கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்றும் என் நெஞ்சில்...முன்னோட்டம்

Jeyakumar S

Member
அத்தியாயம் 8


கடிதங்களில் எங்கள் காதல் வளர்ந்து கொண்டிருந்தது. மாதம் ஒன்று உருண்டோடி விட்டது. எங்கள் நினைவுகளில் ஃபேர்வல் பார்ட்டி அன்று நடைபெற்ற, நிகழ்வுகள் நீங்கா இடம் பிடித்து விட்டது.

அவருடைய ஒரு கடிதம் நல்லதொரு செய்தியைச் சுமந்து வந்தது. அவருக்கு வங்கியில் பணி கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சித் தரும் செய்தி அது. எனக்குள் ஆனந்தம் தலை விரித்து ஆடியது. அவருக்கு வேலைக் கிடைத்துவிட்டால், ‘எங்கள் ஊரிலுள்ள எங்கள் குல தெய்வ கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்வேன்’, என்று வேண்டுதல் செய்திருந்தேன். அதன்படி குளித்துப் பயபக்தியுடன், தம்பியை அழைத்துக் கொண்டு, குல கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து திரும்பினேன்.

முதுகலைப்படிப்பை முடித்துவிட்டு, தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த நாட்களில், தம்பியிடம் மட்டும் விஜயைப் பற்றிக் கோடு ஒன்றைப் போட்டு வைத்திருந்தேன். அவனும் பள்ளி இறுதி தேர்வு முடிவிற்காகக் காத்திருந்த வேளை. அவனுக்கு என் மேல் அன்பு அதிகம். சிறியவன் என்றாலும், எனக்காக எதையும் செய்வான்.

எனக்கும் தம்பிக்கும் ஐந்து ஆண்டுகள் இடைவெளி. அவன் பிறந்த நாளிலிருந்து என் கைககளில் தவழ்ந்தவன். அவனுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும், நான் கூடவே இருந்தவள். அழுகின்ற பொழுது, அள்ளி எடுத்து, விளையாட்டுக் காட்டுவதும், நடக்க ஆரம்பித்த போதுக் கரம் பிடித்து நடத்தியதும், குளிப்பிப்பது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது, பாடம் சொல்லிக் கொடுத்தது எல்லாம் நான்தானே. அவன் குறும்பு செய்துவிட்டால், அப்பா அம்மாவிடமிருந்து கிடைக்கும் அடிகளிலிருந்து, அவனைப் பாதுகாப்பதும், பள்ளியில் அவன் நடத்தும் குறும்புகளை, வீட்டிற்கு மறைப்பதும், நான்தானே. அம்மா அவனைப் பெற்றாள் என்றால், அவனை வளர்த்தது நான்தான். சிறுவனாய் இருக்கையில், என் பாவாடையைப் பிடித்துக் கொண்டே நடப்பான். கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்புப் படிக்க மதுரைக்குச் சென்ற அன்று, ‘போக வேண்டாம்’ என்று அவன் அழுது கதறியது, இன்றும் என் நினைவில் நிற்கிறது.

வீட்டிற்கு மூத்தவள் பெண் மகள் என்றால், இளையவர்களுக்கு அவள் அம்மாதானே!

விஜயின் புகைப்படத்தைத் தம்பியிடம் காட்டினேன். அவனுக்கும் விஜயைப் பிடித்துவிட்டது. ஆனால் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன் என்பதால், ஊர் தலைவரான அப்பா, எங்கள் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டாரே, என்ற எண்ணம் தம்பியிடம் இருந்தது.

அம்மா ஒரு வெகுளி, பாவம். அம்மா எங்களுக்கு எல்லாவற்றிலும் துணை நிற்பார். என்றாலும், அப்பா ஒரு முறை முறைத்தால், அத்துடன் அம்மாவின் கொட்டம் அடங்கிவிடும்.

அப்பாவோ, பல கலப்புத் திருமணங்களைக் கலைத்து விட்டவர். காதல் திருமணங்களுக்கு வேட்டு வைத்தவர். அதனால், அடி, வெட்டு , கொலையெல்லாம் எங்கள் ஊர்களில் நடந்திருக்கிறது. பல தற்கொலைகள் இவருடைய நடவடிக்கைகளினால் நடந்தேறியிருக்கிறது. ஜாதிச் சண்டைகள் பலவற்றிற்கும், முன்னிலை வகித்தவர். அவர் எப்படி அக்காவின் திருமணத்திற்கு அனுமதியளிப்பார், என்ற கவலை, தம்பியைத் தொற்றிக் கொண்டது.

“அக்கா... நான் சொலறதைத் தப்பா நினைச்சிக்காத... நீ அப்பாவுக்குத் தெரியாம, மாமாவ கல்யாணம் பண்ணிக்கோ... அப்பாவுக்குத் தெரிஞ்சா கல்யாணமும் நடக்காது... உன்னைக் கொன்னும் போட்டுருவாரு... அவருக்கு ஜாதிவிட்டு வேற ஜாதியில கல்யாணம் பண்ணுறது... மதம் மாறி கல்யாணம் பண்றதெல்லாம் பிடிக்காதுக்கா... அதனால அப்பாவுக்குத் தெரியாம அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்கேயாவது சந்தோஷமா இருக்கா...”, என்று மன வேதனையில் அழத் தொடங்கிவிட்டான்.

“தம்பி! நீ அழாத... விஜய நீ மாமான்னு சொன்னதே எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்குத் தெரியுமா... அப்பாவைப் பத்தி எனக்கும் தெரியும்பா... அம்மா அப்பா, சம்மதம் இல்லன்னா அவரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டாருப்பா”, என்று அவனை ஆறுதல் படுத்தினேன். நான் கூறியதை அவன் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை.

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டாருன்னா, எதுக்கு உன்னைக் காதலிச்சாரு...”, என்று கோபத்துடன் கேட்டான்.

சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளையல்லவா! அக்கா ஏமாற்றப்பட்டு விடுவாளோ, என்ற ஆதங்கத்தில், வெளிவந்தது அவன் வார்த்தைகள்.

