கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-8

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-8

முழு ஆண்டுத் தேர்வு லீவுக்கு வழக்கம் போல, செல்வராஜும், மாலினியும் தாமரைக்குளத்திற்கு வந்தனர்.

இரண்டு நாள் கழித்து மாலினியையும் பிள்ளைகளையும் மாலினியின் அப்பா வீட்டில் விட்டு வர, செல்வராஜ் கிளம்பியபோது மீரஜா, “நான் மதுரைக்குப் வரலப்பா” என்றாள்.

“ஏன்டா?” என்று செல்வராஜ் கேட்க,

என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தாள் மீரஜா.

“என்னோட வா மீரா. ஆச்சி வீட்டுக்குப் போகலாம்.” என்று மாலினியும் அழைக்க,

“அங்கே போனால் ஆச்சி எப்ப பார்த்தாலும் திட்டிட்டே இருப்பாங்க. அம்மாட்ட சொல்லிக்குடுத்து அடி வாங்கிக் கொடுப்பாங்க.” என்று சொன்னால் தன் அம்மா மனம் வேதனைப் படும் என்று நினைத்த மீரஜா,

“வேணாம் அங்கே போனா எனக்கு வேர்க்கூரு வந்துடும்.” என்றதும் செல்வராஜும் மாலினியும் சிரித்துவிட்டு, “அப்போ அம்மாவும், சந்தோஷியும் ஆச்சி வீட்டுக்குப் போகட்டுமா? ”

“நீங்களும் இங்கேயே இருங்களேன்.” என்று கெஞ்சும் தொனியில் கேட்ட மகளைத் தூக்கி,

“அம்மா, இங்கே வரும்போதுதானே மதுரைக்குப் போக முடியுது?” என்று செல்வராஜ் கூறவும்,

“சரி! நீங்க, சீக்கிரம் இங்கே திரும்பி வந்துடுங்க நாம விளையாடலாம்.” என்று கூறி அனுப்பி வைத்தாள்.

செல்வராஜ், மாலினியையும், சந்தோஷியையும் தன் மாமனார் வீட்டில் விட்டுவிட்டு அன்று மாலையே மீண்டும் தாமரைக்குளம் சென்றுவிட்டான்.
“மீராவ கூட்டிட்டு வரலையாம்மா? அவ இங்கே வந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது.” என்று சுப்பிரமணியம் மாலினியிடம் கேட்டார்.

“வரலைன்னு சொல்லிட்டாப்பா.” என்று மாலினி சொன்னதும், அந்தக் குழந்தை ஏன் சமீபகாலமாக மதுரைக்கு வருவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட சுப்பிரமணியத்திற்கு மனம் வேதனை அடைந்தது.

மனோகரிக்கும் மீரஜா வராததற்கான காரணம் புரிந்தது. ஆனால் அதற்கும் முத்துராக்கம்மா தான் காரணம் என்று திருப்பிவிட்டார்.

“இதுக்குதான் சொன்னேன். என் அண்ணன் வீட்டில் குடுத்திருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?” என்று மனோகரி ஆரம்பிக்கவும்,

“மாலினிக்குக் கல்யாணம் முடிஞ்சு இன்னொருத்தர் வீட்டுக்குப் போயாச்சு… இப்ப போய் அண்ணன் வீடு, அது, இதுன்னு சொல்ல நாக்கு கூசல? ஊமையா இருந்து எம் பொண்ணு வாழ்க்கைய கெடுத்துடாத” என்று கூறிவிட்டு வராண்டாவிற்கு சென்றுவிட்டார்.

"இவர் என்னைக்கு என் பேச்சைக் கேட்டிருக்கார்? நீயாவது அம்மா சொல்றத கேளு… மீராவ உன் கூடக் கூட்டிட்டு போ மாலினி. சந்தோஷிக்கு மூன்று வயசாயிடுச்சுல்ல? இரண்டு பிள்ளைகள வச்சுப் பாத்துகிற முடியாதா?" என்று அதட்டிய மனோகரியிடம்,

"ஏம்மா… மீரா அத்தைட்டயே இருக்கட்டுமே?" என்ற மாலினியை எரித்துவிடுவதைப் போலப் பார்த்தார் மனோகரி.

