Aathisakthi
Well-known member
நிதர்சன வரிகள்....ஏக்கங்களை மறைத்து.. தாக்கங்களை மறைத்து... சிரிப்பை பூசி ...வாழ்க்கையின் பாதையில் நடக்கின்றோம்...இப்படி தான் வாழ வேண்டுமா....இது தான் வாழும் முறமையா...கேள்விகளோடு விடை தேடா பயணம்.சுயம் தொலைத்த நாங்கள்
சுயம் தொலைத்து
சுகமான சுமை சுமந்து
கூண்டிற்குள் வாழும்
வீட்டுப் பறவைகள் தான்
நாங்கள் என்றும்!
அன்பெனும் சிறைக்குள்
அடைந்து கொண்டு
தன்னைத் தானே
பூட்டிக் கொள்ளும்
ஆயுள் தண்டனைக் கைதிகள்!
பிரசவ வலி தாங்கினாலும்
பிள்ளையின் சிறு வலி
தாங்க முடிவதில்லை!
அழுகையும் கண்ணீரும்
ஆர்ப்பரித்து வீழும்!
பிறந்த நொடியிலேயே
வெறுப்பும் புறக்கணிப்பும்
தாய்ப்பாலுடன் சேர்த்துப்
பருகித் தான்
வளர்ந்து நின்றோம்!
பெண்ணியக் கவிதைகள்
மேடைகளில் முழங்கிக்
கைதட்டல்களை அள்ளினாலும்
அடுப்பங்கரை சாகசங்களுக்கு
அஞ்சாத வீராங்கனைகள்!
குடும்பமே கோயிலென்று
அம்மாவும் பாட்டியும்
ஓதிய வேதங்களை
உருப்போட்டு மனதில் சேர்த்த
மக்குப் பெண்டிர் நாங்கள்!
அலங்காரப் பதுமைகளாகி
தலை சீவிப் பூ முடித்து
விளக்கேற்றிப் பூஜை செய்து
இல்லறத்தை நல்லறமாக
ஏற்றுக் கொண்ட ஏந்திழைகள்!
உணவும் உடையும்
மற்றவர் விருப்பத்திற்கென்று
நித்தமும் விட்டுக் கொடுத்து
ஏமாற்றத்தை விழுங்குகின்ற
இதிகாசப் பெண்கள் நாங்கள்!
சுவரில் வரையும் சித்திரங்களோ
கருவறையில் வீற்றிருக்கும்
கற்சிலைகளோ இல்லை நாங்கள்
அன்பை மட்டுமே யாசிக்கும்
அனாதைக் குழந்தைகள்!
இது தான் வாழ்க்கையென்று
என்றும் வரையறுக்கவில்லை!
இதுவும் வாழ்க்கையென்று
வாழ்ந்தே காட்டுகிறோம்!
வீழ்ந்தால் எழுகின்றோம்!
அழகான கற்பனைகளையும்
எதிர்காலக் கனவுகளையும்
எழுத்தினில் காட்டுகிறோம்!
எழுத்திலாவது சுதந்திரம்
தருமா இவ்வுலகும்!
என் கணவர் என் குழந்தை
என் குடும்பமென்று
கோட்டுக்குள் வாழ்ந்தாலும்
கற்பனை வானில் பறக்கிறோம்!
சிறகுகளை முறிக்க வேண்டாம்!
குடும்பங்கள் சிறந்திருந்தால்
சமுதாயம் சிறக்காதா?
குடும்பத்துக் குத்துவிளக்கு
இருளைப் போக்காதா?
விடை தான் யாரறிவார்!
புவனா
05/09/2020.