கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்றும் என் நெஞ்சில்...முன்னோட்டம்

Jeyakumar S

Member
அத்தியாயம் 13



ஆஸ்பத்திரி அறையில் என்னை, அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்படி, தனியாக விட்டுவிட்டு, விஜய் தன் அண்ணனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று, அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார்.

எங்களுடைய பேச்சுக்கிடையில், அறைக்கதவைத் திறந்து கொண்டு, அவரும் அப்பாவும் உள்ளே நுழைந்தனர்.

“நீ அப்பாவைக் கூப்பிடவா போன... மூத்தவன்கிட்ட ஸ்கூட்டர கொடுத்துவிட்டுருந்தா போதுமே... அவனே அப்பாவ அழைச்சிட்டு வந்திருப்பானே”, என்று அம்மா கூறினார்.

“இல்லம்மா அண்ணன் கையில ஸ்கூட்டர கொடுத்திருந்தா, அண்ணன்தான் அப்பாவ கூட்டிட்டு வரணும். அது மட்டுமில்ல ஸ்கூட்டர எனக்கிட்ட தந்துட்டு அவன் பஸ்ஸுல போகணும்... அதனாலத்தான், நான் அண்ணனை விட்டுட்டு அப்பாவக் கூட்டிட்டு வந்துட்டேன். நானும் இவளும் திரும்பி போவதுக்கு, ஸ்கூட்டரும் என் கையில இருக்கு... அதோடு நீங்க உங்க வருங்கால மருமகக்கிட்டத் தனியா பேசணும்னு தான், போனேன்…” என்று விளக்கினார்.

“என்னடா... வருங்கால மருமகள்னுச் சொல்ற... அவ வருங்கால மருமக இல்லடா... இப்பவும் எப்பவும் என் மருமகதான்”, என்று விஜயைத் திருத்தினார், அம்மா.

அவருடைய அம்மா, என்னை இப்பொழுதே மருமகளாக ஏற்றுக் கொண்டதைக் கேட்டு, அவர்கள் மீது மரியாதைக் கூடியது.

“என்னம்மா! உங்க அத்தை உன்னைப் போரடிச்சிட்டாளா?”, என்று அப்பா கேட்டார்.

“இல்ல மாமா... அத்தையோடு பேசிட்டு இருந்ததால, நம்ம வீட்டு விஷயங்களத் தெரிஞ்சுக்க வசதியா இருந்துச்சு“

“ரொம்ப சந்தோஷம்மா... எங்க எல்லாரப் பத்தியும் உங்க அத்த, உன்கிட்டச் சொல்லிருப்பாள்னு நினைக்கிறேன்... எங்களப் பொறுத்தவர, எங்க பிள்ளைகளுடைய விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம். ஊரு உலகத்தப் பத்தி எல்லாம், நாங்க கவலப்பட மாட்டோம். எங்களுக்கு ஒரு கஷ்டம்னா எங்க புள்ளைங்கதானே, எங்க கூடச் சேர்ந்து கஷ்டப்படுவாங்க. வேற ஒருத்தனும் எங்களுக்கு உதவிக்கு வர மாட்டான். உலகத்த நெனச்சிக் கவலப்பட்டு என்ன பிரயோஜனம். அதான், அவன் உன்னைப் பத்திச் சொன்னதும், ஓகே சொல்லிட்டோம். பிள்ளைங்க நீங்க சந்தோஷமா இருக்கிறதைப் பாத்தா, அதுதான் எங்களுக்குச் சந்தோஷம்.”, என்று எங்களுடைய திருமணத்தைக் குறித்தத் தங்களுடைய நிலைப்பாட்டை விளக்கினார்.

நான் மௌனம் சாதித்தேன். மாமா தன்னுடைய பேச்சினைத் தொடர்ந்தார்.

“எம்மா!... எம்மகன் ரொம்ப பாவம்மா, இழந்த மனசு. அவன்னா எங்க எல்லாருக்கும் உயிர். யாருக்கும் கஷ்டம் கொடுக்கமாட்டான். அவனால யாருக்கும் கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைப்பான். அதனாலத்தான் அவன் மனசுக்கு, உன்னைப் புடிச்சிருக்குன்னு சொன்னதும்... நீ கறுப்பா... செவப்பா… கட்டையா… நெட்டையா.. அழகா... இல்லையா... படிச்சிருக்காளா… படிக்காதவளா எதையும் கேக்கல, உடனே சரின்னுட்டோம். உன்ன மருமகள்னு நாங்களும், அண்ணி கொளுந்தியா, தங்கச்சின்னு என் பிள்ளைங்களும், மூத்த மருமகளும் கூப்பிடறதுக்கு... இவன் மேல நாங்க வச்சிருக்க அன்புதான்மா காரணம். நீ எங்களைத் தப்பா நினைச்சிக்காதம்மா. உங்க கல்யாணத்தைப் பார்த்துட்டுத்தான் கண்ண மூடுவேன்னு... உங்க அத்தை உயிரப் புடிச்சிட்டுக் காத்திட்டிருக்கா. எங்களைக் கை விட்டுறாதம்மா. அவனை, நீ தான்மா கடைசி வர பார்த்துக்கணும். அவன் மத்தவங்கள மாதிரியில்லம்மா, உன்னைக் காதலிச்சிட்டு, இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்க மாட்டான். நல்லவன் அதனாலதாம்மா ரொம்ப கவலையாயிருக்கு”, என்று விஜயைப் பற்றி உயர்வாகக் கூறியதைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது. எனக்கு மட்டுமில்ல எல்லோர் கண்களிலும் நீர் நிறைந்திருந்தது. அவர் சொன்னவைகள் அனைத்தும் உண்மை. விஜய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

“நீங்க ஒண்ணு... அதுங்க சந்தோஷமா இருக்க வந்த இடத்துல அதுங்கள அழ வச்சிட்டு.”, என்று அத்தை மாமாவிடம், கோபப்பட்டார்.

நானும் கண்களில் துளிர்த்திருந்த நீரைத் துடைத்துக் கொண்டேன். மாமாவே தொடர்ந்தார்.

“மருமகள்ட சொல்ல வேண்டாம்னு தான் இருந்தேன்... இப்ப நம்ம வீட்டுப் பிள்ளதானே அவ... அதனாலதான் சென்னேன்... இப்ப சொல்லலன்னா... வேற எப்பச் சொல்றது?”, என்று அம்மாவுக்கு விளக்கமளித்தார்.

“எனக்கும் உங்க மகனைப் பத்தித் தெரியும் மாமா. ஆறு வருஷமா பழகுறேன். ஒரு நாள் கூட என்னைத் தவறான எண்ணத்துல தொட்டதில்ல. சினிமா… தியேட்டருன்னு. சுத்துனா என் பேருக் கெட்டுரும்னு, ஒரு சினிமாவுக்குக் கூடக் கூட்டிட்டுப் போனது கிடையாது. மரத்துக்கு கீழ இருந்து தனியா பேச வர மாட்டாரு. எதை எடுத்தாலும், உன் பேருக் கெட்டுறக் கூடாது . அது ஒண்ணு தான் எப்பவும்… அவரு மட்டுமில்லாம... நான் வேற யாரையாவதுக் காதலிச்சிருந்தா... நினைச்சுப் பாக்கவே அருவருப்பா இருக்கு...” , என்று எங்கள் காதல் புனிதமானது, ஊர் உலகைச் சுற்றித் திரியவில்லை என்ற விவரத்தை, நாசுக்காக அவர்களுக்குத் தெரிவித்து விட்டதில் மகிழ்ச்சி. காதல் என்றதும் காதலிப்பவர்களைக் குறித்துத் தப்புக் கணக்குப் போடுவதுதானே பலரது எண்ணம். விஜயைக் குறித்து, அவர் வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் தெரியும். என்றாலும், நானும் அவருக்கு எந்த பிரச்சனையும் கொடுக்கவில்லை என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா. அதனால்தான் அதை சொல்லி வைத்தேன்.

“அப்படிபட்டவன் எதுக்கு உன்னை ஸ்கூட்டர்ல வச்சுச் சுத்துறான் தெரியுமா?... உன்னத்தான் கல்யாணம் பண்ண போறான்னு, ஊரார் எல்லோருக்கும் தெரியட்டும்னு தான். ஒரு பொண்ணுக்கூடச் சுத்துறான்னு ஊரு உலகுக்குத் தெரிஞ்சிட்டுன்னா, இந்த ஊர்ல எவனும் அவனுக்குப் பொண்ணு குடுக்கமாட்டான். நாங்களும் அவனுக்குப் பொண்ணு கேட்டுப் போக முடியாது. உன்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ண கூடாதுன்ன, ஒரே காரணத்துக்காக, உன்னை ஸ்கூட்டர்ல வச்சு சுத்துறான். பக்கத்து வீட்டுக் காரங்களே, நேர வந்து என்கிட்டயே, உன்னைப் பத்தி விசாரிச்சங்கன்னா பார்த்துக்கோ... அதுக்கு அண்ணனும் தம்பியும் சப்போட்டு. எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனச்சிருக்கானுக... எனக்கு எல்லாம் தெரியும்..... ”, என்று நாங்கள் இருவரும் ஸ்கூட்டரில் பயணித்ததற்கான காரணம், தனக்கும் தெரியுமென்று, மாமா விளக்கமாகக் கூறினார்.

மாமாவின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அப்பொழுது கதவைத் திறந்து கொண்டு, அவர் உள்ளே வந்தார்.

“அம்மா... டாக்டரைப் பார்த்தேன். ஞாயிற்று கிழமை காலைல பத்து மணிக்கு மேல டிஸ்சார்ஜ் பண்ணிறலாம்னு சொன்னாரும்மா. ஞாயிற்று கிழமை, சர்சுக்குப் போயிட்டு வந்து, டிஸ்சார்ஜ் பண்ணிறலாம். அப்ப நாங்க கிளம்புறோம். எனக்கும் பசிக்குது... அப்பா!... நீங்களும், அம்மாவுக்கு சாப்பாடுக் கொடுங்க”, என்று கூறிவிட்டு அம்மா அப்பா இருவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினோம்.

ஸ்கூட்டர் பயணம் இன்பமாக இருந்தது. ஸ்கூட்டரில், விஜயோடுச் சேர்ந்து பயணிப்பதில் இத்தனை விஷயம் அடங்கியிருக்கிறதா, என்று ஆச்சரியப்பட்டேன்.

மின்னும் விளக்கொளியில், சாலையின் இருளைக் கிழித்துக்கொண்டு ஸ்கூட்டர் பறந்தது. குளிர்ந்த காற்று என்னைத் தீண்டிச்செல்ல அவர் முதுகில் சாய்ந்து கொண்டு, பேசிக்கொண்டு, களித்துக் கொண்டு பயணித்தது என் நினைவில் தங்கிவிட்டது.
 

