அத்திப்பழ வாழ்க்கை
பள்ளியிலிருந்து வீட்டிற்கு வர மாதுரிக்கு துளியும் விருப்பம் இல்லை. அன்று மட்டுமா...? பாட்டியும் தாத்தாவும் பழைய வீட்டிற்கு சென்ற நாளிலிருந்து அவள் இப்படிதான் உணர்கிறாள்.ஆனால் அவளின் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் மதிப்பளிக்க யார் இருக்கிறார்கள்?
ஒருவருடத்திற்கு முன்பு வரை இவளுக்கு இதைப்போல் தோன்றியதில்லை. மணியடிக்கும் முன்பே பள்ளியின் வாயிலில் வாகனத்தோடு காத்திருக்கும் தாத்தாவோடு அரட்டையடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றவளுக்கு, இப்போது பள்ளி பேருந்தில் பலரோடு பயணம் செய்ய பிடித்தம் இல்லை. இவளின் பிடித்தத்தை யாரும் அங்கு கேட்கவும் இல்லை!
பேருந்து அவளின் குடியிருப்பிற்கு அருகில் நின்றதும், அவளின் தோழிகள் சொர்க்கத்தில் வசிக்கும் தேவதையை பார்ப்பதைப்போல இவளை பார்த்தனர். அதில் ஒருத்தி,
“மாது! இந்தமாதிரி வீடெல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்திருக்கேன். நீ ரொம்ப லக்கி-டி.” என்று பொறாமை வழியும் விழிகளால் இவளை பார்த்தாள்.
.அதிர்ஷ்டம் என்பது யாதெனில் பிடித்தவர்களோடு பொழுதை கழித்தலே... என்பதை இவளுக்கு புரியவைப்பது யார்? என்று யோசித்தபடி மாதுரி நடந்தாள்..
இரண்டாவது தளத்தில் இருக்கும் இல்லத்திற்கு மின் தூக்கியில் வந்திறங்கியவளை பூட்டிய கதவு வரவேற்றது. ஆர்பாட்டமாய் தாத்தாவோடு அவரின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்திறங்கும் பேத்தியை பிடித்த சிற்றுண்டியோடு வாயிலில் நின்று வரவேற்கும் பாட்டியின் நினைவு இவளை வதைக்க,பெருமூச்சுடன் சாவியை கையில் எடுத்தாள்.
‘வெகு நேரமாக நான் மூடிக்கிடக்கிறேன்... என்னை கொஞ்சம் திறந்துவிடேன்... நான் மூச்சு விட்டுக் கொள்கிறேன்... என்று பூட்டிவைத்த வாயிற்கதவு இவளிடம் கெஞ்சிக்கொண்டு நின்றது. நானும்தான் இந்த வீட்டில் மூச்சுமுட்டிபோய் நிற்கிறேன்... எனக்கு யார் விடுதலை கொடுப்பார்...? என்று இவளால் அதனிடம் கேட்கவா முடியும்?
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனின் வீடு சொர்க்கம்! சிறிது காலம் முன்புவரை இவளுக்கும் அப்படிதான் இனித்தது. ஆனால் இப்போது அது நரகமாய் கசக்கவல்லவா செய்கிறது! கசந்தாலும் இனித்தாலும் அங்கு வாழ்ந்துதானே ஆகவேண்டும்...? என்ற விரக்தியில் வாயிற்கதவிற்கு விடுதலை அளித்து உள்ளே சென்றாள்.
வீட்டின் நடுநாயகமாய் வீற்றிருந்த மெத்தை தைத்த ஆசனத்தின் ஒரு மூலையில் புத்தகப்பையை வீசியவள், ஆளை உள்ளே இழுத்துக் கொள்ளும் புதைக்குழி போல் இருந்ததில் அப்படியே அமுங்கிப்போனாள். சரியாக அந்நேரம் வீட்டில் இருந்த தரைவழி தொலைப்பேசி அழைத்தது.
“வந்துட்டியா பேபி?” என்ற குரலுக்கு பதில் ஏதும் கொடுக்காமல் தொலைப்பேசி ஏர்பியை இவள் காதில் அப்படியே வைத்திருந்தாள்.
