக்கறே முத்து?. போய் வேலையப் பாரு.” என்று யாரோ சொல்ல முத்து தன் வேலையை கவனிக்கச் சென்றாள். அகிலாப் பாட்டிக்கு வெந்நீர் கொண்டு கொடுத்தபடி “ பாட்டி மரகதம்மா எவ்வளவு நல்லவங்க..சாம்பு பாட்டிக்கு எப்படி ஆறுதல் சொன்னாங்க தெரியுமா? மனித தெய்வம்.” என்று புகழ்ந்தாள் முத்து.

“சரிதான்...ஆனா அந்த சாந்தாம்மா கிட்ட மட்டும் அப்படி ஒரு கடுமையா நடந்துக்கிட்டாங்க. ஏன்னு புரியலை. சில நேரங்களில் சில மனிதர்கள்”

...என்று பாட்டி சொல்லவும் முத்து ஆவல் கொண்டாள். அந்த சாந்தம்மா பத்தி ஏதோ மர்மம் இருக்கே..என்னவாக இருக்கும்.? மரகதத்தம்மா ஏன் சாந்தாம்மா கிட்ட மட்டும் கடுமையா நடக்கணும்...பிறகு கொள்ளி போடணும்? அவங்களுக்கும் இவங்களுக்கும் என்ன உறவு ?

“முடிய பிச்சுக்காதேடி...சில விடைகளுக்கு பதில் கிடைக்காது...பதில் கிடைச்சாலும் அது அதிர்ச்சியைத் தரும்.. விடு ரிலாக்ஸ்..” என்றாள் அகிலாப் பாட்டி. அவளுக்குள் பல எண்ணங்கள் ஓடியது.

நதி ஓடும்.
 

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்-2 நீரோட்டம்.

மரகதம் முகத்தில் ஒரு கலக்கம். ஈஸ்வரியிடம் சொன்னாள் .”அந்த முத்துவை என்னை வந்து பார்க்கச் சொல்லு. நான் அவளைப் பார்க்கணும்.” விடிந்ததும் என்ன பஞ்சாயத்தோ?

மரகதம் பொதுவாக கோபப்பட மாட்டாள். இன்று என்னவோ கோபத்துடன் சொன்னா மாதிரி தெரிந்தது...

“என்னம்மா...முத்து ஏதாவது தப்பு பண்ணிட்டாளா? என்னன்னு சொல்லுங்கம்மா நான் கண்டிக்கிறேன். எதுக்கு நீங்க போய் அவளிடமெல்லாம் ...”

“ஈஸ்வரி சொன்னதை செய்...நான் வங்கிக்கு கிளம்பணும்,,,நேரமாச்சு. நீ வேற கேள்வி கேட்டுட்டு ..” எரிந்து விழுந்தாள்.

“சரிம்மா...இதோ வரச் சொல்றேன் .” ஈஸ்வரி விடு விடுவென சென்று முத்துவிடம் வந்து நின்றாள். முத்து தாமரைக்கு தலை வாரி விட்டுக் கொண்டிருந்தாள்.

“வாங்க ஈஸ்வரி...இதோ வந்திடறேன். தாமரையோட பள்ளி வேன் வந்திடும். அனுப்பிட்டு வந்திடறேன்...”

“ நான் அனுப்பிக்கிறேன். நீ உடனே போ. அம்மா உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க. சீக்கிரம்...அம்மா கோவமா இருக்காங்க. என்னடி தப்பு செய்தே? .”

“அடி ஆத்தி...ஒரு தப்பும் செய்யலையே...தாமரை, ஈஸ்வரி அக்கா கூட போ..இதோ வந்திடறேன்...”

முத்து விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள். மூச்சிரைக்க வந்து நின்ற அவளை கடுமையாகப் பார்த்தாள் மரகதம். அழகான நீல நிறத்தில் காட்டன் புடவை அணிந்திருந்தாள் மரகதம். க்ளோஸ் நெக் கழுத்துடைய ரவிக்கை. பார்க்க தூய்மையான தேவதை மாதிரி தெரிந்தாள். முத்து பெருமையுடன் ஒரு பார்வை பார்த்தாள். .

“அம்மா...நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... எந்த கலர் புடவை கட்டினாலும் அந்த புடவைக்கு தான் உங்களாலே அழகு வருது ..” என்றாள்

“முத்து...போதும் உன் ஐஸ்...நீ என்ன நினைச்சிட்டிருக்கே உன் மனசிலே.?..இது என்ன காதலர் பூங்காவா? உன் மாமன்னு சொல்லிட்டு ஒருத்தன் அடிக்கடி வரான். நானும் சொல்லவேண்டாம் சொல்லவேண்டாம்னு பார்த்தா ரொம்ப ஓவரா போறே...நேத்து என்னடான்னா ...சொல்லவே அசிங்கமா இருக்கு..கதவு திறந்திருக்கு ...புள்ளைங்க இருக்காங்க....அவன் உனக்கு முத்தம் கொடுக்றான்...இதெல்லாம் இங்க வேண்டாம்...”

“மன்னிக்கணும் அம்மா ...நான் எதிபார்க்கவே இல்லை...அவரு சடார்னு ..இனிமே நடக்காமே பார்த்துக்கறேன்மா.” தலையை குனிந்துகொண்டு சொன்னாள் முத்து “உன் வயசு அப்படி...உன்னை நம்பி இரண்டு புள்ளைங்கள் இருக்கு...நீ என்னடான்னா ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கே....அந்தப் புள்ளங்க உன் புள்ளைகளா இருந்தா இப்படி செய்வியா?” முத்து திடுக்கிட்டு பார்த்தாள். என்ன பேசறாங்க அம்மா....

“ அம்மா வேஷம் போடதே. பொறுப்பு வேண்டாம். உனக்கு பிடித்திருந்தா அவனைக் கல்யாணம் பண்ணிக்க...நான் தடுக்கலை..ஆனா புள்ளைங்களை ஏதாவது அநாதை ஆஸ்ரமத்திலே சேர்த்திட்டு உன் வாழ்க்கையைப் பார்த்துக்கோ. வீனா அந்த புள்ளைங்களை கொடுமை படுத்தாதே’

“அம்மா...உங்க கிட்ட வேலை பார்க்கிற நாய் தான் நான். அதுக்காக என்னை தப்பா பேசாதேங்க...புள்ளைகளை அநாதை ஆஸ்ரமத்திலே சேர்க்கணுமா.? அவங்க என் புள்ளைங்க. அம்மா நான் இருக்கும் போது அவங்க எதுக்கு அநாதை ஆஸ்ரமம் போணும்? தப்பு நடந்ததுக்கு நான் காரணமில்லை....மாமனை இங்க வரவேண்டாம்னு தான் சொல்லிட்டிருக்கேன்...பொம்பளப் பேச்சை எந்த ஆம்பளை கேக்றான்? என்னைக் கீழ்தரமா பேசினதை கூட பொறுத்துப்பேன்..பசங்களை அனாதைன்னு சொன்னதை தாங்க முடியலை. நான் பெத்த தாய் போல பார்த்துக்கறது உங்களுக்கு வேஷமா இருக்கா?” சொல்லிவிட்டு முத்து கண்ணீர் வழிய வழிய வெளிய ஓடினாள். மரகதம் திகைத்துப் போனாள்....”ஸாரி,,,ஸாரி...முத்து “ என்று அவள் கத்தியதை கேட்க அங்கு முத்து இல்லை.

“என்னம்மா பிரச்சனை? அவ கிட்ட போய் நீங்க சாரி கேட்டுக்கிட்டு..திமிரா ஏதாவது சொன்னாளா? இப்பவே போக சொல்லிடறேன். நன்றி கெட்டவ. இடத்தை கொடுத்தா மடத்தை புடுங்குறா...நீங்க வேலைக்குப் போங்கம்மா அந்த சிறுக்கியை நான் நாலு வார்த்தை நாக்கை புடுங்கறா மாதிரி கேக்றேன்.’

“வேண்டாம் ஈஸ்வரி...என் மேலதான் தப்பு...ஒரு சித்தி மூத்தாள் பிள்ளைகளை இந்த அளவு நேசிக்க முடியும்னு நான் நினைக்கலை. சரி அவளை சமாதானப்படுத்து எனக்காக...எனக்கு நேரமாச்சு...”

மரகதம் சொல்லிவிட்டு கண்களில் துளிர்த்த நீரை சுண்டிவிட்டபடி காரில் ஏறிப் போவிட்டாள். ஈஸ்வரி திகைத்து நின்றுவிட்டாள். இந்தப் “ பனி வீடு” தொடங்கி பத்து வருடம் ஆகிவிட்டது. ஆரம்பம் தொட்டே அவள் மரகதத்திடம் தான் வேலை பார்க்கிறாள். அம்மா இவ்வளவு உணர்ச்சி பூர்வமா கலங்கினதில்லை. யாரையும் மனம் சுடும்படி கேள்வி கேட்டதில்லை... என்னாச்சு அம்மாவுக்கு? அந்த சாந்தாம்மா வந்ததிலிருந்து, அம்மா அம்மாவாகவே இல்லை. அந்தம்மா செத்த பிறகாவது இவங்க பழைய இயல்புக்கு வருவாங்கன்னு பார்த்தா...இன்னும் ஏதோ கலக்கமாகவே இருக்காங்களே!.” என்று யோசித்தாள். காய்கறிகள் வாங்கப் போகணும்...இன்றைய சமையல் மெனு என்னவென்று வெங்கட்ராமனிடம் கேட்கணும்...இங்கு பணிபுரிகிற சமையல்காரர் அவர்தான். அது தவிர அவினாஷ் என்று ஒரு இளைஞன் கணக்கு பார்ப்பது , அங்கே இங்கே சென்று அலைந்து வெளி வேலைகளை கவனிக்கிறான். வக்கில் சீதாராமன்...டாக்டர் கைலாஷ்...மேகநாதன்..இவர்கள் தான் ஆண்கள்...மற்றவர் எல்லாம் பெண்களே. மேகநாதன் டூர் கூட்டிப் போகிறவர். முன்று மாதத்திற்கு ஒரு முறை கோவில்களுக்கு கூட்டிப் போவார். வேனில் பாட்டிகளை அழைத்துப்போய் பொறுமையாக கூட்டி வருவார். இவளும் கூடப் போவாள். பாட்டிகள் அறையிலேயே அடைந்து கிடப்பதால் மனம் சலித்துப் போவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு. அம்மா வழக்கம் போல் அலுவலகம் சென்று வர, பொறுப்பாக இவளும் வளர்மதி டீச்சரும் பார்த்துக் கொள்வார்கள். முத்துவை போய்

சமாதானப் படுத்தணும். ஈஸ்வரி அங்கு சென்ற போது முத்து அழுது கொண்டு இருந்தாள். கண்ணெல்லாம் பொங்கி சிவந்து, கிழிந்த நார் போல் கிடந்தாள்.

“முத்து..நீ என்ன சின்னப் பிள்ளையா? எதுக்கு இப்ப அழறே?” என்று கேட்டாள் ஈஸ்வரி “ உங்களுக்கு ஒண்ணும் தெரியாதுக்கா.. அம்மா எப்படி பேசிட்டாங்க தெரியுமா? நான் என்ன அம்மா வேஷமா போடறேன்? பச்ச புள்ளைங்கள்...அதுங்க கிட்ட நடிச்சு என்ன சாதிக்கப் போறேன்.?..இப்படி பேசிட்டாங்க..” கட்டி கட்டியாய் கண்ணீர் அவள் அழகிய கன்னம் தாண்டி புடவையை நனைத்தது.