“தம்பி! நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட... அவரு என்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுத்திருக்காரு... அம்மா அப்பா சம்மதிக்கலன்னா அவரு என்னையும் கல்யாணம் பண்ணமாட்டாரு... வேற யாரையும் கல்யாணம் பண்ணவுமாட்டாரு... கல்யாணம் பண்ணாமப் பிரம்மச்சரியா இருந்துருவாரு...”, என்று அவனுக்கு விளக்கிக் கூறினேன்.

“அப்படிப்பட்ட நல்லவரை, நீ எதுக்கு லவ் பண்ணுன... உனக்குதான் அப்பாவப் பத்தி தெரியுமே!...”, என ஆதங்கப்பட்டான், தம்பி.

அம்மா வரும் காலடி ஓசைக் கேட்டுப் பேச்சை மாற்றினோம்.

தம்பி சொன்னவைகள் அனைத்தும் உண்மையே. இவை அனைத்தும் எனக்கும் தெரியும். என்றாலும், விஜய் மீது காதல் வந்த காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குற்ற உணர்வு என்னை ஆட்கொண்டது. என்றாலும், காதலிக்க ஆரம்பித்தாகி விட்டது. இதற்கு ஒரு கரை கண்டுவிடுவது என்று முடிவெடுத்திருந்தேன்.

இதைத்தான் காதலுக்கு கண் இல்லை என்பார்களோ!

விஜய், திருச்சியில் வங்கி பணியில் இணைந்து, மாதம் ஒன்றைக் கடந்துவிட்டது. எங்களுடைய தேர்வு முடிவுகளும் வெளிவந்தன. நாங்கள் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தோம். மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள மதுரைக்கு அவர் வந்தார். நானும் அவரைச் சந்திக்க, அந்நாளில் அங்கிருந்தேன். நண்பர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களையும், பேராசியர்களையும் சந்தித்துவிட்டு, நண்பர்களுடன் அங்கிருந்து, நகரை நோக்கி புறப்பட்டோம். அவர் வங்கி வேலையில் இணைந்து விட்டதை அறிந்து அனைவருக்கும் மகிழ்ச்சி.

அன்று நண்பர்களுடன், ஹோட்டலில் மதிய உணவு உண்டோம். அவருக்கு வங்கி வேலை கிடைத்ததற்கான விருந்து, அது. அனைவரின் வற்புறுத்ததலின் பேரில் சினிமாவிற்குச் சென்றோம். எங்கள் காதலை அறிந்த நண்பர்கள், எனக்கருகில் அவருக்கு இருக்கைக் கொடுத்திருந்தனர்.

அன்று ஒருநாள், என் தோழி கமலாவுடன் சினிமாவிற்குச் சென்றபோழுது, கற்பனையில் நான் கண்ட கனவுகளை, இன்று நிறைவேற்றிக் கொண்டேன். அவரும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. நண்பர்களும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை. மாலையில், காஃபிக்குப் பின்னர், நண்பர்கள் அனைவரும் விடைப்பெற்றுச் சென்றனர். நானும் அவரும் காலாற நடத்தோம். எதை எதையோ பேசினோம். இரவு சிற்றுண்டியை முடித்தப் பின்னர் என்னை ஊருக்குப் பேருந்தில் அனுப்பிய பின், அவரும் திருச்சிக்குத் திரும்பினார்.

நானும் பல்கலைக்கழகத்தில் என்னுடைய துறையில் எம்.ஃபில் பட்டப்படிப்பில், இணைந்து படிப்பைத் தொடர்ந்தேன். விஜய் தனக்கு நேரம் கிடைக்கும் பொழுது, மாதத்தில் ஒருமுறையாவது மதுரை வந்து, என்னைப் பார்த்து அளவளாவிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மதுரைக்கும் திருச்சிக்கும் மூன்று மணி நேர பயணம். காலையில் புறப்பட்டு வந்தால் மாலையில் திரும்பி விடுவார்.

இதற்கிடையில், என்னைப் பெண் கேட்டுப் பல வரன்கள் வீட்டை அணுகினர். நான் என்னுடைய முனைவர் பட்டப்படிப்பை முடித்தப் பின்னரே திருமணம் செய்து கொள்வேன், என்று பிடிவாதமாக இருந்ததனால், என் திருமணப்பேச்சுத் தள்ளி போய் கொண்டிருந்தது.



 

Jeyakumar S

Member
அத்தியாயம் 9



ஓராண்டு காலம் ஓடியது எப்படி என்று தெரியவில்லை. நானும் எம்.ஃபில் முடித்து, பி.ஹெச்.டி என்னும் ஆராய்ச்சி மாணவியாக எங்கள் துறையில் இணைந்தேன். அதற்குரிய ஆராய்ச்சியில், மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். மாதங்கள் பல கழிந்தன.

அன்று வெள்ளிக்கிழமை.

காலையில் விஜய் என்னைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, அவர் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அம்மா என்னைப் பார்க்க விரும்புவதாகவும், கூறினார். அவர் திருச்சியிலிருந்து புறப்பட்டு மதுரை வந்து விடுவதாகவும், பகல் பன்னிரண்டு மணியளவில் மதுரையில் என்னை அழைத்துக்கொண்டு, அம்மாவைப் பார்க்கச் செல்வதாகவும் கூறினார். அத்துடன் இரண்டு நாட்கள், அவர்கள் வீட்டில் தங்குவதற்கான துணிகளையும் எடுத்துக் கொள்ளும்படி கூறினார்.

அவர்கள் அம்மாவுக்கு இருதய படபடப்பு நோய் (Palpitation) உண்டு என்பதுவும், அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடுத் திரும்புவதும், சகஜம் என்றும் சொல்லியிருக்கிறார். அதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன்.

அவர்கள் வீட்டிற்குச் செல்ல ஒரு தயக்கம். என்றாலும், திருமணமான பின் அங்குதானே செல்லவேண்டும். அத்துடன், அவர்கள் குடும்ப சூழல், பழகும் முறை, பழக்க வழக்கங்கள், அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு, இது ஒரு சந்தர்ப்பம் என்பதை உணர்ந்தேன். இரண்டு நாட்கள் தங்குவதற்கான துணிகளை எடுத்துக் கொண்டு, துறை சார்ந்த பேராசிரியை ஒருவரிடமும், விடுதி அலுவலகத்திலும், விவரங்களைக் கூறிவிட்டு, அவருடன் நாகர்கோவில் செல்ல, மதுரை பேருந்து நிலையம் சென்றடைந்தேன்.