மகளிடம் இருந்து எந்த பதிலும் வராது போனாலும் அதைப் பற்றி கவலைக் கொள்ளாது, “சரோ ஆன்ட்டிக்கு போன் செய்து நீ வந்ததை சொல்லுடா. உனக்கு என்ன ஸ்நாக்ஸ் வேணும்னு அவங்ககிட்ட சொல்லு. அதை அவங்க செய்து தருவாங்க” என்று ரோகினி தன்போக்கில் கூறினாள்.
“நீ எப்ப ம்மா வருவ?”
தினமும் இவளிடமிருந்து கேட்கப்படும் இந்த கேள்விக்கு, தினமும் வரும் அதே பதிலே இன்றும் வந்ததது.
“டென் மினிட்ஸ்ல வந்துடுவேன்டா”
இது பொய் என்று இருவருக்குமே தெரிந்திருந்தாலும் கேட்பதையும் கூறுவதையும் இருவரும் இன்றுவரை நிறுத்தவில்லை.
“இப்படியேதான் சொல்ற.ஆனா ஒரு நாளும் சொன்னபடி நடந்ததில்ல” வெறுப்பின் உச்சத்தில் வார்த்தைகளை துப்பினாள் மகள்.
ரோகினியாலும் என்னதான் செய்ய முடியும்? தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக இருக்கும் அவளால் நினைத்தபடி கிளம்பிட முடியுமா? நாலைந்து மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவராக போனால் தானே இவள் மருத்துவம் படித்து வளர்ந்து நிற்கும்போது, ஒரு மருத்துவமனையை இவளுக்குக்காக கட்டிக் கொடுக்க முடியும்? சொந்தமாக மருத்துவமனை இல்லாத மருத்துவர்களின் நிலைமையை பற்றி இவளுக்கு என்ன தெரியும்...? பெருநிறுவனங்களைப் போல் செயல்படும் மருத்துவமனையில் தினக் கூலிகளை போலதான் இவர்கள் நடத்தப்படுகிறார்கள் என்பது இவளுக்கு சொன்னால் புரியுமா...? என்று உள்ளுக்குள் புலம்பினாலும் அதையெல்லாம் வெளியே சொல்லாது,
“என்னடா செய்யறது? என்னோட வேலை அப்படியிருக்கு” என்று மகளுக்கு சமாதானம் கூறினாள்.
அதை கேட்ட மகளோ, “இதையெல்லாம் நீ சொல்லாமலே எனக்கு தெரியும். உன்னோட வேலை புதுசாவா இப்படி இருக்கு?” என்று ஆத்திரமாய் கேட்டாள்.
“டாக்டர்! அடுத்த பேஷன்டை உள்ளே அனுப்பவா?” என்ற செவிலியின் குரலுக்கு,
“டூ மினிட்ஸ் மேரி!” என்றவள்,
“பாப்பா உனக்கு என்ன வேணுமோ அதை செய்ய சொல்லி சாப்பிடு.இல்லையா... பிடித்த ஹோட்டலில் ஆடர் செய்து சாப்பிடு. மம்மி முடிந்த அளவுக்கு சீக்கிரம் வந்துடறேன். பாய்” என்று மகளிடம் கூறிய ரோகினி, தன் பணியில் முழ்கிப் போனாள்.
பெருமூச்சுடன் தன் பழைய இடத்தில் அமர்ந்த மாதுரியின் மனம் ஏனோ இன்று சுற்றியிருந்த தனிமையை அதிகமாக வெறுத்தது. யாராவது இன்று பள்ளியில் என்ன நடந்தது... என்று கதை கேட்கமாட்டார்களா... என ஏங்கியது. தந்தையாவது தன்னுடைய தனிமையை போக்க வருவாரா... என்ற எதிர்பார்ப்பில் அவருக்கு அழைத்தாள்.
“ஹலோ! அண்ணியா பேசுறது?” என்ற குரலில் மிரண்டு தந்தையின் எண்ணை மாற்றிப்போட்டுவிட்டோமா என்று மீண்டும் சரிப்பார்த்து,
“ஹலோ! இது சந்திரன் போன் இல்லையா?” என்று தயக்கமாய் கேட்டாள்.
அதற்குள் அங்கு வந்த சந்திரன், தன் உதவியாளனிடம் போனில் யார் என்று கேட்டான். ஹோம் என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்ததாக அவன் கூறியதும், கைப்பேசியை அவனிடமிருந்து பாய்ந்து பிடுங்கி,
“பேபி டால்! எதுக்குடா கூப்பிட்ட?” என்று உற்சாகமான குரலில் கேட்டான்.