“முத்து...அம்மா இப்படி பேசறவங்க இல்லை. என்னன்னு தெரியலை அந்த சாந்தாம்மா வந்ததிலிருந்து அவங்க சாவு வரை அம்மா நடந்துக்கறது எல்லாம் எனக்கு ஏதும் புரியலை. புதிரா இருக்கு. அகிலாப் பாட்டிக்கிட்டதான் அம்மா ஏதோ சொல்லி இருக்காங்க...அந்தப் பாட்டி எவ்வளவு வாயை கிண்டினாலும் எதுவும் சொல்ல மாட்டேங்குது. அது தெரிஞ்சாலாவது அம்மாவை சமாதானப் படுத்தலாம். சரி நீ வேறு அழுது பிரச்னையை பெருசு பண்ணாதே. அவங்க இல்லைனா நாம இல்லை. அவங்க ஆலமரம். நாம இளைப்பாறும் குருவிகள்...கலங்காதே...அவங்க மன்னிப்பு கேட்டாங்களே.. நீ தான் அதுக்குள்ளே ஓடிட்டே.....அவசரப்பட்டு அவங்களை தப்பா நினைக்காதே. கண்ணை துடைச்சுக்க..எதுவும் மனசிலே வச்சுக்காதே..சரியா?” ஈஸ்வரி சமாதானப் படுத்த முத்து அவள் தோள் சேர்ந்து சமாதானமாக சிரித்து “சரிக்கா” என்றாள். இருந்தாலும் முத்துவிற்கு மனசு வலித்தது. அம்மா வேஷம் என்று சுலபமாக சொல்லிவிட்டார்களே!

அன்றிரவு முத்து பிள்ளைகளிடம் கொஞ்சி விளையாடும் போது மரகதம் வந்தாள். தாமரை ஸ்லேட்டை எடுத்துக் கொண்டு ஓடியது. அதில் அம்மா என்று எழுதிருந்தது குழந்தை .மரகதம் ஸ்லேட்டை வாங்கி அம்மா என்று எழுதி இருந்ததற்குப் பக்கத்தில் ஸாரி என்று எழுதினாள். அம்மாக்கிட்டக் காட்டு.

குழந்தை முத்துவிடம் காட்டியது. “எனக்கு படிக்கத் தெரியாதுன்னு அம்மாவுக்கு தெரியாதா தாமரை?” என்றாள்.

“ஸாரி...அப்படின்னா என்னன்னு அம்மாக்கு சொல்லு தாமரை..”

“ஒ..மன்னிப்பு தானே அதன் அர்த்தம் தாமரை ...” என்று சொன்னாள் முத்து.

“அம்மாவுக்கு எழுத படிக்க கத்துக் கொடு தாமரை..”

“அம்மா...என்ன நீங்க...என்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிட்டு...உள்ள வாங்கம்மா.”

“அப்பாடா... அம்மா மன்னிச்சிட்டா...” முத்து அருகில் பாயிலேயே உட்கார்ந்து கொண்டாள் மரகதம்.

“அய்யோ...நான் ஒரு மதி கெட்டவ...நாற்காலியில் உட்காரச் சொல்லமால் ..” பதறி எழுந்தாள். அவளை கை அமர்த்தி உட்காரச்சொல்லி விட்டு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “நீ ரொம்ப உசந்தவ முத்து. அந்த தங்கப்பன் நல்லவனா இருக்கலாம்...ஆனா இந்தப் பிள்ளைகளை நல்ல பார்த்துக்க விடுவானோ மாட்டானோ என்கிற சந்தேகத்திலே அப்படி பேசிட்டேன். உன்னைக் காயப் படுத்தணும்னு பேசலை..”

“புரியுதுமா...எனக்கு இருக்கிற ஒரே ஆதரவு சொந்தம்கறது அவர் ஒருத்தர் தான்..அதான் வர விட்டிட்டு இருக்கேன்...வேறே எந்த நோக்கமும் இல்லை.”

“சரி...கோபம் இல்லையே என் மேல.?”

“இருந்துச்சி இப்ப இல்லை..” வெள்ளந்தியாக சிரித்தாள். ”நான் என் உசுரைக் கொடுத்தாவது இந்தப் பிள்ளைகளை காப்பாத்துவேன். பயப்படதேங்கம்மா. தங்கப்பனைக் கல்யாணம் பண்ணறது என் நோக்கம் இல்லை. அவருக்கு என் மேல ஒரு அக்கறை. என் அம்மாவோட ஒரே தம்பி..ரத்த பந்தம். இத்தனை நாள் துபையில் இருந்தார். ஏதோ கோபத்திலே குடும்பத்தை விட்டு பிரிஞ்சிட்டார். அம்மா இறந்த போது கூட அவர் இங்கு இல்லை. அங்கு வேல போய்விட்டதாலே இங்கு திரும்பி வந்திருக்கார். ஒரு ஷாப் கடை வச்சிருக்கார். கௌரவமா பிழைக்கிறார். அக்கா இறந்த போது, கூட இல்லையே என்று இப்ப வருத்தப்படறார். இருந்திருந்தா உன்னை அந்த குடிகார கோபாலுக்கு கல்யாணம் பண்ண விட்டிருக்க மாட்டேன் என்கிறார். என்ன செய்வது அம்மா, எது நடக்கணுமோ அது நடந்து தானே தீரும். எனக்கு வருத்தம் இல்லை. ஆண்டவன் இந்தப் பிள்ளைகளுக்காக என்னை அனுப்பி வச்சிருக்கார் போல...”

“ அப்படியா...உனக்கு ஒரே சொந்தம் அவன்தான்னு சொல்றே. சரி அவன் வந்து போகட்டும்.” என்று அனுமதி அளித்தாள் மரகதம்.

“அம்மா...ரொம்ப நன்றி.”

“எதுக்கு?” என்று கேட்டாள் மரகதம். “என் உணர்வுகளை மதிச்சு என்னைத் தேடி வந்து சமாதானப் படுத்தியதுக்கு...உங்களுக்கு என்ன தலை எழுத்தா?”

“உனக்கு அந்த தகுதி இருக்கு..ஒ.கே...வரட்டுமா?”

மரகதம் குழந்தைகளை கொஞ்சி விட்டுப் புறப்பட்டாள். முத்து “உங்களுக்கு ஒரு அம்மாவா நான் கிடைச்சது மாதிரி இப்ப ஒரு பெரியம்மா கிடச்சாச்சு.....” என்றாள் குழந்தைகளிடம். உறவுகளின் மேன்மை உறவுகளை இழந்ததவர்களுக்குத் தானே தெரியும்.

பரபரப்பாக ஈஸ்வரி ஒரு பேப்பரும் கையுமாக அலைந்தாள்.

“என்ன ஈஸ்வரி அக்கா...என்ன பம்பரமா சுத்தி சுத்தி வறீங்க?” என்றாள் முத்து.

“உன் பேரையும் சேர்க்கவா?”

“எதுக்கு?”’

“ஒன்பது நவகிரகங்கள் உள்ள கோவில்களுக்குப் போறோம். ஒரே நாள் தான்...எந்தெந்த பாட்டிகள் வராங்கன்னு லிஸ்ட் தயாரிக்கிறேன்..”

“வரணும்னு ஆசையாத்தான் இருக்கு. ஆனா மணிகண்டன் சின்னக் குழந்தை .அவனை வச்சுக்கிட்டு எப்படி.?”

“உன் பேரை எழுதிக்கறேன்...இரண்டு வயசுதான் ஆகப்போகுதே வா ...சமாளிக்கலாம்.”

“சரி ...” முத்துவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது...வேலை குழந்தை என்று ஒரே கூடாரத்தில் உழன்று கொண்டு இருப்பது சோர்வைத் தர..இந்த டூர் ஜாலியாக இருக்கும் போலிருக்கே...மணி, தாமரை நாம வெளியே போறோம்..போவோமா...” பாடினாள்.

“என்ன ஒரே ஹாப்பி போலிருக்கு..” என்றான் தங்கப்பன். “வாங்க மாமா..” அவனிடம் விஷயத்தை சொன்னாள்.

“போயிட்டு வா முத்து. உனக்கும் ஒரு சேஞ்சு வேணும்...வந்து நீ அனுமதிச்சா நான் மணிகண்டனைப் பார்த்துக்கிறேன்..”

“வேண்டாம் மாமா..அவனையும் கூட்டிட்டுப் போறேன்.”

“சரி...பத்திரம் ...’

“அம்மா ஏற்பாடு பண்ணி இருக்காங்க...பாதுகாப்பா தான் இருக்கும்..”

பாட்டிகளில் மிகவும் வயதான நடக்க முடியாதவர் தவிர அனைவரும் பேர் கொடுத்து விட்டார்கள். முப்பது பேர் தான் வந்தார்கள். எந்த எந்த கோவில்களுக்குப் போகிறோம் என்று ப்ரோக்ராம் தயாரிக்கப்பட்டு ஆளுக்கொரு லிஸ்ட் கொடுக்கப்பட்டது. நவகிரக ஸ்தலம் ஒன்பதும் பலமுறை சின்ன வயதில் பாட்டிமார்கள் பார்த்திருக்கிறார்கள் என்றாலும், இப்பொழுது பார்ப்பது ஒரு பிக்னிக் போவது மாதிரி அவர்களுக்குத் தோன்றியது. அதிகாலை நாலு மணிக்கே புறப்பட்டு விட்டார்கள். முதலில் சந்திரனுக்குரிய நவகிரக கோவில் இருக்கும் திங்களூர் சென்றனர்.

அடுத்து குருவுக்குரிய ஆலங்குடி கோவில். அப்படியே திருநாகேஸ்வரம் ராகுவிற்குரிய ஸ்தலம். பிறகு சூரியனார் கோவில். பின் கஞ்சனூர் சுக்ரனுக்குரிய ஸ்தலம் .வைதீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரகம்...திருவெண்காடு புதனுக்குரியது .கீழப்பெரும்பள்ளம் கேதுவின் கோவில். கடைசியில் சனி கிரக கோவில் திருநள்ளாறு. நினைத்தபடி ஒரு நாளில் முடியவில்லை. மூன்று நாள் ஆயிற்று.

திருநள்ளாறு வந்த போது மதியம் மூன்று மணி. அங்குதான் முத்து அருந்ததியை சந்தித்தாள். அருந்ததிக்கு முப்பத்து வயது இருக்கலாம்.

நல்ல நிறம். படபடக்கும் நீள் விழிகள். சுருள் முடி. தேஜஸான முகம். உதடுகள் மூடி இருந்தாலும் புன்னகைப்பது போல் தோன்றும் அழகு.

“குழந்தையை கொடுங்க...நீங்க தரிசனம் பண்ணிட்டு வாங்க. நான் முடிச்சாச்சு.” என்று அவள் சொல்ல முத்து “ரொம்ப நன்றிங்க” என்றபடி தரிசனம் பண்ணிவிட்டு வந்தாள். மரத்தடியில் உட்கார்ந்தார்கள். மரத்தின் நிழலும் மெல்லிய காற்றும் இதமாக இருந்தது. சுற்றி பக்தர்கள் கூட்டம் மொய்த்தபடி இருந்தது “கோவில் வந்தாலே மனசில் ஒரு அமைதி வந்துருது இல்லையா?” என்றாள் அருந்ததி.

