Jeyakumar S
Member
அத்தியாயம் 3
பல்கலைக்கழக வளாகம், பல நூறு ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்தது. ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு கட்டடம் என்ற வகையில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. மதுரை புறநகர் பகுதியில் அமைந்திருந்தது, பல்கலைக்கழக வளாகம். முதுகலைப் பட்டப்படிப்பும், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கூடங்களும், நூலக வசதிகளும் அங்கு இடம் பெற்றிருந்ததன.
அத்துடன் பேராசிரியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் இடம் பெற்றிருந்தன. அதற்கு அடுத்ததாக அமைந்திருந்தது, பல்கலைக்கழக மாணவியர் விடுதி. பல்கலைக்கழகத்தின் மறுமுனையில் ஆண்கள் விடுதி. விடுதிகளுக்குப் பொறுப்பாளர்களாகப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், யாரும் விடுதிகளுக்கு வருவதில்லை. ஏனென்றால், அனைவரும் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்திற்காகப் படிப்பவர்கள். அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வர், என்ற நல்ல எண்ணத்தில்தான்.
பெற்றோரின் கட்டுப்பாடும், பேராசிரியரின் கட்டுப்பாடும் இல்லாத மாணவ மாணவிகளில் சிலர், காதல் வயப்பட்டுக் கட்டுப்பாடின்றி நடந்து கொள்வதுமுண்டு.
ஒவ்வொரு கட்டிடங்களையும் இணைக்க, தார் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது. நியான் விளக்குக் கம்பங்களும், குழல் விளக்குக் கம்பங்களும் சாலையின் இருபக்கமும் அமைந்திருந்தன. இரவில் பல்கலைக்கழக வளாகம், விளக்கு வெளிச்சத்தில், கண்களுக்கு அழகாகக் காட்சியளிக்கும்.
மரங்கள் செழித்து வளர்ந்து நின்றன. செடிகளும் கொடிகளும் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவைகளைப் பராமரிக்கத் தோட்டக்காரர்களும் உண்டு.
பல்கலைக்கழக மாணவர்கள், நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்துவதுண்டு. மற்ற கல்லூரிகளிலிருந்தும் மாணவ மாணவிகள், நூலகத்திற்கு வருவதுண்டு.
ஒருநாள், நூலகத்தில் விஜயைச் சந்தித்தோம். பல விஷயங்களைப் பேசிக் கொண்டே, மாணவியர் விடுதியை நோக்கி நடந்தோம். சாலையின் இருபக்கங்களிலும், செழித்து வளர்ந்திருந்த மரங்களின் அடியில், காதல் ஜோடிகள் அமர்ந்து, காதல் லீலைகளை நடத்திக் கொண்டிருந்தனர்.
காதலர்கள் சிலர், விளக்குக் கம்பங்களின் அடியில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தனர். சிலர் மரங்களின் அடியில், ஒருவர் மடியில் ஒருவர் தலைசாய்த்துக் காதலைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். சிலரோ இருள் நிறைந்த இடங்களில் அமர்ந்து, காமலீலைகளை நடத்திக் கொண்டிருந்தனர்.
காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அதன் பொருளோ, காதல் ஜாதி, மதம், மொழி, ஏற்றத் தாழ்வு, பணக்காரன் ஏழை எதையும் பார்ப்பதில்லை என்பதுவே.
ஆனால் இவர்களோ தம்மைச் சுற்றி இருபவர்களெல்லாம், குருடர்கள் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்கள் நம்மைப் பார்ப்பார்களே, என்ற எந்தவித வெட்கமும், கூச்சமும் இன்றி, அவர்கள் நடத்திக் கொண்டிருந்த லீலைகள், அருவருப்பை ஏற்படுத்தியது.
இரவு நேரத்தில், மாணவியர் விடுதிப் பக்கம் சென்றிராத அவனுக்கு, அந்த காட்சிகள் ஆச்சரியத்தை அளித்ததில் ஆச்சரியமில்லை. அவைகளைக் காணச் சகிக்காத விஜய், “இதோ இங்க காதலிச்சிட்டு இருக்காங்களே... இவங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”, என்று ஆங்காங்கே அமர்ந்திருந்த காதல் ஜோடிகளைச் சுட்டிக்காட்டி, எங்களிடம் கேட்டான்.