"உனக்கு அறிவே இல்லையா? மீரா உன்னை மதிக்கிறதே இல்ல…"

"அம்மா... அவ குழந்தை மா"

"ஆமா! இடுப்புல தூக்கி வச்சு கொஞ்சு… அஞ்சுல வளையாதது, அம்பதுலயும் வளையாதுன்னுவாங்க… மீரா அப்படியே அவ அப்பத்தா மாதிரியே இருக்கா. முகச்சாயல்ல மட்டுமில்ல குணத்துலயும்."

"அத்தை குணத்துக்கென்ன ம்மா?"

"எல்லாம் நடிப்பு… அவங்க நினைக்கிறத நம்ம மீராட்ட சொல்லிக் கொடுத்து, பேச வைக்கிறாங்க… மீரா சின்னக் குழந்தை… ஆனா அப்படியா பேசுறா? நம்மள மதிக்கிறதே இல்ல… இதுக்குதான் உங்கப்பாட்ட தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்… நம்ம விரலுக்கேத்த மோதிரம் தான் போடனும்னு… இப்ப பாரு நம்மள ரொம்ப கேவலமா நடத்துறாங்க..."

"அம்மா... அப்படி எங்கம்மா நடந்துக்கிறாங்க? என் மேல அத்தான் கோபப்பட்டா கூட அத்தையும், மாமாவும் எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க..."

"எல்லாமே நடிப்பு மாலினி… உன் மாமியாவும், மாமனாரும் உன்ட்ட காட்டுற முகம் வேற, எங்கள்ட்ட காட்ற முகம் வேற."

"என்னம்மா சொல்றீங்க?"

"உன்ன பெத்தவதானே நான்? என்னை எங்காவது பார்த்தா சிரிக்கக்கூட மாட்டாங்க தெரியுமா? அது மட்டுமில்ல மீராட்டயும் நம்ம வீடு சின்னது, அது, இதுன்னு சொல்லி வச்சதாலதான் மீரா நம்ம வீட்ல ஒரு நாள் கூட இருக்கமாட்டுறா… அவ அப்பத்தாக்கிட்ட எப்படிச் சிரிச்சு பேசுறா? எங்கிட்ட ஒருநாளாவது அப்படிப் பேசிப் பார்த்திருக்கியா?"

"அதுக்கு நீ முதல்ல அந்தக் குழந்தைட்ட பிரியமா இருக்கனும்." என்றபடியே வீட்டிற்குள் வந்தார் சுப்பிரமணியம்.

"வந்துட்டார்… " என்று நொடித்தபடி அடுப்படியை நோக்கிச் சென்று விட்டார் மனோகரி.

மனோகரியின் பின்னால் சென்ற சுப்பிரமணியம், "நீ என்ன பண்றன்னு தெரிஞ்சுதான் பண்றியா?"

"நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்?"

"எதுவா இருந்தாலும் நீ சொல்லத் தேவையில்லை. அது அவ குடும்பம். அவ குடும்பத்தை அவளால பாத்துக்க முடியும்." என்று சுப்பிரமணியம் கூற,

"அவளும் உங்கள மாதிரியே, அவ மாமியாதான் நல்லவ ன்னு தலையில் தூக்கி வச்சு ஆடுறா... உங்களுக்கு இப்போ புரியாது, உங்க தங்கச்சி பண்ற மாய்மாலம். அவங்கதான் மாலினியைப் பத்திரமா வச்சிருக்கிற மாதிரியும், அவங்க வீட்டுல தான் மாலினி சந்தோசமா இருக்கிற மாதிரியும், மாலினி மனச கெடுத்து, நம்ம வீடு வசதி இல்லாத வீடு... இங்க வந்தா கஷ்டப்படுவா, அப்படிங்கற மாதிரி இது பண்றாங்க…"

"ஏன் இப்படியெல்லாம் பேசுற? முத்துராக்கு அப்படிப்பட்டவ இல்ல. அப்படியே இருந்தாலும் நம்ம மகள, அங்க கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. மாலினி அவங்களோட தான் வாழ்ந்தாகனும். நீ இடையில் புகுந்து எதுவும் செய்யாம இருந்தா போதும்."