“ஆமாங்க....எனக்கும் கோவில்களுக்குப் போறதுன்னா ரொம்பப் பிடிக்கும்.” குழந்தையை தோளில் சாத்தியபடி கூறினாள் முத்து. தாமரை ஈஸ்வரியின் கையைப் பிடித்தபடி பிரகாரம் வலம் வந்துகொன்ட்டிருந்தாள். “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? கூட்டிட்டு வரலையா? இந்த காலத்து குழந்தைகள் எங்கே கோவிலுக்கெல்லாம் வர ஆசைப் படறாங்க. படம் போகணும், தீம் பார்க் போணும், பீச் போணும் என்று தான் ஆசைப்படறாங்க..உங்க பிள்ளைகள் எப்படி?”

“எனக்கு குழந்தைகள் இல்லை. இருந்திருந்தா கோவில்களுக்கு கூட்டி வந்து பக்தியை ஊட்டிவிட்டிருப்பேன். சின்னப்பவே பழக்கினா தான் அந்த ஆர்வம் வரும்.”

“ அய்யோ...மனிச்சிடுங்க....தெரியாம கேட்டுட்டேன்...குழந்தை இல்லாதவங்க என்னென்னெவோ சிகிச்சை எல்லாம் எடுத்துக்கிட்டு குழந்தை பெத்துக்கறாங்களே...நீங்க அது மாதிரி...”

“எனக்கு குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும். சின்ன வாய், சின்ன மூக்கு..குட்டி மண்டை..குட்டிக் குட்டி கால்கள்...சலங்கை கொஞ்ச ஓடி வரும்போது மனசை அள்ளிட்டுப் போகுமே..எனக்கு கொடுத்துவைக்கலை...” அருந்ததியின் பார்வை எங்கோ போயிற்று. ஏமாற்றம் அவள் கண்களில் தெரிந்தது. அவளின் நீள் விழிகளில் நீர் நிரம்பி தளும்பிற்று. முத்து அவள் கைகளை ஆறுதலாக பிடித்துக் கொண்டாள். அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.”உங்களுக்கு பிறக்கும்மா...கவலைப்படாதேங்க..” என்றாள் முத்து.

“சரி என்னை விடுங்க,,,.ஆமா உங்களைப் பார்த்தா ரொம்ப சின்ன வயது மாதிரி தெரியுது அதுக்குள்ளே இரண்டு குழந்தைகளா? பதினைந்து வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டதா?” இப்பொழுது முத்து கண்களில் ஈரம்..”ஈஸ்வரனின் விளையாட்டு....இது என் குழந்தைகள் இல்லை. இவங்க அம்மா இறந்து போயாச்சு....நான் ரெண்டாம் தாரம்...புருஷன் குடிகாரன்...தன் புள்ளைகளை என் கிட்ட விட்டிட்டு என்னை அத்துவிட்டிட்டு வேற ஒருத்தியை சேர்த்துக்கிட்டு வாழ்றான்.” அருந்ததி “அப்படியா...” என்று அதிர்ந்தாள்.

“ஆமாம். என்னத்தை சொல்ல? இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் மேல் பாசம் வச்சிட்டேன்...நான்தான் அம்மா.” என்று பெருமிதமாக சொன்னாள். அப்படி சொல்லும் போது அவள் முகம் பிரகாசித்தது.

“அடேயப்பா....எவ்வளவு பெரிய காரியம்...நீங்க ரொம்ப உசந்திட்டீங்க...”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை...முதல்லே என்னை நீங்க வாங்கன்னு சொல்றதை விடுங்க..உங்களை விட நான் ரொம்ப சின்னவ.”

“சரி...உத்தரவு...எங்க விட்டுக்கு வாங்க...விலாசம் தரேன்.” போன் நம்பர் விலாசம் தந்தாள். “எல்லாரும் வாங்க, இப்பவே போனா தான் இருட்டும் முன் ஊர் போய் சேரலாம்.” என்ற ஈஸ்வரியின் குரல் கேட்டு “சரிங்க நான் கிளம்பறேன்...உடனே போலேன்னா விட்டிட்டுப் போய்டுவாங்க ...ரொம்ப கறார் அந்தம்மா.”

அரக்கப் பறக்க எழுந்தாள் முத்து...அவசரத்தில் எழுந்ததால் மடியில் இருந்த குழந்தை தவறி டொம்மென்று தரையில் விழுந்தது.. குழந்தையின் நெற்றியில் குருதி வழிந்தது...குழந்தை மூச்சு பேச்சற்று கிடந்தது. விழுந்த அதிர்ச்சியில் அழக்கூட இல்லை. முத்து பெருங் குரல் எடுத்து அழுதாள் .”அய்யோ..என் பிள்ளை காப்பாத்துங்க காப்பாத்துங்க.” என்று கதறினாள். ஈஸ்வரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை...பாட்டிகள் சோர்ந்து போய் விட்டார்கள். தாமதம் ஆனால் அவர்களில் யாருக்காவது உடம்பு முடியாமல் போகலாம். “அழாதே முத்து...இரு ஒரு கால் டாக்ஸி அமத்றேன்...பணமும் தரேன்...நீ ஆஸ்பத்திரி கிளம்பு. ஊர்லே கொண்டு பாட்டிகளை சேர்த்திட்டு நான் வந்து உன்னைப் பார்க்கிறேன்.” ஈஸ்வரி டாக்ஸி தேட ஓடினாள்.

“முத்து...நான் என் காரில் தான் வந்திருக்கேன்...வா நாம் உடனே ஆஸ்பத்திரி போலாம்...” அருந்ததி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு காரில் ஏறினாள். முத்துவும் ஏறிக்கொண்டாள். கார் விரைந்து சென்றது... அறை மணியில் ஆஸ்பத்திரி அடைந்து...டாக்டரிடம் காட்டி...சிகிச்சை தொடங்கி...குழந்தை மணிகண்டன் கண் விழித்துப் பார்த்து அழும் வரை....இருவரும் திகிலுடன் பேய் அறைந்தது போல் காணப்பட்டார்கள். குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டவுடன் இருவரும் கட்டிப் பிடித்து அழுது கொண்டே சிரித்தார்கள். விடிகாலை நாலு மணி ஆகிவிட்டது. “முத்து...எங்க விட்டுக்கு வா...விடிந்ததும் டிபன் பண்ணிட்டு போலாம் நானே கொண்டு விடறேன்.”

மணிகண்டன் சிரித்து விளையாடவே முத்து தெம்புடன் நின்றாள். “சரிம்மா...” என்று அவள் சம்மதித்தாள். வீடு வந்ததும் முத்து பிரமித்தாள். இது வீடு இல்லை மாளிகை...எவ்வளவு பெருசு...மெத்து மெத்து சோபாக்கள்...கண்கவர் திரைச்சீலைகள்...அலங்கார விளக்குகள் தரையில் கம்பள விருப்பு...அட்டகாசமாக இருந்தது. இவ்வளவு பண வசதி இருந்தும் எவ்வளவு எளிமையான மனசு...முத்து பிரமை பிடித்து நிற்க...மிக வசதியான ஒரு அறையில் அவளை தங்க வைத்தாள் அருந்ததி. “செல்லம்மா...இங்கே வாங்க...குழந்தைக்கு ஒரு தொட்டில் கட்டி விடுங்களேன்.”

குழந்தையை தொட்டிலில் இட்டு விட்ட பின் “முத்து நீ கொஞ்சம் தூங்கு...நானும் ஓய்வு எடுக்கறேன்...இரவெல்லாம் முழித்திருந்தது அசதியா இருக்கும்.”

முத்து படுக்கையில் படுத்தது தான் தெரியும் அப்படியே அசந்து தூங்கி விட்டாள். அடித்துப் போட்ட மாதிரி தூக்கம். குழந்தை அழுதது கூட தெரியவில்லை அவள் கண் விழித்த போது மணிகண்டனுக்கு இட்டலி ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள் அருந்ததி..”அம்மா...என்னை எழுப்பி இருக்கக் கூடாதா? நீங்க போய்...”

“ஏன்? நான் ஊட்டிவிடக் கூடாதா? கொடுத்து வச்சிருக்கணுமே. அடடா உச்சா போயிட்டானே...போக்கிரி...முத்து பிடி உன் குழந்தையை...நான் சேலையை மாத்திட்டு வரேன்.” குழந்தையை வாங்கிக் கொன்ட முத்து.... “உன்னை கீழப் போட்டிட்டேனே. இந்தப் பாவி...மன்னிச்சிரு கண்ணே...அம்மாவை மன்னிப்பியா“ என்று கொஞ்சினாள். இளம் பச்சைக் காட்டன் புடவையில் வந்த அருந்ததி ரட்சிக்க வந்த தேவதை மாதிரி தெரிந்தாள் .இக்கட்டான சமயத்தில் உதவிய கண் கண்ட தெய்வம்!

“அம்மா...ரொம்ப நன்றிமா...நீங்க மட்டும் உதவலைனா...நான் என் குழந்தையை இழந்திருப்பேன்.”

“உன்னோட தாய்பாசம் என்னை சிலிர்க்க வைக்குது.. யாரோ பெற்ற பிள்ளைகளை உன் பிள்ளை போல் பாக்றியே, யாருக்கு வரும் உன் மனசு ? அதுவும் இவ்வளவு சின்ன வயதில். பக்குவப்பட்ட மனசுக்கும் வயசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நீ கடவுள் மாதிரி..”

“போங்கம்மா...சாதாரண விஷயத்துக்கு இப்படி புகழ்றீங்க.”

“இது சாதாரனம் இல்லை முத்து. எனக்கு ஏன் குழந்தை இல்லை தெரியுமா?” அருந்ததி மனதில் அடக்கி வைத்திருந்த துக்கத்தை வெளியிட எத்தனித்தாள். பிறகு சுதாரித்துக் கொண்டு “அது ஒரு கதை. இப்ப எதுக்கு? குளிச்சிட்டு சாப்பிட வா. பனி வீடு மரகதம்மாளுக்கு நீ இங்கு இருக்கற தகவல் சொல்லிட்டேன். யப்பா..அவங்க கேள்வி மேல கேள்வி கேட்டுட்டாங்க...விவரமா பதில் சொன்ன பிறகு தான் விட்டாங்க...உன் தாய் வீடு அதுதான் போல..”

“ஆமாம்மா...ஒரு கதவு மூடினா ஒரு கதவு திறக்கும்னு சொல்வாங்க. எனக்கு இரண்டு கதவு திறந்தாச்சு. .ஒண்ணு அவங்க வீட்டுக் கதவு. இன்னொன்னு உங்க மனக் கதவு. கிளம்பணும்மா...அங்க போய் சாப்பிட்டுக்கறேன்.”

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம்.. போய் குளி முதல்ல...உனக்கு சூடிதார் எடுத்து வச்சிருக்கேன்....”

“அம்மா நான் சுடிதார் எல்லாம் போட்டதில்லைமா...”

“போட்டுக்கோ...சின்னப் பொண்ணு தானே நீ ..”

முத்து குளித்து சுடிதார் அணிந்து சாப்பிட உட்கார்த்தாள். சூடான இட்லி வடை பொங்கல் சாம்பார் சட்னி என்று சுவையான டிபன்...கூடவே ஒரு ஸ்வீட் .

“உன்னை சந்திச்சதில் ரொம்ப சந்தோசம் முத்து. எப்ப வேணா இங்கு நீ வரலாம். நல்லா சாப்பிடு. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”

கிளம்பும் நேரம் வந்தது. அப்பொழுது தான் பார்த்தாள் முத்து, சுவரில் உள்ள ஒரு பெண்மணியின் புகைப்படத்தை. மாலை போட்டிருந்தது.

“அம்மா இது...சாந்தாம்மா ஆச்சே. அவங்க உங்களுக்கு ...”