“அப்பா! ரொம்ப போர் அடிக்குது. வீட்டுக்கு வந்து என்னை எங்காவது கூட்டிட்டு போறீங்களா?” என்று மகள் கூறியதும்,
“அப்பாக்கு வேலை இருக்கே பேபி. இன்னைக்கு நைட்டே ரொம்ப லேட்டாதான் வீட்டுக்கு வருவேன்டா. இந்த சீரியல் முடிந்ததும் அப்பா பேபியை அவள் கேட்கும் இடத்துக்கு கூட்டிட்டு போறேன்டா. பக்கா ப்ராமிஸ்” என்று கூறினான்.
“அப்பா...ப்ளீஸ்...ப்பா.இன்னைக்கு ஒருநாள் மட்டும் ப்ளீஸ் சீக்கிரம் வாங்க ப்பா.ப்ளீஸ்...” என்ற மகளின் கெஞ்சலில் போகலாமா... என்ற யோசனையில் இருந்தவனிடம்,
“ஹீரோயின் ரெடி சார்” என்றபடி அவனின் உதவியாளன் வந்தான்.
அதைக்கேட்டு கண்ணைமூடி ஒரு கணம் அமைதியாக இருந்தவன், நிரந்தரமில்லாத இந்த துறையில் காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டால்தான் நாளை என் செல்ல மகளை செல்வாக்காக வாழவைக்கமுடியும் என்று எண்ணி,
“அப்பாக்கு வேலை இருக்குடா. ரொம்ப போர் அடித்தால் நம்ம காம்பவுண்டில் இருக்கும் மாலுக்கு போடா பேபி. அங்க உனக்கு என்ன வேணுமோ அதை வாங்கிக்கோ.அப்படியே அங்கு கேம்ஸ் விளையாடு.அப்பாவோட கிரெடிட்கார்டு எடுத்துக்கோ. உனக்கு பின் நம்பர் தெரியுமில்லையா? எவ்வளவு வேண்டுமானாலும் செலவு பண்ணிக்கோடா. டேக் கேர் பேபி. ஒ.கே பாய்டா!.. ” அவசரமாக கூறியபடி வந்தவனுடன் சென்றுவிட்டான்.
‘பள்ளிக்கு போகும் பொண்ணுக்கு செலவு செய்ய கிரெடிட்கார்டா... ஹும்... பிறந்தால் இப்படி பெரிய இடத்தில் பிறக்கனும்’ என்று எண்ணியபடி அந்த உதவியாளன் சென்றான்.
தாகத்தில் தவிப்பவனுக்கு தண்ணீருக்கு பதில் பாதாமும் முந்திரியும் போட்ட பால்பாயாசத்தை நீட்டினால் அது அவனுக்கு இனிக்குமா?
தேவை இருக்கும் இடத்தில்தான் அதன் அளிப்பிற்கு மதிப்பு இருக்கும் என்று பொருளியல் வல்லுனர்கள் கூறுவதைப்போல இவளின் தேவை வேறொன்றாய் இருக்கும் போது இங்கு அவளுக்காய் அளிக்கப்படும் அனைத்தும் அதன் மதிப்பை இழந்து விட்டதாக தானே பொருள்!
பொறியியலில் பட்டம் பெற்ற சந்திரனுக்கு படிப்பிற்கேற்ற வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அவனின் நாட்டம் எல்லாம் சினிமாத்துறையில் இருந்தது. இவனின் குறும்படங்களை யூடியூப்பில் பார்த்த பிரபல இயக்குனர் விரும்பமுடன் இவனை உதவியாளனாக சேர்த்துக் கொண்டார்.
அப்படி ஆரம்பித்த கலை வாழ்க்கை, மூன்று வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நெடுந்தொடரை இயக்க கிடைத்த வாய்ப்பில் பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறியது. அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்பில் இவனின் பொருளாதார நிலை உயரத்தொடங்கியது.
