கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

புவனாவின் கவிதைத் தூறல்கள்...

Puvana Chandrasekaran

Moderator
Staff member
அம்மாவின் கதை

அம்மா என்பவள் கதையல்ல!
காவியம் தான் என்றும்!
உலகத்தின் உன்னதக் கவிதை!

குழந்தைக்காகவே வாழ்க்கையில்
சாகசம் புரியும் வீராங்கனை!
அன்பெனும் மாயக்கோலால்
அணைத்திடும் மந்திரவாதி!

அன்பையே மொழியாக்கிப்
பார்வையில் பாசத்தைக் காட்டி
உணவோடு சேர்த்து நித்தம்
துணிவையும் பண்பையும்
ஊட்டி வளர்ப்பவள் அன்னை!

பசி தீர்க்கும் அன்னபூரணி!
குழந்தையின் முதல் ஆசான்!
இல்லத்தின் பாதுகாப்புக் கவசம்!
நோய் தீர்க்கும் முதல் மருத்துவர்!
தாலாட்டும் இசையரசி!

குழந்தைகளின் தாளங்களுக்குத்
தப்பாமல் ஆடும் நாட்டியக்காரி!
தந்தைக்கும் செல்வங்களுக்கும்
நடுவில் செல்லும் தூதுவன்!
உறவுகளை இணைக்கும் பாலம்!

உலகின் முதல் பல்கலை வல்லுநர்!
பேரழிவு நிவாரண வித்தகர்!
அப்பாவின் வலது கைச் செயலர்!
வீட்டுப் பொருளாதார நிபுணர்!
சில்லறை சேமிப்பின் வங்கி!

குழந்தைகளின் ஆலோசகர்!
நிழல் தரும் பிரம்மாண்ட ஆலமரம்!
நீதிகள் வழங்கும் போதகர்!
ஆறுதலாய் வருடும் தென்றல்!
அன்புமலர் சொரியும் நந்தவனம்!

அம்மாவின் பெருமைகள் பேச
ஆயிரம் கவிதைகள் பாடினாலும்
அடங்குவதில்லை மனதில் ஆசை!


புவனா,
07/09/2020

(பல்கலை வல்லுநர்- multi task expert
பேரழிவு நிவாரணம்- disaster management)
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
காதலின் பன்முகங்கள்

என் எண்ணங்களில்
உன் வண்ணங்களை
நிறைத்துக் குழைத்துத்
திரையில் வடித்தேன்!
ஓவியம் என்றார்கள்!

சொற்களைத் தேடி எடுத்து
உணர்வுச் சாயம் பூசி
உன்னை அலங்கரித்தேன்!
கவிதை என்றார்கள்!

உன்னைத் தேடி அலைந்த
அனுபவங்களைத்
தொகுத்து வைத்தேன்!
கதை என்றார்கள்!

நீ தந்த வலிகளை
அடிகளாக விழுங்கி
உளியால் என்னைச்
செதுக்கிக் கொண்டேன்!
சிற்பம் என்றார்கள்!

ஸ்வரங்களை அள்ளி
இதயவீணையில் மீட்டிக்
காற்றில் பரப்பினேன்!
இசையென்று சொன்னார்கள்!

காதல் என்றழைக்கும்
ஒற்றைச் சொல் போதுமே
கலையின் பன்முகங்கள்
எதற்கு என்றால் என்னைப்
பித்தனென்று ஏசுகிறது
கருணையில்லா உலகம்!

புவனா
08/09/2020
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
இல்லறத் தேர் அசைகிறது

இல்லறச் சிறுதேரை
வடமிழுக்கும் சிறு எலிகள்
ஓய்வதில்லை! நிற்பதில்லை!

எறும்பு நிகர் வருமானம்
யானையாக்கி மகிழும்
இல்லத்தின் தலைவி!