சரியான நேரத்தில் திருச்சியிலிருந்து, அவரும் வந்து சேர்ந்தார். இருவரும் அருகிலிருந்த உணவகத்தில் மதிய உணவை முடித்துவிட்டு, நாகர்கோவில் செல்லும் பேருந்தில் கிளம்பினோம்.

அவரருகில் அமர்ந்து, நீண்ட தூரப் பேருந்து பயணம்.

கல்லூரி நாட்கள் நினைவில் வந்தது. நான்காவது செமஸ்டரில், வங்கி பயிற்சிக்குச் செல்லும் நாட்களில், பல்கலைக் கழக பேருந்தில், அருகிருந்து பயணித்தது, நினைவில் வந்தது. அந்த இன்பகரமான நாட்களுக்குப் பின்னர் அவருடன் அவருடைய சொந்த ஊருக்கு, நெடுந்தூரப் பயணம். புதுமையாக இருந்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பயணத்தின் போது, அவர் குடும்பத்தினரைக் குறித்து அவரிடம், கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவருக்கு ஒரு அண்ணன், பெயர் ஜேம்ஸ். ஒரு தம்பி, பெயர் அருண். ஒரு தங்கை, பெயர் கயல்விழி. அண்ணனுக்கு ஓராண்டிற்கு முன்னரே திருமணம் நடந்து விட்டது. அண்ணியின் பெயர் ரேச்சல். உறவுக்காரப் பெண் என்றாலும், காதல் திருமணம். அண்ணன் கூட்டுறவு வங்கி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அண்ணி வீட்டைக் கவனித்துக் கொண்டார். நன்றாகச் சமைப்பார். அனைவரும் ஒரே வீட்டில்தான் குடியிருந்தனர். அம்மாவிடம்தான் அனைத்துப் பொறுப்புகளும் இருந்தது. அப்பா அரசுப்பணியிலிருந்து, ஓய்வுப் பெற்றவர். ஓய்வூதியம் வருகிறது.

அவர்களுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நன்செய் நிலத்தில், நெல் விவசாயம் செய்து வந்தார். அதனால் அவர்கள் வீட்டில் வசதிகளுக்குக் குறைவில்லை. அந்த நிலைக்குக் குடும்பத்தை உயர்த்துவதற்கு, அவருடைய அம்மா மிகுந்த சிரமப்பட்டுள்ளார். அம்மாவின் வாக்கு, அனைவருக்கும் வேதவாக்கு. அன்புடன் அனைவரிடமும் பழகுவார். அவருடைய அண்ணியைத் தன்னுடைய மகளைப் போலவே நடத்துவார். அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையில் சண்டை வந்தாலும், அம்மா அண்ணியின் பக்கம்தான் நிற்பார். அதனால் குடும்பத்திற்குள் பிரச்சனை எதுவும் இல்லை. தம்பி எம்.ஏ ஆங்கிலப் பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறான். அண்ணனும் தம்பியும் அவருக்கு நண்பர்களைப் போலத்தான். விஜய் தன்னுடன் எந்த ரகசியத்தையும் வைத்துக்கொள்வதில்லை. எல்லாவற்றையும் இருவரிடமும் கூறிவிடுவார்.

(ஃபேர்வல் பார்ட்டி முடிந்த அன்று, எங்கள் இருவருக்குள்ளும் நடந்த விஷயத்தையும் சொல்லியிருப்பாரோ என்று நீங்கள் நினைப்பது, எனக்குத் தெரிகிறது. அதை மட்டும் வடி கட்டி விட்டார். இந்த சந்தேகத்தை நானும் அவரிடம், கேட்டேன். அப்பதான் இந்த உண்மையை என்னிடம் சொன்னார் அதை உங்களிடம் சொல்லிவிட்டேன்)

தங்கை பி.ஈ முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். நன்றாகப் படிப்பாள்.

அவர்களுடன் எப்படி பழகவேண்டும் என்ற எனது கேள்விக்கு, என்னுடைய விருப்பம் என்று, என்னிடமே திருப்பி விட்டார்.

பேருந்து பயணத்தின் போது, இயற்கை அழகை ரசித்துக் கொண்டும், சிரித்தும், களித்தும், அவர் தோளில் சாய்ந்தும், அரட்டை அடித்தும் பயணித்தது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. பேருந்தில் பயணித்தவர்களில் சிலர் எங்களைப் பார்த்து முறைத்தார்கள். சிலர் ரசித்தார்கள். நாங்கள் யாரையும் கண்டு கொள்ளவில்லை.

திருநெல்வேலி பேருந்து நிறுத்தத்தில் சிறிது நேரம் பேருந்து நின்றது. இருவரும் பேருந்திலிருந்து இறங்கி, அருகிலிருந்த கடையில் காஃபிக் குடித்தோம். திருநெல்வேலி அல்வா வாங்கி தந்தார். அதன் சுவையே அலாதிதான். வீட்டிற்கும் அல்வா வாங்கிக் கொண்டார்.

நெல்லை மாவட்டம் முடிந்து, கன்னியாகுமரி மாவட்டம் ஆரம்பமானது. அந்தி சாய்கின்ற நேரம். கறும்பச்சை நிறத்தில், பூமித் தாய்க்குச் சேலை அணிவித்ததைப் போன்று, எங்கு நோக்கினும், பச்சை நிறத்தில் செழித்து வளர்ந்திருந்த நெல் பயிர்கள், மாலைக் காற்றில் தலையாட்டிக் கொண்டிருந்த அழகு, காணக் கண் கொள்ளாக் காட்சி. நெல்பயரின் மீதுத் தவழ்ந்து வந்த, மாசற்றக் காற்றுச் சுமந்து வந்த மண்மணம், நாஞ்சில் நாட்டின் பெருமையைப் பறைசாற்றிற்று. வயல்களின் முடிவில் நெடிதுயர்ந்த மலைகள், அரணாகக் காட்சி அளித்தன. மலைகளில் மரங்கள் நிறைந்திருந்ததால், மலைகளும் பசுமையாகத்தான் காட்சியளித்தன.