"இதுக்குத் தான் உங்க தங்கச்சி வீட்ல குடுக்கவேணாம்னேன்…"

"மகள, மாமியார் வீட்டுல நல்லா வச்சுக்கிட்டா நீ சந்தோசப்படனும்... உன்ட்ட இருந்து பிரிக்கிறதா நினைக்கக் கூடாது… நம்மளவிட நம்ம பொண்ணு வசதியா இருந்தா நல்லதுதான? அவங்க ஸ்டேட்டஸ் பாக்கல… நீதான் தேவையில்லாம குழப்பம் பண்ற... நம்மள மாதிரி பட்ஜட் போட்டுக் குடும்பம் நடத்துற தலைவிதி நம்மோட போகட்டுமே."

"அப்போ நான் பொறாமை படுறேன்னு சொல்றீங்களா?"

"அது எனக்குத் தெரியல. ஆனா, நான் உன் பேச்ச கேட்காம, மாலினிய செல்வராஜுக்கு குடுத்ததுனால, என் மேல இருக்குற கோபத்த, மாலினி குடும்பத்துமேல காட்ற... அதுலயும் அந்தப் பச்ச புள்ளைய ஏன் பெத்தவளுக்கு எதிரா திருப்புற?"

"அது பச்சபுள்ள மாதிரியா பேசுது?"

"உனக்கு அது என்ன பண்ணுச்சு? அதை ஏன் முத்துராக்கு மாதிரி இருக்கா ன்னு சொல்ற? அவ அவளோட அப்பத்தா சாயல்ல இருக்கிறது தப்பா?"

"சாயல் மட்டுமா?"

"குணத்துல என்ன குறச்சல்? மனோ நீ பெரிய தப்பு பண்ற… இரண்டு பொண்ணுகள்ல ஒரு பொண்ணு நல்லவ, மீரா கெட்டவ ன்ற மாதிரியான எண்ணத்த மாலினி மனசுல விதைக்காத… உன் விஷம் கக்குற வேலைய முத்துராக்கோட நிறுத்து… " என்று கூறிவிட்டு விடுவிடுவென்று ஹாலுக்குப் போய் விட்டார்.

தன் அண்ணன் மகனுக்கு, மாலினியைக் கல்யாணம் பண்ணி. தன்னோட பிறந்த வீட்டில் கோலோச்ச எண்ணிய மனோகரிக்கு, மாலினியை நாத்தனார் வீட்டில் கொடுத்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை…

தன் அண்ணன் மகனைவிட அழகிலும், வசதியிலும் உயர்ந்த இடத்தில் திருமணம் செய்து போய்விட்டதால், மாலினி, தன் குடும்பத்தையும் தன் பிறந்தவீட்டு சொந்தங்களையும் மதிக்கமாட்டாளோ என்ற பயம் காரணமாக, ‘உன் மாமியார் வீட்டில் நீ கஷ்ட படுற. என் அண்ணன் வீட்டில் கல்யாணம் பண்ணியிருந்தா உன்னை ராணி மாதிரி வச்சிருப்பாங்க’… என்ன அடிக்கடி கூறி கூறி மாலினி மனதில் தன் புருசன் குடும்பத்துடன் ஒட்டவிடாமல் செய்தார்.

அன்று இரவு தூங்கும்பொழுது மனோகரிக்கு சிறுநீர் வருவதுபோல உணர்ந்ததும் எழுந்து கழிப்பறை நோக்கிச் சென்றார் மனோகரி.

ஹாலில் இருந்த ஷோபாவில் யாரோ படுத்திருப்பது போல் தோன்ற அருகில் சென்று பார்த்தார்.

மீரஜா நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள்.

‘இவள் எப்போது வந்தாள்?’ என்று எண்ணியவர், ‘மாலினியைப் பார்ப்பதற்காக வந்துவிட்டதோ?’ என்று தோன்றிய மறு கணமே, மீரஜாவை எழுப்பி,

“எம் மகள நிம்மதியா என் வீட்ல இருக்க விடமாட்டியா?” என்று கேட்க, மலங்க மலங்க விழித்தாள் குழந்தை.

