Jeyakumar S
Member
அத்தியாயம் 18
விடுமுறை தீர்ந்தது. அவர் திருச்சிக்குப் புறப்பட்டார். நானும் அவருடன் மதுரை வரை பயணித்தேன். அவர், எனக்கு மட்டுமே என்று, நிச்சயம் ஆன பின்பு, பயம் என்னை விட்டுப் பறந்து போனது. பத்து நாட்களாக அவர்கள் வீட்டில் தங்கியிருந்த பொழுது, எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அனைத்தையும் அருகிருந்த அவரோடு அசைப்போட்டுப் பயணித்தது அருமையான நினைவுகளே.
மதுரை வந்த நான், மறுநாள் என் பெற்றோரைப் பார்த்து, எங்கள் திருமணத்திற்குச் சம்மதம் பெற்றுவர ஊருக்குச் சென்றேன்.
நான் தம்பியிடம், விஜய் வீட்டிற்குச் சென்றதையும், அவர்கள் வீட்டில் நடந்தவைகளையும், ஸ்கூட்டரில் சென்று பல இடங்களை சுற்றி பார்த்ததையும், நிச்சயதார்த்தம் நடந்த விவரத்தையும் கூறி மோதிரத்தை அவனிடம் காட்டிக் கொண்டிருந்தேன். அவனுக்கோ அப்பாவைக் குறித்தப் பயம் அகலவில்லை.
என் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியிருந்தது. பி.ஹெச்டி முடித்ததும், திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், நல்ல வரனாகத் தேடிக் கொண்டிருந்தார்கள், என் பெற்றோர்கள்.
ஒரு நாள், என் பெற்றோர் என்னிடம், எங்கள் ஜாதியைச் சேர்ந்த, ஐபிஎஸ் ஆஃபிசர் வரன் குறித்த விவரங்களைத் தெரிவித்தனர். நல்ல வரன், வசதியான இடம், காவல்துறையில் உயர்ந்த பதவி , திருமணத்திற்குப்பின், அவர் பணிபுரியும் ஊரிலேயே, எனக்கு கல்லூரி உதவி பேராசிரியைப் பதவி பெற்றுத் தருவது, நல்ல குடும்பம், என அவரைக் குறித்த எத்தனையோ நல்ல விஷயங்களைக் கூறி, நல்ல வரன் என்று, எனக்கு எடுத்துச் சொன்ன போதிலும், நான் அந்த வரனுக்குச் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டேன்.
எனக்கு யாரையாவது பிடித்திருக்கிறதா? நான் யாரையாவது காதலிக்கிறேனா போன்ற விவரங்களை, என் பெற்றோர் கேட்டனர். காதலை எதிர்ப்பவர் என் அப்பா என்பதைத் தெரிந்திருந்தும், எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பினை நான் தவற விடவில்லை.
நான் விஜயைக் காதலிக்கும் விஷயத்தையும், கல்யாணம் செய்து கொள்ளுவதென்றால், அவரைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன், என்றும் திட்டவட்டமாய் கூறினேன்.
நான் சொன்னவைகளைக் கேட்டதும் அம்மா, “அடி சண்டாளி! இதுக்காடி உன்னைக் கஷ்டப்பட்டுப் படிக்க வச்சோம்”, என்று திட்டியதோடு என்னை அடிக்கவும் ஆரம்பித்து விட்டார். தம்பிதான் இடையில் புகுந்து தடுத்தான். அம்மாவிடமும் அப்பாவிடமும், வயதுக்கு வந்த என்னைக் கை நீட்டி அடிப்பதுச் சரியில்லை, என்று கூறி எனக்கு ஆதரவாகப் பேசினான். அதற்கு அவனுக்கும் திட்டு விழுந்தது. நான் நிதானத்தை இழந்து விடவில்லை.
அம்மா, அப்பா சம்மதம் இல்லாமல் அவரும் என்னைத் திருமணம் செய்து கொள்ளமாட்டார் என்றதும், ”நீ காதலிக்கிற பயலக் கட்டிக்க, நாங்க ஒருநாளும் சம்மதிக்க மாட்டோம். எங்க உயிரே போனாலும், இதுக்கு நாங்க சம்மதிப்போம்னு மட்டும் நினைக்காத... அதையும் மீறி, அவன் கூட ஓடிப் போனன்னா, அடுத்த நிமிஷமே உன்னைப் பெத்தப் பாவத்துக்காகக் தூக்கில தொங்கிருவோம்... அத மட்டும் ஞாபகம் வைச்சிக்கோ”, என்று கோபத்திலே கூச்சலிட்டார், அம்மா.
அவரைத் திருமணம் செய்ய அம்மாவும் அப்பாவும் சம்மதிக்கவில்லையென்றால், நானும் திருமணம் செய்யாமல், கன்னியாகவே வாழ்ந்துவிடுவேன் என்றும் திட்டவட்டமாய் கூறினேன்.
என்னுடைய வார்த்தைகளைக் கேட்டதும் அப்பாவுக்குக் கோபம் தலைக்கு ஏறியது.