தோவாளையை நெருங்குகையில், பூவின் வாசம் மூக்கைத் துளைத்து, மனதை மகிழ்வித்தது. எங்கு நோக்கினும் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கி, பூமிக்கு அழகு சேர்த்தன. தோவாளை சானல் ஆற்றில், வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. குளிப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த படித்துறையில், ஆண்களும் பெண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் ஆற்றுக்குள் குதித்துக் கொண்டிருந்தனர். அத்தனையும் அழகு காட்சிகள். உண்மையிலே அவர்கள் மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை. மாலை மயங்கும் அந்தி சாய்ந்த நேரத்தில், நாஞ்சில் நாட்டின் தலைநகரான நாகர்கோவிலில், பேருந்து எங்களை இறக்கி விட்டது.

அழகு நிறைந்த அவர்கள் மண்ணில் கால் வைத்த பொழுது, மனதுக்கள் மகிழ்ச்சிப் பொங்கியது என்றாலும், ‘அவருடையக் குடும்பத்தினர் தன்னிடம் எப்படி நடந்து கொள்வார்களோ’, என்ற பயம் என்னையறியாமல், என் நெஞ்சுக்குள், தஞ்சம் புகுந்து கொண்டது.

 

Jeyakumar S

Member
அத்தியாயம் 10


பேருந்து நிலையத்தில் இறங்கி, ஆட்டோ நிறுத்தத்தை நோக்கி நடந்தோம்.

“அண்ணா! “, என்ற குரல் கேட்டு நின்றோம்.

“என்னடா! நீ இங்க நிக்குற... காலேஜுக்குப் போகலையா?” என்று அவர் கேட்டதிலிருந்து அவருடைய தம்பியாகத்தான் இருக்கும், என்று எண்ணினேன்.

“அம்மாவ ஆஸ்பத்திரியில அட்மிட் ஆக்கியிருக்கிறதுனால, இன்னைக்குக் காலேஜுக்கு ‘கட்’ அடிச்சிட்டேன். ‘இன்னைக்கு நீ வருவன்னு அம்மா சொன்னாங்க’, அதனால ஒருமணிக்கூரா... உனக்காகவும், அண்ணிக்காகவும் தான் காத்திருக்கேன்”, என்று சர்வ சாதாரணமாகச் சொன்னவன், என்னைப் பார்த்து, “அண்ணி! எப்படி இருக்கீங்க?”, என்று நலம் விசாரித்தான்.

‘அண்ணி’ என்றதும், அவரைத் திரும்பிப் பார்த்தேன்.

“என்னை ஏன் முறைக்குற... ‘அண்ணின்னு’ சொன்னானே அதுக்கா... “ , என்று கேட்டதும், “ஆமா” என்று தலையசைத்தேன்.

“அப்ப... அவனைக் கேளு”, என்று என்னை அவனிடம் மாட்டி விட்டுட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றார். நான் விளக்கம் கேட்க, அவர் தம்பியின் பக்கம் திரும்பினேன்.

“எங்க அண்ணனின், வருங்கால மனைவியை, நான் அண்ணின்னு கூப்பிடாம வேறெப்படி கூப்பிடுறது அண்ணி?.”, என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான், அருண்.

“இவங்கதான் எம். ஏ பண்ணிட்டிருக்கிற...”, என்று அவரைப் பார்த்துக் கேட்ட என்னை, இடைமறித்த அருண், “அண்ணி! இந்த ‘அவங்க இவங்க, வாங்க, போங்க’ இதெல்லாம் வேண்டாம். ‘வா, போ, நீ, நான்னு ஒருமையிலே கூப்பிடுங்க... அதுலத்தான் உறவின் ஆழமே இருக்கு.”, என்று உறவு முறைக்கு அழுத்தம் கொடுத்தது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“நல்ல பேசிறீங்க...”, என்று பாராட்டிய என்னை பார்த்து, “அண்ணி...”, என்று வார்த்தையிலே, அழுத்தி அழைத்தான். உடனே சுதாகரித்துக் கொண்ட நான்,

“சாரி... சாரி... பேசுறீங்க இலல... நல்ல பேசுற... போதுமா...” , என்று திருத்திக் கொண்டேன்.

உடனே அவன், “ இதை... இதை... இதைத்தான் எதிர்பார்த்தேன் அண்ணி”, என்று தலை தாழ்த்தி வணங்கினான்.

“சரி சரி... இங்கேயே பேசிக்கிட்டிருந்தா, வீட்டுல போய் பேசுறதுக்கு ஒண்ணும் இருக்காதுடா... போய் ஒரு ஆட்டோ பிடி”, என்றார், விஜய்.

“ஆட்டோ காச என்கிட்டத் தந்துட்டு ... அண்ணிய அழைச்சிட்டு ஸ்கூட்டர்ல போ”, என்று சிரித்து கொண்டே சொன்னான்.

“ஸ்கூட்டரா… நான் வரல... எனக்கு பயமா இருக்கு... இதுவரை நான் ஸ்கூட்டர்ல போனதில்லை... வேண்டாம்... தயவுசெய்து என்ன விட்டுருங்க... ஸ்கூட்டர் வேண்டாம்”, என்று பயத்தில் கெஞ்சினேன்.

“அண்ணி!... பயப்படாதீங்க... இதுவும் புது அனுபவம்தான். அண்ணி!... வண்டியில ஏறி அண்ணன் கீழ விழுந்துறாமா... கெட்டியா புடிச்சிட்டுப் போங்க”, என்று கிண்டலடித்தான் தம்பி.

“நீ கிண்டலடிக்காம... சாவிய தா..., வந்து இறங்கின உடனே பயங்காட்டி, அடுத்த பஸ்ஸுல அண்ணிய ஏத்தி விட்டுறாத”, என்று சிரிப்பினூடே சொன்னார்.

“ஐயோ நீங்க வேற... ஸ்கூட்டர் கீய எதுக்கு கேக்கிறீங்க... ஆட்டோ போதும்”, என்று கெஞ்சினேன்.