“யார் கூட வந்த?” என்று கேட்டதற்கும் மீரஜாவிடமிருந்து பதில் வராமல் போகவே,

“காலைல மாலினி எழுந்து வர்றதுக்குள்ள உன் அப்பத்தா வீட்டுக்கு ஓடிடு புரியுதா? இல்ல உன்னை மட்டும் தனியா பரண் ல கட்டிப் போட்டுடுவேன். மொட்ட மாடியில படுத்திருக்கிற கதிர இப்பவே எழுப்பி விடுறேன். கிளம்பு” என்று கூற,

“முடியாது” என்ற குழந்தையை, அடிக்கக் கை ஓங்கிய மனோகரியின் கையை யாரோ பிடிக்க, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த மனோகரிக்கு கைகால் வெடவெடத்தது.

மனோகரியின் கை அந்தரத்தில் நின்றதே தவிர, அங்கே யாரும் இல்லை.

தன் கையைப் பழைய நிலைக்குக் கொண்டுவர மனோகரி எவ்வளவு முயன்றும் முடியாமல் போகவே,

“மாலினி! மாலினி! என்னங்க... ” என்று அலறியவள் காதருகே,

“மீரா மேல இனிமேல் உன் கை பட்டது, உடைச்சுக் கொடுத்துடுவேன் ஜாக்கிரதை!” என்று ஆண் குரல் உறும, யாரென்று திரும்பிப் பார்த்த மனோகரிக்குத் தானாகச் சிறுநீர் கழிய சேலை நனைந்தது.

அங்கே வந்த மாலினி, “என்னம்மா? என்னாச்சு?” என்று கேட்க,

“என் கை… என் கை…” என்றதும், மாலினி மனோகரியின் கையைத்தொட்டதுமே கை சதாரணமாகக் கீழே இறங்கியது. ஆச்சரியத்தில், தன் கையைத் திருப்பித்திருப்பிப் பார்த்த மனோகரி மீண்டும் தன் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா? என்று பார்த்துவிட்டு,

“மீரா எப்ப வந்தா? யா... யார் கூட்டிட்டு வந்தா” என்று மனோகரி திக்கித்திக்கிக் கேட்க,

“மீராவா? எப்ப வந்தா? எங்கே அவ?” என்று மாலினி சுற்றிலும் தேட,

ஷோபாவைக்காட்டிய மனோகரி மீண்டும் அதிர்ந்தார். ஷோபாவில் யாருமே இல்லை.

“இங்கே தானே இருந்தா...” என்று தேடியபோது ஹாலுக்கு வந்த சுப்பிரமணியம், “என்ன மனோ? என்னாச்சு மாலினி?” என்று கேட்டார்.

தெரியலப்பா அம்மா கூப்பிட்டுதான் இங்கே வந்தேன்… மீரா எப்ப வந்தான்னு கேட்கிறாங்க.” என்று கூற,

“மீராவா? எங்கே அவ?”

“அதக் கேட்டதுக்குத்தான் இப்படி முழிக்சுக்கிட்டு நிக்கிறாங்க.”

“என்ன மனோ? மீரா எங்கே?”
“இந்த ஷோபாவில் தாங்க, படுத்திருந்தா.” என்ற மனோகரியைப் பார்த்தவர், வீடு முழுவதும் தேடிவிட்டு வந்து, “யாரும் இல்லையே மனோ?” என்றதும்,

“இல்லங்க… இப்ப பார்த்தேன்… அவள தூக்குறதுக்குப் போனப்போ என் கையை யாரோ பின்னாடி பிடிச்சுக்கிட்டாங்க.”

“உன் கைய புடிச்சாங்களா? யாரு?” என்று ஹாலை நோட்டமிட்டபடி சுப்பிரமணியம் கேட்டார்.

“தெரியலங்க… என் கண்ணுக்கு யாருமே தெரியல” என்று பயத்தின் காரணமாகச் சுற்றிலும் பார்வையை ஓட்டிய மனோகரிக்குத் தண்ணீர் கொடுத்து,

“இப்படி ஷோபாவில் உக்காரு. ” என்றதும் ஓடிப்போய்ப் படுக்கை அறைக் கட்டிலில் அமர்ந்த மனோகரிக்குத் தெப்பமாய் வியர்த்து ஜாக்கெட் நனைந்தது.