Jeyakumar S

Member
அத்தியாயம் 14


வீட்டில் அனைவரும் இரவு உணவு சாப்பிட, எங்களுக்காகக் காத்திருந்தனர். நாங்கள் சென்றதும், கால் கைகளைக் கழுவி, இரவு உடையை மாற்றிக் கொண்டு, எல்லாரோடும் அமரந்து உணவு உண்டோம்.

இரவு உணவு முடிந்ததும், அனைவரும் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஊர் கதையும், கேலியும், கிண்டலுமாகப் பேச்சுகள் இருந்தன. அவர் கல்லூரியில் நடந்த அனைத்து விஷயங்களையும், அம்மா அப்பாவை தவிர, அனைவரிடமும் கூறியிருக்கிறார்.

நான், வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் , அவருடைய அண்ணனிடம், ”அத்தான்... நீங்க நல்ல டேன்ஸ் ஆடுவீங்களாமே... அதைப் பார்த்துதான் அக்கா உங்கள லவ் பண்ணுனாங்களாம்... ப்ளீஸ் ஒரு டேன்ஸ் ஆடுங்க அத்தான்”, என்று வம்பை விலைக் கொடுத்து வாங்கினேன்.

“நான் டேன்ஸ் ஆடணும்னா, கொளுந்தியா, நீ பாடணும்”, என்ற ஒரு குண்டைத் தூக்கி போட்டார், அத்தான். நான் அதை எதிர்ப்பார்க்கவில்லை. பாட்டுக்கும் எனக்கும்தான் காதத் தூரம் ஆச்சே.

“அண்ணி பாடுங்க... உங்க பாட்டு ரொம்ப நல்லா இருக்கும்னு விஜய் அண்ணன் சொல்லியிருக்கான்”, என்று தம்பி கேலிப் பண்ண, அவர் தங்கையோ,”அண்ணி!... உங்க பாட்டுல மயங்கிதானே, அண்ணன் உங்கள லவ் பண்ணுனாரு... ப்ளீஸ் பாடுங்க அண்ணி!”, என்று எரிகிற தீயில், எண்ணெயை ஊற்ற, என்னை இந்த வம்பிலிருந்து காப்பாற்றும்படி, நான், என் விழிகளினால் விஜயிடம் கெஞ்சினேன்.

என்னுடைய விழிகளின் மொழியைப் புரிந்து கொண்ட அவர், “புதுசா வீட்டுக்கு வந்தவங்கள இப்படியா... கேலிப் பண்ணுவீங்க... ப்ளீஸ் அவளை விட்டுருங்கப்பா... அவளைப் பாடச் சொன்னா பிறகு என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியாது”, என்று பொய்யாக மிரட்டினார் விஜய்.

“என்ன நடக்கும் சொல்லுப்பா”, என்று அவருடைய அண்ணி, ரேச்சல் கேட்க,”தயவுசெய்து அவளை விட்டுருங்க... கழுதைங்க எல்லாம் வீட்டு முன்னாடி...”, என்று சொல்லி முடிப்பதற்குள் பக்கத்தில் அமர்ந்திருந்த விஜயின் வாயைப் பொத்தினேன்.

“எனக்குச் சப்போட்டா பேசிறீங்கன்னு பாத்தா... கிண்டலா பண்றீங்கன்னு”, என்று சொல்லி அவரை அடித்து விட்டேன்.

“கொளுந்தனாரே... கல்யாணத்துக்கு முன்னாலே, தங்கச்சி இந்த அடி அடிச்சா, கல்யாணத்துக்குப் பிறகு முதுகுக்கு, டின்னுதன் கெட்டணும்”, என்று பரிகசித்தார், அண்ணி. எனக்கு வெட்கமாக இருந்தது.

“எம்மா ராசாத்தி, நீங்க காலேஜ்ல படிக்கும் போது, என் கொளுந்தனாரு ஒன்ன சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போவானாம்மா”, அடுத்தக் கேள்வியைத் தொடுத்தார், அண்ணி.

“என்னை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு அவங்களுக்கு ஏதுத் தில்லு... மரத்துக்கு அடியில இருந்து பேச கூப்பிட்டா கூட வரமாட்டாரு... பயம்... இதுல சினிமாவா... எனக்குக் கெட்டப் பேரு வந்துருமாம்...” என்று என் கோபத்தைக் கொப்பளித்தேன்.

“அண்ணி !அவக்கூடத் தனியா மரத்துக்கு அடியில போயிருந்து பேசுறதுக்கு பயம்தான் அண்ணி...”, என்று கூறி என்னைப் பார்த்து ஒரு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார். விஜய் எதை குறிப்பிடுகிறார் என்பதை அறிந்ததும் குப்பென்று இரத்தம் முகத்தில் பரவியது. எல்லோரிடமும் அதைச் சொல்லி விட்டால், என் நிலை என்பதை உணர்ந்து நாணத்தில் தலை குனிந்தேன். ஆனால் அவர் அதை அழகாகச் சமாளித்து விட்டார்.

“அதுபோல சினிமாவுக்கு போவதிலும் எனக்குப் பயம்... பக்கத்தில பொண்ண வச்சிக்கட்டு, எவன்... தியேட்டர்ல ஒழுங்கா படம் பார்க்கிறான்... அங்க ஒரு படம் ஓடிட்டு இருக்கும்... இங்க வேறப் படம் ஓடிட்டு இருக்கும்,”, என்று அவர் சொன்ன போது, அவர் அண்ணி ரேச்சலின் வெளிறிய முகம் குப்பென்று சிவந்தது. அண்ணனை ஓரக் கண்ணால் பார்த்து முகம் மறைத்தார்.

“அத்தான்!... அக்காளுக்கு என்ன முகம் சிவக்குது... ம்... ம்... நீங்க பலே கில்லாடித்தான் போலிருக்கு”, என்று எனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி அத்தானைக் கிண்டலடித்தேன்.

சுதாகரித்துக் கொண்ட ரேச்சல், “அதெல்லாம் பழைய கதை... உன்னைச் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போகாம இருந்ததுக்கு அது காரணம் இல்லம்மா... பைசா செலவழிக்க வருத்தப்பட்டு, சினிமாக்குப் போனா... பேருக் கெட்டுரும்னு சொல்லிருப்பான்... நீ வேற அதை நம்பிக்கிட்டு...”, என்று கேலியை அவர் மீதுத் திருப்பினார்,அண்ணி.

“அக்கா... அவரு காசுச் செலவழிக்க வேண்டாம்... நான் காசுச் செலவழிக்கிறேன்னு சொன்னா கூட வரமாட்டாரு... சரியானப் பயந்தாங்கொள்ளி...”, என்று கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டேன்.

“விஜயண்ணா! அண்ணிக்கு உன்மேல உள்ள கடுப்பெல்லாம் வெளிய வரப்போகுது... இன்னைக்கு உன் பேர டேமேஜ் ஆக்கணும்னு, அண்ணி முடிவெடுத்துட்டாங்க போலத் தெரியுது... எதுக்கும் கேர்ஃபுல்லா இருந்துக்கா...”, என்று தம்பி அவரைத் தூண்டிவிட்டான்.

“ஏம்மா... என் தம்பிக்கு... உன்னைச் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதுக்குத் தில்லுல்லங்கிற... நானே, இவளைக் காதலிக்கும் போது எத்தனை தடவைத் தனியா சினிமாவுக்குக் கூப்பிட்டுட்டுப் போயிருக்கேன்...”, என்று அவர் அண்ணன் சொன்னதைக் கேட்டதும், ”ஐயோ அத்தான்... இது எனக்கு தெரியாமப் போச்சே... அக்கா! தப்பா எடுத்துக்காதங்க... முன்னாடியே தெரிஞ்சிருந்தா உங்களையாவது லவ் பண்ணி தொலைச்சிருக்கலாமே”, என்று நான் சொன்னதும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அவரைப் பார்த்து ‘எனக்கும் கேலிப் பண்ணத் தெரியும்’ என்று கண்களை விரித்துத் தலையை ஆட்டினேன்.

“இந்த கேலிப் பேச்சை எல்லாம் இத்தனை நாளா எங்க வச்சிருந்த”, என்று அவர் கேட்க, ”அண்ணி! விஜய் அண்ணனை நீங்க இத்தன நாளும் கேலிப் பண்ணுனதே இல்லையா.... ” என்று தங்கை எடுத்துக் கொடுக்க, (கிடைச்ச சான்ஸ எப்படி விடுறது)

“படிக்கும் போதுப் பக்கத்தில இருந்து பேசுறதுக்கே பயப்படுவாரு... என் உடம்பு அவர் மேலப் பட்டுட்டா போதும் உடனே ஒதுங்கிக்குவாரு... நான் விடுவேனா... நான் உரசிக்கிட்டுதான் உக்காருவேன்,” என்று அவரைப் பார்த்து அழகு காட்டிச் சொல்ல வேண்டியதை எல்லாம் கொட்டினேன்.

“ஐயே! இது என்னடே காதல்... ‘கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை’ ன்னு எம்.ஜி.ஆரே பாடியிருக்காரு... காதலிக்கிறது எப்படின்னு உங்க அண்ணன்கிட்டக் கேட்டுப் படி...”, என்று கூறி அண்ணனைப் பார்த்துச் சிரித்தார் அண்ணி. அவர் அண்ணனுக்கு வெட்கம் மேலிட்டது. அவர் வெட்கப்படுவதைப் பார்த்து அனைவரும் சிரித்தோம்.

“அண்ணி! நீங்க நல்லா ஏத்தி விடுங்க... அவளோ எம்மேல உள்ள கோபத்துல கொதிச்சிட்டுருக்கா… அதுல வேற... நீங்க கொளுத்தி போடுங்க... நல்ல பத்திக்கிட்டு எரியும்”,என்று அண்ணியைக் கிண்டலடித்தார் விஜய்.

“அக்கா! உங்க காதல் லீலைகளைக் கொஞ்சம் சொல்லி தாங்க... எனக்கும் ரொம்ப தேவைப்படுது”, என்று சிரித்துக் கொண்டே விஜயைப் பார்த்தேன்.

இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அருண், “என்னண்ணா!… நீ ஒண்ணு... அண்ணிய சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதுல என்ன தப்பு... உனக்கு எதுக்குப் பயம்... நம்ம வீட்டுல உனக்குப் பெர்மிஷன் தந்தாச்சே... அவன்… அவன்… பொண்ணுங்களைச் சினிமாவுக்குக் கூப்பிட்டா, அவ அவ சிலுக்கிக்கிட்டுப் போகுதுங்க... அண்ணியே உன்னைச் சினிமாவுக்குக் கூப்பிட்டா... நீ வேற... பிகு பண்ணிட்டு...”, என்று தம்பி எடுத்து தர,

“அப்படி சொல்லுங்க கொளுந்தனாரே! ஆமா... உனக்கும் ஏதாவது லவ்வு?... ஏதாவது இருந்தா இப்பவே சொல்லு... சொல்லிட்டன்னா..., மாமாகிட்டயும் அத்தைகிட்டயும் சொல்லி, எங்க கல்யாணத்தோட உன் கல்யாணத்தையும் சேத்து வச்சிறலாம் பாரு... செலவும் மிச்சம் ஆகும்”, என்று அவனையும் வம்புக்கு இழுத்தேன்.

“எனக்கு இன்னும் ஒண்ணும் சிக்கல அண்ணி... சிக்கின உடன உங்களுக்குதான் செய்தி சொல்லுவேன்... ஏன்னா ஆறு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கீங்க... அனுபவம் கொஞ்சம் கூடுதலா இருக்கும்”, அருண் என்னை வாரினான்.

“ஐயோ எங்களோடக் காதலைப் போல உலகத்தில யாருக்கும் காதல் வரக்கூடாது... அதுவும் இது போல ஒரு ஆளுக்கூட...“, என்று விஜயைப் பார்த்து முறைத்தேன்.

“அப்படின்னா... ஆறு வருஷமா என்ன காதல்தான் பண்ணுனீங்க”, என்று, அவர் அண்ணன் கேட்டார்.

“ஐயோ அத்தான், எங்க காதல் கதையக் கேட்டீங்கன்னா காறித் துப்பிருவீங்க... கிளாஸ்ல ஒருத்தர ஒருத்தர் பாக்குறது... அப்புறம் சிரிக்கிறது... அப்புறம் லைப்றரில மீட் பண்றது... லைப்றரியில இருந்து எங்க ஹாஸ்டல்வர வந்து விட்டுட்டுப் போறது... பாடி காட் போல... அதை விடுங்க... அங்கங்கே இருந்து பசங்க, லவ் பண்ணிட்டு இருப்பாங்கப்பா... அதக் கூடப் பாக்கமாட்டாரு... அவ்வளவுக்கு ரொம்ப நல்லவரு...”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த ஏக்கங்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்து, தொண்டையை அடைத்து, கண்களைக் குளமாக்கிவிட்டது. நான் விம்ம தொடங்கியதும் அக்கா என்னைத் தோளில் சாய்த்துக் கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப்படுத்தினார்.

அத்தனை நேரமும் சிரிப்போடும் களிப்போடும் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்த எங்கள் அரட்டை, சோகமாக மாறியது. உணர்ச்சி வசப்பட்டுப் பேசினதினாலையோ, என்னவோ என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது. நான் கண்ணீர் சொரிவதைப் பார்த்த அத்தான்,அவரிடம், “என்னடே நீ... அவளை அழைச்சிட்டுச் சினிமாவுக்குப் போறதுல என்னடே தப்பு... எவன் பார்த்தா உனக்கு என்ன... நீ அவளைக் கல்யாணம் பண்றதுல உறுதியாயிருக்க... அவளைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணவும் மாட்ட... நம்ம வீட்டுல எல்லாருக்கும், உன் காதல்ல பரிபூரண சம்மதம் இருக்கு... பிறகு எதுக்குப் பயந்துட்டு... அவ பேருக் கெட்டுப் போகும்னு நீ ஏன் பயப்படணும்... அவ உன்கூடத்தானடே சுத்துறா... அவ அழறத பாரு... இத்தனை வருஷமா அவ மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்த வேதனை எல்லாம் கண்ணீரா வெளிய வருகிறத பாரு....”, அவர் அண்ணன் விஜயிடம் கோபமாகச் சொல்ல சொல்ல, என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. நானும் குலுங்கி குலுங்கி அழுது விட்டேன். அண்ணனே மீண்டும் தொடர்ந்தார்.

“ஆறு வருஷமா அவளைக் காதலிக்கிறேன்னு சொல்லி, கூண்டுகிளி போல அவளைச் சிறைக்குள்ள அடைச்சு வச்சிட்ட... இப்ப நம்ம ஊரில உள்ள எல்லாருக்கும் உங்க ரெண்டு பேரு விஷயமும் தெரிஞ்சாச்சு... இனிமேலாவது அவளைக் கூப்பிட்டுட்டு ஊரைச் சுத்து. நாங்க எல்லாரும் உன் கூட இருக்கும் போது உனக்கு எதுக்குடே, கவலை”, என்று அண்ணன் சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார், அவர்.

நான் அவர் முகத்தை பார்த்தேன். அவருக்குள்ளும் இனம்புரியாதக் கவலை தொற்றிக் கொண்டது என்பதை அவர் முகம் காட்டியது.

“அத்தான், அவரை ஒண்ணும் சொல்லாதங்க... அவரு ரொம்ப நல்லவரு... அப்படி ஸ்டிரிக்ட்டா இருந்ததாலத்தான், நான் தலை நிமிர்ந்து நிக்குறேன். நாங்க காலேஜ் படிக்கும்போது லவ் பண்ணுன பலரையும் தெரியும். அவங்க கதை இப்ப கந்தாலாயிடுச்சு... தம்பிக்கும் அத்தானுக்கும்தான் நான் நன்றி சொல்லணும்,” என்று கண்களைத் துடைத்துக் கொண்டே சிரித்தேன்.

“எதுக்கு அண்ணி நன்றி... நீங்க என்னோட அண்ணி... நீங்க எங்களுக்கு எப்பவும் எதுக்கும் நன்றி சொல்லக்கூடாது அண்ணி. குடும்பத்துக்குள்ள நன்றி சொல்வது அந்நிய படுத்துவது போல...”, என்ற தம்பிக்கு

“சாரிப்பா... இனி நன்றி சொல்ல மாட்டேன்... ஒண்ணே ஒண்ணு... நீங்க எதுக்காக என்னை வீட்டுக்கு அழைச்சிட்டு வருவதுக்குத் திட்டம் போட்டீங்கன்னு எனக்குத் தெரியாது... அதுபோல, என்ன காரணத்துக்காக என்ன ஸ்கூட்டர்ல ஏற்றி விட்டீங்கன்னும் எனக்குத் தெரியாது... இந்த நாளை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். ஆறு வருஷத்தில அவருடைய விருப்பத்தோட, அவருடைய உடம்பில சாஞ்சு வருவதுக்கு எனக்கு உதவியாயிருந்துச்சு... உண்மையிலே, என் நெஞ்சில இருந்து, இந்த நினைவுகள ஒருநாளும் நீங்காது...”, என்று வெட்கமும் மகிழ்ச்சியும் கலந்து கூறினேன். இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. அவர் கண்களில் கண்ணீரைக் கண்ட எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவரை என் தோளில் சாய்த்துக் கொண்டேன்.

“ஐயே! மீசை வச்ச ஆம்பள அழுகிறத பாருங்க...”, என்று சிரிப்பினோடே கேலிச் செய்தேன். எனக்கும் கண்ணீர் வந்தது. அது ஆனந்த கண்ணீர்.

“என்னை மன்னிச்சிரும்மா... நான் உன்னுடைய உணர்வுகளை மதிக்காம இருந்துட்டேன். அண்ணன் சொன்ன பிறகுதான் எனக்கு உண்மையே உரைக்குது. நான் காதலிச்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணுவேன்ன முடிவோடத்தானே இருந்தேன்... நீயும் என்னைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்ன பிறகு, எதுக்கு நான் அப்படி ரிஜிடா இருந்தேன்... பெரிய தப்புப் பண்ணிட்டேன்... நீ இன்னைக்கு உன் மனசைத் திறந்து பேசாம இருந்திருந்தா... உன் மனசை நான் புரிஞ்சிருக்கவே முடியாமப் போயிருக்குமே”, என்று வருந்தினார்.

“சரி... அப்படின்னா... இப்ப சினிமாக்குப் போலாமா”, என்று கயல் குரல் எழுப்பினாள்.

“மணி ஒம்பதே கால் ஆச்சு. கடைசி பஸ்ஸு பதினைஞ்சு நிமிஷத்துல வரும்... அதுக்குள்ள நீங்க எல்லோரும் ரெடியானா சினிமாவுக்குப் போகலாம்... வரும் போது டேக்ஸி பிடிச்சு வந்துரலாம்”, என்றான் தம்பி, அருண்.

நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அவரும் ஓகே சொல்ல, பதினைஞ்சு நிமிஷத்துல எல்லோரும் ரெடியானோம். நானும் அவரும் ஸ்கூட்டரில் பயணிக்க அவர்கள் பேருந்தில் பயணித்தனர்.

திரையரங்கிற்குள் நுழைந்தோம். எனக்கருகில் தங்கை வந்து அமர்ந்தாள். அதைக் கண்ட அருண், அவள் இருக்கையை மாற்றி எனக்கருகில் அவருக்கு இடம் கொடுத்து, அதற்கடுத்து அண்ணன் அண்ணி தங்கை பின்னர் அவன் என்ற வகையில் வரிசைப்படுத்தினான். அவனுடைய சமயோஜித புத்திப் பாராட்டிற்குரியது. அவரும் நானும் விருப்பத்தோடு மன நிறைவோடு அருகிருந்து திரைப்படத்தை ரசித்தோம். திரைப்படம் முடிந்ததும் அவரும் தம்பியும் ஸ்கூட்டரில் வர நாங்கள் அனைவரும் டேக்ஸியில் வந்தோம்.

நான் தங்கையுடன் படுத்துக்கொள்ள, அவரும் தம்பியும் மாடியில் ஒரு அறையிலும், அண்ணனும் அண்ணியும் அவர்கள் அறையிலும் படுத்துக் கொண்டோம். அன்றைய பொழுது மகிழ்ச்சியுடன் கழிந்தது. அந்த நாள், என் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த நாள்.
 

Jeyakumar S

Member
அத்தியாயம் 15



மறுநாள் சனிக்கிழமை.

காலையில் சூரியன் மேலெழுந்து வருகின்ற வேளையில், ஆற்றில் நீராடிவர அவரும் தம்பியும் புறப்பட்டனர். அவர்கள் ஆற்றுக்குச் செல்வதை அறிந்து, நானும் அவர்களுடன் செல்ல விரும்பினேன். எனது விருப்பத்தை அறிந்ததும், அவருடைய தம்பி இறங்கி கொள்ள, நான் பின்னால் ஏறிக்கொள்ள ஸ்கூட்டர் பறந்தது.

சாலையின் இரு மருங்கிலும் வயல் காடுகள். சூரியனின் உதயத்தில், நில மகள் பச்சை நிற ஆடையிலே மின்னிக் கொண்டிருந்தாள். காலை இளங்காற்றினிலே, கதிரவனின் ஒளியினலே நெற்கதிர்கள் தலையாட்டி, சதிராட்டம் ஆடிக்கொண்டிருந்த அழகு, கண்களைக் கவர்ந்தது.