(பேருந்து நிலயத்தில் நடந்து கொண்டிருப்பது, அனைத்தும் ஏற்கனவே எழுதப்பட்ட நாடகம் என்பது, எனக்குத் தெரியாது.)

அண்ணனின் கையில் ஸ்கூட்டர் சாவியைக் கொடுத்தவன், எனக்குத் தைரியம் கொடுத்து, ஸ்கூட்டரில் ஏற்றிவிட்டான், அருண்.

ஸ்கூட்டர் நகர ஆரம்பித்ததும், உண்மையிலே கீழே விழுந்து விடுவேனோ என்ற பயம், என்னைத் தழுவி கொண்டது. வீழாதிருக்க, என்னை அறியாமலேயே, நான் அவரை இறுக பிடித்தேன். என் உடல் அவர் மீதுச் சாய்ந்ததும் அவர் உடல் கிளு கிளுப்பில் நெளிந்ததை உணர்ந்தேன்.

என் உடல் அவர் மீதுச் சாய்ந்ததும், “ஐயோ! எனக்கு இப்பப் பயமா இருக்கு”, என்று உடலை குலுக்கினார்.

“உங்களுக்குத்தான் ஸ்கூட்டர் ஓட்டி பழக்கம் உண்டே... பிறகு என்ன பயம்…”, என்று வெகுளியாய் கேட்டேன்.

“என்னை நீ... அழுத்துற அழுத்தத்தில வருகிற கிளு கிளுப்புல... நான் கீழ விழுந்திருவேனோன்னுதான்... பயமா இருக்கு”, என்று நக்கலடித்தார்.

“உங்க தம்பி சொன்னதைப் போல... நீங்க கீழ விழாம இருக்கத்தானே கெட்டியா புடிச்சிருக்கேன்”, என்று எனக்கும் கிண்டலடிக்கத் தெரியும் என்பதை, அவருக்குப் பதிலால் வெளிப்படுத்தினேன்.

“அப்படின்னா... இன்னும் கொஞ்சம் அழுத்தி பிடிச்சிக்கோ... கீழ விழாம இருப்பேன்”, என்று வேடிக்கையை வெளிப்படுத்தினார்.

“ஆசையப்பாரு...”, என்று தோளில் ஒரு கிள்ளு கொடுத்தேன். சிரித்துக் கொண்டே வண்டியை ஓட்டினார்.

ஸ்கூட்டரில் அவரோடு, புதிதாக ஒரு பெண் ஒட்டிக் கொண்டு பயணிப்பதை, அவருக்குத் தெரிந்த பலரும், நின்று திரும்பி பார்த்தனர். அவர்கள் பார்ப்பதை உணர்ந்த எனக்குக் கூச்சமாக இருந்தது.

வழியில் பார்த்தவர்கள் பலரும், அவரோடு பயணித்த, என்னைக் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், ‘யார்?’ என்று சைகையில் கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே வண்டியை ஓட்டினார்.

மதுரையில் படிக்கும் காலத்தில், அவரை அறியாத ஊரில், ‘எனக்குக் கெட்டப் பெயர் வந்துவிட கூடாது’, என்ற கவனத்தில் செயல்பட்டவர், தன் சொந்த ஊரில், தன் பெயர் காற்றில் பறப்பதைக் குறித்துக் கவலைப்படாமல், ஒரு பெண்ணை ஸ்கூட்டரில் அழைத்துச் செல்வது, அதுவும் முதுகில் சாய்ந்து ஒட்டிக்கொண்டு, கட்டிப் பிடித்த நிலையில் பயணிப்பதைப் பார்த்தால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்புக்கூட இல்லாமல், செல்வதை நினைத்து மனம் வேதனையுற்றது. என் உள்ளத்தின் உதறல்களை அவரிடமே கேட்டேன். அதற்கு, ”பிறகு சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.
 

Jeyakumar S

Member
அத்தியாயம் 11



வீட்டின் முன்னர் ஸ்கூட்டர் நின்றது. ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும், வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வந்தனர். அவர்கள் தோற்றத்திலிருந்து அவருடைய அப்பா, அண்ணி, தங்கை என்பதைப் புரிந்து கொண்டேன்.

“அண்ணி!, அண்ணனைக் கொஞ்சம் திரும்பி பாருங்க... விழி பிதுங்கி நிக்குறாரு” , என்று கூறியது, அவருடைய தங்கை, கயல்விழி என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நானும் திரும்பி பார்த்துவிட்டு, எதுவும் புரியாமல், புருவத்தைச் சுருக்கி, உதட்டைப் பிதுக்கி விழியாலே, ’என்னவென்று’, கேட்டேன்.

“ஸ்கூட்டர்ல அண்ணனைக் கட்டிப் பிடிச்சிட்டு வந்ததுல... அவருக்கு மூச்சு முட்டி விழி பிதுங்கி... நிக்கிறதைப் பாருங்க”, என்று கேலி செய்தாள். நானோ நாணத்தில் தலை குனிந்தேன்.

“வந்த அண்ணிய வெளிய நிறுத்தி கிண்டலடிச்சிட்டு இருக்க... வந்தவ அப்படியே திரும்பி போயிருவா... நீ போய் அண்ணியோட, பேக் எடுத்துட்டு உள்ள கொண்டு வை”, என்றார் அவருடைய அப்பா.

எனக்கு ஆச்சரியம். எல்லோரும் என்னை உறவுமுறையில் விளித்தது, எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

அவருடைய அண்ணி, ரேச்சலும் கிண்டலடிப்பதில் குறைந்தவர் இல்லை.

“மொத மொதலா வீட்டுக்கு வருகிற ரெண்டாவது மருமகளே! எனதருமை தங்கையே! உன் வலது காலை எடுத்து வச்சு உள்ள வாம்மா”, என்று என்னை வரவேற்றார்கள்.