அம்மாவிடம், “உன் மக முதல்ல... கன்னி கழியாமத்தான் இருக்காளான்னு கேளும்மா”, என்ற எரிச்சலுடன் கூறிய அப்பாவின் வார்த்தைகள், என் நெஞ்சை ஈட்டிக் கொண்டு குத்தியது போன்றிருந்தது. உயிரோடு என்னை நெருப்பில் தூக்கி வீசியதைப்போன்று உணர்ந்தேன். என் கற்பைச் சந்தேகப் பட்டதும், நான் பொறுமையை இழந்தேன்.
நானும் ஆத்திரத்தில், “நான் இன்னும் கன்னி கழியாமத்தான் இருக்கேன்மா... அப்பாக்கிட்ட சொல்லி வை... இதுநாள் வரை அவரு, என்னைத் தீண்டுனது கூடக் கிடையாது. யாருடைய கட்டுப்பாடும் இல்லாத இடத்துல, என்னை எவ்வளவு கண்ணியமா பாத்துக்கிட்டவரு அவரும்மா... ஒரு சினிமாவுக்குக் கூட என்னைக் கூப்பிட்டுட்டுப் போனது கிடையாது... தெரியுமா?... வேற ஒருத்தன் கிட்ட மட்டும் நான் மாட்டியிருந்தா... இந்நேரம், நீங்க சொன்ன, கற்ப இழந்து கெட்டழிஞ்சு போயிருப்பேன். அவரு ஒரு உண்மையான கிறிஸ்டியன், அதனால தப்புனேன்”, என்று அவரைப் பற்றிய நல்ல பண்புகளை எடுத்துக் கூறினேன்.
“ஓ! அவன் கிறிஸ்டியனா? நான் செத்தாலும், ஒரு கிறிஸ்டியனுக்கு உன்னைக் கட்டிக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டேன். எனக்கு என் ஜாதி, ஜனம், மதம் இதுதான் முக்கியம். எங்க விருப்பம் இல்லாம, அந்த வேற ஜாதிப்பயலைக் கட்டுணனா, அடுத்த நிமிஷமே தூக்குப் போட்டுச் செத்துருவன்”, என்று என்னை எச்சரித்தார், என் அப்பா.
“எப்பா! நானும் உங்க மக தான். எனக்கும் வீராப்பு உண்டு. நீங்க அவரைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கலன்னா, அந்த சாமி மேலச் சத்தியமா... சாமி மேல எதுக்கு, உங்க மேலச் சத்தியமா சொல்றேன், நான் கன்னியாவே காலத்தக் கழிச்சிருவேனே தவிர, அவருக்கூட ஒருநாளும் ஓடிப்போக மாட்டேன். அதை அவரும் ஏத்துக்க மாட்டாரு”, என்று வீர வசனங்களைப் பேசி வைத்தேன்.
“உன் அப்பன் நான் இப்ப சொல்றேன்... கேட்டுக்கோ... அந்த சாமிச் சத்தியமா... உயிரே போனாலும், அந்த வேற ஜாதிப் பயலுக்கு, உன்னைக் கட்டிக்குடுக்க மாட்டேன். எனக்கு, உன்னவிட என் ஜாதி ஜனம்தான் ஒசத்தி... ஒரு கிறிஸ்தவ பயலப் பாத்துட்டு வந்துருக்கா…”, என்று எரிச்சலில் கொக்கரித்தார், அப்பா.
“அப்பா!... உங்க சம்மதம் இல்லாம, அவரைக் கல்யாணம் பண்ணவும் மாட்டேன்... அவருக்கூட ஓடிப்போய்... வாழவும் மாட்டேன்... கல்யாணம் ஆகலையேன்னு, ஏக்கத்துல... நான் சாகவும் மாட்டேன். உயிரோட இருந்து, உங்க மக கற்பு உள்ளவ... மானமுள்ளவன்னு, ஊரெல்லாம் பேசும்படியா வாழ்ந்து காட்டுறேன்“, என்று சவால் விட்டுப் பேசினேன்.
“நீ எப்படினாலும் வாழ்ந்துட்டுப் போ. எங்கன்னாலும் வாழ்ந்துக்கோ. எனக்கு மானம் மரியாத தான் முக்கியம். பொட்டப்புள்ளய வளத்து, வேறஜாதிப் பயலுக்குக் கட்டிக்குடுத்துட்டேன்ன, கெட்டப் பேரு மட்டும் எனக்கு வந்துரக்கூடாது... அதுக்கப் பிறகு நான் ஊர் தலைவனா இருந்து எதுக்கு?... நான் உயிர் வாழ்ந்து தான் எதுக்கு... “, என்று வீர முழக்கமிட்டார், அப்பா.
