கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

புவனாவின் கவிதைத் தூறல்கள்...

Puvana Chandrasekaran

Moderator
Staff member
சுயம் தொலைத்த நாங்கள்

சுயம் தொலைத்து
சுகமான சுமை சுமந்து
கூண்டிற்குள் வாழும்
வீட்டுப் பறவைகள் தான்
நாங்கள் என்றும்!

அன்பெனும் சிறைக்குள்
அடைந்து கொண்டு
தன்னைத் தானே
பூட்டிக் கொள்ளும்
ஆயுள் தண்டனைக் கைதிகள்!

பிரசவ வலி தாங்கினாலும்
பிள்ளையின் சிறு வலி
தாங்க முடிவதில்லை!
அழுகையும் கண்ணீரும்
ஆர்ப்பரித்து வீழும்!

பிறந்த நொடியிலேயே
வெறுப்பும் புறக்கணிப்பும்
தாய்ப்பாலுடன் சேர்த்துப்
பருகித் தான்
வளர்ந்து நின்றோம்!

பெண்ணியக் கவிதைகள்
மேடைகளில் முழங்கிக்
கைதட்டல்களை அள்ளினாலும்
அடுப்பங்கரை சாகசங்களுக்கு
அஞ்சாத வீராங்கனைகள்!

குடும்பமே கோயிலென்று
அம்மாவும் பாட்டியும்
ஓதிய வேதங்களை
உருப்போட்டு மனதில் சேர்த்த
மக்குப் பெண்டிர் நாங்கள்!

அலங்காரப் பதுமைகளாகி
தலை சீவிப் பூ முடித்து
விளக்கேற்றிப் பூஜை செய்து
இல்லறத்தை நல்லறமாக
ஏற்றுக் கொண்ட ஏந்திழைகள்!

உணவும் உடையும்
மற்றவர் விருப்பத்திற்கென்று
நித்தமும் விட்டுக் கொடுத்து
ஏமாற்றத்தை விழுங்குகின்ற
இதிகாசப் பெண்கள் நாங்கள்!

சுவரில் வரையும் சித்திரங்களோ
கருவறையில் வீற்றிருக்கும்
கற்சிலைகளோ இல்லை நாங்கள்
அன்பை மட்டுமே யாசிக்கும்
அனாதைக் குழந்தைகள்!

இது தான் வாழ்க்கையென்று
என்றும் வரையறுக்கவில்லை!
இதுவும் வாழ்க்கையென்று
வாழ்ந்தே காட்டுகிறோம்!
வீழ்ந்தால் எழுகின்றோம்!

அழகான கற்பனைகளையும்
எதிர்காலக் கனவுகளையும்
எழுத்தினில் காட்டுகிறோம்!
எழுத்திலாவது சுதந்திரம்
தருமா இவ்வுலகும்!

என் கணவர் என் குழந்தை
என் குடும்பமென்று
கோட்டுக்குள் வாழ்ந்தாலும்
கற்பனை வானில் பறக்கிறோம்!
சிறகுகளை முறிக்க வேண்டாம்!

குடும்பங்கள் சிறந்திருந்தால்
சமுதாயம் சிறக்காதா?
குடும்பத்துக் குத்துவிளக்கு
இருளைப் போக்காதா?
விடை தான் யாரறிவார்!

புவனா
05/09/2020.
 
Last edited:

lathasridharss

Moderator
Staff member
சுயம் தொலைப்பதே பெண்மையின் நிதர்சனம்.. அருமை புவனா. நம்மை நாம் உணரும் தருணம்...
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
தந்தைக்கொரு பாடல்

தந்தையின் அன்பு என்றும்
அழகான ஓடை போல்
சலசலப்பில்லாமல்
அமைதியாக ஓடும் நீர்ப்பெருக்கு!
தாயன்பு போல்
தடையில்லாமல் கரைபுரண்டு
ஓடும் காட்டாறல்ல!
கீழ் நோக்கி என்றும் பாயும்
சீரான ஒரு நதிப்போக்கு!