சிறிது நேரம் பயண விவரங்களைக் குறித்துக் கேட்டறிந்தனர். இடையிடையே தங்கையின் கிண்டலும் அண்ணியின் கிண்டலும் கலந்தே இருந்தது. அவருடைய அப்பா என்னுடைய குடும்பம் குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அவருடைய அண்ணன், மருத்தவமனையில் அம்மாவுக்குத் துணையாய் இருப்பதையும், அப்பா மருத்துவமனைக்குச் சென்றுதான், அண்ணனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதையும், அவருடைய அண்ணி தெரிவித்தார்.

அதைக் கேட்டதும் அவர், என்னிடம், “சரி... நீ சீக்கிரம் குளிச்சு ரெடியாகு... நானும் குளிச்சிட்டு வர்றேன் அம்மாவப் பார்க்கப் போணும்…” என்று கூறி, தங்கையை அழைத்து, ”கயல்!, அண்ணிய உன் ரூமுக்கு அழைச்சிட்டுப் போய், அண்ணிக்குக் குளிக்க ஏற்பாடு செய்”, என்று சொன்னார்.

அவருடைய தங்கை என்னை,

“அண்ணி!... வாங்க அண்ணி” என்று அழைத்துச் சென்று, அவளறையில் என்னுடைய பொருட்களை வைக்க, வசதி செய்து கொடுத்தாள் . தங்கை, அவளுடைய அறையை அழகாக வைத்திருந்தாள்.

குளித்து உடைமாற்றி வந்த என்னை, அவர் வைத்தக் கண் மாற்றாமல் பார்த்தார்.

(ஏன் என்று புரிகிறதா? முதுகலைப் படிக்கையில், முதல் நாள் அவரைப் பார்க்க தோழியுடன், எங்கள் வகுப்பிற்குச் சென்றேனே, ஞாபகம் இருக்கா? எனக்குப் பிடிச்சச் சேலையை உடுத்திக் கொண்டு, தலைமுடி காற்றில் பறக்க, என் தோழி கமலா என்னை வர்ணித்துக் கேலிச் செய்தாளே, அதே உடையை உடுத்திக் கொண்டு, தங்கை அறையிலிருந்து வெளியில் வந்த, என்னைப் பார்த்த அவருக்கு ‘அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது’ போல)

ரேச்சலும், கயலும் என்னைக் குறித்துத் தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் கவனித்தேன். என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு ரேச்சல், ”கறுப்பா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கம்மா... அதைத்தான் கயல் கிட்ட சொல்லிட்டிருந்தேன்.”, என்று சொன்னதைக் கேட்டு, மனதுக்குள் மகிழ்ச்சிக் கொப்பளித்தது.

பெண்கள் பொதுவாகப் பெண்களைப் புகழ்வதில்லை அல்லவா!. ரேச்சலின் நல்ல மனம் புரிந்தது. காஃபி குடித்து விட்டு இருவரும் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டோம்.

“இரண்டு பேரும் ஆஸ்பத்திரிக்குப் போனதும் அண்ணனை அனுப்பி வைங்க”, என்று அண்ணி கூறி, எங்களை அனுப்பி வைத்தார்.

அவர் வீட்டினர் அனைவரும் எதார்த்தவாதிகள். என்னை அவரின் மனைவியாகவே பாவித்து, உறவு முறை கொண்டாடினர். நானும் அவர்கள் அனைவரையும் உறவு முறையிலே அழைக்க ஆரம்பித்து விட்டேன்.

ஸ்கூட்டரில் ஏறி மருத்துவமனை நோக்கி பயணித்தோம். முதல் முறையாக இருவரும் சேர்ந்து பயணித்தப் போதிருந்த சலனம், அவரிடத்தில் இப்பொழுது இல்லை. எனக்கும் முதல் முறையா ஸ்கூட்டரில் பயணிக்கும் போது இருந்த பயம் இப்பொழுது இல்லை.

இருவரும் ஸ்கூட்டரில் சேர்ந்து பயணித்ததைப் பார்த்தப் பலரும், என்னை யாரென்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதை, அவர்கள் முகமே காட்டிக் கொடுத்தது. மாலையில், பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்குப் போகும் பொழுது, எனக்கு எழுந்த கேள்வி என் மனதில் தொக்கி நின்றது. அதைக் கேட்டு, விவரத்தைத் தெரிந்து கொள்ள, உள்ளம் துடித்தது.

“வீட்டுக்கு போகும் போது உங்கள்ட ஒண்ணு கேட்டேனே நினைவிருக்கா”, என்று கேட்டேன்.

“இப்படித்தான், முன்னால ஒருநாள், ‘ உங்கள்ட ஒண்ணு கேட்டேனே... அதை தாங்கன்னு சொன்ன’,... நினைவிருக்கா... ? இல்ல ஞாபக படுத்தணுமா?”, என்று ‘அந்த’ நாளை நினைவு கூர்ந்து, என்னைக் கேலி செய்தார்.

அவர் எதை சொல்கிறார் என்பது தெரிந்தது. ”அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு... அதை மட்டும் மறந்துறாதங்க... “ என்ற என்னை, இடை மறித்து, “அதை எப்படிம்மா மறக்க முடியும்” என்று அந்த நாளுக்குப் பறந்தார்.

“ஐயோ தெரியாம உங்கள்ட வாயைக் கொடுத்திட்டேன்... என்ன மன்னிச்சிருங்க”, என்று பொய் கோபம் காட்டினேன்.

“அன்றைக்குத் தெரியாமலா வாயைக் கொடுத்த? தெரிஞ்சுதானே வாயைக் கொடுத்த... அதனால வந்த கஷ்டம்... எனக்குத் தானே... அதுக்கு அப்புறம், அதைக் கேட்டா கல்யாணத்துக்கு அப்புறங்கிற...”, அவர் வார்த்தையிலே விளையாடினார். எனக்குச் சிரிப்புதான் வந்தது.

“அதை விடுங்க சாமி... அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்... அதுல எந்த மாற்றமும் இல்லை... அது இருக்கட்டும்... யாரையும், தெரியாத ஊருல என் கூடச் சுத்தினா, எனக்குக் கெட்ட பெயர் வரும்னு சொன்ன நீங்க, உங்களைத் தெரிஞ்ச, உங்க ஊர்ல, என்னை ஸ்கூட்டர்ல வச்சுச் சுத்துனா என்னுடைய பெயர் கெடாதா... அதை விடுங்க... உங்க பெயரு கெடாதா... சொல்லுங்க”, என்று பொய் கோபத்தோடுக் கேட்டேன்.