நாங்கள் பதில் எதுவும் கூறாமல், ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். இது நாங்கள் தினமும் பார்க்கின்ற கூத்துகள்தானே! எங்கள் மௌனத்தைக் கண்ட விஜய், தொடர்ந்தான்.
“இதுதான் காதல்னு நினைச்சிக் கிட்டுக் கண்டதையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க... இதுவா காதல்... இது காதல் இல்ல... காமம்”, என்று தன் மன வேதனையை எங்களிடம் முறையிட்டான், விஜய்.
அவனுடைய மனதின் எண்ணங்களை வார்த்தைகளில் கேட்ட தோழி, “அதெப்படி சொல்லுவீங்க... இவங்க பண்றது காமம்னு... சினிமாவில காதலை, இப்படித்தானே காட்டுறாங்க... அதத்தான் இவங்களும் செய்றாங்க”, என்று காதல் ஜோடிகளுக்கு வக்காலத்து வாங்கினாள், கமலா.
காதல் ஜோடிகளுக்குச் சார்பாகப் பேசிய கமலாவின் கூற்றை ஏற்றுக் கொள்ளாத விஜய், “இவங்களைப் பார்த்தா உங்களுக்குப் புரியலையா?... ஒருத்தருக்க மடியில் ஒருத்தர் படுத்துக்கிட்டு... கட்டிப் புடிச்சிக்கிட்டு... முத்தம் கொடுத்துக்கிட்டு... ச்சே.... இதுவா காதல்... போகிற வருகிற அத்தனைப் பேரும், நம்ம பாப்பாங்கன்ன வெட்கம் கூட இல்லாம, தப்புப் பண்ணிட்டு இருக்காங்க... சினிமாதான் வாழ்க்கைன்னு பலரும் நினைச்சிட்டு இருக்காங்க... சினிமாவில, காதல் முடிஞ்சு கல்யாணம் ஆனதும், ‘சுபம்’னு எழுதிக் காட்டிப் படத்த முடிச்சுருவாங்க, சினிமாக்காரங்க. அதுக்குப் பிறகு நடக்கிறக் குடும்ப வாழ்க்கையைப் படத்தில காட்ட மாட்டாங்க...” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான், விஜய்.
“காதலிக்கிறதுல என்ன தப்பு இருக்கு?... காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட, எத்தனையோ பேருச் சந்தோஷமா வாழுறாங்க”, என்று அவனை வெறுப்பேற்றக் கேட்டாள், கமலா.
“தப்பு இல்லையா... நீங்களும் இதுக்கு ஆதரவா?... இதுல எத்தனைப் பேரு கல்யாணம் பண்ணுவாங்கன்னு நினைக்கிறீங்க?... ஒருவரும் கல்யாணம் பண்ணமாட்டாங்க. கல்யாணம் ஆகல்லன்னா... அந்த பெண்ணின் நிலை என்னவாகும்? இவனை நினைச்சுக்கிட்டு இன்னொருத்தன் கூட வாழணும்… அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?”, என்று நடைமுறை உண்மையைக் கூறிக் கேட்டான் விஜய்.
“காதலிச்சா கல்யாணம் பண்ணிக்கணும், இல்லன்னா காதலிக்கக் கூடாதா?”, என்று அவன் உள்ளக்கிட்டக்கையை அறிந்து கொள்ள கேட்டு வைத்தேன்.
“கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு தெரிஞ்சிருந்தா... காதலிக்கவே கூடாது, என்பது என்னுடைய கருத்து. கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு தெரிஞ்சிருந்தா எதுக்குக் காதலிக்கணும்?. உடல் இன்பத்துக்காகவா? அதுக்குப் பேருதான் காமம். இதோ இங்க லீலைகளை நடத்திட்டு இருக்காங்களே! அதுதான். எத்தனை பெற்றோர்கள் இவங்க கல்யாணத்துக்குப் பச்சைக் கொடி காட்டுவாங்க?”, என்று காதலைக் குறித்த அவன் கருத்துக்களைக் கூறினான்.