“நல்லது கெட்டதுக்கு, உங்க ஜாதிஜனம் தான் வந்து நிக்க போகுது... யாராவது சுகக்கேடு வந்து ஆஸ்பத்திரியில படுத்தா, உங்க மானமும் மரியாதையும் தான் காப்பாத்தப் போகுது... குடிக்கக் கஞ்சி தண்ணியல்லன்னா, உங்க மதம் தான் வந்து பசிக்குச் சோறு போடும்... நீங்களும் உங்க ஜாதியும்... ஜனமும்... மானமும்... மரியாதையும்… உங்களுக்குன்னு ஒரு கஷ்டம் வந்தா... நானும் தம்பியும்தான் வந்து நிக்கணும்...”, என்று உண்மை நிலையை எடுத்துரைத்தேன்.
“நீ என்ன வேணும்னாலும் சொல்லு, நான் உயிரோட இருக்கதுவர, இந்த கல்யாணம் நடக்காது... நடக்கவும் விடமாட்டன்.... எத்தனை காதலைக் கலைச்சிருப்பேன்... எத்தனை கல்யாணத்த நிறுத்தியிருப்பேன்... இதுல என் வீட்டுக் கல்யாணத்த நிறுத்தலன்னா, மீசை வச்சிட்டுத் திரியிறதுல என்ன ப்ரயோஜனம்”, என்று வீராப்புப் பேசினார்.
“நீங்க உயிரோட இருக்கணும்... மீசை வச்சிட்டு வீராப்பா திரியணும்... நான் கல்யாணம் பண்ணாம... கன்னி கழியாம வாழுறத, நெனச்சி நெனச்சி நித்தமும் அழணும்”, என்று சாபம் நிறைந்த வார்த்தைகள் என் வாயிலிருந்து விழுந்தன.
வீட்டில் சமாதனம் இல்லாமல் நாட்களைக் கழிக்க, என்னால் முடியவில்லை. பல்கலைக்கழகத்தில் பணியுள்ளது என்று கூறி, மதுரை திரும்பி விட்டேன்.
என்னுடைய முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடந்தது. அப்பா அம்மா தம்பியும் வந்திருந்தனர். விஜயும் வந்திருந்தார். என் பெற்றோரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அப்பா அவரை முகம் கொடுத்துப் பார்க்கவில்லை. என்றாலும், விஜய் அவர்களை விழாவின் போது நன்றாகக் கவனித்துக் கொண்டார்.
தம்பிக்கு அவரைப் பார்த்ததும் பிடித்துப் போயிற்று. ‘மாமா... மாமா’, என்று அழைத்துக் கொண்டு, அவர் பின்னாடியே சுற்றியதைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு அவர் ஒரு கேமரா வாங்கி வந்து பரிசளித்தார். முதல் முறையாக அவருடன் ஊருக்குச் சென்றிருந்த பொழுது, இயற்கை காட்சிகளைப் படம் பிடித்துப் பாதுகாக்க ஒரு கேமரா வேண்டும் என்று, அன்று கேட்டதை நினைவில் கொண்டு, அதை வாங்கி வந்திருந்தார், என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த கேமராவில் நான் எடுத்த முதல் புகைப்படம் அவருடையதுதான். அப்பா அம்மா தம்பி மற்றும் அன்றைய பட்டமளிப்பு நிகழ்வுகள் அனைத்தையும் படம் பிடித்தார்.
தம்பி, என்னையும் அவரையும் சேர்ந்தாற் போல் நிற்க வைத்துப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். ஒருவேளை, அவர் என்னை ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய சம்மதித்து விட்டால், அந்த திருமணத்தை நிறுத்துவதற்கு, இந்த புகைப்படங்கள் உதவியாக இருக்குமே, என்ற நோக்கத்தில்தான் அவன் செயல்பட்டான், என்பது எங்களுக்குப் புரிந்திருந்தது.
விழா முடிந்து, பிரியும் முன்பு என் முன்னிலையில், தன் தாய் மரணத்தருவாயில் இருப்பதாகவும், மரணத்திற்கு முன்பு, என் பெற்றோர் சம்மதித்தால், என்னை மணம் செய்து கொள்வதாக, என் அப்பாவிடமும், அம்மாவிடமும், மனம் உருக வேண்டினார். என் தந்தை அவர் கோரிக்கையை அப்பொழுதே மறுத்துவிட்டார். என் தந்தையின் மறுப்புரையைக் கேட்டப் பின்னும், மனந்தளராமல், என் பெற்றோரின் அனுமதி கிடைக்கும் வரை ஆண்டுகள் பல ஆனாலும், எனக்காகக் காலமெல்லாம் காத்திருப்பதாக, உறுதிப்பட கூறினார்.
ஆராய்ச்சி மாணவியாய் இருக்கையிலே, அவ்வப்போது வகுப்புகளை எடுத்துக் கொண்டிருந்த எனக்கு, பல்கலைக் கழகத்தின், எங்கள் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. மாதந்தோறும் சம்பளம் வாங்கியதும் பெற்றோருக்கு ஒரு பங்கை கொடுக்க வேண்டும், என்பது அவரின் அன்பான வேண்டுகோள். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, ஒவ்வொரு மாதமும் நான் ஊருக்குச் சென்று, அம்மா அப்பா, தம்பியைப் பார்த்துவிட்டு, பணம் கொடுத்து வருவதை வாடிக்கையாக்கி கொண்டேன்.