மனோகரி நின்றிருந்த இடம் ஈரமாக இருந்ததைப் பார்த்த சுப்பிரமணியத்திற்கு அது சிறுநீர் என்று புரிந்தது.

“இவ எதையோ பார்த்துப் பயந்துட்டா போலிருக்கு மாலினி. அம்மா தூங்குறவர பக்கதுலயே இரு. நான் ஹாலில் படுத்துக்கிறேன்.” என்று கூறிவிட்டுப் போய் விட்டார்.

மாலினி மனோகரியின் படுக்கையில் அமர்ந்து கொள்ள,

மனோகரிக்கு எதையும் நம்ப முடியவில்லை. ‘கற்பனைபோலத் தெரியவில்லையே? அந்தக்குரல் கூட நன்றாகக் கேட்டதே?’ என்று நினைத்தவருக்குப் பயம் போகவில்லை.

விடிந்ததும் அருகில் உள்ள பப்ளிக் பூத்தில், சுப்பையாபிள்ளை வீட்டிற்கு ஃபோன் செய்து, பரஸ்பர விசாரிப்பிற்குப் பிறகு, மீரஜாவை விசாரிக்க, மீரஜா தாமரைக்குளத்தில் தங்களது இல்லத்தில் தூங்கிக்கொண்டிருப்பதாக முத்துராக்கம்மாள் கூறினார்.

நாட்கள் செல்ல அனைத்தும் கற்பனைதானோ? என்ற முடிவுக்கு வந்தார் மனோகரி.

அடுத்து வந்த காலமும் சூழ்நிலையும் மனோகரிக்குச் சாதகமாக,

முத்துராக்கு தம்பதியின் இரண்டாவது மகனான தனராஜிற்குப் பெரிய இடத்திலிருந்து பெண் கொடுத்தனர்.

அதன் பிறகு அந்த வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன விசயத்தைக்கூட மனோகரி பெரிதாக்கிக் காட்டினார்.

அப்பொழுதுதான் திருமணம் செய்து வந்திருக்கும் பெண். கொஞ்சம் ஃபிரியா இருக்கட்டும். என்று எண்ணி, வீட்டு வேலையை மாலினியுடன் பகிர்ந்து கொண்டார் முத்துராக்கம்மாள்.

ஆனால் இளைய மருமகளோ, சமைப்பதில் கில்லாடியாக இருந்தாள். புதுப் புது வகையான சமையல் செய்து அசத்தினாள்.

அதில் முத்துராக்கம்மாவிற்கு மிகுந்த சந்தோசம். அதை வந்து மாலினி தன் தாயிடம் கூற, வெறும் வாயை மென்றவருக்கு அவல் கிடைத்தது.

"பார்த்தியா நான் சொல்லும்போது நீ நம்பல. இப்ப சின்ன மருமக பணக்காரியா வந்ததும் உன்னைத் தூக்கி போட்டுட்டாங்க… இதுக்குத் தான் என் அண்ணன் வீட்டில் உன்னைக் கட்டிக் கொடுத்திருந்தா இந்த நிலை உனக்கு வந்து இருக்குமா?" என்று கொழுத்திப் போட,

காபி போடக்கூடத் தெரியாமல் கல்யாணம் பண்ணிப்போன தனக்கு முத்துராக்கம்மாள் தாயாய் இருந்து சமையல் கற்றுக்கொடுத்தது, மருமகளை உட்கார வைத்து அவர் சமைத்துப் போட்டதெல்லாம் மாலினிக்கு மறந்தது…

தன் மாமியார் தன்னை மட்டும் வேலை வாங்குவதாகத் தோன்றியது…

மாலினியின் தந்தை, ஒருமுறை மாலினிக்குக் கூறிய அறிவுரையை, அவள் தாய் அடிக்கடி கூறிய போதனைகள் ஜெயித்தது.