“என்னோட அம்மா...”

“இவங்களா ?”

“ஏன் சந்தேகமா கேக்றே? இவங்க என் அம்மாவா இருக்கக் கூடாதா?.”

“அப்படி இல்லை..பின் இவங்க எப்படி பனி வீட்டில் வந்து சேர்ந்தாங்க? அதான்...”

“புரியுது...அம்மாவை விடுதியில் சேர்த்து விட்டோம்னு யோசிக்கிறே இல்லே. அது தான் விதி. அது பத்தி இப்ப பேச வேண்டாமே.”

கனமான இதயத்துடன் கிளம்பினாள் முத்து. இவ்வளவு நல்ல மனதுடைய பெண்மணி எப்படி அம்மாவை முதியோர் இல்லத்தில் தள்ளினாள்.?

நதி ஓடும்.
 

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்-3

பனி வீடு பணிகளில் சுறு சுறுப்பாக இயங்க ஆரம்பித்ததில் அருந்ததியை மறந்தே போனாள் முத்து. தங்கப்பன் அப்பப்ப வந்து அவளுடன் உரையாடிச் சென்றான். குழந்தைகள் அவனிடம் ஒட்டிக் கொண்டன. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சும்மாவா சொன்னார்கள்.? தங்கப்பனின் வரவு முத்துவின் மனதிற்கு ஒரு ஆறுதலைக் கொடுத்தது. அவள் மேல் அக்கறை கொன்ட ஒரே சொந்தம். அவள் சாய்ந்து கொள்ள .ஒரு மனசு.

தாமரைக்கு வீட்டுப் பாடங்களில் உதவினான். மணிகண்டனை தூக்கி வைத்துக் கொஞ்சினான். முத்துவிடம் அன்பைப் பொழிந்தான்.

“ஏய்...புள்ள....எப்ப என்னை கல்யாணம் கட்டிக்கப் போறே?” என்பான்.

“அது எதுக்கு மாமா? இந்தப் பிள்ளைகளை விட்டிட்டு நான் வரமாட்டேன்.”

“யார் விடச் சொன்னா? நம்ம புள்ளைகளா வளர்ப்போம்.”

“எனக்கு பயமா இருக்கு மாமா.”

“என்ன பயம்?”

“அந்த விளங்காத குடிகார அப்பன், தீடீர்னு வந்து எம் பிள்ளைகளை கொடுன்னு வந்து நின்னா, என்ன செய்றது?” பலமாக சிரித்தான் தங்கப்பன்.

“அவனா...புது சிறுக்கியின் முந்தானை முடிச்சில் கழுத்து இறுகி, பேச வாய் இல்லாமல் கிடக்கான்.

செய்த பாவம் சும்மா விடுமா? பரமியின் பிடியில் கந்தல் கந்தலாகிட்டு இருக்கான்.”

முத்து பலமாக சிரித்தாள். “நிஜமாவா சொல்றே...”

“பரமேஸ்வரின்னு பேரு..அங்காளபரமேஸ்வரி..அவக்கிட்ட அவன் பருப்பு வேகாது. கொத்தடிமையா கிடக்கான். அத விடு. நாம ஒரு சினிமாவுக்குப் போலாமா?”

“வாரியக் கொண்டைக்கு பட்டு குஞ்சம் கேக்குதோ? புள்ளைகளை விட்டிட்டு நான் வரமாட்டேன். அம்மா இந்த மட்டும் உன்னை இங்கு வர விட்டிருக்காங்களே, அதை நினைத்து சந்தோஷப்படு.”

“ம்க்கும்...அவங்க உனக்கு அம்மா இல்லை மாமியார்.” முத்து கலகலவென்று சிரித்தாள். அவள் சிரிப்பதை ரசித்துப் பார்த்தான் தங்கப்பன்.

“மேலும் எனக்கு உரிமை இருக்குடீ....யாரால் தடுக்க முடியும்?”

“வாலை சுருட்டிட்டு இருந்தா தான் நீ இங்கு வரலாம் செல்லம்...புரிஞ்சுக்கோடா மவனே.”

செல்லமாக அடிக்க கையை ஓங்கினான் தங்கப்பன். ஈஸ்வரி அங்கு வந்தாள். “அம்மாடி முத்தம்மா...இங்கே முத்தம் கொஞ்சி விளையாடற நேரம் இல்லை இது. அங்கே காமுப் பாட்டி பி.பி மாத்திரை காணாமப் போச்சுன்னு அல்லாடிக்கிட்டு இருக்கு..போய் பாரு. மிஸ்டர் தங்கப்பன் இது காதலர் பூங்கா இல்லை.

அப்புறம் வாங்க..முத்து வேலையை பார்க்கட்டும்..” ஈஸ்வரி கடுமை காட்டினாலும் அவள் கண்களில் கனிவு இருந்தது. “ஸாரி மேடம்..முத்து வரேன்...”

அவன் போனதும் ஈஸ்வரி கேட்டாள். “என்ன ப்ரோபோஸ் பண்ணிட்டானா?” கண் சிம்மிட்டினாள். “உங்களுக்கு எப்பவும் விளையாட்டுதான்.” என்று முறைத்தபடி அகன்றாள் முத்து. அகிலாப் பாட்டியிடம் வந்ததும் முத்து, பாட்டிக்கு புடவை கட்டுவதில் உதவிக் கொண்டே “பாட்டி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். சொல்வீங்களா...” என்றாள். ‘என்ன தெரியணும்? வம்புக்கு அலையாதேடி. அந்த சீப்பாலே கொஞ்சம் பேன் எடேன்.”

“எடுப்பேன்...ஆனா நான் கேக்றதுக்கு பதில் சொல்லணும்.”

“கேட்டுத் தொலை.” அருந்ததியை சந்தித்ததை சொன்னாள். அவளின் உதவும் குணத்தை சொன்னாள். குழந்தையை காப்பாற்றியதை சொன்னாள்.

“அவங்க வீட்லே...அந்த சாந்தாம்மா படம் மாட்டி இருந்தது. மாலை போட்டிருந்தது. அவங்க உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டேன். அம்மான்னு சொன்னாங்க. நம்பவே முடியலை.ஆச்சர்யப்பட்டுப் போயிட்டேன். அம்மாவை ஒதுக்கி வைக்கிறவங்களை எப்படி மரியாதையுடன் பார்க்கிறது? ஏன் பாட்டி? அவங்க ஏன் ஒரு தரம் கூட சாந்தாம்மாவை பார்க்க வரலை? அப்புறம் அவங்க இருக்கும் போது எதுக்கு சாந்தாம்மாவை பனி வீட்டில் சேர்த்தாங்க? என்னதான் நடந்தது? யார் கிட்ட தப்பு? அவங்களுக்குள் மனஸ்தாபமா? என்ன தான் மனஸ்தாபம் என்றாலும் பெத்த தாயை இப்படியா வந்து அநாதை இல்லத்தில் சேர்ப்பாங்க? எங்கோ இடிக்குதே.?”

“இடிக்கும் இடிக்கும்..முதலே சரியா வாரு...முடி இல்லாத மண்டையிலே பிராட் பிராட்ன்னு வாரினா எப்படி? வம்புக்கு அலயாதே.?”

“என்ன பாட்டி...செல்லம் இல்லே...சொல்லுங்களேன்...பெரிய பிகு பண்றீங்க.”

“அவங்க அவங்க செய்றது அவங்க அவங்களுக்கு விடியும்...சாந்தா தன் அம்மாவை விடுதியிலே சேர்த்தா...கடைசியிலே அவளுக்கும் அதே கதி. போறுமா விளக்கம். நீ நல்லா இருப்பே. வாரினது போரும் போய் வேறு வேலையைப் பாரு.”

“பாட்டி முழுக் கதை சொல்லு பாட்டி..”

“ஓடு . பிச்சிடுவேன்.”

“முத்து...தண்ணி லாரி வந்திருக்கு...குடத்தை எடுத்திட்டு வா...செண்பகம், மேரி, கல்யாணி எல்லாரையும் கொடத்தை எடுத்திட்டு வரச் சொல்லு ..”

முத்து ஓடினாள். அந்த லாரிக்காரன் முசுடு... காக்க வைத்தால் கத்துவான். அகிலாப் பாட்டிக்கு நெறைய விஷயம் தெரியும் போலிருக்கே. அப்புறமா கறந்திடணும். எண்ணிக் கொண்டே குடங்களை அள்ளிக் கொண்டு மற்ற பெண்களையும் கூட்டிக்கொண்டு தண்ணீர் பிடிக்க ஓடினாள் முத்து



சந்தானம் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்தார். விமலா காப்பியுடன் வந்தாள்.

“குடிங்க சூடு ஆறிடப்போவுது.”

“நான் சூடா இருக்கேன் தெரியலை?”

“இப்ப என்ன...சொல்லித் தொலைங்க.”

“அந்த அருந்ததியைப் பார்த்தேன். வெக்கமே இல்லாமே எப்படி இருக்கேங்க மாமான்னு கேக்கறா.”

“உங்களைப் பார்த்து எதுக்கு வெக்கப்படணும்? நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு வரவேண்டியது தானே.”

“சொல்லுவேடி....சாந்தாக்காவை நோகடிச்சவ. தைரியமா நடமாடறா. செத்ததுக்கும் வரலை. இவள் எல்லாம் ஒரு மகளா? நல்லவ வேஷம் போட்டுக்கிட்டு இருக்கா. ஒண்ணுமே தெரியாத மாதிரி கள்ளத்தனம். அதான் களவானின்னு திட்டிட்டு வந்துட்டேன். என் மனசே ஆறலை. பாவம் சாந்தாக்கா...வயசான காலத்திலே கூட நிம்மதி இல்லாமே செத்தாங்க. இந்தப் பாவம் அவளை சும்மா விடாது.”

“தேவை இல்லாமே சபிக்காதேங்க. அவங்களுக்குள்ளே என்ன பிரச்னையோ? உங்க சாந்தாக்கா பிடிவாதம் தான் தெருஞ்சதாச்சே.? பெத்த பொண்ணுக் கிட்ட பகை பாராட்டினா என்ன அர்த்தம்?”

“அதுக்காக....செத்ததுக்கு கூட வராம இருக்கணுமா? நல்ல கதையா இருக்கே.”

“புரியுது...ஆனா இதிலே ஏதோ விஷயம் இருக்கு. அருந்ததி ரொம்ப நல்லவ...சரி போதும் விடுங்க. நம்ம பொழப்பைப் பார்ப்போம்.”

“என்னவோ நடக்குது உலகத்திலே...என்னன்னு சொல்ல ..” எழுந்து குளிக்கச் சென்றார் சந்தானம்.



அருந்ததி கணவனிடம் முத்துவைப் பற்றி சொன்னாள். அவள் தாய் பாசத்தைப் பற்றி சொன்னாள்.

“ஆச்சர்யமா இருக்கே...இந்த காலத்தில் இப்படி ஒரு மனுஷியா? உண்மையிலேயே அவ கிரேட்..” என்று சிலாகித்தான் அஸ்வின்.

“என்னங்க...எனக்கு ஒரு யோசனை தோணுது...சொல்லவா ?”

“தாராளமா சொல்லு. என்கிட்டே என்ன தயக்கம்.?”

“வந்து.....” அவள் சொல்லி முடித்ததும் திடுக்கிட்டுப் பார்த்தான் அஸ்வின்.

“வேண்டாம் அருந்ததி...அது சரி வராது. அந்த நினைப்பை விட்டுடு.”