ஆங்காங்கே சிற்றலைகளை எழுப்பிய வண்ணம் நீர் நிறைந்த குளங்கள். குளங்களிலிருந்து வயல்களுக்குத் தண்ணீர் வடிந்தோட, வகிடு எடுத்ததைப் போன்று , சிறு சிறு நீரோடைகள். அனைத்தையும் ரசித்துக் கொண்டே பயணித்தோம்.

நெற்கதிர்களுக்கு இடையினிலே, வளர்ந்திருக்கும் களை அகற்ற, காலையில் அணிவகுத்துச் செல்லும் பெண்கள் கூட்டம் ஒருபக்கம்.

நாற்றங்காலில் நாற்றைப் பறித்து, உழுது பண்படுத்திய நிலத்தில் நடுவதற்கென்று, மற்றுமொரு மகளிர் கூட்டம்.

அவர்கள் அருகே சென்று, ஸ்கூட்டரை நிறுத்தி, அவர்களை நலம் விசாரித்தார், விஜய். அவர்களுக்கோ மிகுந்த மகிழ்ச்சி. பின் இருக்கையில் இருந்த என்னைப் பார்த்தப் பெண்கள், அவருக்குத் திருமணமாகி விட்டதா என்ற கேள்வி எழுப்பினர். தன்னுடைய வருங்கால மனைவி, என்று அவர்களிடம் கூறக்கேட்ட முதிர்வயது பெண் ஒருத்தியோ, திருமணமாகும் முன்னரே பெண்ணைத் தனிமையிலே அழைத்துவந்து ஊரைச் சுற்றுகிற அளவிற்கு நாடு முன்னேறி விட்டதென நாட்டின் வளர்ச்சியைப் பற்றிக் கூறினார்.

சிலர் என்னைக் குறித்து, ”மூக்கையும் முழியையும் பாரு... கறுப்பா இருந்தாலும் அழகா இருக்கா... அவனுக்கேத்தப் பொண்ணு... நல்ல ஜோடிப் பொருத்தம்”, என்று தங்களுக்குள் பேசிக் கொண்டது என் காதுகளில் விழுந்தது.

வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, பனியில் வாடும், அவர்களின் உடல் நிறம் கறுப்பு. அவர்கள் அருகில் நான் இருக்கையிலே நானும்தான் நல்ல நிறம், என்று எனக்குத் தோன்றியது. நம்நாட்டிலுள்ள வெளுத்தப் பெண்கள், அயல் நாட்டுப் பெண்களின் அருகில் நிற்கையில், நம்நாட்டுப் பெண்கள், அவர்களுக்குக் கறுப்பர்களாகத் தோன்றுகின்றனர். நிறத்தில் ஒன்றுமில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஒரு காலத்தில் கறுப்பு நிறம் என்பதனால், எத்தனை தாழ்வு மனப்பான்மை இருந்தது எனக்கு. விஜயுடைய நட்பு, என்னை அந்த எண்ணத்திலிருந்து மீட்டெடுத்தது. தோழி கமலாவிற்கும், நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். அவளும் எனது தாழ்வு மனப்பான்மையைப் போக்க, எத்தனையோ அறிவுரைகளைக் கூறியிருக்கிறாள். கமலாவை நினைத்ததும் அவள் முகம் மனதில் தோன்றி மறைந்தது. அவள் தற்பொழுது தன் பெற்றோருடன் வெளிநாட்டில் வசிக்கிறாள்.

அவர்களிடம் விடைபெற்றுச் சென்றபொழுது, அவர்களைக் குறித்து அவரிடம் விசாரித்தேன். விஜயின் நிலங்களிலே பணிசெய்ய வருகின்ற பெண்கள் என்றும், தாழ்ந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் குடும்பத்தாரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்ட மக்கள் என்றும் கூறினார்.

எங்கள் ஊர்பகுதிகளில் தாழ்ந்த ஜாதி மக்களோடு காரணமின்றி நாங்கள் பேசுவதில்லை, எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்பதை கூறினேன்.

நாஞ்சில் நாட்டில் அது போன்ற ஏற்ற தாழ்வு இல்லை என்பதையும், கற்றவர்கள் நிறைந்த மாவட்டம் ஆனதனால் ஜாதி மத வேறுபாடும் அங்கு இல்லை என்பதையும் கூறினார்.

தாழ்ந்த ஜாதியினரைத் தொடுவதில்லை என்றால், அவர்கள் தொடுகின்ற பொருள்களை வாங்கி உண்ணலாமா? நெல் வயல்களை உழுது பண்படுத்தி, விதைகளை விதைப்பது அந்த இனத்து ஆடவர்கள். விதைத்த நாற்றைப் பிடுங்கி, நாற்று நடுவது, களை எடுப்பது, விளைந்த நெல்லை அறுத்து வந்து களம் சேர்ப்பது, நெற்பயிரிலிருந்து நெல்லையும் வைக்கோலையும் பிரித்தெடுப்பது போன்ற விவசாயக் கூலிப்பணிகளைச் செய்வதெல்லாம், தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்கள். நிலம் மட்டுமே உயர்ந்த ஜாதியினருக்குச் சொந்தமானது. தாழ்ந்த ஜாதியினரோடு உறவாடுவதில்லை, தொடுவதில்லை என்றால் அவர்கள் காலிலும் கைகளிலும் மிதியுண்ட நெல்லில் இருந்து அரிசி எடுத்து உணவு சமைத்து உண்ணுவது சரிதானா? என்று அவர் விளக்கியபோது தான், நாங்கள் செய்வது எத்தனை தவறு என்று உணர்ந்தேன்.

கல்வி அறிவு, மக்களிடம் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஏற்றத் தாழ்வுகள், ஜாதி மத பேதங்கள் ஒழிய, கற்றல் மிக அவசியம். பள்ளியில் படிக்கும் போதுத் தன்னையும், தன் தம்பியையும் தாழ்ந்த குலத்து மாணவர்களுடன் பேசக்கூடாது, என்று பிஞ்சு நெஞ்சிலே நஞ்சை விதைத்து வளர்த்திருக்கிறார்கள் என்பதை எண்ணி வருந்தினேன். மனதுக்குள் வளர்ந்த ஜாதி மதம் என்ற களைகளை, அப்பொழுதே பறித்து அகற்றிவிட்டேன். அவர்கள் ஊருக்கு வந்ததில் எனக்குக் கிடைத்த மனத்தெளிவு, அன்றைய நிகழ்வு.

வயல்களுக்கு அப்பால் மேற்கு மலைத்தொடரின் சிதறல்கள் கண்ணைக் கவர்ந்திழுத்தன.

போகப்போக வயல்கள் குறைந்தன. சாலைக் குறுகலாகி, மலையை நோக்கி பயணித்தது. சாலை ஓரங்களில் ரப்பர் மரங்களும், தேக்கு மரங்களும், கொல்லா மரங்களும், மா மரங்களும், பலா மரங்களும் இன்ன பிற மரங்களும் செழித்து வளர்ந்து நின்றன.

மலையிலிருந்த வீழ்ந்து கொண்டிருந்த அருவி , காய்ச்சிய வெள்ளி, உச்சியிலிருந்து உருகி வீழ்வது போல் சூரியனின் ஒளியில் காட்சியளித்தது. மலையில் வளர்ந்து நின்ற மரங்களில் மிளிர்ந்த பச்சை நிறத்தில்தான் எத்தனை மாறுபாடுகள். எத்தனை மனோ ரம்மியமான இடம். மலையிலிருந்து புறப்பட்டு வந்த குளிர்ந்த காற்றில், சேலை முந்தானை, படபடவென பறந்து கொடியசைக்க, மரங்களும் செடிகளும் கை அசைக்க இயற்கையின் அழகை ரசித்தவண்ணம், அவர் இடுப்பை வலக்கரத்தால் அணைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் பயணித்த இன்பம் எண்ணிலடங்காதது, என்றும் என் நெஞ்சில் நீங்காதது.

திடீரென நீர்த்துளிகள் என்மேல் விழுந்து சிதற, தன்னிலை அடைந்தேன். சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குத் தெளிந்த நீர் பாய்ந்து கொண்டிருந்தது. அதனூடே ஸ்கூட்டர் வேகமாகச் செல்ல, வழிவிட்டுச் சிதறிய நீர் திவலைகளில், உடல் நனைந்தது மனம் குளிர்ந்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மனம் களித்தது.

ஸ்கூட்டர் ஓரிடத்தில் நின்றது.. காட்டாறு ஒன்று தெளிந்து ஓடியது. மலையில் தவழ்ந்து, மருத்துவ குணம் கொண்ட தாவரங்களைத் தழுவி, மலை உச்சியிலிருந்து கீழே விழுந்த நீர்வீழ்ச்சியிலிருந்து பாய்ந்தோடிய நீரானது, தனக்கென ஒரு பாதையை அமைத்து, மரங்களிலும் பாறையிலும் முட்டி மோதி உருண்டு வந்தது, ஒரு காட்டாறாக. ஆற்றில் ஓடிய தெளிந்த மாசற்ற நீரில், ஆற்றின் அடியில் கிடந்த கூழாங் கற்களும் கண்களில் தெரிந்தது. கண்ணாடிப் போன்று காட்சியளித்தது ஆற்றில் ஓடிய தண்ணீர். ஓடும் நீரில் கால் வைத்தேன். சில்லென சிலிர்த்தது உடம்பு. நீராட ஆசை. ஆனால் அச்சம் என்னை ஆட்கொண்டது.

விஜய் என்னை ஆற்றில் இறங்கி குளிக்க உற்சாகப் படுத்தினார். அந்த ஆற்றில் யாரும் காலையில் குளிக்க வருவதில்லை அதனால் பயப்படாமல் குளிக்க வருமாறு அழைத்தார். குளிப்பதற்கென்று படித்துறை அமைக்கப் பட்டிருந்தது. வீட்டில் குளியலறையில் குளித்து பழகிய எனக்கு, ஆற்றில் குளிக்கப் போவது இதுதான் முதல் முறை. பாவாடையால் மார்புவரை மறைத்துக் கொண்டு ஆற்றில் இறங்குகையில் அவர் மீது தடுமாறி விழுந்தேன். நல்ல வேளை, படித்துறை ஆனதனால் ஆழம் அதிகமில்லை. அவர் என்னை அணைத்துப் பிடித்துக் கொண்டார். அந்த குளிர்ந்த நீரில் அவர் உடல் சூடேறியது. என்னைப் பயம் தொற்றிக் கொண்டது. மனிதன் நல்லவனாவதும், தீயவனாவதும் சூழ்நிலையைப் பொறுத்தது தானே! ஆனால், விஜய் அந்த தடுமாற்றத்திலிருந்து உடனே சமாளித்து விட்டார். நான் குளிப்பதை ரசித்த அவரது பார்வை, என் கண்களின் வழியே உள்ளத்தில் புகுந்து இன்பத்தைக் கிளறி என்னன்னவோ செய்தது. எனக்குரியவன் என்பதனால் என்னை ரசிப்பதை நானும் ரசித்தேன்.