'தான் வசதியில்லாத குடும்பத்திலிருந்து வந்ததால், தன்னை வேலைக்காரி போல் நடத்துவதாக அம்மா கூறுவதுதான் உண்மையோ?' என்று மாலினிக்குத் தோன்றியது.

மாலினியின் மனதில் தூவப்பட்ட விஷ விதை வளர்ந்து செடியானது. விளைவு,

யூகேஜி முடித்த கையோடு, “பிள்ளையைப் பிரிந்து இருக்க முடியவில்லை” என்று கூறி, துள்ளித்திரியும் மானாய், பறவையாய் சிறகடித்துப் பறந்த மீரஜாவை, மாலினி தன்னுடன் புன்னைவனத்திற்கு அழைத்துப் போவதாகக் கூறியதும், முதிய தம்பதியால் மறுப்புக் கூற இயலவில்லை.

மீரஜா தன் தாத்தா அப்பத்தாவைப் பிரிய மனமின்றி, மாலினி செல்வராஜுடன் செல்ல மறுத்து அழுதாள்.

வேறுவழியின்றி, சுப்பையாபிள்ளையும், முத்துராக்கம்மாளும் மீரஜாவை அழைத்துக்கொண்டு, செல்வராஜ் மாலினியுடன் புன்னைவனம் சென்றனர்.

எத்தனையோ விதமாக எடுத்துக்கூறியும் மீரஜா, தாத்தாவையும் அப்பத்தாவையும் பிரிந்து மாலினியுடனும் செல்வராஜுடனும் இருக்கச் சம்மதிக்கவில்லை.

மீரஜாவிற்கு, அது தன்னுடைய பெற்றோர் வீடு என்ற உணர்வை, செல்வராஜ் வீட்டால் கொடுக்க முடியவில்லை.

ஆனால் இதுவே மாலினிக்கு வேறு விதமாய்ப் புரிந்தது. மனோகரி கூறியதுபோல், மீரஜாவிற்குத் தன்மீது பிரியமில்லை என்பதோடு, மீரஜா பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. என்றும் எண்ணினாள்.

"நீங்கள் இவளை விட்டுவிட்டு ஊருக்குக் கிளம்புங்கள் அத்தை. இரண்டு நாள் அழுவாள் அப்புறம் பழகி விடுவாள்" என்ற மாலினியின் பேச்சு முத்துராக்கம்மாளுக்கும், சுப்பையா பிள்ளைக்கும் உவப்பானதாக இருக்கவில்லை.
"பிள்ளை பாவம் மாலினி! ஏங்கிப் போயிடுவாள்… அவள மனசளவுல தயார்படுத்துறது தான் அவளுக்கும் நமக்கும் நல்லது." என்று முத்துராக்கம்மாள் கூற,

"பெரிய மனுசி... இவளுக்குப் புரிய வைக்கிறதுக்கு… முதுகுல ரெண்டு அடி போட்டா தன்னால அடம்பிடிக்கிறத நிறுத்திட்டு சொன்ன பேச்சைக் கேட்பா." என்று மாலினி கூறவும்,

"மாலினி..." என்று ஏதோ பேச வந்த முத்துராக்கம்மாளிடம், "அவளுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்கீங்க… அவள என்ன காட்டுலயா விட்டுட்டுப் போறீங்க?" என்று மாலினி விஷம் கக்க,

‘காட்டைவிட மோசமான இடத்தில் பிள்ளையை விட்டுச் செல்கிறோமோ?' என்று தோன்றினாலும்,

'தன்னுடன் மீரா இருக்க மறுப்பதால் ஏற்பட்ட கோபத்தில் மாலினி இப்படிப் பேசுகிறாள்… கோபம் குறைந்ததும் சரியாகிவிடுவாள்' என்ற நம்பிக்கையில்,

மாலினி இருக்கும் மனநிலையில் இதற்குமேல் வாதாடுவது மீரஜாவுக்கு மேலும் பிரச்சனையை உண்டு பண்ணக்கூடும் என்று எண்ணியதால்,

மீரஜாவைத் தூங்க வைத்துவிட்டு, அவளுக்குத் தெரியாமல் தாமரைக்குளத்திற்குக் கனத்த மனதோடு திரும்பினர் சுப்பையாபிள்ளையும் முத்துராக்கம்மாளும்.