அழ ஆரம்பித்தாள் அருந்ததி. அவளை மார்போடு அணைத்துக் கொண்டு “அழாதே கண்மணி உன் வலி எனக்குப் புரியுது..ஆனா..”

“எனக்குதான் அம்மா அன்பு கிடைக்கலை, நானாவது ஒரு அம்மாவா இருந்து அன்பு காட்டினா தான் என் மனம் ஆறும்.”

“சரி. கேட்டுப் பார்க்கலாம்...இல்லைன்னு பதில் வந்தா மனம் உடைந்து போகக்கூடாது.”

அருந்ததி சிரிப்புடன் நிமிர்ந்தாள். ”தேங்க்ஸ் அஸ்வின். ஐ லவ் யு .”

“இப்பதான் என்னை லவ் பண்றியா? அப்ப இத்தனை வருஷமா யாரை லவ் பண்ணிட்டிருந்தே?”

“அதோ...அந்த மரத்தடியில் துயிலும் என் கண்ணனைத்தான்..”

அவர்களின் தோட்டத்தில் மகிழ மரத்தடியில் மண்ணில் புதைந்து போயிருந்த குட்டிக் கண்ணன் இன்னமும் அவர்களின் மனதில் புதைந்து வாழ்கிறான்.

அவர்களுக்குப் பிறந்த ஒரே குழந்தை மாயக் கிருஷ்ணன் மாயமாய் பதினாறு நாட்களே உயிருடன் இருந்து விட்டுப் போனவன். சின்ன கிருஷ்ணன் பொம்மை மாதிரி கொள்ளை அழகு.

அஸ்வினுக்குத் தெரியும்...அருந்ததி தினமும் அந்த புதைந்த இடத்தை ஒரு கோவிலாக நினைக்கிறாள் என்று. அங்கு சென்று அவள் தாலாட்டு பாடுவதை கேட்க நேர்கையில் அவனையும் அறியாமல் அவன் கண்களில் நீர் சுரக்கும். அருந்ததி அன்பானவள். மனம் நிறைய அன்பை வைத்திருக்கிறாள். நீரோடை மாதிரி விரிந்த தெளிந்த மனசு அவளுக்கு. அவளின் தாய் பாசத்தைக் காட்ட வழி இல்லாமல் குழந்தையை பிடுங்கிக் கொன்ட கடவுளிடம் அவன் அடிக்கடி சண்டை போடுவான் என்றாவது நேரில் வா உன்னை பின்னி எடுக்கறேன்...என்று மானசீக சபதம் எடுத்திருக்கிறான். மனிதர்களே வேடிக்கை ஆனவர்கள். சாந்தா என்கிற தாய் மகளை புறக்கணித்தாள். அன்பு செலுத்த மறுத்தாள்.

அருந்ததி என்கிற தாயை மகன் புறக்கணித்தான். அன்பு செலுத்த விடவில்லை. மண்ணில் மறைந்து கொண்டான். என்ன விசித்திரம் இது.! அஸ்வின் அடிக்கடி இவ்வாறு நினைப்பதுண்டு.

“அருந்ததி நீ அன்பு செலுத்த உனக்கு ஒரு பிள்ளையை அந்த முத்து தருவாளா? உன் கனவு பலிக்குமா?”

கேள்விகள் நிறைந்த வாழ்க்கையில் பதில்களை தேடிப்பிடித்துப் போகிற மனசை கட்டிப் போடவா முடியுமா? தேடினால் கிடைக்கலாம்...
 

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்-4

விடியலை நோக்கி ஓடாத மனிதர்கள் கிடையாது. நமக்கு ஒரு விடிவு காலம் வராதா என்று தங்கள் கிழக்கை தேடுகிறவர்களுக்கு அது வசப்படும். அருந்ததியும் இது வரை ஒரு கிழக்கை சிருஷ்டித்து வைத்திருந்தாள். அதன் ஒளியில் அவள் தன்னை உயிர்பித்துக்கு கொண்டிருந்தாள். இது அஸ்வினுக்குத் தெரியும். தன்னை சாந்தப் படுத்திக்கொண்டு வாழ்கிறாள். இறந்த குழந்தைக்கு அவள் பிறந்த நாள் கொண்டாடுவதை முதலில் அவன் ஆட்சேபித்தான்.

“அருந்ததி...வேண்டாம். உனக்கு இது ஆறுதல் தருகிற விஷயமல்ல. உன்னை மனநோயாளி ஆக்கிவிடும்.”

“என் குழந்தை என் மனதிலே எப்பவும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். என்னை என் போக்கில் விடுங்கள். கட்டுப்படுத்தினால் தான் நான் மன நோயாளி ஆகிவிடுவேன்.”

“நமக்கு வேறு குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை கொள். மருத்துவ சிக்கல் உள்ளது என்று மருத்துவர் சொல்கிறார். சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம் சரியாகும் நம்பு. இப்படி நீ இறந்த குழந்தையை உயிருடன் இருப்பதாக பாவனை செய்து கொண்டு வாழ்வது எனக்கு சரியாகப் படவில்லை.”

“கவலைப்படாதீங்க...இந்த என் சிருஷ்டித்த கிழக்கு என்னுள் வெளிச்சம் தருகிறது. விட்டு விடுங்கள். நான் வாங்கி வந்த வரம். அம்மாவின் அன்பை அனுபவிக்காத நான் அம்மாவாக இருந்து அன்பை கொடுக்க ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்தேன். அது நடக்காத பட்சத்தில் என் தாய் அன்பை எப்படி செலவழிப்பது? எனக்கு இந்த வழி தான் கிடைத்தது .”

“அருந்ததி...கனவுகளில் வாழ்வது ஓரளவு தான் நன்மை தரும். பிறகு ஏக்கம் தான் மிஞ்சும். அதுவே மன அழுத்தத்தை தரும். குழந்தை இறந்து விட்டதை ஏற்றுக் கொள். நமக்கு குழந்தை பிறக்கவும் வாய்ப்புண்டு. மருத்துவர் சொல்வதெல்லாம் நடந்து விடும் என்று சொல்வதற்கில்லை. வேண்டுமானால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம்...என்ன சொல்றே?”

“அதுவும் இறந்து விட்டால்? அப்புறம் என்னால் தாங்க முடியாது.”

“உளறாதே...விதண்டாவாதம் செய்யாதே.”

“கொஞ்சம் வாயை மூடறேங்களா? நான் ஏதோ என் மன சாந்திக்கு செய்துவிட்டுப் போகிறேன். இனிமேல் இந்த விஷயத்தில் நீங்க தலையிட வேண்டாம்.”

அதற்கு மேல் அஸ்வின் அது பற்றி பேசவில்லை. ஆனால் மனசில் கவலை போட்டு அரித்தது. ஐந்து வருடமாக அவள் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறாள்.

குழந்தை இறந்து ஒரு வருடம் ஆன போது, ஒரு வயது குழந்தைக்குரிய உடை வாங்கினாள் .சாமி முன் வைத்து “கடவுளே உன்னுடன் இருக்கும் என் குழந்தைக்கு இதை அணிவித்து விடு” என்பாள். பிறகு பத்திரமாக அந்த உடையை பெட்டிக்குள் வைப்பாள். அடுத்த வருடம் இரண்டு வயது குழந்தைக்குரிய உடை வாங்குவாள்...இப்படியாக ஐந்து உடைகள் அவள் பெட்டியில் வைத்திருகிறாள். இந்த பிரமையுடன் அவளும் இத்தனை வருடம் கழித்து விட்டாள். இது தவிர அவள் வேறு பைத்தியக்கார வேலை செய்வதில்லை. எனவே அஸ்வினும் சற்று நிம்மதி அடைந்தான். சில சமயம் அவள் மகிழ மரத்தடியில் நின்று பேசுவாள் பாடுவாள். அவளுக்குப் பிடித்த குழந்தையை பற்றிய பாடல் “அழகான மலரே அறிவான பொருளே தெளிவான தெளிவே செங்காந்த மலரே.” பிறகு சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா... என்று பாடுவாள். அன்று பூராவாக உற்சாகமாக இருப்பாள்.

“உங்களுக்குத் தெரியுமா நான் இன்று பாடிய போது...ஒரு காக்கை வந்து உட்கார்ந்து கொண்டது. பாடி முடித்ததும் நான் வைத்த கேக்கை கவ்விக்கொண்டு போனது...என் குழந்தை பிறந்தநாள் கேக்கை சாப்பிட்டது அஸ்வின்.”

“ரொம்ப சந்தோஷம்...” என்று அவள் கன்னத்தில் தட்டுவான். அவள் முகம் பூராவும் மலர்ந்து விகசிக்கும். தப்பித் தவறி போதும் உன் ஸ்டுபிட் புராணம் என்று கோபித்துக் கொண்டால் அன்று அவனுக்கு சனி பிடித்து விடும். டமார் டமார் என்று தட்டுகள் உருளும். சாம்பாரில் உப்பு இருக்காது. உருளைக்கிழங்கில் காரம் கண்ணைப் பிடுங்கும். குரல் உயர்த்தி காச் மூச் என்று கத்துவாள். பிறகு சமாதானப் படுத்த அரை மணி தேவைப்படும். எனவே நாளடைவில் அவள் விருப்பம் போல் பிறந்தநாள் கொண்டாட அவனும் ஒத்துழைத்தான். வேறு வழி!

“போன பிறந்தநாளைக்கு நீலக் கலர் சபாரி எடுத்துதோம். இந்த முறை என்ன எடுப்பது.?”

“லேட்டஸ்ட் டிசைன் ஏதாவது எடு.” என்று அவனும் இல்லாத குழந்தைக்கு உடை எடுக்க உதவுவது வழக்கமாகிவிட்டது. இதை நினைத்தால் துக்கம் தொண்டையை அடைக்கும்.

“என்னங்க...இது என் சீக்ரெட்...யார் கிட்டவும் சொல்லக் கூடாது. சரியா?”

இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நான் ஏன் மூச்சு விடப் போகிறேன் என்று மனதுள் சொல்லிக்கொண்டு ,அவளிடம் “இது உன் சீக்ரெட் மட்டும் இல்லை நம் சீக்ரெட்.” என்று போலி உற்சாகம் காட்டுவான். மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் அருந்ததியை மகிழ மரத்தடியில் பார்க்கலாம்.

“ராஜா...பார்த்தியா உன் அம்மாவின் கதியை பிள்ளை இல்லை என்று என்னை குழந்தைக்கு பெயரிடும் நிகழ்ச்சிக்கெல்லாம் கூப்பிட மாட்டேன்றாங்க. நீ இருப்பது அவங்களுக்கு தெரியாது. இடியட்ஸ்...” என்று புலம்புவாள். நல்ல வேளையாக ஆண் பிள்ளையாக போயிற்று ,இல்லையேல் நகைகள் வாங்கி குவித்திருப்பாள். இப்படியாக அவள் தன் இல்லாத குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடியவள், முத்துவின் குழந்தையை பார்த்த பின் தான், தத்து எடுக்கும் கட்டத்திற்கு வந்திருக்கிறாள். மகிழ மரத்தடி கொண்டாட்டத்தை அவள் விட்டால் சரி. நல்ல விஷயம் தான். ஆனால் முத்து குழந்தையை கொடுக்க மறுத்தால், இவள் அதை ஏற்றுக் கொள்வாளா? தெரியவில்லை. மறுமடியும் முருங்கை மரம் ஏறிக் கொண்டு ஆடினால் என்ன செய்வது? ஏதாவது கலாட்டா பண்ணினால் எப்படி சமாளிப்பது? வேறு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று சொன்னால் ஏற்பாளா? பலவித சஞ்சல எண்ணங்கள் அஸ்வினை தூங்க விடாமல் பண்ணிற்று.