திருமணம் முடிந்த பின்னர் அவரோடு வரவேண்டும், ஆசைத் தணிய அவருடன் நீராடி மகிழ வேண்டும். கற்பனையில் பறந்தேன். இதயமெனும் பெட்டகத்தில் பத்திரமாய் பூட்டிவைத்தேன் ஆசைகளின் தோரணத்தை.

இயற்கை எழிலை ரசிக்கையிலே, எங்கிருந்து வந்தனவோ இத்தனை வார்த்தை. கவி ஒருவன் கண்டிருந்தால், அருவி போல விழுந்திருக்கும் எழில் மிகுந்த தழிழ் வார்த்தை.

அடுத்த முறை வரும்போது, கேமரா ஒன்று வாங்கி வரவேண்டும் என்ற என் ஆசையைக் கூறினேன். கண்களால் படம் பிடித்ததைக் கேமராவில் படம் பிடித்துப் பத்திரமாய் பாதுகாக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

சூரியன் மேலெழுந்து வெப்பத்தில் சுட்டெரிக்க ஆரம்பித்தான். அந்த வெப்பமும், இதமாகத்தான் இருந்தது அத்தானோடு இருக்கையிலே. வீடு வரும்போது நேரம் பதினொன்றைத் தாண்டிவிட்டது. மதிய உணவை முடித்துவிட்டு உடை மாற்றி அம்மாவிற்கும் தம்பிக்கும் உணவு எடுத்துக் கொண்டு மருத்துவமனைச் சென்றோம். அருண், நர்சுகளுடன் கதையடித்து கொண்டிருந்தான். அம்மா தூங்கிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் உள்ளே சென்ற அரவம் கேட்டு விழித்து விட்டார். அத்தைக்குச் சாதம் பரிமாறச் சொல்லிவிட்டு அவரும் தம்பியுடன் சேர்ந்து கடலை போடச் சென்றுவிட்டார்.

நேற்றைய நிகழ்வுகளையும் இன்றைய காலைய நினைவுகளையும் உணவோடுச் சேர்த்துப் பரிமாறினேன், அம்மாவுக்கு. தம்பிக்கும் உணவை பரிமாறிய பின் டவுன் முழுவதும் ஸ்கூட்டரில் சுற்றினோம். பல கடைகளில் ஏறி இறங்கினோம். அவரை அறிந்தவர்கள் அவரிடம் யார் என்று, என்னைக் குறித்துக் கேட்க, தன்னுடைய வருங்கால மனைவி, தற்பொழுது காதலி என்று என்னை அறிமுகப் படுத்தினார். நான் விரும்பிய பொருட்களை எனக்கு வாங்கி தந்தார்.

அன்றைய இரவிலும் அரட்டை, கிண்டல், கேலி, சிரிப்பு, கூச்சல் கும்மாளத்துடன் இரவுப்பொழுது முடிந்தது.

தூங்கும் போது, அவரது தங்கை முந்தைய தினம் நடந்த அரட்டையைக் குறித்து பேசினாள். அவள் அண்ணனின் நல்ல குணங்களைக் குறித்து நானும் அவளுடன் பகிர்ந்துக் கொண்டேன்.

காதலித்த தன் சகமாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவன் வார்த்தைகளை நம்பி மோசம் போனத் தனது சிநேகிகளைக் குறித்து அவளிடம் பேசினேன். ஏராளமான பெண்கள் இது போன்று காதலிலே வயப்பட்டு, காதலர்களின் வார்த்தைகளை நம்பி, மோசம் போகிறார்கள். அப்படிப்பட்டப் பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய கடந்த காலக் காதல் வாழ்க்கையை மறந்து விட்டு, மகிழ்ச்சியோடு நிகழ்கால கணவனோடு வாழமுடியுமா? அப்படி வாழ்கிறேன் என்று எவராவது சொல்வாளேயானால் அவள் நிகழ்காலக் கணவனிடம் நடிக்கிறாள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்டவர்களின் மத்தியில் தொடுவதற்கே கூச்சப்படும், அவள் அண்ணன் எத்தனை உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதை, எடுத்துரைத்தேன்.

எல்லோருக்கும் ஆசைகளும் ஏக்கங்களும் இருக்கும். எனக்கும் உண்டு. ஆனால் அவற்றில் எது நல்லது எது தீயது என்று அலசி ஆராய்ந்து, நல்லவைகளை அடைய முனைபவர்களே உயர்ந்தவர்கள். என்னுடைய ஆசை அற்ப ஆசை. அதற்காக முந்தைய தினம் அழுததை நினைத்து வெட்கப்படுவதாக அவளிடம் கூறினேன். நான் அவரை உணர்ச்சிகளோடுத் தொடும் பொழுது அவருக்கும் உணர்ச்சிகள் எழும். அதை அடக்குவதற்கு எத்தனை வலிமை வேண்டும் தெரியுமா!. தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, என்னுடைய உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு, சமாளிக்கும் அவருக்கு இணையாக யாரையும் பார்த்ததில்லை.

ஒரு பெண் சிரித்துவிட்டால், உடனே காதல் கடிதம் கொடுத்து, காமத்திற்கு அழைத்து, ஆசையை தீர்த்துக் கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர் தெரியுமா? குறிப்பாகக் கடந்த ஆறு ஆண்டுகளாக, என்னுடைய பெயருக்குக் களங்கம் வராமலிருக்க, எத்தனை நேர்த்தியாக நடந்துக் கொண்டு வருகிறார் என்ற விவரங்களைக் கூறினேன்.

இவைகளையெல்லாம் கேட்டப் பொழுது கயலுக்கும் அவள் அண்ணன் மீது மரியாதைக் கூடியது.

என்னுடைய கண்ணீரைக் கண்டதும், அவர் கண்களில் நீர் வடிந்ததைப் பார்த்தப் பொழுது, என்மனது எத்தனை வேதனை அடைந்தது, என்பதை என் மனம் ஒன்றே அறிந்திருந்தது. என்னுடைய ஆசைகளைச் சிறையிலடைத்துக் கொடுமைச் செய்து விட்டதாக, உண்மையிலே மனம் வருந்திய அவர் அன்புக்கு, ஈடு இணை இல்லை. அந்த சமயத்தில் நினைவுக்கு வந்த பாடல் ‘உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ ன்னு சிவாஜி கணேசன் பாடிய பாடல். எனக்கு பாடத் தெரியாததனால், முந்தைய தினம் நான் பாடவில்லை. நடிகர் திலகம் பாடுவதோ ஓய்வு பெற்ற பின்னர், ஆனால் விஜய் அழுதது, எங்கள் திருமணத்திற்கு முன்னால். நானல்லவா கொடுத்து வைத்தவள்!.

தங்கையும் தன் பங்கிற்கு அண்ணனின் பண்பினைப் பறைசாற்றினாள். ஒன்று மட்டும் உண்மை. அவரைப் பற்றி அவர்கள் கூறிய அனைத்துப் பண்புகளையும் ஆறு ஆண்டுகளில் அவர் அருகிலிருந்து, அறிந்து கொண்டவள் நான் என்பதால், அவர்கள் அவரைப் பற்றிக் கூறுகின்ற போது, அவர் மேலுள்ள மரியாதை, எனக்குள் அதிகரித்துக் கொண்டிருந்தது.

ஞாயிறின் உதயத்துடன் ஞாயிற்றுக்கிழமை விடிந்தது. ஆலயவழிபாட்டில் அவருடைய குடும்பத்தினருடன் கலந்துகொண்டேன். நானும் அவரும் ஸ்கூட்டரில் சென்றோம். ‘தன்னோடு வந்தவள் யார்?’, என்ற கேள்வி, எங்களைக் கண்டவர் மனங்களில் எழுந்தது. ஆராதனை முடிந்ததும் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுவதில் அனைவருக்கும் ஆர்வம். என்னை, கல்லூரி விரிவுரையாளர் என்றே அறிமுகம் செய்து வைத்தார். ‘தன் மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கலாம்’, என்று மனக்கோட்டை கட்டியவர்கள் பலரின் கனவுகள், மண்கோட்டையானது.

காலையில், அம்மாவை மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்தோம். மதிய உணவிற்கு பின் நாங்கள் புறப்படவேண்டிய வேளை வந்தது. இரண்டு இரவுகள் அவர் குடும்பத்தினர் அனைவரும், அவர் மனைவியின் இடத்தில் என்னை வைத்து, என்னிடம் காட்டிய பாசம், மாசற்றது என்பதை அறிவேன். அவர்கள் அனைவரின் அன்பு மழையில் நனைந்த எனக்கு அவர்களைப் பிரிந்து செல்லுகையில், மனவேதனையை அளித்தது. அடுத்த முறை வரும்பொழுது, கண்டிப்பாக ஒரு வாரம் தங்கி செல்வதாக வாக்களித்து கிளம்பினேன், மதுரைக்கு. அண்ணனும் தம்பியும் புடை சூழ அங்கிருந்து பேருந்து நிலையத்திற்குப் புறப்பட்டோம், அழுகையுடன்.

மீண்டும் ஒரு நெடும் பயணம் அவருடன் மதுரையை நோக்கி. இன்பமான நினைவுகளை இருவரும் அசை போட்டுக் கொண்டே பயணித்தோம். மதுரையில் அவரிடம் விடைப்பெற்றுக் கொண்ட நான், பல்கலைக்கழகம் நோக்கி பயணித்தேன், அவர் அதே பேருந்தில் திருச்சிக்குத் தொடர்ந்தார்
 

Jeyakumar S

Member
அத்தியாயம் 16


நாஞ்சில் நாட்டுப் பயணம், எனக்குள் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. வாரந்தோறும் அவருடைய குடும்பத்தினருக்குத் தனித்தனியாகக் கடிதம் எழுதி, ஒரே கவரில் வைத்து அனுப்பி விடுவேன். அவர்களும் அதுபோலவே.

மாதங்கள் உருண்டன. என்னுடைய ஆராய்ச்சிப் பணிகள் நிறைவுற்றது. ஆராய்ச்சியில் கண்டுப்பிடித்தவற்றைத் தொகுப்பாக்கி, ஆய்வுக்கட்டுரையைச் (Thesis) சமர்ப்பிப்பதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தேன். அது நிறைவுற்றதும், அந்த ஆராய்ச்சிக்குக் வழிகாட்டியாக இருந்த பேராசிரியரிடம் ஒப்புதல் பெற்று, ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன். குறிப்பிட்ட நாளில் ஆய்வுக்கட்டுரை தொடர்பான நேர்முக காணல் (VIVA) நடைப்பெற்றது.

