கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

புவனாவின் கவிதைத் தூறல்கள்...

Aathisakthi

Well-known member
சுயம் தொலைத்த நாங்கள்

சுயம் தொலைத்து
சுகமான சுமை சுமந்து
கூண்டிற்குள் வாழும்
வீட்டுப் பறவைகள் தான்
நாங்கள் என்றும்!

அன்பெனும் சிறைக்குள்
அடைந்து கொண்டு
தன்னைத் தானே
பூட்டிக் கொள்ளும்
ஆயுள் தண்டனைக் கைதிகள்!

பிரசவ வலி தாங்கினாலும்
பிள்ளையின் சிறு வலி
தாங்க முடிவதில்லை!
அழுகையும் கண்ணீரும்
ஆர்ப்பரித்து வீழும்!

பிறந்த நொடியிலேயே
வெறுப்பும் புறக்கணிப்பும்
தாய்ப்பாலுடன் சேர்த்துப்
பருகித் தான்
வளர்ந்து நின்றோம்!

பெண்ணியக் கவிதைகள்
மேடைகளில் முழங்கிக்
கைதட்டல்களை அள்ளினாலும்
அடுப்பங்கரை சாகசங்களுக்கு
அஞ்சாத வீராங்கனைகள்!

குடும்பமே கோயிலென்று
அம்மாவும் பாட்டியும்
ஓதிய வேதங்களை
உருப்போட்டு மனதில் சேர்த்த
மக்குப் பெண்டிர் நாங்கள்!

அலங்காரப் பதுமைகளாகி
தலை சீவிப் பூ முடித்து
விளக்கேற்றிப் பூஜை செய்து
இல்லறத்தை நல்லறமாக
ஏற்றுக் கொண்ட ஏந்திழைகள்!

உணவும் உடையும்
மற்றவர் விருப்பத்திற்கென்று
நித்தமும் விட்டுக் கொடுத்து
ஏமாற்றத்தை விழுங்குகின்ற
இதிகாசப் பெண்கள் நாங்கள்!

சுவரில் வரையும் சித்திரங்களோ
கருவறையில் வீற்றிருக்கும்
கற்சிலைகளோ இல்லை நாங்கள்
அன்பை மட்டுமே யாசிக்கும்
அனாதைக் குழந்தைகள்!

இது தான் வாழ்க்கையென்று
என்றும் வரையறுக்கவில்லை!
இதுவும் வாழ்க்கையென்று
வாழ்ந்தே காட்டுகிறோம்!
வீழ்ந்தால் எழுகின்றோம்!

அழகான கற்பனைகளையும்
எதிர்காலக் கனவுகளையும்
எழுத்தினில் காட்டுகிறோம்!
எழுத்திலாவது சுதந்திரம்
தருமா இவ்வுலகும்!

என் கணவர் என் குழந்தை
என் குடும்பமென்று
கோட்டுக்குள் வாழ்ந்தாலும்
கற்பனை வானில் பறக்கிறோம்!
சிறகுகளை முறிக்க வேண்டாம்!

குடும்பங்கள் சிறந்திருந்தால்
சமுதாயம் சிறக்காதா?
குடும்பத்துக் குத்துவிளக்கு
இருளைப் போக்காதா?
விடை தான் யாரறிவார்!

புவனா
05/09/2020.
நிதர்சன வரிகள்....ஏக்கங்களை மறைத்து.. தாக்கங்களை மறைத்து... சிரிப்பை பூசி ...வாழ்க்கையின் பாதையில் நடக்கின்றோம்...இப்படி தான் வாழ வேண்டுமா....இது தான் வாழும் முறமையா...கேள்விகளோடு விடை தேடா பயணம்.
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
நிதர்சன வரிகள்....ஏக்கங்களை மறைத்து.. தாக்கங்களை மறைத்து... சிரிப்பை பூசி ...வாழ்க்கையின் பாதையில் நடக்கின்றோம்...இப்படி தான் வாழ வேண்டுமா....இது தான் வாழும் முறமையா...கேள்விகளோடு விடை தேடா பயணம்.
thank u
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
இரத்த வாடை

தண்டவாளத்தில் கதறல் சத்தம்!
கால்கள் சிக்கியங்கு
அஞ்சித் தவித்ததொரு
சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டி!

உதவ முன் வந்தான் ஒரு மனிதன்!
பொறுமைக் கரங்கள் நீட்டி
விடுவித்து மகிழ்வித்தான்!
தன் தோளில் சுமந்து சென்றான்!

கனிவில் நெகிழ்ந்தது ஆட்டுக்குட்டி!
மகிழ்ச்சியில் துள்ளித் துள்ளி
இறைவனுக்கு நன்றியும்
இனிய மனதுடன் உரைத்தது!

கசாப்புக் கடையை அடைந்தான்!
ஆட்டைப் பணமாய் மாற்ற
இரத்த வாடை காற்றில் கசிந்தது!
காகிதப் பணத்தில் கலந்து சிரித்தது!

புவனா
12/09/2020
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
சின்னச் சின்ன ஆசைகள்!


மலர் விட்டு மலர் தாவி
தேடித் தேடித் தேனை உறிஞ்சித்
திளைக்கும் வண்டாக ஆசை!

வண்ண வண்ண மலராய்
மலர்ந்து மணம் பரப்பி
சிந்தை கவர்ந்திட ஆசை!

சிறகடித்து வானில் சுற்றி
சிகரம் தொட்டு நின்று
சிந்தை மகிழ ஆசை!

மழலையாய் மாறி நின்று
மாந்தரின் மனதை என்றும்
மகிழ்விக்க மனதில் ஆசை!

வண்ணத்துப் பூச்சியாய் மாறி
வட்டமிட்டு நந்தவனத்தில்
சுற்றிச் சுற்றி வர ஆசை!

செம்மொழியாம் தமிழ்மொழியில்
தித்திக்கும் கவிதைகளும்
தினம் தினம் படைக்க ஆசை!

அன்பெனும் ஆயுதம் தனை ஏந்தி
அகிலத்தை அடக்கி வாழ
அற்புதமாய் மனதில் ஆசை!

இனிய சொல் என்றும் பேசி
இனிமையாய்ச் செயலாற்றி
இன்பத்தில் திளைக்க ஆசை!

வரமாய்ப் பெற்ற வாழ்வதனில்
வழி தவறிச் சென்றிடாமல்
நெறிமுறையில் வாழ ஆசை!

நேர்மையும் துணிவும் நல்ல
சிந்தனையும் நாட்டுப்பற்றும்
குறையாமல் வாழ ஆசை!

புவனா
13/09/2020.
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
மனதின் அவதாரங்கள்

மனம் ஒரு குழந்தை!
அடம் பிடித்து அழுது
காரியம் சாதிக்கையில்!

மனம் ஒரு தாய்!
ஆறுதல் அளித்து
அன்பு செலுத்துகையில்!

மனம் ஒரு நண்பன்!
தோல்வியில் துவளவிடாமல்
துணையாக நிற்கையில்!

மனம் ஓர் ஆசான்!
தவறுகளைக் காட்டித்
தடம் புரளாமல் தடுக்கையில்!

மனம் ஒரு காதலி!
காதலுடன் அணைத்துக்
கனிவும் அன்பும் காட்டுகையில்!

மனம் ஒரு கவிதை!
இயற்கை அழகை ரசிக்கையில்
கற்பனை வானில் உலவுகையில்!


புவனா

15/09/2020
 
Top