ஓயாமல் உழைத்த பின்னும்
இல்லம் வந்து சேர்ந்தவுடன்
தலைவியின் முகம் பார்த்து
மழலையின் குரல் கேட்டு
களைப்பை மறக்கும்
இல்லத்தின் தலைவன்!

பாதி வயிறைச் சோற்றாலும்
மீதி வயிற்றை அன்பாலும்
ஊட்டி நிறைக்கும் அன்னை!

குழந்தைகளின் குதியாட்டத்தில்
நாளைய கவலைகளை
மறந்து போகும் தந்தை!

எதிர்பாரா விருந்தும்
எட்டிப் பார்க்கும் வியாதியும்
புத்தாடை கனவை நிரந்தரமாக
ஒதுக்கி வைத்துச் சிரிக்கும்!

நாளை விடியுமென்று
நம்பிக்கை மனதில் ஏந்தி
தேரை அசைத்து நகர்த்தும்
விடாமுயற்சி வேதாளங்கள்
ஏழைகளின் இல்லங்களில்!

புவனா,
09/09/2020
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
மனதிற்கொரு மாயத் தாழ்ப்பாள்


எட்டாக்கனி கிட்டாவிடில்
எட்டிக்கனி என நினைத்து
கிட்டும் கனி போதுமென்று
விட்டுவிடும் மனது வேண்டும்!

சுட்டு விடும் நெருப்பு என்று
பட்டுவிடும் கரமிழுத்து
தட்டுக்கெட்டு ஓடும் உள்ளம்
கட்டிவைக்க உறுதி வேண்டும்!

எட்டுத்திக்கும் செற்று ஓடி
வெட்டிக் குற்றம் புரிகையிலே
கெட்டு விடும் சிந்தனையை
சுட்டெரிக்கும் உரமும் வேண்டும்!

கட்டி வைத்த உணர்வுகளை
கட்டவிழ்க்கும் வேளையிலே
மொட்டுப் போல் மலர் அன்பில்
கட்டுப்பட்டு நிற்க வேண்டும்!

மட்டற்ற இன்பம் கிட்டும் கணம்
கட்டவிழ்த்துக் களிக்கையிலே
நட்டநடு நிசியில் கூட நெறி தவறா
பட்டுப் போல் மனது வேண்டும்!

சுட்டும் விழிக் காதல் ஏற்று
முட்டும் பகை அறுத்தெறிந்து
சிட்டுக்குருவி போல் உழைத்து
திட்டமிட்டு வாழ்ந்திடுவோம்!


புவனா

10/09/2020
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
வாழ்க்கை வாழ்வதற்கே

எழுதப் படாத சொற்கள் பல
குதித்து ஓடி வருகின்றன!
குழைக்கப் படாத வண்ணங்கள்
கூவி அழைக்கின்றன!
பறித்து முகராத மலர்கள் பல
கை தட்டி அழைக்கின்றன!
அணைத்து அன்பு காட்டாத பல
குழந்தைகள் குமுறுகின்றன!
வாசிக்கப் படாத நூல்கள் பல
கைபடக் காத்திருக்கின்றன!
ரசிக்காமல் விட்ட திரைப்படங்கள்
ரசிப்பிற்கு ஏங்குகின்றன!
விமர்சிக்கப் படாத கவிதைகள்
வாசிப்பை வேண்டுகின்றன!
ருசிக்காத உணவு கண்முன்னே
ருசிக்கத் தூண்டுகின்றது!
நடக்காத பாதையொன்று நமைக்
கால் பதிக்க வேண்டுகிறது!
பாடாத இன்னிசைப் பாடலொன்று
பாடும் நாவைத் தேடுகிறது!
எத்தனையோ கோடி இன்பங்கள்
நமக்காக இங்கு காத்திருக்க
இல்லாத இன்பங்கள் தேடி ஓடி
ஏங்கியே நின்றிடாமல்
வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்!
வாழ்க்கை வாழ்வதற்கே!


புவனா
11/09/2020
 
Top