கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மிஷினுடன் சில நிமிடங்கள்...கவி அன்பு

Latha S

Administrator
Staff member
மிஷினுடன் சில நிமிடங்கள்



ராகினி சமையல் செய்யாமல் தன் ஐந்து வயது மகள் ரேஷ்மியை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள். கண்ணில் கண்ணீர் மாலை மாலையாகப் போய் கொண்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்து அவளுடைய கணவன் ராஜேஷ் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.


அவனுக்கும் அதற்க்குமேல் தாங்க முடியாத உயிர் போகும் வேதனை இருந்தாலும், நேற்றிலிருந்து பொட்டுத் தூக்கமில்லாமல் சாப்பாடு இல்லாமல் கிடக்கும் தன் மனைவியைத் தேற்றப் பார்த்தான்.

அதை விட மகளின் நிலை அவனை தவிக்க வைத்தது, ராகினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் எதுவும் சொல்லவில்லை, மகள் அருகில் இருந்ததால் பேச தயங்கினாள். "என்னடா உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் எதாவது சண்டையா?, நேத்திலிருந்து சாப்பிடாம முகத்தை உம்முன்னு வெச்சுட்டிருக்கா" என்றாள் அவனின் தாய் மீனாட்ச்சி.

அந்தக் குரலைக் கேட்டு இருவரும் எழுந்து அமர்ந்தார்கள். ராகினி அமைதியாக இருக்க, "அதெல்லாம் ஒன்னுமில்லை அம்மா" என்றான் ராஜேஷ். "ஒன்னுமில்லைனா சந்தோஷம் தான் வந்து அவளை சாப்பிடச் சொல்லு" என்றார் அதிகாரமாக. "நீங்க போங்கம்மா நான் கூட்டிட்டு வரேன்" என்றான் ராஜேஷ் தயக்கத்துடன்.

அவர்கள் இருவரையும் முறைத்து விட்டு, "குட்டிமா அவங்க எப்படியோ இருந்துட்டு போறாங்க நீ வா, உனக்கு பிடித்ததை நான் செய்து தருகிறேன்" என்று அழைத்துச் சென்றார். அவர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்றதும், கேவளுடன் கணவனைக் கட்டிக் கொண்டு கதறினாள் ராகினி.

அவனுக்கும் கண்ணீர் பொங்கியது. "ராகினி தைரியமான நீயே இப்படி கலங்கினால் வீட்டிலிருக்கும் பெரியவங்களை நான் எப்படி சமாளிப்பேன், இப்ப நாம அழுது கொண்டு வீட்டிலிருக்கும் நேரமில்லை, நம்ம பொண்ணை எப்படியாவது குணப்படுத்தி விடலாம். அதற்க்கு நம்ம இரண்டு பேரும் திடமா இருந்தால் தான் முடியும்" என்றான்.

"எப்படிங்க முடியும் நம்ம பொண்ணு சின்னக் குழந்தைங்க, இதை எல்லாம் தாங்கக் கூடிய வயசா அவளுக்கு" என்று மேலும் கதறினாள். அவளுடைய கதறலுக்கு காரணம், குழந்தைக்கு வயிற்று வலி என்று மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஸ்கேன் செய்து பார்த்தவர், "விழா எழும்புக்கு கீழே வலது பக்கத்தில் கட்டி இருக்கிறது" என்று சொல்லி டெஸ்ட்டுக்கும் எடுத்துக் கொண்டார்.

அதன் ரிசல்ட்டை வாங்க நேற்று சென்றார்கள் ராகினியும் ராஜேஷும், அப்போது தான் மருத்துவர் அந்த இடியை அவர்கள் தலையில் இறக்கினார். "உங்க பொண்ணுக்கு கல்லீரலில் புற்று நோய், நீங்க அதற்கான சிகிச்சையை செய்ய வேண்டும்" என்று வேறு ஒரு மருத்துவருக்கு எழுதிக் கொடுத்தார்.

அதற்குத் தான் இன்று செல்ல வேண்டும், வீட்டில் யாருக்கும் இன்னும் சொல்லவில்லை. சொன்னால் தாங்கக் கூடிய சத்தி யாருக்கும் இல்லை, அதனால் தயங்தினான் ராஜேஷ். "ராகினி எழுந்து போய் குட்டிமாவுக்கு ரெடி பண்ணி விட்டு நீயும் ரெடியாகு, நான் அம்மா அப்பாவிடம் இதைச் சொல்லனும் வேறு வழியுமில்லை,

நீயும் பார்த்த தானே அம்மாவை இப்பவே சந்தேகம் வந்து விட்டது. அவங்க பார்வையே நாம சொல்லனும்ன்னு எதிர்பார்கற மாதிரி இருந்துச்சு, கண்டிப்பா என்னை எதிர்பார்ப்பாங்க நான் போய் பேசறேன், வந்து குட்டிமாவை கூட்டிட்டு வா" என்று சொல்லி விட்டு வெளியில் சென்றான்.