ஒரு நல்ல நாள் பார்த்து கிளம்பிவிட்டாள். முத்துவிடம் அவளைப் பார்க்க வருவதாக போன் பண்ணி சொல்லிவிட்டாள். காரில் ஏறிக் கொண்டாள். “போலாம்.” என்றாள். போவதற்கு முன் அவன் சொன்னான்-

“நீ முதலில் போய் கேட்டுப்பாரேன் அருந்ததி.....பிறகு நான் வரேன். உன்னை இறக்கி விட்டிட்டு நான் போகிறேன் .”

காரிலிருந்து குதித்து இறங்கினாள். கார் கதவை டமாரென்று அடித்து சாத்தினாள். வீட்டினுள் ஓடினாள். அஸ்வின் சலிப்புடன் தானும் இறங்கி வீட்டினுள் சென்றான். என்ன நடக்கப் போகிறதோ!

உன் அட்டகாசம் தாங்கலையே...என்று கத்த நினைத்தவர் அவளைப் பார்த்து பயந்து வாய் அடைத்துப் போனார். சமையல் அறையில் நின்றிருந்தாள். கண்களில் கோபத்தீ....பத்தாததுக்கு கேசை திறந்து வைத்து அந்த தீயின் மேல் தன் இடது உள்ளங்கையை வைத்து பொசுக்க முயன்று கொண்டிருந்தாள். “ஏய்...என்ன பண்றடி...முட்டாள்...”

கத்தியபடி கேசை அணைத்தான். “அறிவிருக்கா உனக்கு? ஒரு சஜஷன் தானே சொன்னேன்...பிடிக்கலைனா சொல்ல வேண்டியது தானே. அதுக்காக இப்படியா செய்வது? ஏன் இப்படி என்ன படுத்தறே? முத்து தத்து கொடுக்க முடியாது என்று சொன்னால் நீ என்ன பண்ணுவே? உன்னையே கொளுத்திக்குவியா ? சொல்லு ...”

“முத்து மாட்டேன்னு சொல்லமாட்டா..அவ தங்கப்பனை கல்யாணம் செய்துக்கப் போறா. அது என்ன அவ பெற்ற பிள்ளைகளா?” இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது? தலையில் அடித்துக் கொண்டு “சரி வா...கேட்டுப் பார்ப்போம்...வந்து தொலை...” என்று காரை ஸ்டார்ட் செய்தார் .

அருந்ததி சந்தோசத்தில் மனம் துள்ள பயணம் செய்தாள். கார் பயணம் இவ்வளவு சந்தோசமானதாக இது வரை அவளுக்கு இருந்ததில்லை. மனிகண்டனைத் தான் அவள் கேட்கப் போகிறாள்.

அவள் தன் இறந்த பையனாக அவன் அவதரித்து வந்ததாக கற்பனை செய்து விட்டாள். சிலருக்கு கற்பனை செய்யும் போது அது நிஜமல்ல என்று புரியும். ஒரு ஆறுதலுக்கு கற்பனை செய்து மறந்து விடுவர். ஆனால் அருந்ததி அப்படி இல்லை. கற்பனைகள் நிஜமாகி விட்டது போல் அவளுள் ஒரு வித்து விழுந்து விடும். எனவே அவள் மணிகண்டனை தன் மகன் என்பது தன் கற்பனை அல்ல நிஜம் என்று எண்ணினாள். “சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ...கண்ணிரெண்டும் தாமரையோ...கன்னம் மின்னும் எந்தன் கண்ணா...” என்று அவள் பாடி வருவதை கேட்டு அஸ்வின் வயற்றில் புளியைக் கரைத்தது.., என்ன நடக்கப் போகிறதோ ? அருந்ததி அடிக்கடி சொல்வாள். “நமக்கு பிறந்த குழந்தை ஏன் தங்கலை தெரியுமா? என் அம்மா செய்த பாவங்கள் தான் என் மேல் வந்து விடிஞ்சிருக்கு. பெற்றோர் செய்யும் பாவங்கள் பிள்ளைகளைத்தானே வந்தடையும். வேறு குழந்தை பிறக்குமோ இல்லையோ என்கிற நிலை. அந்த பாவம் எனக்கு சாபமாக ஆகிவிட்டது.” இது நிஜமா தவறா என்று யார் சொல்ல முடியும்? அஸ்வின் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எத்தனையோ குழந்தைகள் அனாதையாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கு பெற்றோராக இருந்து விட்டால் அவர்களுக்கும் ஒரு தாய் தந்தை கிடைத்த மாதிரி இருக்கும். நமக்கும் ஒரு குழந்தை கிடைத்த மாதிரி இருக்கும் என்று அருந்ததியிடம் சொல்லி இருக்கிறான். அப்பொழுது எல்லாம் எனக்கு என் மகிழமரத்தடி பிள்ளையே போதும். என்று சொல்லிவிடுவாள். இப்போ எப்படி மனசு மாறினாள்? அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தாள்.

“முத்துவின் குழந்தை அவள் பெற்றது இல்லை. ஆனால் பெற்றவள் போல் கவனிக்கிறாள். அந்தப் பக்குவம் ஒரு சின்னப் பெண்ணின் மூலம் எனக்கும் வந்துவிட்டது. அவளால் முடிகிற போது என்னால் முடியாதா?” விளக்கம் எல்லாம் சரிதான் ஆனால் முத்துவின் குழந்தை தான் வேண்டும் என்ற பிடிவாதம் எதுக்கு? வேறு அநாதை குழந்தையை தத்து எடுக்கலாம் என்று பேசிப் பார்த்தான். அதற்கும் ஒரு விளக்கம்- “என் மடியில் உச்சா போச்சு. அப்புறம் என்னைப் பார்த்து சிரித்தது. நான் தானே அதை காப்பாத்தினேன்...அதான் அதன் மேல் ஒரு பாசம்..அவளுக்குப் பிடித்த விளக்கங்கள்,,,அவளுக்கு வந்த ஆசைகள்... எல்லாமே நியாயம்...அதனால் நடக்கும் என்ற உறுதி....இதன் முன்னால் அவன் தோற்றுப் போனான். என்ன நடந்தாலும் அதனை எதிர் கொள்ளும் மனநிலையில் இருப்பதைத் தவிர அவனுக்கு வேறு சாய்ஸ் இருக்கவில்லை. கார் பனி வீடு முன் போய் நின்றது .இருவரும் இறங்கி தோட்டம் கடந்து முன் அறை அலுவலகத்தில் போய் நின்ற போது ஈஸ்வரி வழிமறித்தாள். “யாரைப் பார்க்கணும்?”

“மரகதம்னு....” அவர் இழுக்க “இல்லே முத்துவை பார்க்கணும்...” என்று அருந்ததி சப்தமாக சொன்னாள்.

“யாரு...அருந்ததியா?” என்று வேகமாக அறையை விட்டு வெளிய வந்த மரகதம், அருந்ததியை கட்டிப் பிடித்து வா வா வா ...என்று பலமாக வரவேற்றாள்.

“இவங்களைத் தெரியுமா அருந்ததி சொல்லவே இல்லையே.” என்று ஆச்சர்யப்பட்டான் அஸ்வின்.

“மரகதம் என் கூட வங்கியில் வேலை பார்க்றாங்க. ரொம்ப நல்லவங்க. எனக்கு மேலதிகாரி. ஆனா அவங்க இங்க எப்படி?”

“எல்லாம் விவரமா சொல்றேன்...உள்ளே வாங்க...வாங்க மிஸ்டர்...”
“அஸ்வின்...” என்றாள் அருந்ததி. “உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.” என்ற மரகதம் பனி வீடு பற்றியும் அதன் பணிகள் பற்றியும். அதன் தலைவியாக தான் இருப்பது பற்றியும் சுருக்கமாக சொன்னாள். “:அருந்ததி சொல்லு ...என்ன விஷயம்...உன் விஜயம்?”

அருந்ததி எப்படி சொல்வது என்று மென்று விழுங்கினாள். அவள் தைரியம் எல்லாம் போயிற்று. தெரியாதவர்களிடம் பேசிவிடலாம் தெரிந்த அதுவும் மேலதிகாரியிடம் எப்படி சொல்வத?. தயங்கி தயங்கிப் பார்த்தாள். வேர்வை முத்து கோர்த்தது போல் அரும்பிற்று..

“என்ன அருந்ததி முத்து முத்தா வேர்த்திடுச்சி...தைரியமா சொல்லு...யாரையாவது சேர்க்கணுமா?”

“அதெல்லாம் இல்லை...வந்து...எப்படி சொல்றதுன்னு...”

“ நான் சொல்றேன் மேடம்...எங்களுக்கு குழந்தை இல்லை...”

“இங்கு பாட்டிகள் தான் இருக்காங்க...அப்கோர்ஸ் வயதாகி விட்டால் குழந்தை தான்...பட் இது குழந்தைகள் இல்லம் இல்லை மிஸ்டர் அஸ்வின்...”

“தெரியும் மேடம்...இங்கு முத்துன்னு ஒரு பெண்மணி இருக்காங்களே...அவங்களுக்கு இரண்டு குழந்தைகள்ன்னு கேள்வி...மணிகண்டன் என்கிற குழந்தையை தத்து எடுத்துக்கலாம் என்று ஐடியா...அது அவங்க குழந்தை இல்லைன்னு கேள்விப்பட்டோம்...அதான்...”

“ஒ...ரொம்ப சிக்கலான விஷயம் இது . முத்து குழந்தைக்கு பெர்த் மதர் இல்லைதான். ஆனால் பிள்ளைகளுக்கு அப்பா இருக்கிறார். அவர் சம்மதிக்கணும்.”

“மரகதம் மேடம்...எப்படியாவது அவர் சம்மதம் வாங்கறோம்...முத்துக் கிட்ட முதல் பேசலாமே...” என்று ஆர்வமாக கேட்டாள் அருந்ததி.

“முயற்சி செய்யுங்க...முதல்லே ஜூஸ் குடியுங்க...ஈஸ்வரி ஸ்னாக்ஸ் ஏதாவது கொண்டு வா அப்படியே முத்துவை கூட்டி வா...”

ஈஸ்வரி முத்துவிடம் விஷயத்தை சொல்லி கூப்பிட்டாள். அம்மாவுமா சொன்னாங்க...அதிர்ச்சியுடன் கேட்ட முத்து கொதிக்கும் உள்ளத்துடன் முன்னறைக்கு வந்தாள். கண்ணகி போல் நின்று விழித்துப் பார்த்த முத்துவைப் பார்த்து அணைவரும் பயந்து விட்டனர். அஸ்வின் பாண்டிய மன்னன் போல்

“என்னம்மா என்னாச்சு? நீர் நிறைந்த கண்ணுடன் எங்க முன் வந்திருக்கே?” என்றதுதான் தாமதம், சிலம்பில்லாத கண்ணகியாக பொரிந்து தள்ளினாள் முத்து

நதி ஓடும். .









v
 

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்-5

மரகதம் அன்று வெள்ளிக்கிழமை என்று மறந்து போனாள். சொற்பொழிவு நடத்தும் நாள் என்பதும் மறந்துவிட்டது. ஈஸ்வரி நியாபகப் படுத்தினாள். மரகதம் சொற்பொழிவு நடத்தும் மன நிலையில் இல்லை.

“ஈஸ்வரி எனக்கு உடம்பு சரியில்லை. அடுத்த வாரம் பார்க்கலாம்.”

“என்னம்மா உடம்புக்கு? டாக்டர் உமாவை வரச் சொல்லவா?”