நேர்முக காணலில், நான் என்னுடைய ஆய்வறிக்கையின் தொகுப்பை விளக்கி கூறினேன். அது தொடர்பான கேள்வி கணைகளை, பேராசிரியர்கள் நிறைந்த குழுவினர் தொடுக்க, அவைகளுக்கு உரிய பதில்களை, என் ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடித்த உண்மைகளிலிருந்து, விளக்கம் கூறி அமர்ந்தேன். என் பதில்களில் திருப்தி அடைந்த குழுவினர் நான் வெற்றி அடைந்ததாகப் பிரகடனம் செய்தனர். இனி நான் ஒரு முனைவர் (டாக்டர்).

எனக்கு முனைவர் பட்டம் கிடைத்ததும், வீட்டிற்குக் கடிதத்தில் எழுதி அனுப்பிவிட்டேன். விஜய்க்கும் தொலை பேசியில் அழைத்து, என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டேன்.

நான் ஆராட்சி மாணவியாய் இருந்த காலத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைப் படிக்கின்ற, எங்கள் துறை சார்ந்த வகுப்புகளுக்குப் பாடம் எடுக்க என்னை அவ்வப்போது அனுப்புவதுண்டு. எங்கள் துறையில் விரிவுரையாளர் பணிக்கானக் காலியிடம் இருந்தது. நிர்வாகத்தினர், அந்த பணி இடத்தை எனக்குத் தருவதாகக் கூறியிருந்தனர்.

திடீரென ஒரு எண்ணம் என்னுள் உருவானது. ஒருவாரம் அவர் வீட்டில் போய் தங்கினாலென்ன? அவர் இல்லாதப் போது, அவர் வீட்டார், என்னை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவல் பிறந்தது. யாரிடமும் தெரிவிக்காமல் அவர் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தேன். அன்று புதன்கிழமை. அவருக்குத் தொடர்பு கொண்டு, ‘நான் என்னுடைய வீட்டிற்குச் செல்வதாகவும் சனிக்கிழமை மதுரை வர வேண்டாம்’, என்றும் கூறினேன்.

அவரும் அடுத்து வருகின்ற வாரத்தில் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களும் அரசு விடுமுறை என்பதனால், அந்த வாரத்தில் மீதமுள்ள நாட்களுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, அம்மாவை பார்க்க ஊருக்கு செல்ல போவதாக தெரிவித்தார். தம்பிக்கும் தங்கைக்கும் செமஸ்டர் தேர்வு முடிந்து விடுமுறை ஆதலினால், அவர்களுடன் நாட்களைச் செலவிடத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.

அதுவும் நல்லதுதான், எதிர்பாராத விதமாக என்னை, அவர் வீட்டில், அவர் பார்த்தால் எப்படி இருக்கும் ? ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம், என்று எண்ணினேன். அவர்கள் வீட்டில் தங்குவதற்குத் தேவையானத் துணிகளை எடுத்துக்கொண்டு, புறப்பட்டேன். பேராசிரியை ஒருவரிடமும் விடுதி அலுவலகத்திலும் விவரத்தைக் கூறிவிட்டு, மறுநாள் வியாழனன்று காலையில், அவருடைய வீட்டிற்குப் பயணம் மேற்கொண்டேன். அவருடன் சேர்ந்து பயணித்தப் பொழுதில் இருந்த சுகம் அன்று இல்லை. தூக்கமும், பலப்பல சிந்தனைகளும் மாறி மாறி வந்து போயின. நண்பகலில் பேருந்து நாகர்கோவிலை வந்தடைந்தது.

அவர்கள் வீட்டின் முன் ஆட்டோவில் சென்று இறங்கினேன்.

“வீட்டுக்கு முன்னால ஆட்டோ நிக்குது... யாருன்னு போய் பாரும்மா”, என்ற அப்பாவின் குரல் கேட்டு, வெளியில் வந்த கயல்விழி, “அம்மா... ராசாத்தி அண்ணி”, என்று குரல் கொடுக்க அனைவரும் வெளியில் வந்தனர்.

அருண் ஓடிவந்து, என்னுடைய உடமைகளை எடுத்து, வீட்டுக்குள் செல்ல, நானும் மாமா அத்தையின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு, எல்லோரோடும் உள்ளே சென்றேன்.

“கயல்!, நீ போய் அண்ணிக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வா”, என்று தங்கையிடம் அம்மா கூற, அவருடைய அண்ணி , “கயல்! நீ இரும்மா... நான் போட்டு எடுத்துட்டு வாரேன்”, என்று எழுந்ததும்,

”ரேச்சல்... இரும்மா... அவ காஃபி போட்டு எடுத்துட்டு வரட்டும்... அடுக்களையைக் குத்தகைக்கு எடுத்ததுப் போல, எப்பவும் அடுக்களைக்குள்ளயே அடைஞ்சு கிடக்காதம்மா... கயலும் சமையல் படிக்கட்டும்... அவ போட்டா கை ஒண்ணும் அவளுக்கு உடைஞ்சு போகாது... போ... அண்ணிக்கு போய் காஃபி போட்டு எடுத்துட்டு வாம்மா”, என்று அம்மா கூறியதைக் கேட்டு, உண்மையிலே மனம் மகிழ்ந்தது. மருமகளிடத்தில் அவர்கள் காட்டிய அன்பைப் பார்த்து மனம் பூரித்தது.

நலம் விசாரித்துக் கொண்டிருக்கையில் காஃபி போட்டுக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தாள் கயல். நான் அவர்களுக்காக ஆசையோடு வாங்கி வந்திருந்த பொருட்களைக் கொடுத்தேன்.

அத்தைக்கும் அக்காவுக்கும் புடவை, , மாமாவுக்கு சட்டை, அத்தானுக்கும் கொளுந்தனுக்கும் டி சர்ட், கொளுந்திக்கு சுடிதார்.

அத்தையும், மாமாவும் ‘எதுக்கும்மா இதெல்லாம்’, என்று அவர்கள் கேட்டாலும், அதைப் பெற்றுக் கொண்ட பொழுது, அவர்கள் அடைந்த சந்தோஷத்தைச் சொல்வதற்கில்லை.

“அண்ணி! உங்களுடைய டாக்டரேட்டுக்கான வைவா முடிஞ்சிடுச்சா...” என்று அருண் கேட்டான்.

வைவா முடிந்து வெற்றிப்பெற்ற விவரத்தையும், பல்கலைக் கழகத்தில், எங்களுடையத் துறையிலேயே விரிவுரையாளர் பணி கிடைத்து விடும் என்பதையும், கூறினேன். அத்துடன் ஒருவாரம் அவர்களுடன் தங்கப்போவதையும், அவர்களிடம் கூறினேன். அதனை அறிந்த அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். நான் அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் விஷயத்தைக் கண்டிப்பாக விஜய்க்குத் தெரிவிக்கக் கூடாது என்று எல்லோரிடமும், குறிப்பாக அவர் தம்பி அருணிடம் கேட்டுக் கொண்டேன்.

நான் முனைவர் பட்டம் பெற்றதை அனைவரும் பாராட்டினர்.

அப்பாவுக்கு டாக்டர் பட்டம் பெற்ற செய்தியைக் கடிதம் மூலம் எழுதி தெரிவித்துவிட்டு, நேரில் விஜயின் வீட்டிற்கு வந்ததைக் கேள்விப்பட்டு, அத்தை வருத்தப்பட்டார்கள்.

என்னை வளர்த்து ஆளாக்கி, டாக்டர் பட்டம் பெறுவதற்கு, எல்லா தேவைகளையும் செய்து தந்த பெற்றோரை அல்லவா முதலில் சென்று சந்தித்து, ஆசிர்வாதம் பெற்றிருக்க வேண்டும், என்று அறிவுறுத்தினார்கள். நான் அவர்கள் வீட்டு மருமகள் ஆன பிறகு என்றால், அவர்கள் வீட்டிற்கு வருவதில், தவறில்லை என்றுரைத்தார். அவர்கள் கூறியதைக் கேட்ட நான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, வருத்தம் தெரிவித்தேன்.

அத்தை, மாமாவிடம் அதிகமாக உரையாட, உறவாட நேரம் கிடைத்தது. அக்காவிடம் சமைக்க மட்டுமல்ல, அவர்களின் காதல் லீலைகளையும் அறிந்து கொண்டேன். விஜயின் நல்ல பண்புகளையும், குணங்களையும் கூறிய அக்கா, விஜயை நம்பி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், என்றும் கூறினார். எனினும், தனிமையில் இருவரும் இருக்கையில் எல்லை மீறாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார். விஜயை நன்கு அறிந்திருந்த நான், அவருக்காக வக்காலத்து வாங்கினேன். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகாமல் அவர் பார்த்துக்கொள்வார் என்று இயம்பினேன்.

கடந்த முறை அங்கு சென்றிருந்த போது, விஜயுடன் ஆற்றிற்கு சென்று குளித்து வந்த நிகழ்வை கூறினேன். யாரும் இல்லா இடத்தில் தடை செய்வதற்கு யாருமில்லாத சூழ்நிலையில் எனக்கிருந்த உணர்ச்சிகள் அவருக்கும் இருந்திருக்குமல்லவா! அவர் அன்று உணர்ச்சிவசப் பட்டிருந்தால், நானும் இணைங்கியிருக்க வாய்ப்பு இருந்தது. என்றாலும், அவருடைய கண்ணியம், அவர் மீது எனக்கு இருந்த மரியாதையைக் கூட்டியதைக் கூறினேன். அக்கா அதனை ஏற்றுக்கொண்டார். தவறு இழைப்பதற்குரிய மோசமான சூழ்நிலையிலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறவன்தானே நல்லவனாகிறான்.

இளையவர்களின் எதிர்காலம் குறித்தும், உயர் கல்வி குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும், அவர்களிடம் கலந்துரையாடினேன். அத்தானிடம் அரட்டை அடித்தேன். இரவு அரட்டையில் அப்பாவும் அம்மாவும் எங்களோடு சேர்ந்து கொண்டனர். கேலிக்கும் கிண்டலுக்கும் பஞ்சமில்லை. அவர்கள் அன்பில் பொய்மை இல்லை, என்பதை உணர்ந்து கொள்வதற்கு, அந்த வரவு எனக்கு உறுதுணையாக இருந்தது.