வாரியணைத்து உச்சிமுகர்ந்து
கட்டித் தழுவத் தெரிவதில்லை
தந்தை மனதிற்கு என்றுமே!
மனதிற்குள் பூட்டி வைத்து
மருகித் தவிக்கும் பாசம்!
வெளியே காட்டத் தெரியாமல்
உள்ளுக்குள் பூட்டி வைக்கும் அன்பு!
பெருமிதம் மட்டும் கண்களில்
அவ்வப்போது எட்டிப் பார்க்கும்!

கண்டிப்புப் போர்வைக்குள்
கனிவை ஒளித்து வைத்துத்
தாம் பெற்ற பிள்ளைகள்
வாழ்வில் முன்னேறி சிறக்க
என்றும் வழி வகுப்பார்!
வெற்றிப் படியில் ஏற்றிவிட
ஓயாத உழைப்பு குறைவதில்லை!
பண்பிலும் படிப்பிலும் என்றும்
தன்னை விட சிறக்க வைப்பார்!

தான் ஈட்டும் பணமெல்லாம்
தனக்கென்று செலவழியாமல்
தாரத்துக்கும் தம் குழந்தைகட்கும்
கேட்டதெல்லாம் முடிந்த வரை
தர எண்ணும் கற்பக விருட்சம்!
அவர் முகத்தில் மகிழ்ச்சி காண
இவர் உழைக்கத் தயங்கியதில்லை!
வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி
சேமிக்கத் தவறுவதில்லை!

கடுஞ்சொற்களில் ஒளிந்திருக்கும்
அவையத்து முந்தியிருக்க
வைக்கும் அளவிலா அவா!
சிற்பியும் சிற்பத்தை உளிகொண்டு
செதுக்குவது போல்!
பாராட்டுக்களை மனதிற்குள்
தாழ் போட்டு அடைத்து
வெறும் தலையாட்டல் மட்டும்
அளவாகவே தரும் மனது!

தனயன் தலையெடுத்துக்
கைநிறையக் காசு கொணர்ந்தாலும்
கைநீட்டி வாங்காமல் ஒதுங்கிடுவார்!
தான் சேமித்த பணம் தனிலே
தம் செலவும் குடும்பச் செலவும்
தயங்காமல் செய்திடுவார்!
தனக்கென வாழாமல் தன் மனைவி
தன் குழந்தையென வாழ்ந்தே
ஒதுங்கி நின்றவர்!

தாரத்தை இழந்து நின்று
தனிமரமாய் வாழ்ந்தாலும்
தன் கடமை தானே செய்து
மருமகளுக்கும் உதவிடுவார்!
வாய்க்கு ருசியான உணவு கூட
வேண்டுமென விழையமாட்டார்!
நாவடக்கிப் புலனடக்கி
மௌனமாய் இருந்திடுவார்!
வேண்டாத தலையீடு இடமாட்டார்!

குழந்தைகளைப் பள்ளிக்கோ
பல்வேறு கலை கற்பதற்கோ
கொண்டு விட்டுக் கூட்டிவரும்
எல்லாப் பணிகளையும்
இன்முகத்துடன் ஆற்றிடுவார்!
நித்தமொரு கதை சொல்லிப்
பொறுமையுடன் துயிலவைக்கும்
தேவதையும் இவரே தான்!
வீட்டின் காவலரும் இவர்தான்!

எத்தனை பணியாற்றினாலும்
மனதென்னவோ மிகவும் மென்மை!
மோப்பக் குழையும் அனிச்சமலர்!
இவர் முதுமையிலே தளரும் போது
கேட்கும் முன்னே பசியாற்றித்
தேவைகளைத் தீர்த்து வைத்து
அன்புமொழி பேசிடுங்கள்
தங்கக் குழந்தைகளே! செல்வங்களே!
தந்தையெனும் தெய்வத்தைப்
புறக்கணித்துத் தனிமையிலே
வாட விட்டு விடாதீர்கள்!
இதுவொரு தாயின் வேண்டுகோள்!

புவனா,
06/09/2020.
 
Top