“பெற்றோர் சம்மதம் இல்லண்ணா கல்யாணம் பண்ண கூடாதா?”, என்று கேட்டு வைத்தாள் தோழி.
“கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. என்னைப் பொறுத்தவரை… ஒருவேளை, ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், அவளுடையப் பெற்றோர் எங்கள் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லையெனில், நான் வேறு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்பது உறுதி “, என்றான்.
“உங்களைக் காதலித்தவள் பெற்றோரின் விருப்பத்தையும் கட்டாயத்தையும்... தட்ட முடியாமல் வேறு திருமணம் செய்து கொண்டால்…“, என்று கேட்டாள் கமலா.
“அது அவளுடைய விருப்பம்... அவள் முடிவில் நான் தலையிட மாட்டேன்… அதனாலதான் முதல்ல சொன்னேன், பெற்றோர் சம்மதிக்கலன்னா காதலிக்கக் கூடாது”, என்று அவன் தன் மனதைத் திறந்து கூறினான்.
“ஜாதி மதத்துக்குக் கட்டுப்பட்டப் பெற்றோர் எப்படி காதலுக்குச் சம்மதிப்பாங்க?”, என்று கேட்டு வைத்தேன்.
என்னுடைய பெற்றோர்கள், குறிப்பாக என்னுடைய அப்பா, கலப்பு திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது எனக்குத் தெரியும்.
“குழந்தைகளை நேசிக்கிற எந்த பெற்றோரும் குழந்தைகளின் எதிர்காலம் நல்ல அமையணுங்கிறதுக்காகச் சம்மதிப்பாங்க.” , என்று கூறினான், விஜய்.
“எனக்கு அதில் உடன்பாடு இல்லை“, என்று என் நிலையை உணர்ந்த நான், அவனிடம் வாதம் புரிந்தேன்.
“எந்த பெற்றோரும் காதலை உடனே ஏற்றுக் கொள்ளமாட்டாங்க. ஏன் ... காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டப் பெற்றோர் கூடச் சம்மதிக்க மாட்டாங்க... போரடணும்... காதலுக்கு வெற்றிக் கிடைக்கிற வரைப் போராடணும். வெட்டி கொன்னுருவன்னு சொல்லுவாங்க... நீ அவனைக் கெட்டுனா… நாங்க செத்துருவோம்னு சொல்லுவாங்க... கல்யாணம் நடக்காமலிருக்க எல்லா அடவுகளையும் கடப்புடிப்பாங்க... அசந்த்ர கூடாது... காதலிச்சவனைத் தவிர எவனையும் கட்டமாட்டன்னு பிடித்தப்பிடியில நிலைச்சி நிக்கணும். ‘ஓடிப்போகமாட்டேன்... கல்யாணம் நடந்தா, உங்க சம்மதத்தோடத்தான் நடக்கும்’ போன்ற விவரங்களைப் பெற்றோரிடம்... தெளிவா சொல்லிறணும்....”, என்று அவன் நடைமுறை வாழ்க்கையை எடுத்துச் சொன்னான்.
“சம்மதம் சொல்லிருவாங்கன்னு எனக்குச் தோணல... பெற்றோர், அவங்க விருப்பம் நிறைவேறணும்னுதான் நினைப்பாங்க... ஜாதி மதம் எல்லாம் கல்யாணத்தில முக்கிய பங்கு வகிக்கும்தானே?”, என்றாள் கமலா.
“நீங்க சொல்றது உண்மைதான்... உங்க நிலைபாட்டில் உறுதியா இருந்தா... கண்டிப்பாக ஒரு நாள் கல்யாணம் நடக்கும். ஏன்னா... ‘பெத்தமனம் பித்து’. தன்னுடைய பிள்ளைங்க, வாழா வெட்டியா இருப்பதப் பார்த்துச் சந்தோஷப்பட மாட்டாங்க... கண்டிப்பா ஒருநாள் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுவாங்க...”என்று விளக்கினான்.