“நான் வேணும்னு தான் இதை செய்றேன். எல்லோரும் பார்க்கும்படியா உன்னை ஸ்கூட்டர்ல அழைச்சிட்டுப் போறேன். அதுவும் இவ்வளவு நெருக்கமா... , ஏன்னு நீயே சொல்லு”என்று கேள்வியை என் மீதுத் திருப்பினார்.

“உங்க பேர நீங்களே கெடுத்துக்க விரும்புறீங்க... அதுதானே உண்மை”, என்று குற்றம் சாட்டினேன்.

“ஆமா... என் பேரை நானே கெடுத்துக்க விரும்புறேன்... ஏன்னு சொல்லு”, என்று மீண்டும் கேட்டார்.

“எனக்குப் புரியல”, என்று விரல்களை விரித்தேன்.

“மக்கு... மக்கு... எக்னாமிக்ஸ்ல ரிசர்ச் ஸ்காலரானா போதாது... கொஞ்சம் உலகத்தையும் ரிசர்ச் பண்ணத் தெரியணும்”, என்று கிண்டலடித்தார்.

“நான் ஒரு மக்குதான்... உங்களை மாதிரி எனக்கு யோசிக்கத் தெரியாது. நீங்களே சொல்லுங்க”, என்று அவரிடமிருந்து பதிலை எதிர்பார்த்தேன்.

“இப்ப ஊருல உள்ளவன் எல்லாரும் நம்ம ரெண்டு பேரும் சுத்துறதைப் பாத்தாச்சு. இப்பவே நம்ம பத்திப் பல கற்பனைகள் பிறந்திருக்கும். ஒவ்வொருத்தனும், அவனவன் கற்பனா சக்திக்கு ஏத்தபடி, கதையைக் கட்டுவான். நாளைக்குள்ள பல விதமான வதந்திகள், சுத்தியுள்ள ஊருக்கும் பரவிரும்.”, என்ற அவரை இடைமறித்து,

“அதனால உங்களுக்கு என்ன நன்மை?”என்று கேட்டு வைத்தேன்.

“இந்த ஊர்ல ஒரு பயலும் இனி எனக்குப் பொண்ணு தர மாட்டான். ஒருவேள நமக்குக் கல்யாணம் நடக்கலன்னு வச்சுக்கோ... எங்க வீட்டுக்காரங்களும், எங்கயும் போய் பொண்ணு கேக்க முடியாது.” , என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

“இந்த ஐடியாவ யாருக் குடுத்தா உங்களுக்கு”, என்று கேட்டேன்.

“எங்க அண்ணனும் தம்பியும்தான்...”, என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

“ஓ... உங்க அண்ணனும் பெரிய கில்லாடித்தான்னு சொல்லுங்க...”, என்று பரிகசித்தேன்.

“இது எல்லாமே... நானும், அண்ணனும் தம்பியும் போட்டப் ப்ளான்தான்”, என்று சிரித்தார்.

“ஓ... அப்படியா... மூணு பேரும் சேர்ந்து, என்னைத் திட்டம் போட்டுக் கவுத்திட்டீங்க... இருக்கட்டும்... இருக்கட்டும்... அப்புறம் வச்சுக்கிறேன்...”, என்று பொய் கோபத்துடன் கூறினேன்.

“அப்புறம் எதுக்கு... இப்பவே என்னை வச்சுக்கக் கூடாதா”, என்று அழுத்தமாகக் கூறினார்.

“உங்களை வச்சுக்கவா சொல்றீங்க... இதோ வச்சுக்காங்க” என்று இடுப்பில் அழுத்துமா ஒரு கிள்ளுக் கொடுத்தேன். வேதனையில் ‘ஆ’ என்று அலறிவிட்டார்.

“கோபப்படாதக் கண்ணு... உன்னைய எல்லாரும் பாக்கணும்னு ஆசப் பட்டாங்க... குறிப்பா, அம்மா ஆசப்பட்டாங்க... உன்ன எப்படி ஊருக்கு அழைச்சிட்டு வரலாம்னு யோசனை பண்ணுனோம். அம்மாவின் உடல் நிலை... அதுக்கு, இது ஒரு வாய்ப்பா போச்சு... அவ்வளவுதான்... அம்மா உன்னைப் பார்த்தா எத்தனை சந்தோஷப்படுவாங்க தெரியுமா?” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
 

Jeyakumar S

Member
அத்தியாயம் 12



ஆஸ்பத்திரியில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, அம்மா அனுமதிக்கப்பட்டுள்ள அறை எதுவென விசாரித்த பின்னர், அம்மா இருக்கும் அறையை நோக்கி நடந்தோம்.

அறைக்கு வெளியே காத்திருந்த அவருடைய அண்ணன், எங்களைப் பார்த்ததும், விஜயிடம் நலம் விசாரித்தார். என்னை அண்ணனுக்கு, அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

அவருடைய அண்ணன், ”வாம்மா... கொளுந்தியாரே... எப்படி இருக்க?... வீட்டில எல்லோரும் சௌக்கியமா?... பயணம் எப்படி இருந்துச்சு ?”, என்று என்னையும் நலம் விசாரித்தார்.

“நான் நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க”, என்று நலம் விசாரித்துவிட்டு, “நீங்க நாடகங்கள் எழுதி இயக்குவீங்களா...?”, என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

அவருடைய அண்ணனும் தம்பியும்தானே, என்னை நாகர்கோவிலுக்கு அழைத்து வருவதற்கான திட்டம் தீட்டிக் கொடுத்தவர்கள், என்பதை மனதில் வைத்துக் கொண்டு, அப்படிக் கேட்டேன்.

“நாடகமா... நானா... நீ சொல்றது ஒண்ணும் புரியலையேம்மா!”, என்று விழித்து நோக்கினார்.

“அண்ணா!... இவளை இங்க வர வைக்கிறதுக்கும், ஸ்கூட்டர்ல அவள கூட்டிட்டு வருவதுக்கும் நீயும் தம்பியும் ஐடியா குடுத்தீங்கல்லா... அதைச் சொல்றா...”, என்று விளக்கம் அளித்தார், அவர்.