பின்னாடியே வந்த ராகினி மாமியாரிடமிருந்து ரேஷ்மியை அழைத்துச் சென்று, கதவை அடைத்துக் கொண்டாள். ராகினியின் வீங்கிய முகத்தைப் பார்த்த மீனாட்ச்சி புருவம் சுருக்கி, மகனை வேள்வியுடன் பார்த்தாள். கண்கலங்க அம்மாவின் அருகில் அமர்ந்தவன், மருத்துவர் சொன்னதைச் சொல்லவும், மகனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு, "என்னடா சொல்ற" என்று கதற ஆரம்பித்தாள்.

அவனின் அப்பா கேசவன் ஒருபுரம் அழுது கொண்டிருந்தார். யாரைத் தேற்றுவது தன்னை யார் தேற்றப் போகிறார்கள், என்று தெரியாமல் அவனோடு சேர்ந்து அந்தக் குடும்பமே ஸ்தம்பித்து நின்றது. ஒருவாரு சுதாரித்துக் கொண்ட கேசவன், டாக்டர் என்ன சொன்னாங்க என்ன சிகிச்சை பண்ணப் போறாங்க" என்றார்.

கண்ணீருடன் ராஜேஷ், "கதிர்வீச்சு" என்று தயக்கத்துடன் சொல்லவும், அதிர்ந்து போனார்கள். "நம்ம குட்டிமா இதை எல்லாம் தாங்குவாளா?, வேறு எதுவும் பண்ணி குணப்படுத்த முடியாதா?, என்றார் கேசவன் நொந்து போன குரலில்.

" இல்லை பா இது தான்னு மருத்துவர் சொல்றாங்க, நாங்களும் இரண்டு மூன்று மருத்துவரிடம் காட்டி கேட்டு விட்டு, இந்த முடிவுக்கு வந்தோம். இன்னைக்கு கூட்டிட்டுப் போகனும்" என்றான்.

"இன்னைக்கா" என்று மேலும் அதிர்ச்சியை முகத்தில் காட்டினார்கள். அதற்குள் கதவைத் திறந்து கொண்டு ரெடியாகி ராகினியும் குட்டிமாவும் வந்தார்கள். அவர்களை பார்த்தும் இன்னும் பொங்கிக் கொண்டு வந்த அழுகையோடு, உள்ளே சென்று விட்டார் மீனாட்சி. "நீங்க போய் ரெடியாகி வாங்க நான் குட்டிமாவுக்கு பால் ஆத்தி குடுக்கறேன்" என்று சொல்லி விட்டு சமையலறைக்குச் செல்லும் போது,

"அம்மா பாட்டி ஏன் அழுதுட்டு போறாங்க, நான் போய் பார்த்துட்டு வரேன்" என்றாள் ரேஷ்மி. ராகினிக்கு கண் கலங்கியது, "சரி போய் பார்த்துட்டு வா நான் பால் எடுத்து வரேன்" என்று ராகினி சமையலரைக்குச் செல்ல, ரேஷ்மி பாட்டியின் அறைக்குச் சென்றாள்.

குழந்தையைப் பார்த்ததும் கண்ணைத் துடைத்துக் கொண்ட பாட்டியிடம், "ஏன் அழறீங்க பாட்டி" என்றாள் ரேஷ்மி. "நான் அழவில்லை கண்ணுல தூசி விழுந்துருச்சு" என்று சொல்லவும், "இருங்க பாட்டி நான் பார்கறேன்" என்று கண்ணை தூக்கி ஊதி விட்டாள் ரேஷ்மி.

அந்த விழியில் இன்னும் கண்ணீர் தான் வந்தது, "பாட்டி வலிக்குதா?" என்றாள் ரேஷ்மி. அழவும் முடியாமல் மூச்சடைப்பதைப் போல தவித்துப் போனார் மீனாட்சி. பாலை எடுத்து வந்த ராகினி, "குட்டிமா இந்தா பால்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள். அதை வாங்கி குடித்தாள் ரேஷ்மி.

மாமியாரின் கண்ணும் மருமகளின் கண்ணும் உரசி நின்றது. ராஜேஷும் ரெடியாகி வர, மூவரும் கிளம்பினார்கள் மருத்துவமனைக்கு. அங்கே சென்றதும் ஏற்கனவே அப்பாயின்மென்ட் வாங்கியிருந்ததால், விரைவாக பார்க்க முடிந்தது. எல்லாம் பார்த்து முடித்து கதிர் வீச்சு சிகிச்சை கொடுக்க, ஒரு நிலத்தடியில் இருக்கும் அறைக்கு கூட்டிச் சென்றார்கள்.