ஒருநாள் நாங்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் போது அத்தை என்னிடம், “ மருமகளே! நீ தப்பா எடுத்துக்கலன்னா நான் ஒண்ணு சொல்றேன் நீ கேட்பயா?” என்று வினவினார்.

“அத்தை நீங்க எத செய்தாலும், எங்க நல்லதுக்குத்தானே செய்வீங்க. சொல்லுங்க... கண்டிப்பா கேட்பேன்”, என்றேன்.

“நானோ பலவீனமானவ... எப்ப கடவுள் என்னை எடுத்துக்கப் போறாருன்னு எனக்குத் தெரியலம்மா... உங்க கல்யாணத்தைப் பாக்க முடியுமோ முடியாதோ... எனக்குத் தெரியாது... பெரியவனுக்கு அவன் விரும்புன பொண்ணையே கல்யாணம் பண்ணி வச்சு பார்த்துட்டேன்... சின்னதுங்க ரெண்டையும், நீங்க ரெண்டு பேரும் கவனிச்சுக்குவீங்கன்னு எனக்கு நம்பிக்கை உண்டு... மாமா இந்த ஊரை விட்டு எங்கேயும் போக விரும்ப மாட்டாரு... வயலு தோப்பு எல்லாத்தையும் பார்க்கிறதுக்கு, இங்கதான் இருந்தாகணும். அதனால ரேச்சலும், ஜேம்ஸும் மாமாவ பார்த்துக்குவாங்க”, என்று கூறுகையில் அத்தையின் குரலில் வேதனையை உணர்ந்தேன்.

“அத்தை, நீங்க ரொம்ப நாள் உயிரோட இருப்பீங்க... எங்க எல்லாருடைய குழந்த குட்டிகளைப் பாத்துட்டுத்தான் கண்ண மூடுவீங்க... கவலை படாதீங்க அத்தை”, என்று ஆறுதல் படுத்தினேன்.

“கேட்க நல்லாத்தாம்மா இருக்கு... எனக்கும் அந்த ஆசைத்தான்... ஆனா என் நிலமை, எனக்குத்தானே தெரியும்மா”

“சொல்லுங்க அத்தை... நீங்க எதைச் சொன்னாலும் நான் கேட்பேன்”, என்று அத்தைக்கு வாக்குறுதியளித்தேன்.

“மருமகளே! நானும் அத்தையும் ஒரு முடிவு பண்ணியிருக்கோம்... விஜய் கிட்ட எங்க முடிவைப் பத்தி இதுவரை நாங்க பேசல... நீ சரின்னு சொன்னா... அப்புறம் அவங்கிட்ட பேசலாம்னு இருக்கோம்”, என்று பீடிகையைப் போட்டார் மாமா.

“ உனக்கு விஜய ரொம்ப பிடிச்சிருக்குன்னு எங்களுக்குத் தெரியும். அடுத்த வாரம் முழுவதும் அவன் இங்கத்தான் இருப்பான்... அந்த சமயத்துல ஒரு நல்ல நாளா பார்த்து, உனக்கும் மகனுக்கும் நிச்சயதார்த்தம் நடத்தலாமுன்னு நினைச்சிருக்கோம்... அதுக்கு நீ சம்மதம்னு சொன்னா... அடுத்த வாரத்துல, ஒரு நல்ல நாள்ல..., பாஸ்டரக் கூப்பிட்டு, ஜெபம் பண்ணி மோதிரம் மாத்திக்கலாம்... “, என்றார் அத்தை.

திடீரென அவர்கள் நிச்சய தாம்பூலம் குறித்துப் பேசியதும், எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருபக்கம் மகிழ்ச்சி, மறுபக்கம் பயம்.

அதனால் எந்த ஒரு பதிலையும் சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தேன்.

என்னுடைய மௌனத்தைக் கவனித்த அத்தான், “அப்பாவும் அம்மாவும் சொலறதுல நியாயம் இருக்கு... கல்யாணம் பண்ணாம நீங்க ரெண்டு பேரும் சுத்துறது நல்லதில்ல... என்கேஜ்மென்ட் பண்ணிட்டு ஜாலியா சுத்துங்க... யாரு உங்கள கேட்கப் போறா...“ , என்று அப்பா அம்மா முடிவுக்கு வலு சேர்த்தார் அவருடைய அண்ணன், ஜேம்ஸ்.

கொளுந்தனும் கொளுந்தியும் அக்காவும் அவர்கள் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

“ஏம்மா... உங்க அப்பா அம்மாட்ட சம்மதம் இல்லாம நிச்சயதார்த்தம் நடத்தக் கூடாது... ஏன்னா இது இரு வீட்டார் சம்பந்தப்பட்ட விஷயம்... இருந்தாலும் நீ சம்மதம் சொன்னா, மோதிரம் மட்டும் மாத்திக்கலாம்... ஒரு சின்ன ஃபங்ஷனா, வீட்டுக்கு மட்டும் நடத்திக்கலாம்... உங்க அம்மாவும் அப்பாவும் சம்மதம் சொன்ன பிறகு, பெருசா ஃபங்ஷன் நடத்தலாம். இப்ப இது வீட்டுக்கு மட்டும் நடத்துற ஃபங்ஷன்” , என்று கூறி எனது விருப்பத்தைக் கேட்டனர்.

“அவங்க… அதான்...உங்க மகன் என்ன சொல்லுவாங்க”, என்று ஒரு கேள்வியைத் தொடுத்தேன்.

“அண்ணி! உங்க அப்பா அம்மா சம்மதமில்லாம அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான்... அதில அவன் பிடிவாதமா இருக்கான்... ஆனா... நிச்சயதார்த்தத்துக்கு நீங்க சம்மதிச்சா... ஒத்துக்குவான்”, என்றான் அண்ணனை நன்கு அறிந்த தம்பி.

நானும் நினைத்துப் பார்த்தேன். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருந்தது. மதுரைக்கு அவர் வரும் பொழுது அவருடன் சுற்றுவதைப் பார்ப்பவர்கள், தவறாக நினைத்தாலும், நிச்சய தாம்பூலம் நடந்துவிட்டால், என் மனசாட்சி குற்றம் சொல்லாதல்லவா!. அத்தையும் மாமாவும் கூறுவதைப்போல், என் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுவிட்டால், நிச்சய தாம்பூல நிகழ்ச்சியைப் பெரிதாக கொண்டாடலாம் என்று தீர்மானித்து, நானும் அவர்களுக்கு என் சம்மதத்தைத் தெரிவித்து விட்டேன்.

“இதப்பத்தி யாரும் எதுவும் அவன்கிட்டச் சொல்ல கூடாது. என்கேஜ்மென்ட் நடக்குறது வரை எல்லாமே சஸ்பென்ஸா இருக்கணும்”, என்று மாமா கூறினார்.

சஸ்பென்ஸ் மட்டுமில்லை சர்ப்ரைஸாவும் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த அவர்கள், அதற்கான வேலைகளைச் செய்து முடித்தனர். போதகருக்கும் விவரம் அறிவிக்கப்பட்டது. எதேச்சையாக வருவதைப் போன்று வீட்டிற்கு வரும்படி போதகரிடம் கூறியிருந்தனர்.

சனிக்கிழமை அன்று மதியம், வங்கி பணி முடிவுற்றதும் ஒருவார விடுமுறைக்காக, விஜய் ஊருக்கு புறப்பட்டு, இரவில் நாகர்கோவில் வந்து சேர்ந்தார். அவரை, தம்பி பஸ் ஸ்டேன்டிலிருந்து அழைத்து வந்தான். வீட்டிற்குள் வந்து பேசிக் கொண்டிருக்கையில் அனைவருக்கும் காஃபி போட்டு, அதை எடுத்துக்கொண்டு சென்ற என்னைப் பார்த்ததும், அவரை அதிர்ச்சியும் மகிழ்ச்சியும், ஒரு சேர ஆட்கொண்டது. வீட்டில் என்னைக் கண்டதும் அவருக்கு வார்த்தைகளே வரவில்லை.

என்னுடைய வீட்டுக்கு போகிறேன்னு என்று சொல்லிவிட்டு அவருடைய வீட்டில் நான் இருப்பதைப் பார்த்த அவர், ”உங்க வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு, எங்க வீட்ல இருக்க” என்று விழி விரிய மகிழ்ச்சியில் கேட்டார்

“உங்க வீடு எங்க வீடுன்னு ஏன் பிரிச்சுப் பார்க்குறீங்க... இது நம்ம வீடுதானே”, என்றேன்.

“சரியா சொன்னீங்க அண்ணி” என்று எனக்குக் குரல் கொடுத்தான் கொளுந்தன்.

“நீ பஸ் ஸ்டேண்டுல இருந்து வரும்போது ஊர் கதையெல்லாம் பேசிக்கிட்டு வந்த... இவ இங்க வந்திருக்கிறதப் பத்தி ஒரு வார்த்தைக்கூடச் சொல்லவே இல்லையே” , என்று தம்பியிடம் திரும்பினார்.

அதைக் கேட்ட கயல், “இது... அண்ணி உத்தரவு... உனக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் “, என்று சொல்லி வைத்தாள், தங்கை தன் பங்கிற்கு.

“ஓ! எல்லோரும் அண்ணி

அணிக்கு மாறிட்டீங்க... நல்லது” , என்று முகத்தில் பொய் வருத்தத்தைக் காட்டிப் பேசினார், விஜய்.

அனைவரும் இரவு உணவை உண்டு முடித்ததும், அரட்டை ஆரம்பித்து விட்டது. புதன்கிழமை தனக்கு நடக்கவிருக்கும் நிச்சயதாம்பூலம் நிகழ்வை விஜய் அறியாமல், அவர்களுடன் பொழுதைக் கழித்தான்.
 

Jeyakumar S

Member
அத்தியாயம் 17



ஞாயிற்று கிழமை, அன்று அனைவரும் ஆலயம் சென்றோம். ஆராதனையின் போது, எனது பெயரை அழைத்து, சபையின் முன் வரும்படி போதகர் கேட்டுக் கொண்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியாது. அருகிலிருந்த ரேச்சல் அக்கா, என் சேலை முந்தானையை இழுத்துத் தலையில் முக்காடு இடும்படி கூறினார். விஜய் என் கையில் கவர் ஒன்றை கொடுத்து, ஜெபித்து முடித்ததும், அந்த காணிக்கைக் கவரைக் கொடுத்து வரும்படி கூறினார்.

போதகர் என்னைக் குறித்து ஒரு சில வாக்கியங்கள் கூறிவிட்டு, நான் முனைவர் பட்டம்பெற்ற விவரத்தையும், ஐசக் ஐயா (விஜயின் அப்பா பெயர்) அவர்களின் மகனான, விஜய், திருமணம் செய்து கொள்ளப் போகிறப் பெண் என்றும் கூறி, எனக்காக, என் எதிர்காலத்திற்காக, என் குடும்பத்தினருக்காக ஜெபித்தார். ஜெபம் முடிந்ததும், விஜய் கூறியபடியே காணிக்கைக் கவரைப் போதகரிடம் கொடுத்துத் திரும்பினேன். அனைத்தும் எனக்கு புதுமை.