“உன்னைப் பத்தி தம்பி நிறைய சொல்லியிருக்கான்... உன்னைப் பார்க்கணும்ன ஆசையை, வீட்டுல எல்லாருக்கும் வளர்த்து விட்டுட்டான்... உன்னை இங்க வரவழைக்க என்ன வழின்னு யோசிச்சோம்... அம்மாவோட ஹாஸ்பிடல் அட்மிஷன், அதுக்கு ஒரு வாய்ப்பா இருந்துச்சு”, என்று உண்மையை அண்ணன் விளக்கினார். அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. பேசிக் கொண்டே அம்மா இருந்த அறைக்குள் நுழைந்தோம்.

“அம்மா”, என்று அழைத்துக் கொண்டே அம்மாவிடம் சென்றார். அம்மாவை நலம் விசாரித்தப் பின்னர், என்னை அம்மாவிடம் , ‘உங்க மருமகள்’, என்று அறிமுகம் செய்து வைத்தார்.

என்னைப் பார்த்ததும், அவருடைய அம்மா, “வாம்மா”, என்று வாய் நிறைய அழைத்து, என் வலது கையைப் பிடித்து, முத்தம் கொடுத்தார்.

“இவளையாடா நீ... கறுப்பா இருப்பா... ‘ஏதோ’ அழகா இருப்பான்னு, எங்க எல்லார் கிட்டையும் சொல்லி வச்ச... உனக்குப் பார்வை சரியில்லன்னு நினைக்கேன்... இவ அழகு கிட்ட எவடா நிக்க முடியும்... கிளியோபட்ரா போல அழகிடா... என் மருமகள்,” என்று கொஞ்ச ஆரம்பித்து விட்டார், அம்மா. அவரை திரும்பிப் பார்த்தேன். அவரது முகமோ, எதையோ பறிக் கொடுத்ததைப் போன்று இருந்தது. அம்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும், மகிழ்ந்தது என்மனம். அன்று கமலா என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் அம்மாவின் வாய்மொழியில் கேட்கும் பொழுது, என் மனம் ஆனந்த கூத்தாடியது.

“கறுப்பா இருக்கிறதுனாலத்தான்டா, இந்த அழகி உனக்குக் கிடைச்சா... இல்லன்னா, எந்த பணக்காரன் வீட்டுக்கோ மருமகளா போயிருப்பா...”, என்று மனம் திறந்து அம்மா பேசியது, எனக்கு என்னவோ போலிருந்தது. அவரது முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

“அத்தை!... நான் வெள்ளையா பிறந்தாக்கூட இவரத்தான் காதலிச்சிருப்பேன்... உங்க மகனை... இப்படி நல்லவரா வளர்த்து வச்சிருக்கீங்க... எத்தனை நல்ல மனசு... அவருகிட்டப் பழகுனவங்க, யாரும் அவரவிட்டுப் பிரியவே மாட்டாங்க... காலேஜில முதல்ல என் கிட்டத்தான் பேசினாரு... அதனால, எனக்குக் கிடைச்சாரு... இல்லன்னா... அவரும் யாருக்கோ சொந்தம் ஆகிருப்பாரு... அவரை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்”, என்று சினிமா வசனம் பேசுற மாதிரி ஒப்பவித்தேன். விஜயின் முகத்தைப் பார்த்தேன். அவருக்குப் பெருமையாக இருந்தது.

அம்மாவிடம் நான் சகஜமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த விஜய், “, நீ அம்மாகிட்ட பேசிட்டுரு நான் இப்ப வந்தர்றேன்”, என்று சொல்லி வெளியில் கிளம்ப எத்தனித்தார்.

“என்னைத் தனியா விட்டுட்டு எங்க போறீங்க?”, என்று கேட்டதற்கு

“நீ தனியாவா இருக்கிற... அம்மா கூட தானே விட்டுட்டுப் போறேன்... எங்கம்மா... என்னைப் பத்திப் பெருமையா நெறைய சொல்லுவாங்க... எதையும் நம்பிறாத... “, என்று கூறி அம்மாவிடம் என்னை விட்டுவிட்டு, வெளியேறிவிட்டார்.

“எங்கடா… போற... “ , என்று அம்மா கேட்டதற்கு, “மாமியாரும் மருமகளும் பேசிட்டுருங்க... ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க வேண்டாமா”, என்று கூறி

அவரும் அவர் அண்ணனுடன் வெளியே சென்றார். நானும் அம்மாவும் மனம் திறந்து பேசினோம். நிறைய நாட்கள் பழகியதைப் போல அவர்களுடன் உறவாடிக் கொண்டிருந்தேன் என்பதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

அம்மாவின் உடல் நலத்தை தெரிந்து கொண்டேன். என் குடும்பத்தைக் குறித்து அவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். எங்கள் திருமணத்திற்கு என் பெற்றோர் சம்மதிப்பார்களா, சம்மதிக்கவில்லை எனில் என்ன செய்வது, என்று பல விஷயங்களை அம்மாவோடு விவாதித்தேன். என்னுடைய அப்பாவின் குணத்தைப் பற்றி குறைவாகத்தான் அவர்களிடம் சொன்னேன். கலப்புத் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்றாலும், என்னால் பெற்றோரின் சம்மதத்தைப் பெற முடியும் என்று நம்பிக்கையை ஊட்டினேன்.

அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் சொன்னார்கள். விஜய் என்னிடம் ஏற்கனவே சொன்னவைகள்தான். என்றாலும், அவரைப் பற்றியப் பல புதிய விவரங்களும் கிடைத்தன.

தன்னுடைய வாழ்நாட்கள் அதிக பட்சம் ஒரு வருடம் தானென்றும், தான் சாவதற்கு முன், எங்கள் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஒரே ஆசை என்றும், அம்மா கூறினார். எனது பி.ஹெச்டி முடிந்ததும், என் பெற்றோரிடம், எங்கள் காதல் விவகாரங்களைக் கூறி திருமணத்திற்குச் சம்மதம் பெற வலியுறுத்தினார்.



 
Top