அங்கே ஒரு அறையில் ராட்சச மிஷின்கள் இருந்தது. அந்த அறையே பார்க்க பயமாக இருக்க, ரேஷ்மியை அங்கிருக்கும் பெட்டில் படுக்கச் சொன்னார்கள். அவளுக்கு தக்க பாதுகாப்பு பண்ணவும், அழ ஆரம்பித்து விட்டாள். ராகினியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் அழுதுதில், ராகினியும் சேர்ந்து அழ ராகினியை தள்ளி நிறுத்திய ராஜேஷ், தன் பொண்ணுக்கு தைரியம் சொன்னான்.

" குட்டிமா இது ஒன்னுமில்லை நீ பயப்படாதடா, அம்மா பயந்தாங்கொல்லி நீ அப்பா மாதிரி தைரியமான பொண்ணு, எதற்கும் பயப்படாதே" என்று சொல்லி தேற்றினான். "சார் வெளில பேறீங்களா?" என்று அதை இயக்குபவர் சொல்லவும், குழந்தைக்கு தைரியம் சொல்லிவிட்டு நடைபிணமாக வெளியில் வந்தார்கள் இருவரும்.

அவர்கள் பின்னே வெளியில் வந்தவரை பார்த்ததும், "அய்யோ என் பொண்ணு தனியா உள்ளே இருப்பா பயந்துக்குவா" என்று கத்தி கதவை திறக்க பார்த்தவளை, ராஜேஸ் பிடித்துக் கொள்ள. வெளியில் இருந்த ரூமிற்குள் சென்று, கண்ணாடி வழியாக அந்த அறையைப் பார்த்தவர், மிசினை இங்கிருந்தே இயக்கினார்.

பின் வெளியில் வந்து கதவை திறந்து விட்டார். இருவரையும் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடினாள் ராகினி. குழந்தை கத்தி கத்தி மயங்கி இருந்தது, இதைப் பார்த்த ராகினி அவரிடம் சண்டைக்குப் போக, அவர் அவளை தர்ம சங்கடமாகப் பார்த்து விட்டு, "கதிர்வீச்சு சிகிச்சை கொடுக்கும் போது யாரும் உள்ளே இருக்கக் கூடாது, அது அவங்களையும் பாதிக்கும். அதனால தான் நாங்களே வெளியில் இருந்து தான் அந்த மெஷினை ஆப்ரேட் பண்ணுவோம்" என்றார்.

"பெரியவங்கன்னா பரவாயில்லை சின்னக் குழந்தைக்கு இந்த அறையில், தனிமையில் இந்தப் பெரிய மிஷினை வைத்து விட்டு, எல்லாரும் வெளியில் சென்றால், எவ்வளவு பயமாக இருக்கும். என்னை தனியாக இந்த அறையில் விட்டாளே பயப்படுவேன். என் பொண்ணுக்கு இந்த நிலையா?, சுத்தி இத்தனை பேர் இருக்கோம், ஆனால் அவளை மட்டும் தனிமைப் படுத்தி ஒரு சிகிச்சையா?" என்று குழந்தையை வாரிக்கொண்டு கதறியவளை, கண் விழித்த ரேஷ்மி, "அம்மா இங்கே தனியாத இருக்க எனக்கு பயமா இருக்கு" என்று அழுது கொண்டே சொன்னாள், அவள் உடல் நடுங்க்கத்தில் தூக்கிப் போட்டது.

"அம்மா என்னை விட்டு எங்கேயும் போகாதே எனக்கு பயமாக இருக்கு" என்று கழுத்தை இறுக கட்டிக் கொண்ட, குழந்தையைப் பார்க்கும் போது ராஜேஷும் அழுதான். குழந்தையை வாங்கிக் கொண்டவன், இறுக அணைத்துக் கொண்டான் தனிமையை விரட்டுவது போல. "சரிடா குட்டிமா அழாத நாம வெளியே போகலாம்" என்று சொல்லி அழைத்துச் சென்றான். பின்னாடியே அழுது கொண்டு சென்றாள் ராகினி.

வெளியில் இவளை விடச் சின்னக் குழந்தைகளைப் பார்த்தவளுக்கு மனம் பதறியது, "என்னங்க இந்த குழந்தைங்க எல்லாம் எப்படி அந்த தனி அறையில், தனிமையில் இருப்பாங்க பாவம்ங்க" என்று தாய்மையின் பாசத்தில் அங்கிருந்த குழந்தைகளையும் நினைத்து அழுதாள்.

வீட்டிற்கு வந்து குழந்தையை தூங்க வைத்து விட்டு வெளியில் வந்தவள், "இன்னும் நாற்பது நாள் எப்படி நம்ம குழந்தையை அந்த தனிமையில் விடுவது" என்று களங்கிப் போன குரலில் கேட்டாள். தன் குழந்தைக்காக எதையும் செய்யும் ராஜேஷ், தன் குழந்தையின் நொடிநேர தனிமையை விரட்ட முடியாமல் தவிப்புடன், "தெரியலை" என்று கை விரித்தான் கண்ணீருடன்.



அன்புடனும் நட்புடனும்

கவிஅன்பு
 
Top