"என் உயிரானவளைப் புன்னைவனத்தில் விட்டுவிட்டார்களே? இனி அவள், மாலினி குடும்பத்தால் சிறகுகள் ஒடிக்கப்பட்டு, கஷ்டத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கமாட்டாளே..‌." என்று குடைவரையிலிருந்தவரின் கண்கள் கலங்க, அவரருகே இருந்த முனிவர்,

"எங்கு சென்றால் என்ன? நீங்கள் மீராவிற்குத் துணையிருக்கும்போது என்ன கவலை?" என்று கேட்க,

"இனி அவள் படப்போகும் துன்பங்கள் அதிகம்… அவளை யாராலும் அதிகாரத்தால் அடக்க முடியாது… அன்புக்கு மட்டுமே அடிபணிபவள், மீராவின் அன்பையும், இரக்கத்தையுமே பயன்படுத்தி அவளைத் துன்புறுத்துவார்களே... அங்கே அவளுக்கு அன்புகாட்ட யாருமில்லை… இதைச் செய்யாதே என்று அன்பாகக் கூறினாள் கேட்பாள்… ஆனால் அடித்துத் திட்டினால், எதற்காக அடிக்கிறார்கள் என்பதே தெரியாமல் வளருவாள் என் தங்கம்." என்று வருந்த

"ஒரு வழி இருக்கிறது! சுப்பையாபிள்ளையையும், முத்துராக்கையும் புன்னைவனத்திற்கே அனுப்பிவிட்டால்?" என்று முனிவர் கேட்க,

அதற்கான செயலில் இறங்கினார் குடைவரையிலிருந்தவர்.

ஆனால் சேதுமாதவரோ, இராமஸ்வரத்துக்கு அருகிலிருக்கும் புன்னைவனத்திற்கே நிரந்தரமாக மீரஜா வந்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.

இரண்டாவது முறை பிரிந்த மீராவை தாத்தா, அப்பத்தாவுடன் சேர்த்து வைத்துவிடுவாரா?

வார்த்தைகளின் எண்ணிக்கை -1528

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 
Last edited:

Shailaputri R

Well-known member
ஏன் தாத்தா நீங்க அத மறந்திங்க.. அவ காதுல உன்ன பிரிய இஷ்டம் இல்லன்னு பாப்பாக்கு பேர் வைக்கும் போது அந்த சித்தர் சொல்ல சொன்னாருல.. ஹ்ம்ம்ம் ரொம்ப கஷ்டம்.. பாவம் குழந்தை.. ஏன் கண்ணா இவளோ குஷி.. இங்க உன் மீரா கஷ்டப்பட போறான்னா.. என்ன தான் நீ கூட இருந்தாலும் 24hrsம் இருக்க முடியாதுல.. எனக்கே உன் மேல கோபம் வருது.. மீரா குட்டி சீக்கிரம் தாத்தா பாட்டி கிட்ட போய்டு டா
 

Aathisakthi

Well-known member
பெற்ற மகளுடைய வாழ்க்கை யை விட தனது வஞ்சம், தான் நினைத்தது நடக்காமல் போய்விட்டதே என்ற எண்ணமும் பெரிதாக போய்விட்டதால் ஒரு பிஞ்சை கசக்க நஞ்சை விதைக்கிறார்😑😑😑😑
 

Mohanapriya Ayyappan

Active member
மாலினி அம்மா என்ன ஒரு கேரக்டர் 🤦🏻‍♀️
இவ அத புரிஞ்சுக்காம அந்த குழந்தையை கஷ்டப்படுத்துறா
 

Sspriya

Well-known member
எல்லா கதையிலும் மாமியார் தானே வில்லியா இருப்பாங்க நீங்க என்ன ஜி அம்மாவை வில்லியா போட்டுட்டிங்க... 🙄🙄🙄... யப்பா எப்படி லாம் கொளுத்தி போடுறாங்க... நல்லா இருந்த குடும்பத்தை கெடுத்தாச்சு.. பாவம் மீரா குட்டி 😔😔😔
 
Top