“வேண்டாம் ஈஸ்வரி. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன். சரியாயிடும். யாரையும் உள்ளே விட வேண்டாம்.” ஈஸ்வரி யோசனையுடன் போய்விட்டாள். அம்மா இப்படி சுரத்தில்லாமல் இருந்ததில்லையே. எல்லாம் அந்த சாந்தாம்மா வந்ததிலிருந்து அடிக்கடி இப்படித்தான் ஆகிவிடுகிறார்கள். அந்தம்மா இறந்தும் அம்மா நிம்மதியாய் இல்லை. என்னவென்று தெரிந்தாலாவது சரிபண்ணலாம். அகிலாப் பாட்டியிடம் கேட்டால் ஏதாவது தகவல் கிடைக்கலாம். பார்ப்போம்....என்று எண்ணியபடி சென்றாள் ஈஸ்வரி.

மரகதம் தன் அறையில் கதவை அடைத்தபடி கட்டிலில் வீழ்ந்தாள். மேலே சுற்றும் மின்விசிறியைப் பார்த்தாள். விசிறி சுற்றும்போது அதன் மூன்று பிளவுகள் தெரிவதில்லை. ஆனால் நின்றுவிட்டால் அந்தப் பிளவுகள் பூதாகரமாகத் தெரிகிறது. அவள் மனமும் அப்படித்தான். எப்பொழுதும் சுழன்றபடி வேலையில் ஈடுபடும்போது மனச்சோர்வு தெரிவதில்லை. வேலைகளைப் பார்க்காமல் முடங்கினால் அவள் மனமே வெடித்துவிடும் போல் பிளவுபட்ட ஓடாத மின்விசிறி போல் ஆகிவிடுகிறது. முத்துவின் தாய்ப்பாசம் அவள் சிந்தனையை ஆக்கிரமித்தி விட்டது. அம்மா...சுயநலம் இல்லாத மனுஷி ...கடவுளுக்கு பதிலாக மண்ணில் நடமாடும் தெய்வம்...என்றுதானே எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அவளுக்கு மட்டும் எப்படி ஒரு சுயநலமே உருவான அம்மா கிடைத்தாள்? பெறாத பிள்ளைகளை தாயை விட சாலப் பரிந்து பார்க்கும் முத்து போன்ற நடமாடும் தெய்வங்களை பார்த்த பிறகு அவளுக்கு அவள் தாயின் மேல் கூடுதலாக வெறுப்பு ஏற்பட்டது. எப்படி வீசிவிட்டுப் போய்விட்டாள். ஒரு தரம் கூட இவள் எங்கிருக்கிறாள் என்று தேட முயற்சி செய்ததே இல்லை. பெற்றவள் பின்னே மகாபாரத குந்தி மாதிரி பெற்றெடுத்தால்...கர்ணனை ஆற்றில் தள்ளி விட்டது போல் இவளை ரோஸி என்ற கன்னிகாஸ்திரியிடம் தள்ளிவிட்டுப் போனதில் வியப்பென்ன? குந்தி செய்த தவறு போல் நாம் செய்தால் அந்தக் குழந்தை எப்படி பரிதவிக்கும்...எப்படி உலகில் ஒரு அங்கீகாரம் இல்லாமல் அவமானப்படும்....என்று மகாபாரதம் காற்றுத் தரவில்லையா? ஆனாலும் குந்திகள் காலம் தோறும் முளைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். மரகதத்தின் கண்கள் சிந்தும் கண்ணீருக்கு யார் பொறுப்பு? சமுதாயமா? அவள் தாயை இந்த கதிக்கு ஆளாக்கியவனா? இல்லை எல்லாம் தெரிந்தும் தவறு செய்த அந்தப் பெண்ணின் சுயலமா? எதுவோ...அவள் கறையுடன் பிறந்தாள்...அக்கறை இல்லாமல் தனியாக பயந்து பயந்து வளர்த்தாள். அவளுக்கு கோபப்பட உரிமை இருந்ததில்லை. சிரிக்க முடிந்ததில்லை. சிரிப்பவர்களின் வாயை அடக்கமுடிந்ததில்லை. அவள் தவறா இதெல்லாம்? யார் யாரோ செய்த தவறுகளுக்கு அவள் சிலுவை தாங்குகிறாள். வலுக்கட்டாயமாக அவள் இயேசு ஆக்கப்பட்டாள். முள் கிரீடத்தை தங்கக் கிரீடமாக மற்றவர் பார்வைக்கு வைத்து தங்க மூலாம பூசிய வாழ்க்கை வாழ்வதில் அவள் சலிப்படைந்து விட்டாள். அவ்வப்போது இந்த சலிப்பு வரும்....பின் கங்கை ஓடுவது போல் மனிதர்களை செழிப்பாக்கிக் கொண்டு ஓடுவாள். இப்பொழுது முத்து போன்ற தாயைப் பார்த்த பின் “நீ ஏன் அம்மா அவளைப் போல் இல்லை? பெற்ற உன் மகளை நேசிக்க உனக்கு ஏன் கடைசிவரை முடியவில்லை. உன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள் என்னை வீசிவிட்டாயே...இவ்வளவுக்கும் முத்து இளம் பெண், இருபது வயது தான்...அவள் நினைத்தால் பிள்ளைகளை எங்கோ தள்ளிவிட்டு தங்கப்பனை கல்யாணம் பண்ணிக் கொண்டு அவள் வயதிற்கு ஏற்ற வாழ்க்கை வாழ முடியும். அருந்ததியிடம் பிள்ளைகளை விட்டு விட்டு குஷாலாக திருமாணம் செய்து கொள்ள முடியும். ஏன் அவள் அப்படி செய்யவில்லை? மனம் நிறைய கருணையும் பாசமும் உடைய தன்னலமற்ற தூயவள். அதுதான் குறுஞ்சி மலராய் மணக்கிறாள். நீ விஷப் பூ. உன்னில் விளைந்த நான் அதற்காக அவமானப் படுகிறேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் முத்து வயிற்றில் பிறக்க ஆசைப்படுகிறேன். அவள் முலைப் பால் குடித்து, அவள் மடியில் புரண்டு, அவள் கைகளில் தவழ்ந்து முழு மனிஷியாக கர்வமாக நடமாடும் பிள்ளையாக தலை நிமிர்ந்து வாழ்வேன். அதற்கு நான் அடுத்த ஜென்மதிலாவது கொடுத்து வைத்திருகிறேனா பார்க்கலாம். கண்ணீரை துடைத்துக் கொண்டாள். மனம் சற்று அமைதி அடைந்தது. ச்சே என்ன காரியம் பண்ணுகிறேன்! கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நான் கொன்ட வைராக்கியம் எங்கு போயிற்று? கதவு தட்டும் ஓசை. உள்ளே வரலாம் என்ற அவள் குரல் கேட்டு உள்ளே வந்து நின்று கை கூப்பினாள் முத்து.

“வா...முத்து. உன்னைப் பத்தி தான் நினைச்சிட்டிருந்தேன்.’

“நான் ஒரு முட்டாள். என்னைப் பற்றி நினைக்க என்ன இருக்கு? அம்மா உங்களை அலட்சியமா பேசிட்டேன். அதான் மன்னிப்பு கேட்க வந்தேன். வீம்போட கிளம்பினேன். அப்புறம் ஈஸ்வரி தான் எனக்கு இடித்து சொன்னாங்க...அறிவு கெட்டவளே, அம்மா உன்னை கூப்பிட்டது உன்னை புரிஞ்சிக்காமல் இல்லை. அருந்ததி உன்னை புரிஞ்சுக்கணும்னு தான். அம்மாவை தப்பா புரிஞ்சுக்கிட்டயே. நீ போயிட்டா அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க. உன் மேல அலாதி பிரியம் வைச்சிருக்காங்க அப்படின்னாங்க...அப்ப தான் உறச்சுது. மனிச்சுக்கோங்கம்மா...அவசரக் குடுக்கை நான்..” முத்து தலை கவிழ்ந்து கண்ணோரம் நீர் திரள நின்றாள். மரகதம் அவள் மோவாயில் கைவைத்து நிமிர்த்தினாள். “ஒருத்தரை புரிந்து கொள்ள கொஞ்சம் டயம் எடுக்கும். அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. பரவையில்லை. இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே. நீ எப்பவும் தலை குனியக் கூடாது முத்து. போ ..போய் வேலையைப் பாரு.” முத்து கைகூப்பிய படி போனாள். மரகதம் யோசித்தாள். எல்லோரையும் மன்னிக்க அவளால் முடிகிறது...ஆனால் பெற்ற தாயை ஏன் அவளால் மன்னிக்க முடியவில்லை? அவள் சூழ்நிலை என்னவாக இருந்திருக்குமோ? தன்னை தேற்றிக் கொண்டு பழைய மரகதமாக வெளியே வந்தாள்.

ஈஸ்வரி வந்தாள். “அம்மா...மாணிக்கம்னு ஒருத்தர் பேசினார்மா.”

“அப்படியா...என்ன சொன்னார் ?”

“ஸ்கூல் ஹெட்மாஸ்டர். அவர் பள்ளி ஆண்டு விழா வருதாம். நீங்க தலைமை தாங்க வரணுமாம்.”

“என்ன தேதி ஈஸ்வரி...அன்று நான் ஃப்ரீயா இருக்கேனா?”

“ஆமாம்மா...ஒ.கே சொல்லிடவா?” தலையாட்டினாள் மரகதம். அங்கே ஜானை சந்திக்க வேண்டி வரும் என்று அவள் நினைக்கவே இல்லை. விழா மேடையில் அவள் அமர்ந்தவுடன் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. பிஞ்சுக் குழந்தைகள் முதல், பதினான்கு வயது பெண் வரை நாட்டியம் நாடகம் என்று அசத்தினர். ரசித்துப் பார்த்தாள். மகாபாரத கதையில் குந்தி கர்ணனை குழந்தையாக ஆற்றில் விடும் காட்சியில் ஆரம்பித்து, கர்ணனின் வளர்ப்பும்...அவன் அலங்க மலங்க தன் தாய் யார் என்ற பரிதவிப்பில் மனம் ஒடிந்து அவமானப்பட, துரியோதணன் அவனை ஒரு நாட்டுக்கு மன்னனாக்கி கவுரவப்படுத்தியது வரை....காட்சிப் படுத்தி நாடகம் விறுவிறுப்பாக சென்றது. பின் குந்தி கர்ணனிடம் வரம் கேட்டு வருகிறாள். நான் உன் தாய் என்று அப்பொழுதுதான் சொல்கிறாள். அதுவும் எதனால்? உன் சகோதரர்களை உன் பானத்தால் கொன்று விடாதே என்று கேட்க வருகிறாள். என்னைப் பார்க்க வரவில்லை...முறையாகப் பிறந்த உன் பிள்ளைகளை காப்பாற்றத்தானே வந்தாய் என்று நொந்து போகிறான் கர்ணன். இந்த இடத்தில் அழுதுவிட்டாள் மரகதம். முறையற்று பெற்றது அவள்....பெற்றோர் யார் என்று வில் வித்தை போட்டி நடந்த போது சொல்லாமல் கம்மென்றிந்த அவள்....முறைப்படி பெற்றக் மகன்களுக்காக யாசிக்க வந்திருக்கும் போது தான் ...நான் உன் தாய் என்று சொல்கிறாளே... இது எவ்வளவு தூரம் கர்ணன் மனதை பாதித்திருக்கும்? அவள் தாயும் இப்படித்தானே அவளிடம் அவள் முறையாகப் பெற்றக் குழந்தைக்காக பரிவு காட்டச் சொல்லி வந்தாள். அன்று நடந்த மகாபாரதக் கதை இன்றும் தொடரக் காரணம் என்ன? இவர்கள் பாரதம் படிக்கவில்லையா? அல்லது குந்தியே அப்படி நடக்கும் போது நாம் அப்படி நடந்து கொள்வதில் தவறில்லை என்ற சமாதானமா? நிகழ்சிகள் நடந்து முடிந்த பின்...பரிசு கொடுக்கும் நேரம்... “மரகதம் அம்மாவும் நம் புரவலர் திரு ஜான் டேவிட் அவர்களும் சேர்ந்து யார் யாருக்குப் பரிசு கொடுப்பது என்று கலந்தாலோசித்து முடிவு சொல்வார்கள்” என்று அறிவிக்கப்பட்ட போதுதான் அவள் ஜான் வந்திருப்பதை உணர்ந்தாள். இவருடன் என்ன ஆலோசனை வேண்டி இருக்கு? என்று பொருமியவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவருடன் கலந்தாலோசித்தாள். “என்ன மரகதம் ...கர்ணனாக நடித்த மாணவனுக்குத் தானே முதல் பரிசு கொடுக்க எண்ணுகிறாய்? எனக்குத் தெரியும்..” என்று சிரித்தார். அதில் இருந்தது குறும்பா அல்லது நக்கலா...