இருக்கும் இடமும் பழகும் விதமும் புதிதாக வந்த பணத்தினால் மாறலாம். ஆனால் பெற்றவர்களை மாற்ற முடியுமா? வார இறுதியில் வீட்டில் நடக்கும் பார்ட்டி,நுனி நாக்கு ஆங்கிலம், மேல்தட்டுவர்க்கங்களின் அலட்டல் இப்படி இவர்களின் ஆடம்பர வாழ்க்கையில் பொருந்தி போக முடியாது திணறிய பெரியவர்கள், முன்பு வசித்த வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
அதன்பின் இளையவர்கள் அவர்களின் வாழ்க்கையை ஆடம்பரமாய் அனுபவித்து வாழ, முதியவர்கள் அமைதியாய் அவர்களின் வாழ்நாளை கழிக்க, இரண்டும் கெட்டானான இவளோ தனிமையில் வாழ தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாள்.இவளின் முயற்சி திருவினையாகுமா?
யாருக்காக கஷ்டப்படுகிறோமோ அது அவர்களுக்கு கடைசி வரை புரியாமலேயே போய்விடுவதை விட பெரிய சாபம் வேறொன்றுமில்லை..இங்கேயும் அப்படிதான் இவளின் பெற்றோர்கள் இவளுக்காகதான் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார்கள்.ஆனால்... அது இவளுக்கு புரியவுமில்லை, அது இவளின் தேவையுமில்லை.
நகரத்திற்கு ஒதுக்குபுறமாக இருந்த அந்த சிறிய வீட்டில் கிடைத்த மகிழ்ச்சி, ஆடம்பரமான பன்மாடிகுடிலில் இவளுக்கு கிடைக்கவில்லை. மன நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம்... இருக்கும் இடம் அல்ல, உடன் இருப்பவர்கள்தான் என்பது இந்த வளரும் பயிருக்கு புரிந்த அளவிற்கு வளர்ந்த மரங்களுக்கு புரிந்திருக்கவில்லை.
எதிர்காற்று முகத்தில் அறைய, இழுத்து முடிந்த இரட்டை பின்னலில் இருந்து அடங்க மறுத்து வெளிநடப்பு செய்த ஒன்றிரண்டு குழல் முகத்தில் நர்த்தனமாட தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் சவாரி செய்தபோது கிடைத்த ஆனந்தம், குளிரூட்டப்பட்ட பேருந்தில் சொகுசு இருக்கையில் பயணிக்கும்போது இவளுக்கு கிடைக்கவில்லை.
அன்னை தந்தை அவரவர் பணியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் பிறந்ததிலிருந்து தாத்தா பாட்டியின் அரவணைப்பில் இருந்தவளுக்கு இந்த தனிமையை தாங்கிக் கொள்ள பக்குவம் இல்லை.பொழுதுபோக்கிற்கு இவள் வசிக்கும் இடத்தில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும் அதில் எல்லாம் இவளுக்கு நாட்டம் இருக்க வேண்டுமே.... மனிதர்களுடன் விளையாடி, உறவாடி வளர்ந்தவளுக்கு இயந்திரங்களுடன் விளையாட விருப்பமில்லை.
குறைந்த வசதியாக இருந்தாலும் கூடி பேச உறவுகளை எதிர்பார்பவளை சொர்க்கத்தில் தனியாக கொண்டுவிட்டால்.... அது அவளுக்கு நரகம் தானே?
அத்தி பழம் வெளியே பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அதன் மனமும் அலாதி. ஆனால் அதன் உள்ளே... புழுக்கள் நிறைத்திருக்கும். அதன் சுவை பிடித்தவர்கள் புழுக்களை ஒதுக்கிவிட்டு பழங்களை புசிப்பர்.பிடிக்காதவர்கள்... அதை தூக்கி எறிவர். பிடித்தம் என்பது பொருளை கொண்டல்ல, மனதை கொண்டே வருவது. பிடித்தமில்லாது போனால் பொக்கிஷமும் ஒரு பொருட்டல்ல.
சிலசமயம் வெட்டி ஒட்டுபோட்டு வளர்க்கப்படும் மரங்கள் துளிர்த்து விடுகின்றன. ஆனால் சில செடிகள்... சூழ்நிலைக்கேற்ப வளர.. வாழ முடியாது பட்டுப்போகின்றன. இவள் இதில் எந்த வகை?
கொடிது... கொடிது இளமையில் வறுமை. .அதனினும் கொடிது... எந்த வயதிலும் தனிமை!