“அவங்க கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்றவரை காத்திருந்தா... நமக்கு வயசாகிடும்... அதுக்குப் பிறகு கல்யாணம் பண்ணி என்ன ப்ரயோஜனம்”, என்றாள் தோழி.
“கல்யாணம்னா... காமம் மட்டும்தான்னு நினைக்காதீங்க... கல்யாணத்தில காமமும் உண்டு. அது ஒரு குறிப்பிட்ட வயசு வரைதான்... ஆனால் அது மட்டும்தான் கல்யாணம்னு நினைக்கிறது தவறு. காமத்தையும் தாண்டி பல விஷயங்கள் கல்யாணத்தில இருக்குது, என்று அவன் கல்யாணத்தையும், காதலையும், காமத்தையும் பற்றிப் பெரிய உரையே நடத்திவிட்டான்.
நாங்கள் எதுவும் பேசாததைக் கவனித்த விஜய், எங்கள் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.
“நம்ம ஃப்ரண்ட்ஸிப், டிஃபரண்டா இருக்கணும்.”, என்று பொருள் பொதிய கூறினான்.
அதைக் கேட்ட கமலா, “டிஃபரண்டவா... எப்படி?”, என்று கேட்டாள்.
“எக்காரணத்தைக் கொண்டும் இருட்டுல நின்னு பேசுறது, மரத்துக்கடியில மறைஞ்சிருந்து பேசுறது, இதெல்லாம் கூடாது.”, என்று கூறினான்.
நானும் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
“குறிப்பா... என்னால உங்களுக்கு எந்த கெட்டப் பேரும் வந்திடக் கூடாது என்பதில எனக்குப் பிடிவாதம் உண்டு”, என்று தன் மனதை எங்களுக்குத் திறந்து காட்டினான்.
“நீங்க ரொம்ப மெச்சூர்டா பேசுறீங்க.... ஆனா நடைமுறைக்கு ஓத்து வருமா என்பது கேள்வி குறியே”, என்றாள் தோழி.
“நீங்க அகிலன் எழுதிய ‘சித்திரப்பாவை’ என்ற நாவலைப் படிச்சிருக்கீங்களா?”, என்று கேட்டான்.
(எதுக்குடா சித்திரப்பாவை நாவலைப் பத்திக் கேக்கிறான் என்று நானும் தோழியும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்)
“இல்லை”, என்று ஒருசேர கூறினோம்.
“அதுல அழகான ஒரு வாசகம் ஒன்று கதை முழுவதும் வந்து கொண்டிருக்கும் ’அழகாக வாழக் கற்றுக்கொள், முடிந்தால் வாழ்க்கையை அழகுபடுத்து, இல்லை அதை அசிங்கப்படுத்தாமலாவது இரு’ என்று”.
“உண்மையிலே அழகான வாக்கியம்.”, என்றோம்
“நேரம் கெடைச்சா படிச்சிப் பாருங்க. ஞானபீடம் பரிசு பெற்றக் கதை... என்னால வாழ்க்கையை அழகு படுத்த முடியுதோ இல்லையோ... நான் வாழ்க்கையை அசிங்கப்படுத்த விரும்பல... மத்தவங்களும் என்னால அசிங்கப்படக்கூடாது.”, என்று தன் கருத்தைக் கூறினான்.
அவன் நல்ல மனது எங்களுக்கு நிறைய விஷயங்களை வெளிப்படுத்தியது. அவன் மீது, என் அன்பு பெருகியது. அவனையே காதலிக்க வேண்டும். என் பெற்றோர் சம்மதம் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டும், என்று என் மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன்.
“உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்.”, என்றேன்
எங்கள் மனதிலிருந்து, மரியாதை மிக்க வார்த்தைகள் வெளிப்பட்டன.
ஹாஸ்டல் நெருங்கியது. அவன் விடைப்பெற்றுக் கொண்டான். ஹாஸ்டலில், எங்கள் பேச்சு
அனைத்தும் அவனைச் சுற்றியே இருந்தது. அவனதுப் பேச்சுகள் ஒவ்வொன்றையும் விமர்சனம் செய்தோம். அவன் மீது எங்களுக்கு மரியாதைக் கூடியது. நாட்கள் உருண்டோடியன.