மதிய உணவு சமைப்பதற்கு, ரேச்சல் அக்காவுக்கு உறுதுணையாய் நின்று கொஞ்சம் சமையலைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். அம்மியில் மசாலை அறைக்க வேண்டும். அதை நான் அறைக்கிறேன் என்று உட்கார்ந்து தடுமாறினேன். அத்தை, என்னை அறைக்க வேண்டாம் என்று எத்தனையோ தடுத்தார்கள், ஆனால் நான் எனது பிடிவாதத்தால் சமாளித்து அம்மியில், மசாலையை அறைத்து அசத்தி விட்டேன். எங்கள் வீட்டில், அம்மா என்னை ஒரு வேலையும் செய்ய விடுவதில்லை. அதனால் வந்த சிறு கஷ்டம். மாலையில் அத்தையும் மாமாவையும் தவிர அனைவரும் ஒரு சினிமாவிற்கு சென்று வந்தோம்.

எனக்கு கன்னியாகுமரியில், காலையில் சூரியன் உதிப்பதைக் கண்டு களிக்க ஆசை. அதை விஜயிடம் சொன்னேன். அம்மா அப்பா அனுமதியுடன், மறுநாள் காலை, நான்கு மணிக்கே எழுந்து கன்னியாகுமரிக்கு நானும், விஜயும் ஸ்கூட்டரில் சென்றோம். காலை குளிர்காற்று, உடலில் குளிரை ஏற்ற, அந்த நடுக்கத்தில் அவருடலோடு ஒட்டி பயணித்தது, இன்பமாக இருந்தது. வழியில் சின்னதொரு டீ கடையில் சூடாக டீ குடித்துவிட்டு, குமரி முனை நோக்கி, காலை அழகை ரசித்துக் கொண்டே பயணித்தோம்.

காலை உதயத்தைக் காண, அதிகாலையிலேயே மக்கள் கடற்கரையோரம் கூடிவிட்டனர். அவர் கரங்களை அணைத்துக் கொண்டு, அங்கிருந்த கூட்டத்தோடு, நின்றிருந்த என் மனதில் எத்தனை இன்பம்.

கடலுக்குள் இருந்து சூரியன் வெளிவரும் முன், அதன் மென்னொளி கடல் நீரில் பரந்து கடல் தீரத்தை பொன்னிறமாக்கியது. கீழ்வானமோ சிவப்பும் மஞ்சளும் கலந்து அழகாக காட்சியளித்தது. பொன்னிற கடல் தீரத்தில் பாய்மர படகுகள் பயணித்துக் கொண்டிருந்தது, ஒருவகை அழகு. பல பல குரல்களை எழுப்பிக்கொண்டு, மென்னொளியில் பறந்து சென்ற புள்ளினங்களின் அழகு ஒருபுறம். இதற்கிடையில், மெல்ல மெல்ல உயர்ந்தெழுந்து, கடலின் மீது தலையுயர்த்திக் கொண்டிருந்த, செங்குருதி பாய்ந்த இளம் பருதியின் அழகு காண கண் கொள்ளாதிருந்தது. முழு ஆதவனும் கடலின் மீது உட்கார்ந்திருந்த அழகோ, கடலின் மேல் தீ பந்து அமைந்திருப்பது போன்றிருந்தது. சூரியனும் மேலெழும்ப, சூடும் அங்கே கூடிக்கொண்டிருந்தது. சூரியன் உதித்த அழகினைக் கண்டு களித்த நாங்கள், அருகிலிருந்த ஹோட்டலில் சென்று சிற்றுண்டி உட்கொண்டோம்.

சிற்றுண்டி சாலையில், கைத் துடைக்க வைக்கப்பட்டிருந்த காகிதத்தை எடுத்துக் கவிதை ஒன்றை எழுதி என்னிடம் காட்டினார்.

கறுப்பான கடல் தீரம்

வெள்ளலையில் மின்னலிட

கரைச்சேர பாய்மரங்கள்

பாய்விரித்து படபடக்க


சில்லென்று குளிர் காற்றை

கடலலைகள் கரையேற்ற

மெல்லொளியில் தொடுவானம்

மெருகேறி சிவந்திருக்க


நில்லென்று கடலலைகள் கரம்

நீட்டி பிடித்தமிழ்த்த

நில்லாமல் செங்கதிரோன்

மேலெழும்பி முகம் காட்ட


இருளினிலே இருண்டிருந்த

இயற்கையவள் அவையவங்கள்

கதிரவனின் கரம் படவே

கணப்பொழுதில் நிறம் மாறும்


விரிந்திருக்கும் குடைப்போல

பரந்திருக்கும் நீலவானின்

நிறமதனை உள்வாங்கி

நீள்கடலும் நீலமாகும்


மரங்களிலே விதவிதமாய்

மலர்ந்திருக்கும் மலர்களினால்

மேலாடை தானுடுத்தி

மலைமகளும் முகம் மலரும்


புள்ளினங்கள் கண்விழித்து

மெல்லிசையில் பாட்டிசைக்கும்

பாட்டிசையில் அழகுமயில்

வண்ணத்தோகை விரித்தாடும்


இரவினிலே விழுந்த பனி

இலை நுனியில் திரண்டு நின்று

வண்ணமயில் ஆடுவதை

படமெடுத்து ரசித்திருக்கும்


வயல்வெளியில் மலர்ந்திருக்கும்

வண்ணவண்ண பூக்களெல்லாம்

வண்ணத்துப் பூச்சிகளை

வாசம் வீசி தூதுவிடும்


இளங்காலை குளிர் காற்று

இதமாக அசைந்தாடி

இளம் நாற்றை தாலாட்டும்

இளம் நாற்றும் தலையாட்டும்




அவரிடமிருந்த கவி திறன் கண்டு வியந்தேன், நான்.

பின்னர் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம் சென்று வந்தோம். பகவதி அம்மன் கோவிலுக்குள் சென்று வந்தேன். கடற்கரையோரம் அமைந்திருந்த ஆலயம் சென்றோம். பின்னர் படகில் ஏறி விவேகானந்தர் பாறையில் அமைந்திருந்த விவேகானந்தர் மண்டபத்திற்கு பயணித்தோம். படகில் ஏறி கடலுக்குள் பயணித்தது வேறொரு அனுபவம். கடல் அலைகள் மேலெழும்பும் போது படகு மேலெழும்பி கீழிறங்குகையில், விழுந்து விடாமலிருக்க விஜயின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன்.

விவேகானந்தர் பாறை, என்பது கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போதுக் கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக, இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு, 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன

கன்னியாகுமரியான ஸ்ரீ பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று தவம் செய்ததாகவும் அதனால் இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்றும் இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தப் பாறைக்கு முதலில் ஸ்ரீ பாதப் பாறை என்றுதான் பெயர் இருந்தது என்கின்றனர்.

விவேகானந்தர் தவம் செய்த இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. நிசப்தமாயிருக்கும் அந்த தியான மண்டபத்தில் பலரும் அமர்ந்திருந்து தியானம் செய்து செல்வர்.

அங்கிருந்த கடைகளை எல்லாம் சுற்றிவந்தோம். பலதரப்பட்ட அழகு பொருட்களை வாங்கிக் கொண்டோம். பின்னர் அங்கிருந்த வட்டகோட்டை சென்று திரும்பினோம். மாலையில் கடலுக்குள் சூரியன் மறையும் அழகையும் பார்த்து ரசித்துவிட்டு வீடுச் சென்று சேர்ந்தோம். இரவில் கன்னியாகுமரியில் கண்டவைகளை பற்றி கலந்துரையாடினோம்.

புதன் கிழமை அன்று, திட்டமிட்டபடி அவருக்கு அனைவரும் சேர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்தோம். இரவு நேர உணவுக்காக வீட்டில் சமையல் எல்லாம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. நானும் அக்காவுக்குச் சமையலறையில் உதவி செய்துக் கொண்டிருந்தேன். திட்டமிட்டபடியே போதகர் அவர்களும் எதேச்சையாக மாலையில் வீட்டு ஜெபத்திற்கு, விஜயம் செய்வதைப் போன்று வந்திருந்தார். விஜய் அறியாத வண்ணம் நிச்சயதார்த்த மோதிரத்தை போதகரிடம் அவர் வீட்டார், கொடுத்து வைத்திருந்தனர்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போதகர், ஜெபித்து விட்டு புறப்பட ஆயத்தமானார். ஆரம்ப ஜெபத்தின் போது இருவரின் நிச்சயத்தார்த்த நிகழ்வை குறிப்பிட்டு இறைவனிடம் வேண்டுதல் செய்த போது, விஜய்க்கு ஆச்சரியம் கலந்த எண்ணங்கள் அலைமோதின. ஜெபம் முடிந்ததும் அவர் திரு திருவென விழிப்பதைப் பார்த்து போதகர் அனைத்தையும் விளக்கினார். பின்னர் இருவருக்கும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த புத்தாடைகளைக் கொடுத்துப் புதுத்துணியை மாற்றிவர பணித்தனர். அதன் பின்னர் இறை வேண்டுதலோடு போதகரின் முன்னிலையில் மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தச் சடங்கு நடந்தேறியது.

நிகழ்ச்சி முடிந்ததும், அக்கா,

“கொளுந்தனாரே! என்கேஜ்மென்ட்தான் முடிஞ்சிருக்கு, எசகு பெசகா எதையாவது பண்ணி எக்கச்சக்கமா மாட்டிக்காத”, என்று நக்கலாக கமென்ட் அடித்தார். விஜயுடன் தனக்கு நிச்சயம் செய்த பின்னர் மனதுக்குள் புது தெம்பு பிறந்தது.

விஜயும் நானும் ஒவ்வொரு நாளும் அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு ஸ்கூட்டரில் சென்று வந்தோம்.

ஒருநாள் திற்பரப்பு அருவிக்குச் சென்று குளித்துத் திரும்பினோம்.

ஒருநாள் பத்மநாப புரத்தில் அமைந்துள்ள கோட்டைக்குச் சென்று திரும்பினோம். பத்து நாட்களும் எப்படி பறந்தன என்பது தெரியவில்லை. எனது நெஞ்சில் நீங்காத இடம் பிடித்திருந்தது, அந்த மகிழ்ச்சி நிறைந்த, மறக்க முடியாத பயணம். மீண்டும் மதுரை புறப்படுகையில் இனம்புரியா கவலை நெஞ்சில் ஏறிக் கொண்டது.
 
Top