“பின்னே...குந்தியாக நடித்த மாணவிக்கு பரிசு கொடுக்கலாம் என்று தீர்மானமோ?”

“குந்தியாக நடித்தவள் சிறப்பாக நடித்தது உண்மை தானே...கர்ணன் மேல் பரிதாப பட்டு பரிசு கொடுப்பது முறை இல்லையே.”

“முறையற்ற குந்தியின் செயலை ஆதரிக்கும் எண்ணம் எனக்கில்லை. கர்ணன் இதிலாவது ஜெயிக்கட்டுமே.”

“ஒப்புக்கொள்கிறேன்.” கர்னனாக நடித்த மாணவன் பரிசு பெற்ற போது அதிகமாக கை தட்டியது மரகதம் தான்

நிகழ்ச்சிகள் முடிந்து எல்லோரும் கலைந்த போது ஜான் “உன்னிடம் பேச வேண்டும் மரகதம்.” என்றார்.

மரகதம் காதில் வாங்காமல் காரில் ஏறிப் போய்விட்டாள். பேசணுமாமே...பேச என்ன இருக்கிறது? வெறுப்புடன் நினைத்தாள். தனது வாழ்க்கையை திரிசங்கு சொர்க்கம் ஆக்கிவிட்டு..பேசணுமாமே. பணமும் செல்வாக்கும் இருந்தால் போதுமே வந்துவிடுவார்கள் பஞ்சாயத்து பண்ண. வயதில் பெரியவராக இருக்கிறாரே என்று அமைதியாக இருக்கிறாள். இல்லை அவரை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பாள். மரகதம் வீட்டிற்கு வந்தாள். தலை வலித்தது. “ஈஸ்வரி என்று கூப்பிட்டாள்....” நான் வரலாமா என்று உள்ளே நுழைந்தான் சொக்கலிங்கம். “ஒ...நீங்காளா .என்ன இந்த நேரத்தில்? என்ன வேணும்?”

“உங்களைத்தான் பார்க்கவே முடியலையே... அவ்வளவு பிஸி.”

“ஒரு போன் பண்ணிவிட்டு வரலாமே...”

“மரகதம்....நான் நேரா விஷயத்துக்கு வரேன்....என் அம்மா நகை ஐம்பது பவுன் உங்க கிட்ட இருக்கா?”

“தேவை இல்லாமே என்கிட்டே இப்படி பேச வேண்டாம் ப்ளீஸ்...எனக்கு எதுக்கு உங்க அம்மா நகைகள்? அது எப்படி என் கிட்ட இருக்கும்னு எதிர் பார்க்றீங்க.?”

“அதை வாங்கிகிட்டு தானே சாந்தாம்மாவை விடுதியில் சேர்த்துக்கிட்டீங்க. அவங்க கிட்டே பெர்மிசன் லெட்டர் வாங்கி கொள்ளி போட பங்கு கேட்டீங்க. நானும் ஏதோ அவங்களை நீங்க நல்லா பார்த்ததுக்காக பிரியப்பட்டு அனுமதி வழங்கி இருக்கறதா நினைச்சேன். ஆனா நீங்க அதுக்கு விலையா எங்க அம்மா நகைகளை வாங்கிக்கிட்டீங்க இல்லையா?...சொல்லுங்க...எங்கே அந்த நகைகள்? அது சாந்தாம்மா நகைகள் இல்லை எங்க அம்மா கல்யாணியின் நாகைகள். திருப்பிக் கொடுத்து விடுங்கள்.”’

“ப்ளீஸ் கெட் அவுட் மிஸ்டர் சொக்கலிங்கம். திருட்டுப் பட்டம் கட்டினீங்க அப்புறம் நான் பொல்லாதவள் ஆகிவிடுவேன். என்னை என்னன்னு நினைச்சீங்க? இப்படி பழி போட வெக்கமா இல்லை?. உங்க வீட்டு விவகாரம் எனக்கென்ன தெரியும்? யார் கிட்டவோ தொலச்சிட்டு என்கிட்டே கேட்டா? ‘

“அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும்....கொள்ளி போடும் போதே கேட்டிருக்கணும்...விட்டிட்டேன். இப்ப புரியுது எல்லாம். மரியாதையா எனக்கு சேரவேண்டிய நகையை கொடுத்து விடுங்கள்.. நான் நல்லா பார்த்துப்பேன் சாந்தாம்மாவை என் கிட்ட அனுப்புங்கன்னு மதர் தெரேசா மாதிரி பேசினீங்...நகையும் பணமும் பிடிங்கிக்கொண்டு தான் சமூக சேவை செய்றதா வேஷம் போடறீங்களா.?”

“சொக்கலிங்கம்...போய்விடு. அவ்வளவு தான் உனக்கு மரியாதை. இதுக்கு மேலே கலாட்ட பண்ணினா போலீசைக் கூப்பிடுவேன்...எங்க செக்யூரிட்டி வந்து உங்க கழுத்தைப் பிடித்து தள்ளும் முன் போய்விடு.’

“போறேன்...நகைகள் இன்னும் இரண்டு வாரத்திற்குள் வந்து சேரணும் ...அப்புறம்....எனக்கும் போலிசுக்குப் போகத் தெரியும்.”

“கடவுள் கிட்ட வேண்டுமானாலும் போ. எனக்கும் அந்த நகைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”

“பார்த்துக்கறேன்...” பல்லைக் கடித்தபடி ஒரு மூர்கமான மிருகம் போல் உருமிவிட்டுப் போனான்.

“இடியட்...” திட்டியபடி சாப்பிடாமல் படுத்துக் கொண்டாள். ஈஸ்வரி அவளுக்கு சப்பாத்தியும் குர்மாவும் மூடி வைத்திருந்தாள். சாப்பிடும் எண்ணமே அவளுக்கு வரவில்லை. பொறியில் அகப்பட்ட எலி போல் ஆகிவிட்டது அவள் நிலை. எல்லாம் அந்த ஜானால் வந்த விணை. “மரகதம்...என்னுடைய ஒரே கோரிக்கை தயவு செய்து நிறைவேற்றுவாயா.?” மரகதம் பேசாமல் நின்றாள். “உன் கோபம் எனக்குப் புரியுது. சாந்தா மிகவும் பலகினமாகி விட்டாள். அவளுடைய கடைசி காலம் அன்பும் அரவணைப்பும் உடையதாக இருக்கணும். லெட் ஹர் டைய் எ பீஸ்ஃபுல் டெத்...ப்ளீஸ் மரகதம்...கருணை காட்டு...’

“நீங்க விவரம் புரியாமே பேசறேங்க. இது சொக்கலிங்கத்தோட கடமை. இதில் நாம் தலை இட முடியாது. பிறகு வீண் பொல்லாப்பு வரும். சொக்கலிங்கம் ஒரு மாதிரியான ஆள். அவர் விஷயத்தில் குறுக்கிட்டால் பிரச்சனை பண்ணுவதாக எண்ணுவார். பொண்டாட்டியை வாழ வைக்கத் தெரியலை. இப்ப சாகக் கிடக்கிற சமயம் காதல் பொத்துக்கிட்டு வருதோ? அவ்வளவு அக்கறை இருந்தால் நீங்களே வச்சு பார்க்கலாமே.”

“அறிவோடுதான் பேசறயா? அவ மேல களங்கம் வரட்டும்னு ஆசைப்படறியா?”

“எனக்கு எந்த ஆசையும் இல்லை. இது உங்க விவகாரம். நீங்க ஆச்சு அந்த சொக்கலிங்கம் ஆச்சு. என்னை இதில் இழுக்காதீங்க.” ஜான் கண்களில் நீர் நிரம்பிற்று. தொண்டை அடைக்க கூறினார்.

“சாவின் போது அவளிடம் அன்பும் பரிவும் காட்ட என்னால் முடியலை. உலகம் என்ன சொல்லும்? எல்லாம் தெரிந்தும் நீ இப்படி கல் மனசாய் இருக்கியே....” அவர் ஏங்கி ஏங்கி அழுதார். மரகதம் கண்களிலும் நீர் சுரந்தது. “சரி...உங்களுக்காக செய்கிறேன். ஆனால் இது சரியில்லை. அடுத்த குடும்பத்தில் நாம் போய் தலையிட்டால் பொல்லாப்பு தான் வரும். உங்களுக்கென்ன...நீங்கள் திரை மறைவில்...என் மண்டை தான் உருளும்...” சாந்தா பனி வீடு வந்து ஆறு மாதம் இருந்தாள். அவள் உயிர் பிரியும் போது ஒளிந்து நின்று பார்த்தார் ஜான். சாந்தாவை மாலை இட்டு மணந்த வைத்தீஸ்வரன் இறந்து மூன்று வருடம் கழித்து சாந்தா இறந்து போனாள். வைத்தீஸ்வரனின் மகன் தான் சொக்கலிங்கம். அவனின் அம்மா கல்யாணி அவன் ஐந்து வயது பாலகனாக இருந்த போதே இறந்து விட்டதாக சொல்லப்பட...சாந்தா அவர் மனைவி ஆனாள். சிக்கல் நிறைத்த சாந்தாவின் வாழ்வு அவளின் பிடிவாதத்தாலும் வைராக்கியத்தாலும் மேலும் சிக்கலாயிற்று. ஒதுங்கி இருந்த மரகதத்தின் தலையில் வந்து விடிந்தது. ஜானுக்காக இவள் தலை இடப் போய் அவனிடமிருந்து திருட்டுப் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. சொக்கலிங்கம் இத்துடன் விடுவானா இல்லை மேலும் பிரச்சனை பண்ணுவானா தெரியவில்லை. சாந்தா அந்த நகைகளை என்ன செய்தாளோ...இல்லை வைதீஸ்வரன் என்ன செய்தாரோ ...விற்று விட்டாரோ ....யாருக்குத் தெரியும்? இங்கு வந்து குதிக்கிறான். நிம்மதியின்றி கழிந்தது அந்த இரவு...மறு நாள் அதை விட பெரிய பிரச்சனையை அவள் சந்திக்க நேரிடும் என்று தெரியாமல் மரகதம் சூரியோதயத்தை ரசித்தபடி எழுந்தாள்.

நதி ஓடும்
 
Top